எனது படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும்! - வ.ந.கிரிதரன் -
எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள் இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான்.
நம்மவர்களில் ஒரு குறைபாடு. நாடறிந்தவர்களாகத் தாம் கருதும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தம் படைப்புகளைப் பற்றி அல்லது ஏனையவரின் படைப்புகளைப் பற்றிக் கூறவேண்டும். அவ்விதம் கூறினாலே அவை தரமானவை என்றொரு கருத்தோட்டமும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதையே இவ்விதமான உளவியற் போக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தவறான நிலைப்பாடு. அண்மையில் நடந்த எனது நூல்கள் பற்றிய நிகழ்வில் கூட தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தனது உரையில் 'எனது புகலிட அனுபவக் கதைகள் முக்கியமானவை. அவை பற்றிப் பலரும் எழுதுவதில்லை. அவர்களுக்குத் தான் கூறுவது என் கதைகளைப்பற்றி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கூற்றுக்கான காரணமும் மேற்படி உளவியற் போக்கே. உண்மையில் எனது படைப்புகள் பற்றி , குறிப்பாகப் புகலிடப் படைப்புகள் பற்றி நிறையவே ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர் கருதும் 'இலக்கிய மேதை'களின் எழுத்துகளில் அவை பற்றிக் காணவில்லையென்பதால் ஏற்பட்ட ஜயகரனது ஆதங்கமே அது.