பகுதி I
இரண்டாம் உல மகா யுத்தத்தின் பின், அல்லது நெப்போலியனின் படையெடுப்பின் பின், ரஷ்யா, பரந்த அளவில் தாக்குதலுக்கு உட்பட்டது என்றால், அது 06.08.2024 அன்று, உக்ரைனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆகும் என உலக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட 1150 ஏக்கரில், 80 குடியிருப்புகளை நிர்மூலமாக்கும், பரந்த வகையிலான தாக்குதல் இதுவாகும். இதில் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், போலந்து போன்ற நாட்டின் வீரர்களும், அந்நாடுகளின் பல்வேறு நவீன ஆயுதங்களும் நேரடியாக களமிறக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்பட்டாலும், ஏனைய நேட்டோ நாடுகளும், இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் என ஊகிக்கப்படுகிறது.
இந்திய இராணுவ வல்லுநர்களும் விமர்சகருமான சாணக்கியாவின் பார்வையில், இது உண்மையில், புட்டின் வகுத்த திட்டத்தின் மொத்த பெறுபேறே இது என கூறப்பட்டாலும், இத்தாக்குதலின் நோக்கம் குறித்து பல்வேறு செய்திகளும் வந்தப்படியே இருக்கின்றன. (20.08.2024)
சாணக்கியாவின் பார்வையில், இதுவரை, ஒப்பீட்டளவில், ஒடுங்கிய ஒரு நிலப்பரப்பில் நடத்தப்பட்ட, உக்ரைனிய-ரஷ்ய போர், இப்பொழுதே, பரந்த அளவில், பல கிலோமீட்டர் நெடுக நடத்தப்படும் ஓர் போராக மாறியிருக்கின்றது. அவரது பார்வையில், இது ரஷ்யாவுக்கே சாதகமானது. இரண்டாம் உலகப்போரை எடுத்தாலும் சரி அல்லது நெப்போலியனின் படையெடுப்பை எடுத்தாலும் சரி பரந்த எல்லை நெடுக போர் நடத்தும் ஒரு நடைமுறை என்றால் அதனை ரஷ்யா என்றும் வரவேற்க செய்யும் என்பதே அவரது முடிவாகின்றது. இதன் அடிப்படையிலேயே, இந் நிலைமையானது புட்டினால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என அவர் முடிவு செய்கின்றார்.
படையெடுப்பை அடுத்து, ரஷ்யா கிட்டத்தட்ட தனது 133,190 குடிமக்களை, போர் நடக்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தியது (France 24- 12.08.2024).). இதனையடுத்து, உக்ரைன் சந்தோஷத்துடன் உள் இறங்கி பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டது. ரஷ்யாவும், தன் படைகளை பின்வாங்க செய்து, உக்ரைனிய படைகளின், தங்கு தடையற்ற முன்னேற்றத்திற்கு ஒத்தாசை புரிந்தது. (அப்படியே ரஷ்யாவானது, எதிர்ப்பை தெரிவித்திருந்தாலும், ஒப்பீட்டளவில் அது ஓர் பேச்சளவிலான எதிர் தாக்குதல் என்ற வகையிலேயே இருந்தது).
இத்திட்டமே, இரண்டாம் உலகப் போரிலும் சரி அல்லது நெப்போலியனின் படையெடுப்பின் போதும் சரி, ரஷ்யா பின்பற்றிய போர் தந்திரத்தின் சாரம்சமாகும். அதாவது, எதிரியின் படைகளை, தனது பரந்த பூமியில் உள் நுழைய விட்டுவிட்டு பின் அவர்களை நிர்மூலப்படுத்தும் திட்டம் என்பது ரஷ்யாவுக்கு கைவந்த கலையாகும். இதற்கு ரஷ்யாவின் காலச்சூழலும், ஒத்துழைப்பை நல்குவதாக இருக்கும் என்பது வேறு விடயம். ஒரு முறை, உலகப் போரின் மிக சிறந்த தளபதியாக செயற்பட்டது யார் என்ற கேள்விக்கு, தளபதி வின்டர் (தளபதி-குளிர்காலம்) என்பதே விடையானது.
நவீன போர் முறையில், பூமி பரப்பல்ல - ஆனால் தொடர்பாடலும், விநியோகமுமே முக்கியத்துவப்படும் விடயங்களாய் உள்ளது என்பது இன்றைய போர் விமர்சகர்களின் கருத்தாகின்றது. பரந்த ஓர் பூமி பரப்பில், அதுவும், ரஷ்ய குளிர்காலத்தின் வரவோடு, மேற்படி தொடர்பாடலும் விநியோகமும் பெரிதும் பாதிப்பை அடையக்கூடிய ஒன்று என்பது வெளிப்படையானது. இதனாலேயே குளிர்காலத்தின் வரவை ரஷ்யா எதிர்பார்த்திருக்கும் என்பது விமர்சகர்களின் கணிப்பாகிறது. இதன் காரணத்தினாலேயே இப்போரானது இவ்வருடம் முழுவதும் தொடர்வதற்கான சாத்திய கூறு உண்டு என சில விமர்சகரால் அபிப்ராயப்படுகின்றது..
