முல்லைத்தீவு என்றவுடன் எனது நினைவுக்கு முதலில் வருபவர்கள், நிலக்கிளி பாலமனோகரன், முல்லை அமுதன், முல்லையூரான், முல்லைமணி, முல்லைசகோதரிகள். கலை, இலக்கியவாதியாக பயணிப்பதனால்தானோ என்னவோ இவர்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடுவார்கள். இவர்களைப்போன்று பலர் எழுத்து மற்றும் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது மனதுக்கு நிறைவானது. சிலருடன் எனக்கு கடிதத்தொடர்புகளும் இருந்தன. முல்லையூரான் மறைந்துவிட்டார். நிலக்கிளி பாலமனோகரன் ஈழத்து இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டவர். டென்மார்க்கில் வசிக்கிறார். அவரது நிலக்கிளி, குமாரபுரம் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தகுந்த கவனம்பெற்றவை. முல்லை அமுதன் காற்றுவெளி இதழையும் வெளியிட்டவாறு இங்கிலாந்தில் நூல் கண்காட்சிகளை வருடந்தோறும் நடத்திவருபவர். முல்லை சகோதரிகள் இலங்கையில் பல பாகங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள். தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனக்கு இந்தச்சகோதரிகளுடன் நேரடி அறிமுகம் இல்லை.
முல்லைமணியின் பண்டாரவன்னியன் நாடக நூல் பிரசித்தமானது. எனினும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட கதைவசனத்தின் பாதிப்பு அதில் இருந்ததாக ஒரு விமர்சனமும் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியா- மெல்பனில் எனது சில நண்பர்கள் இணைந்து முல்லைமணியின் பண்டாரவன்னியன் நாடகத்தை மேடையேற்றினார்கள். அதில் கதாநாயகியும், கதாநாயகனும் உத்தமபுத்திரனில் வரும் முல்லைமலர்மேலே.... மொய்க்கும் வண்டுபோலே . என்ற இனிமையான பாடலை பாடினார்கள். கஸட்டில் பாடலை ஓடவிட்டு வாயசைத்தார்கள். இப்பொழுதும் எம்மவர்களின் நடனநிகழ்ச்சிகளில் தென்னிந்திய சினிமா பாடல்களுக்கு வாயசைத்துப்பாடும், அபிநயம்பிடித்து ஆடும் வழக்கம் ஒரு பழக்கமாகவே தொடருகிறது. எமது பயணத்தில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் எமது கல்வி நிதியத்தின் உதவியில் பராமரிக்கப்படும் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சியும் இருந்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். கடந்த 2011 ஜனவரியில் சென்றபோது நிலக்கிளி பாலமனோகரனும் ஊருக்கு வந்திருந்ததை அறிந்து அந்த ஆண்டு தைப்பொங்கல் தினமன்று நடந்த மாணவர் சந்திப்பு ஓன்றுகூடலுக்கும் பொங்கல் பண்டிகைக்காகவும் அவரையும் அழைத்திருந்தேன். அவரும் வருகைதந்து நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றினார்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி விஸ்தீரணமான நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றமையால் அங்கு முல்லை பல்கலைக்கழக வளாகம் அமைக்கும் யோசனையும் முன்பிருந்ததாக அறிகின்றேன். அதற்குப்பொருத்தமான இடம்தான். ஏற்கனவே யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியும், கிழக்கில் செங்கலடி வந்தாறுமூலை மத்திய கல்லூரியும், பல்கலைக்கழகங்களாக மாறியிருப்பதை அறிவோம்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றமையினால் இக்கல்லூரிக்கு பல நன்மைகள் கிடைத்துவருகின்றன. கல்லூரியை சுற்றி நீளமான மதில் வெளிநாடு ஒன்றில் வதியும் பழையமாணவர்களினால் அமைத்துதரப்பட்டிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் எனது நண்பர் தேவலிங்கம் அவர்களது முன்முயற்சியினால் இங்கு புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு அன்பர்கள் அங்கு ஒரு சிறந்த நூல் நிலைய மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். நாம் இம்முறை போயிருந்தபோது கட்டிட நிர்மாணம் முடியும் தருவாயில் இருந்தது. கட்டிட பணியாளர்களுடன் உரையாடினேன். குறிப்பிட்ட நூல் நிலையத்திற்காக