கார்ல் மார்க்ஸின் மாக்சியச் சிந்தனைகளுக்கு அடிப்படை ஹெகலின் சிந்தனைகள். மார்க்ஸ் ஹெகலின் சிந்தனைகளை மறுத்து, அவற்றைத் திருத்தி தன் சிந்தனைகளை வடிவமைத்தார் என்று சிலர் கருதுவர். ஹெகலின் சிந்தனைகள் மார்க்சிலேற்படுத்திய பாதிப்புகளே மார்க்சியச் சிந்தனைகள் எனக் கருதுவோரும் உளர். நாம் காணும் உலகானது இப்பிரபஞ்சமானது பொருள்வயப்பட்டதல்ல. பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்ச ஆன்மாவின் விளைவே. எம்மைச் சுற்றி விரிந்திருக்கும் இந்தப் பொருள்வயமான பிரபஞ்சமானது அச்சக்தியின் விளைவே என்பது ஹெகலின் கருத்து. மனிதர் , அவரைச்சுற்றி இருக்கும் பொருள் அனைத்துமே பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்சச் சக்தியின் விளைவு என்று கருதும் ஹெகலின் சிந்தனை கருத்துமுதல்வாதச் சிந்தனை. அதே சமயம் பொருள் அனைத்தும் வேறான பிரபஞ்சச் சக்தியின் விளைவே என்று அவர் கருதுவதால் அவரது கருத்து முதல்வாத சிந்தனைகளைப் புறநிலைக் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் என்பர். அதாவது அவை
அதே சமயம் இன்னுமொரு கருத்துமுதல்வாதச் சிந்தனையாளர்கள் காணும் எல்லாமே சிந்தனையின், மனித ஆன்மாவின் விளைவென்பர். இவர்களை அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் என்பர். இவர்கள்தம் கருத்துப்படி மனத்துக்கு வெளியில் எதுவுமே இல்லை. இவ்வகைக் கருத்துமுதல்வாதம் அகநிலைக் கருத்துமுதல்வாதம் (Subjective Idealism)
ஹெகலின் இயக்கவியற் அல்லது இயங்கியற் சிந்தனைகள்!
ஹெகலினிசம் இயங்கியல் அல்லது இயக்கவியல் என்னும் கோட்பாட்டினைக் கூறுகிறது. வரலாறு, ஞானத்தின் வளர்ச்சி இவையெல்லாம் முரண்களாலும், அம்முரண்களுக்கான தீர்வுகள் வழியாகவும் உருவாவது. முரண்களும், அவற்றுக்கான தீர்வுகளுமே வரலாற்றையும், அறிவின் வளர்ச்சியையும் வழி நடத்திச் செல்கின்றன. வளர்ச்சி என்னும்போது அங்கு மாற்றங்கள் நிகழ்வதைக் குறிக்கும். அதாவது அதுவோர் இயக்கம். அதனால்தான் இவ்வகையான சிந்தனைகளை இயக்கவியற் சிந்தனைகள் என்பர்.
ஹெகலின் இயங்கியல் (Dialectics) மூன்று படிகளில் நடைபெறுகின்றது. அவற்றை அவர் பின்வருமாறு பிரித்தார்:
1. தீசிஸ் (Thesis) -
இதனைக் கருத்தொன்றின் ஆரம்ப நிலையாகக் கருதலாம்.
2. அன்டிதீசிஸ் (Antithesis) -
மேற்படி ஆரம்பக் கருத்தொன்றின் எதிர்க்கருத்து அல்லது முரண் கருத்தாகக் கருதலாம்.
3. சிந்தெசிஸ் (Synthesis) -
மேற்படி முரண்பட்ட கருத்துகளை உள்வாங்கி, அம்முரண்களுக்கான தீர்வினை அல்லது தீர்வுகளைக் குறிப்பது. இவ்விதமாக முரண்பட்ட சிந்தனைகள் அல்லது கருத்துகளின் விளைவாக வளர்ச்சி ஏற்படுகின்றது. வரலாற்றையும், அறிவியலையும் உயர்நிலைக்கு எடுத்துச் செல்பவை இம்முரண்பாடான கருத்துகளுக்கிடையிலான மோதல்களே.
இம்மூன்று படிகளுமே வரலாற்றை வழி நடத்திச் செல்கின்றன. சமூக முன்னேற்றத்தை, அறிவு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
யதார்த்தம் (Reality) என்பது பிரபஞ்ச உணர்வின் அல்லது சக்தியின் விளைவு. மனிதர் பிரக்ஞைவாயிலாகத் தம்மை உணர, சுய பிரக்ஞை அடைய முற்படுகின்றனர். அவர்களது புரிதலுக்கும், யதார்த்தம் பற்றிய பூரண உண்மைக்குமிடையே இடைவெளியுள்ளது. இவ்விதமான விலகலையே, அந்நியப்படலையே ஹெகலின் அந்நியப்படல் என்னும் சி\ந்தனைகள் எடுத்தியம்புகின்றன. ‘ஆன்மாவின் அல்லது மனத்தின் நிகழ்வியம்’ (The Phenomenology of spirit) என்னும் நூலில் ஹெகல் மனிதரின் பிரக்ஞை , பூரண ஞானம் அல்லது உண்மை பற்றியஎல்லாம் தன் சிந்தனையைப் படர விட்டிருக்கின்றார்.