- ஏப்ரல் 30, 2013 - கடந்த கிழமை கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை இளங்கீற்று 2013 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் அரங்கில் நடைபெற்றது. தமிழ்க் கலைக் கல்விச்சாலை நிகழ்த்திய இரண்டாவது ஆண்டு பரிசளிப்பு விழா இதுவாகும். நானூறுக்கும் அதிகமான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். மங்கல விளக்கை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட திரு நக்கீரன், திருமதி சரோசினி தங்கவேலு ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண், திருமறை ஓதல் இடம் பெற்றது. விழாவுக்கு வருகை தந்திருந்த அவையோர்களை தருமதி சுவந்தி சங்கர் வரவேற்று உரை நிகழ்தினார். அதனை அடுத்து இந்தோ கனடா நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி பத்மினி ஆனந்தின் மாணவர்கள் வரபேற்பு நடனம் ஆடினார்கள்.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நுண்கலைப் போட்டியில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான தண்ணுமைத் தேர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நுண்கலைப் போட்டியில் நடனம், வாய்ப்பாட்டு, கின்னரம் தேர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சிறப்புத் திறமைகாண் போட்டிகளில் பங்குபற்றிய இளமழலை, முதுமழலை, தரம் 1, 2, 3, 4 , 5, மற்றும் மேம்பாட்டு நிலை மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. திறமைகாண் போட்டிகளில் 6, 7 மற்றும் 8 தரம் மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
இடையிடையே இந்தோ கனடா நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி பத்மினி ஆனந்தி அவர்களின் மாணவர்கள், ஆசிரியை திருமதி மரியதாஸ் அவர்களின் இளமழலை, முதுமழலை மாணவர்கள், ஆசிரியை இரஜனி செல்வப்பிரகாசம் அவர்களின் நடனத் திறமைசித்தி வகுப்பு மாணவர்கள், ஆசிரியை கோமளா திருத்தணிகாசலம் அவர்களின் தமிழ்த் திறமைச்சித்தி வகுப்பு மாணவர்கள், ஆசிரியை வனஜா குகேந்திரம் அவர்களின் நடனத் திறமைச்சித்தி வகுப்பு மாணவர்கள் ஆகியோரின் நடனங்கள் இடம் பெற்றன.
'விலங்ககக் காட்சி கூறும் நிகழ்ச்சியை திருமதி சுனித்தா சிறிதரன் அவர்களின் தரம் 1 மற்றும் திருமதி சிவதர்சினி கணேசநாதன் அவர்களின் தரம் 3 மாணவர்கள் நடத்திக் காட்டினார்கள். ஆசிரியை திருமதி சுவந்தி சங்கர் அவர்களின் தரம் 5 மாணவர்கள் "மந்தரை சூழ்வினைப் படலம்" என்ற நாடகத்தை நடத்தினார்கள். அடுத்து திருமதி ரோகினி நிமலதாஸ் அவர்களின் தரம் 6 மற்றும் திருமதி சசிகலா இரவிச்சந்திரன் அவர்களின் மேம்பாட்டுநிலை 4 மாணவர்களின் கும்பி நடனம் இடம் பெற்றது. 'பாதி கொடுங்கள்' என்ற நாடகத்தை திருமதி இந்திரா திருச்செல்வராசா அவர்களின் தரம் 7 மாணவர்கள் அரங்கேற்றினார்கள். திருமதி கோமளா திருத்தணிகாசலம் அவர்களின் 'தமிழர் வாழ்வில் காணப்படும் மூடநம்பிக்கைகள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் தரம் 8 மாணவர்களால் வழங்கப்பட்டது. திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன் அவர்களின் தமிழ்த் திறமைசித்தி மாணவர்கள் மதுசனன் காசிநாதன், தமிழ்ச்செல்வன் கிருஸ்ணபிள்ளை, ஹராஸ் விவேகானந்தன் நகைச்சுவை விருந்து படைத்தார்கள். இறுதியாக இசையாசிரியர் திரு வாசுதேவன் இராசலிங்கத்தின் மாணவர்கள் வாத்திய இசை வழங்கினார்கள்.
சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை திரு நக்கீரன், திருமதி சரோசினி தங்கவேலு, ஆசிரியை பத்மினி ஆனந்த், இராகினி சக்திரூபன், பராசக்தி தேவவினாயகராசா, எழில் கரன், சோபனா வாசுதேவன் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தார்கள். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியை இந்திரா திருச்செல்வராசா ஆசிரியை செல்வி இரகுணா இராசேந்திரன் அழகாகத் தொகுத்து வழங்கினார்கள்.
புலம்பெயர்ந்த நாட்டிலும் தமிழ்மொழியையும் தமிழ் நுண்கலைகளையும் போற்றி வளர்க்கும் கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை குறுகிய காலத்தில் அபாரா வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தக் கல்விச்சாலை இளமழலை முதல் எட்டு வரை மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகள் நடத்துகிறது. தற்காப்புக்கலை, மின் கணினி, கணித ஆங்கிலத் திறன் தேர்வு, நுண்கலைத் தேர்வு வகுப்புகளும் உண்டு. தமிழ்த் திறமைச் சித்தி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இதில் தரம் 9 முதல் தரம் 12 வரையிலான மாணவர்கள் இணைந்து கொள்ளலாம். தமிழ்த் திறமைத் தேர்ச்சியைப் பல்கலைக் கழகத் தெரிவுக்குரிய சித்தியாகவும் சேர்த்துக் கொள்ள முடியும்.
கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை இன் அபார வளர்ச்சிக்கு அதன் அதிபர் திரு அஜந்தரூபன் மகேந்திரன் மற்றும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களது கடின உழைப்பும் விடா முயற்சியும் காரணிகளாகும். மேலதிக விபரங்களுக்கு 416 - 751 -2011 தொடர்பு கொள்ளலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.