என்னிடமிருந்த பெறுமதியான நூல்களை ஏற்கனவே சேர்ப்பித்திருக்கின்றேன். அன்பு இல்லத்திற்கு ஒரு கொல்கலனில் அனுப்பப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் குறிப்பிட்ட நூல்களின் பொதிகளும் எடுத்துச்செல்லப்பட்டு அதிபர் சிவலிங்கம் அவர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. இந்த நற்பணிக்கு மெல்பனில் வதியும் எனது இனிய நண்பர்கள் நவரத்தினம் இளங்கோவும் சுந்தரமூர்த்;தியும் உதவினார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைக்கு ஆலோசனைகள் வழங்கிய அன்பர்கள் தேவலிங்கம் மற்றும் சாந்தலிங்கம் ( நிலக்கிளி அ. பாலமனோகரனின் ஒன்றுவிட்ட சகோதரர்) ஆகியோருக்கும் நிதியம் நன்றி கூறுகிறது.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி என்றவுடன் எனக்கு உணர்வுபூர்வமான நேசம் இருந்தமைக்கு ஓரு காரணமாக தோழர் வி. பொன்னம்பலம் அவர்களையும் குறிப்பிடலாம். தோழர் வி.பொன்னம்பலம் அங்கு சிறிதுகாலம் அதிபராக பணியாற்றியிருக்கிறார். அத்துடன் எழுத்தாளர் செ.யோகநாதனும் இங்கு பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் மறைந்துவிட்டனர்.
தோழர் வி.பி.யின் உருவப்படம் அங்கு ஏனைய முன்னாள் அதிபர்களின் படங்களுடன் சுவரில் காட்சிக்கு இருக்கிறது. முல்லைத்தீவுக்குள் பிரவேசித்ததும் எங்கே இரவுப்பொழுதில் தங்குவது என்ற யோசனை வந்துவிட்டது. 2011 இல் சென்றபோது நிலக்கிளி பாலமனோகரனும் அவுஸ்திரேலியா நண்பர் சாந்தலிங்கமும் அங்கு நின்றார்கள். அதனால் அவர்களின் உறவினர் வீட்டில் தங்கமுடிந்தது. அதிபர் சிவலிங்கம் அவர்களும் கல்லூரி விடுதியில்தான் தங்குகிறார். அவருக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர் உதவினார். கல்லூரியின் கணினி அறையில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்து பாய்கள், தலையணைகள் தந்தார்.
“ சேர் எங்களுக்கு பிளேய்ன்ரீ மட்டும் போதும். உணவை வெளியே கடைகளில் சாப்பிட்டுக்கொள்கிறோம்.” என்றேன். அதிபரின் மனைவி யாழ்ப்பாணத்தில் இருந்தமையால் நாம் அவருக்கு இந்த உணவு உபசார பிரச்சினைகளையும் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே நண்பர் நடேசனுடன் 2010 ஜனவரியில் எழுவைதீவுக்கு அவர் அமைக்கவிருந்த டிஸ்பென்சரி காணியை பார்ப்பதற்காக சென்றபோது, படுத்து உறங்குவதற்கு எதுவும் எடுத்துச்செல்லவில்லை. கைவசம் இருந்த தினசரி பத்திரிகைகள்தான் பெரிதும் உதவின. எழுவைதீவு பயண அனுபவம் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதிவுசெய்வேன். அங்கு பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிட்டியிருக்கிறது. அவற்றை எனது ஞாபக அறையில் பத்திரமாக வைத்திருக்கின்றேன்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுக்கு பாதணிகளும் காலுறைகளும் வாங்கிக்கொடுக்குமாறு நிதியத்தின் முன்னாள் தலைவர் மருத்துவக்கலாநிதி (திருமதி) மதிவதனி சந்திரானந்த் பணம் தந்திருந்தார். மாணவர்களின் கால்பாதங்களின் அளவுகள் தெரியாமல் அவற்றை வாங்க முடியாது. எனவே இந்தப்பயணத்தில் அவர்களின் அளவுகளை குறித்துக்கொள்ளவேண்டிய தேவையும் இருந்தது. ( இம்மாணவர்களுக்கு பின்னர் பாதணிகள் அவர்களின் பாத அளவுகளுக்கு ஏற்ப அனுப்பிவைக்கப்பட்டது.) இரவு கல்லூரியின் கணினி அறையில் தங்கினோம். மறுநாள் காலை எழுந்தபொழுது, வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து விடுமுறைக்கு முள்ளியவளைக்கு வந்திருந்த சில அன்பர்களும் காலை நடைப்பயண பயிற்சியுடன் எம்மைக்காண வந்தனர். வடக்கு – கிழக்கைச்சேர்ந்த வெளிநாடுகளில் வதியும் தமிழ் அன்பர்கள் தம்மால் முடிந்தவரையில் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் விதவைத்தாய்மார்களுக்கும் உதவவேண்டும் என்ற கருத்தே அவர்களுடனான உரையாடலிலும் பேசுபொருளாக இருந்தது.
