- எழுத்தாளர் க.சொக்கன் (சொக்கலிங்கம்) -
முன்னுரை
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் வலுவான இடத்தைப் பெற்றுள்ளன. அந்த வகையில் இலங்கையின் எழுத்தாளர் க.சொக்கலிங்கம் அவர்களின் சிறுகதைகள் தனித்த இடத்தைப் பெற்றுள்ளன எனில் மிகையாகாது. இயல்பான கதையோட்டத்துடன் மண்மணம் மாறாத சொற்கள் மிகுந்து நடைக்கு வலுச்சேர்க்கும் கதைக்களத்துடன் வாசிப்பவர்களைத் தூண்டும் கதைகள் சொக்கலிங்கம் அவர்களுக்கானது. இது படிப்பவர்களைக் கதையின் ரசனையுடன் ஒன்றிப் போகச் செய்வதோடு அவர் காலச்சமுதாயச் சிக்கல்களையும் வரிசைப்படுத்துகிறது.
இவரது சிறுகதைத் தொகுப்பில் உள்ள படைப்பாக்க உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. இவரது சிறுகதைகளில் கதைகூறும் முறை, மொழிநடை, நனவோடை உத்தி ஆகியவற்றின் மூலம் படைப்பாக்க உத்திகளை நோக்கலாம்.
கதைகூறும் முறை
இவர் தனது சிறுகதைகளில் ஆசிரியரே கதை கூறும் முறையைப் பின்பற்றியுள்ளார். இதை எடுத்துரை உத்தி என்பர். முதியோர் வாழ்க! என்ற கதையில் முதியோரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை அற்புதமான ஒரு கதையின் மூலம் விளக்குகிறார். இக்கதையில் கதைக்குள்ளே கதையாக தான் சொல்ல வந்த கருத்தை நடராசர் என்ற மூத்த கதாபாத்திரத்தின் வழி உணர்த்தியிருப்பது வெகு நேர்த்தியாக உள்ளது. இக்கதையில் அப்பா அடித்தாலும் பொறுத்துப் போகும் மகன்களும் முன்பு இருந்தனர், இப்பொழுது வயதானதால் அப்பாவை அவமதிக்கும் மகனும் பேர்த்திகளும் இருப்பதைச் சுருக்கமாக நறுக்கென்ற வார்த்தைகளால் பிரதிபலிக்கிறார். எண்பது வயதுப் பெரியவர் தனது நூற்றி ஐந்து வயது அப்பா அடித்ததற்காக அழுவதை,
“இரண்டு வருசத்துக்கு முன்பும் அவர் எனக்கு அடித்தவர். அந்த அடி எனக்கு நோவை ஏற்படுத்தியது உண்மைதான். இப்பொழுது நோகவில்லை என்றால்…? முதுமையின் பலவீனம், தளர்ச்சிதானே காரணம்? அப்பா விரைவில் எங்களைப் பிரிந்துவிடுவாரோ என்பதுதான் இப்பொழுது எனக்குக் கவலை. அதுதான் அழுகிறேன்”
என்று வார்த்தைகளால் பாசவலை இடுகிறார். இவரது கதைகள் உயிர்ப்போடு உன்னதக் கருத்துகளைக் காலம் கடந்தும் நமக்கு உணர்த்துகின்றன.
மொழிநடை
இவர் தனது சிறுகதைகளில் நீரோடை போன்ற தெளிவான மொழிநடையால் வாசகர்களைக் கவர்கிறார். தனது மொழிநடையில் உவமைகளைக் கையாண்டு சிறுகதையை மேலும் மெருகேற்றியுள்ளார். மாற்றம் என்ற சிறுகதையில்,
“மலரிலே அமர்ந்து தேனைச் சுவைக்கும் வண்டு மலரிலுள்ள தேனின் கடைசித்துளியை உறிஞ்சும் வரை, அதைவிட்டு நீங்காதது போல அவரும் தமது அதிகாரத்தை இறுதி நாள் வரை சுவைத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தால் நாள் தவறாது பாடசாலைக்கு வந்தார்”
என்று குறிப்பிடுகிறார். இங்கு அதிகாரத்தை விடாது பற்றியிருக்கும் குணத்தை வண்டு மலரை எப்படி விடாமல் தேனையுண்ணுமோ அத்தன்மைக்கு ஒப்பிடுகிறார்.
