ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கி -
ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன். விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.
ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை.
அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி , எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும். ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.