கல்லூரி ஆரம்பித்ததும் பழைய நூலக மண்டபத்தில் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதிபர் திரு. சிவலிங்கம் தலைமைவகித்தார். இந்நிகழ்வில் அவர் எமக்கு புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு மாணவன் போரின்பொழுது பாதிக்கப்பட்டவர். உயர்தரவகுப்பில் பயிலுகிறார். தாயாரையும் குடும்பத்தையும் பராமரிப்பதற்காக விவசாய கூலிவேலைகளுக்குச் சென்றவாறே படிப்பையும் தொடருகிறார். அவரது சிரமங்ளை அதிபர் குறிப்பிட்டார். எவரதும் உதவியின்றி தன்னம்பிக்கையுடன் அவர் கூலிவேலைக்குச்சென்றவாறே கல்வியை தொடருவது முன்மாதிரியானதுதான்.
அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பத்தாம் வகுப்பில் ஒரு மாணவர் பயிலும்வேளையில் தொழில் பயிற்சி அனுபவம் பெறுவதற்காக சுமார் ஒருமாத காலம் அவருக்கு தொழில் கல்வி சார்ந்த விடுமுறையை பாடசாலை நிருவாகம் வழங்கிவிடும். மாணவர்கள் அந்தக்காலத்தை வீணடிக்காமல் ஏதாவது ஒரு அலுவலகத்தில், தொழிற்சாலையில் அல்லது பண்ணைகளில், பழத்தோட்டங்களில் வேலைசெய்து அதற்கான ஊதியமும் பணியாற்றியதற்கான அத்தாட்சி சான்றிதழும் பெறுவார்கள். குறிப்பிட்ட சான்றிதழ் இல்லாமல் அந்த மாணவர்கள் பாடசாலைக்கு வரமுடியாது. பின்னர் பல்கலைக்கழகங்களில் படித்தவாறே பகுதிநேர வேலைசெய்து தமக்கென போக்குவரத்துக்கு கார்கள் வாங்கும் மாணவர்களை இங்கு சாதாரணமாகப்பார்க்க முடியும். இலங்கையில் எம்மவர்களின் பிள்ளைகளான மாணவர்களுக்கும் அவர்கள் மேல்வகுப்புகளில் பயிலும் காலத்திலேயே இதுபோன்ற தொழிற்பயிற்சிகளை கல்வி அமைச்சு உருவாக்கவேண்டும். விடுமுறை காலங்களில் குறைந்தபட்சம் அவர்களை தொண்டர் ஆசிரியர்களாக பயன்படுத்தி அதற்கான வேதனம் வழங்குவதற்கும் கல்வி அமைச்சும் பாடசாலை அபிவிருத்திச்சங்கங்களும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும். அதனால் சிறந்த பிரஜைகளை உருவாக்கமுடியும். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வியை தொடரும் அந்தக்கல்லூரி மாணவரை பாராட்டி எமது நிதியத்தின் முன்னாள் தலைவர் மருத்துவக்கலாநிதி மதிவதனி சந்திரானந்த் அவர்களின் சார்பாக பிரத்தியேகமாக நிதியுதவி வழங்கினோம். அந்த மாணவர் மிகுந்த சங்கோஜத்துடனேயே அதனைப்பெற்றுக்கொண்டபோது நெகிழ்ந்துபோனேன். மாணவர் சந்திப்பில் முடிந்தவரையில் அவர்களது கல்வி தொடர்பாக கேள்விகளை எழுப்பி அவர்களை சலிப்படையச்செய்ய நான் விரும்புவதில்லை. தினம் தினம் அவர்கள் பாடசாலையிலும் வீட்டிலும் “ படி...படி..படி..” என்ற சொற்களையே கேட்டுக்கேட்டு அலுத்துப்போயிருப்பவர்கள். அதனால் தொலைதூரத்திலிருந்து அவர்களைப்பார்க்கச்சென்றவிடத்திலும் அந்த ‘படி...படி...படி...’ என்ற பல்லவியை பாடுவதற்கு நான் விரும்புவதில்லை.
