தாயகத்தில் ஆங்கிலக் கல்வியின் அவசியமும் ஸ்டெம் கல்வியின் பங்கும் - கலா ஸ்ரீரஞ்சன் -UK -
STEM-Kalvi அறக்கட்டளையால் இலவசமாக நடாத்தப்படும் பாடசாலைக்கல்வியை விலகியோருக்கான இணையவழி ஆங்கில வகுப்பு பகுதி-II இன் வெற்றிகரமான இறுதி வாரம் இது. ஆங்கிலக் கல்வி வகுப்பு பகுதி-I, பகுதி-II என்ற இரண்டு கட்டங்களையும் தொடர்ச்சியாக, இணைய வழியில் கற்பித்ததன் மூலம் நான் பெற்றுக் கொண்ட அனுபவத்தைப் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
வழமையாக இங்கு பாடசாலைகளில் ஆசிரியர்களும் தொடர்ச்சியான கற்றலை மேற்கொள்வதால், ஆசிரியர்களின் அனுபவங்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்து கொண்டு, இன்னும் தமது கற்பிக்கும் திறமைகளை மேம்படுத்துவது சாதாரணமான ஒரு பணி சார்ந்த விடயமே. இதனை கற்றலும் கற்பித்தலுக்குமான வாராந்த பயிற்சிக்குள்ளும் ( Weekly Teaching and Learning Training) தொடர்ச்சியான பணி சார்ந்த நிபுணத்துவத்திற்கான பயிற்சியாகவும் (Continuous Professional Development ) ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொள்ளுகின்றனர்.
இங்கு பிரித்தானியாவில் இருந்தவாறே நானும், அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே இயங்கி வரும் ஸ்டெம் கல்வியும் இந்த வகையில் பாடசாலையிலிருந்து விலகியோருக்கான ஆங்கிலக் கல்வியை, மாணவர்களுக்கு ஏற்ற முறையில், இலங்கை கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தயாரித்து வழங்கி வந்தோம். நான் ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே இங்கு கற்பித்து வருவதால், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்ட இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்ததன் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப கற்பித்தலை சரிபடுத்திக் கொள்ளவும் என்னால் ( adapt) முடிந்தது. இது மாணவர்களுக்கும் எனக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்தது. அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து, கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது. நேரம், முயற்சி, தனிப்பட்ட கடமைகள், வேலை எனப் பல சிக்கல்களுக்கு நான் முகம் கொடுத்தாலும் கூட, ஒரு பயன் தரக்கூடிய செயற்திட்டத்திற்கு மெருகூட்டுகிறேன் என்பது சுவாரசியமாகவே இருந்தது.