மலையகப் படைப்பிலக்கியத்தின் ஊடாக அறப்போர் நிகழ்த்திய மல்லிகை சி. குமார்! - முருகபூபதி -
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு 1973 ஆம் ஆண்டு அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் கம்யூனிஸ்டுகளும், சமசமாஜிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தனர். இந்த அரசில் நியமன எம்.பி.க்களாக தெரிவாகியவர்கள்தான் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அசீஸும், செல்லையா குமாரசூரியரும். செல்லையா குமாரசூரியர் தபால் அமைச்சரானார். இவர்கள் இருவரையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் குறிப்பிட்ட மாநாட்டின் இரவு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது. தமிழ்நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பாலதண்டாயுதமும் வருகை தந்திருந்தார். கோகிலம் சுப்பையா எழுதிய தூரத்துப்பச்சை நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியாகியிருந்தது. அதன் வெளியீட்டு அரங்கும் இந்த மாநாட்டில் இடம்பெற்றது.