அதிபர், ஆசிரியர்கள் முன்னிலையில் அவர்களால் மனம்விட்டுப்பேசமுடியாது. மாணவர் சமுதாயத்தை இலங்கையில் குரு – சீடர் உறவில் ஒருவகை மரியாதை மரபையே நாம் பேணிவந்தமையால் மாணவ சமுதாயம் ஆசிரியர்களையும் பெற்றோரையும் தோழமை உணர்வுடன் பார்ப்பதில்லை. அதிபர், ஆசிரியர்களை நிதிக்கொடுப்பனவு - தகவல் அமர்வு வரையில் சபையில் வைத்திருந்துவிட்டு அவர்களை பக்குவமாக அனுப்பிவிட்டுவிடுவேன். அதன்பின்னர்...மாணவர்களுடன் நான் எவ்வாறு உரையாடினேன் என்பதை அறிந்தால் சிலர் என்னுடன் முரண்படவும் கூடும். ஆனால் இம்மாணவர்களுடனான உரையாடல் அவர்களை எனது நெஞ்சத்துக்கு மேலும் நெருக்கமாக்கவைத்தது என்பதுதான் பேருண்மை.
பிள்ளைகள் கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்? எந்தப்பாட்டு பிடிக்கும், ஏன் பிடிக்கும்? வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறீர்களா? யாருக்கு நன்றாக சமைக்கத்தெரியும்? பொழுதுபோக்கு என்ன? இசை, நடனம், விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுவது யார்? இதுபோன்ற கேள்விகளை கேட்டபோது அவர்களின் முகம் அன்றலர்ந்த தாமரைகள் போன்று மலர்ந்தன. அவர்கள் சிரித்துக்கொண்டு உற்சாகமாக பதில் தந்தார்கள். பாட்டுக்கள் பாடினார்கள். மனந்திறந்து உரையாடினார்கள். அடுத்த முறை வரும்வேளையில் மைதானத்தில் விளையாடுவோமா? எனக்கேட்டவுடன் ஏககுரலில் “ ஓம் சேர்” என்றார்கள். போரின் வடுவை அந்த பிஞ்சுமுகங்களில் அந்தக்கணம் காணமுடியவில்லை. கல்விக்கு அப்பால் பல உலகவிடயங்களை அவர்கள் தெரிந்துகொள்ளவிரும்புகிறார்கள். அந்த முகங்கள் என்றென்றும் பிரகாசமாக இருக்கவேண்டும். அரசுகளும் அரசியல்வாதிகளும் ஆயுதப்படையினரும் அந்தப்பிஞ்சுகளின் முகங்களை வாடிவிடாமல் பார்த்துக்கொள்வதின் ஊடாகத்தான் நல்லதொரு எதிர்காலத்தை அவர்களுக்கும் தேசத்திற்கும் அமைத்துக்கொடுக்க முடியும் என திடமாக நம்புகின்றேன். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி நிகழ்வு நிறைவடைந்தவேளையில் ஊடகவியலாளரும் கவிஞருமான நண்பர் கருணாகரன், கனடாவிலிருந்து வந்திருந்த செல்வி தான்யாவையும் அவரது சகோதரனையும் அழைத்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து முள்ளியவளைக்கு வந்துசேர்ந்தார். எமது பயணத்தில் அவர்களும் இணைந்துகொண்டனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.