'பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது."
இவ்வாறு கடந்த 2 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை பாரிஸ் மாநகரில் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெற்ற மூன்றாவது 'இலக்கியமாலை" நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. 'இப்படியுமா" (சிறுகதைத் தொகுதி) 'அழியாத தடங்கள்" (கட்டுரைத் தொகுப்பு) 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா", 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" - (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) ஆதியாம் நூல்களே வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் கவிஞர் க. வாசுதேவன் பேசுகையில், 'இளங்கோவனது சிறுகதைகள் ஒவ்வொன்றும் சாதாரண வாசகரையும் ஈர்க்கும்வகையில் யதார்த்தப் படைப்புகளாகத் திகழ்ந்து மனதில் நிறைவைத் தருகின்றன. இலங்கையில் யுத்த அனர்த்தங்களின்போதும், புலம்பெயர்ந்த பின்பும் அவரது அனுபவங்களின் உண்மைத் தன்மைகள் கதைகளில் புலப்படுகின்றன" எனக் குறிப்பிட்டார். கவிஞர் தர்மினி பேசுகையில், 'எதிர்காலத்தை மனதிலிருத்தி நூலாசிரியர் பல விடயங்களை 'அழியாத தடங்கள்" கட்டுரைத் தொகுப்பில் பதிவுசெய்து ஓர் ஆவணத் தொகுப்பாகத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது. அவரது பல்வேறு துறைகளிலான அறிவையும் அனுபவத்தையும் அவரது நூல்களின் மூலம் அறிய முடிகிறது" என்றார்.
'தமிழர் மருத்துவம் பேணிக் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் இளங்கோவன் பெருவிருப்பம் கொண்டவர். இலங்கையிலிருந்து ஐக்கிய நாடுகள் தொண்டர் நிறுவனத்தினால் தெரிவுசெய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மூலிகை மருத்துவ - சமூக அபிவிருத்திப் பணியாற்றி விருதுகள் பல பெற்றவர் இளங்கோவன். இலங்கையில் யுத்த அனர்த்தம் ஆரம்பமாகியவேளையில் மக்கள் நலன்கருதி 'மூலிகை" சஞ்சிகை மூலம் விழிப்பூட்டியவர். அவரது தமிழர் மருத்துவம்; குறித்த ஆலோசனைகள் - கட்டுரைகள் அனைவரினதும் சிந்தனைக்குரியன" எனக் குறிப்பிட்டார் திருமதி வாணி தியாகராசா.
'அரசியல், கலை இலக்கிய, தமிழர் மருத்துவத் துறைகளில் நீண்ட கால அநுபவம் வாய்ந்த இளங்கோவன் தமது அனுபவங்கள் யாவற்றையும் பதிவுசெய்து ஆவணப்படுத்துவது புலம்பெயர்ந்த எம்மவரின் எதிர்காலச் சந்ததியினருக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்" என வேண்டுகோள் விடுத்தார் இன்று உலகமெங்கும் ஒலிபரப்பாகும் 'தமிழமுதம்" வானொலியின் இயக்குனர் எஸ். கே. ராஜென்.
கலாநிதி க. தேவமனோகரன், ஊடகவியலாளர் என். கே. துரைசிங்கம், சு. கருணாநிதி, வண்ணை தெய்வம், க. அரியரத்தினம், ஊடகவியலாளர் கோவை நந்தன், குமாரதாஸ் நேசன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் ஏற்புரை வழங்கினார். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்ட ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் நகரில் வாழும் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட படைப்பாளிகள் - இலக்கிய அபிமானிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.