மொழிநடையில் பட்டினத்தார் பாடல்களைக் கதாபாத்திரங்கள் தங்கள் நிலைக்கேற்ப முணுமுணுப்பதையும் காட்டியுள்ளார். அழைப்பு என்ற கதையில்,
“ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டிர் சதமல்ல”
என்று அப்புத்துரை என்ற கதாபாத்திரம் தனது நிலையைச் சொல்வதாகக் காட்டுகிறார். இது மொழிநடையில் சுவையை மிகுவிக்கும் முயற்சி எனலாம். அது போல நடையில் கதாபாத்திரங்களுக்குப் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும் உத்தியாகக் கையாளுகிறார். அழைப்பு என்ற கதையிலேயே அப்புத்துரைக்கு மொக்கன் அப்புத்துரை என்ற பட்டப்பெயர் இளமையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
“அப்புத்துரை நண்பனா? இல்லை. இவன் என் குரு. நாங்கள் இருவரும் ஒன்றாய்ப் படித்த காலத்தில் மொக்கன் அப்புத்துரை என்று பெயரெடுத்த இவனா இப்பொழுது இத்தனை ஞானம் பேசுகிறான்?”
என்பன போன்ற மொழிநடை உத்திகள் சொக்கலிங்கம் அவர்களின் கதைகளை மேலும் தித்திப்பாக்குகின்றன.
நனவோடை உத்தி
சொக்கலிங்கம் அவர்கள் தனது கதைகளில் நனவோடை உத்தியைக் கையாண்டுள்ளார். நனவோடை உத்தி என்பது ஏற்கனவே நடந்த செயல்களை நினைத்துப் பார்ப்பது ஆகும். முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் பாத்திரங்கள் எண்ணிப் பார்ப்பது ஆகும். இது மேலைநாட்டினரால் தமிழுக்கு வந்த உத்திமுறை ஆகும். அப்பப்பாவின் அறளை என்ற கதையில் பொன்னரின் மகன் சரவணபவன் தனது தந்தையைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் நனவோடை உத்தி வெளிப்படுகிறது.
“சிம்மக்குரல், வைரம் பாய்ந்த உடல், உருட்டும் விழிகள் முதலாகக் காவல்துறை அதிகாரிகளுக்கே உரிய துடுக்கும் மிடுக்கும் நிறைந்திருந்த தந்தையின் முன் வரவே அஞ்சி ஒளித்துத் திரிந்த நாள்கள் அவனால் மறக்கமுடியாதவை”
என்று பொன்னரின் நிலை மதிப்பானதாக இருந்த நிலையும் வயோதிக காலத்தில் அவரை மதிக்காத மகன், மருமகள், பேத்தியின் நிலைகளை இக்கதையில் எடுத்தியம்புகிறார்.
நிறைவுரை
சொக்கலிங்கம் அவர்களின் சிறுகதைகள் பற்றி செங்கை ஆழியான் அவர்கள் கூறும்போது, “சொக்கனின் சிறுகதைகளில் இலக்கண வலுவற்ற, செம்மை சார்ந்த தமிழில் பழந்தமிழ்ப் பண்பாட்டினடியாக மானுட மேன்மை நோக்கையும் கலா வியக்தியையும் காணமுடிகிறது” என்கிறார். இதிலிருந்து மானுட மேன்மையை நோக்கியதாக அவரது சிறுகதைகள் அமைந்திருக்குமாற்றையும் அறியமுடிகிறது.
சொக்கலிங்கம் அவர்கள் தனது கதைகூறும் முறை, மொழிநடை உத்திகள், நனவோடை உத்தி ஆகிய பலவற்றைப் பயன்படுத்தி தனது நடைக்கு வலுச்சேர்ப்பதோடு இயல்பான மொழியாலும் ஆழமான கதைக்களத்தாலும் நம்மை ஈர்க்கிறார். மொத்தத்தில் சொக்கலிங்கம் அவர்கள் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் தனது படைப்புகளால் தனக்கென தனித்த இடத்தைப் பெற்றுள்ளார் எனில் மிகையாகாது.
பயன்பட்ட நூல்கள்
கலாநிதி க.சொக்கலிங்கம், சொக்கன் சிறுகதைகள், நயினை கி.கிருபானந்தா வெளியீடு, யாழ்ப்பாணம்
சொக்கன் 60, வித்துவான் க.சொக்கலிங்கம் மணிவிழா மலர், யாழ்ப்பாணம்
மின்னஞ்சல்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.