ஆனால் இவையாவும் உக்ரைனுக்கு அல்லது நேட்டோ படையினருக்கு தெரியாதா என்பதே இங்கு எழக்கூடிய முக்கிய வினாவாகின்றது.
பகுதி II
இப்போர் திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துரைகளும், பல்வேறு நாடுகளால் கிரமமாக, முன்வைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் சார்பில் கூறப்படுவது: அதன் இராணுவ தளபதியான அலக்சாண்டர் கிரிஸ்கியால், திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒன்று இது என்பதும் - இதற்கான முன் அனுமதியை, உக்ரைன் தனது மேற்கத்தைய போர் அனுசரணை நாடுகளிடமிருந்து பெற்றிருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஜெர்மன், அதிபர் Olaf Scholz கூட Kursk தாக்குதலானது தனக்கோ அல்லது மேற்குக்கோ அறியத் தராது ரகசியமாய் உக்ரைனால் தொடங்கப்பட்டது எனக் கூறினார் (22.08.2024), தற்போது, அலெக்சான்டர் மீது அதிருப்தி நிலவிய சூழலில், அவருக்கு இத்தாக்குதலை தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற சித்திரம் கட்டியெழுப்பப்படுகிறது.
இதுவரை அவர் மேற்படி ரஷ்ய போரில் இதுவரையிலும் தோல்விகளையே சந்தித்துள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றாகும். எனவே தனது தலையை தப்ப வைக்கும் பொருட்டே அவர் மேற்படி Kursk தாக்குதலை ஆரம்பித்துள்ளார் என்ற பரப்புரை ஆர்வத்துடன் இன்று செய்யப்பட்டு வருகின்றது.
இப்பரப்புரைக்கு ரஷ்ய ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து இச் செய்தியை தமது ஊடகங்களில் வெளியிடுகின்றன என்பதே இங்கு, இரசனைக்குரிய விடயமாகின்றது.
அதாவது இரண்டாம் உலகப்போரின் அனுபவங்களை அல்லது நெப்போலினிய படையெடுப்பின் அனுபவங்களை தூக்கியெறியும் அளவுக்கு இந்த உக்ரைன் இராணுவ தளபதியின், அலெக்சாண்டரின் தனிப்பட்ட காரணங்களே Kursk மீதான தாக்குதலை நடத்த காரணமாகுகின்றது,. என்ற பரப்புரை, உலகெங்கும் பரவலாக பரவச் செய்யப்பட்டது காரணம் இல்லாமல் அல்ல.
பகுதி III
மேற்படி Kursk தாக்குதலுக்கு சரியாக ஒரு கிழமைக்கு முன்னதாக, அதாவது 31.07.2024 அன்று ஹமாசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இஸ்மையில், ஹனிபெட் இஸ்ரேலிய படையினரால், ஈரானில் வைத்துக் கொல்லப்பட்டார். அதாவது முதலில் ஹமாஸ் தலைவரின் கொலை(31.07.2024)! அடுத்த ஒரு கிழமையில் Kursk இல் உக்ரேனிய படையினரின் உள் நுழைவு!! (06.08.2024)
இரண்டு சம்பவங்களுக்கு இடையிலான கால வித்தியாசம் ஒரு கிழமை என்றாலும், அது உக்கிரமான ஊடக செயற்பாடுகளின் மூலம், தனி தனி சம்பவங்களாக சித்தரிக்கப்பட்டது.
ஹமாஸ் தலைவரின் கொலையை தொடர்ந்து, ஈரான் தனது பழிவாங்கும் தாக்குதலை உடனடியாக ஆரம்பிக்கும் எனவும், இது முழு மத்திய கிழக்கையும், போர் பதற்றத்துள் முழுமையாக தள்ளிவிடும் என்றும் நம்பப்பட்டது. உதாரணமாக, இத்தாக்குதலை அடுத்து, தனது மேற்பார்வையின் கீழ் செயல்பட, மூன்று அதி முக்கிய குழுக்களை ரணில், இத்தாக்குதலின் மறுநாளே அமைத்திருந்தார் என்பதும் இந்தியா கூட தான் பிரஜைகளை எப்படி திருப்பி அழைப்பது – என்பது தொடர்பில் ஆராய தொடங்கி இருந்ததும் கவனிக்கத்தக்கது.
ஆனால், இதுவரை, எதிர்பார்த்த ஈரானிய பழிவாங்கும் தாக்குதல் இன்று வரை இடம்பெறவே இல்லை என்பது உண்மை என்றாலும், அமெரிக்கவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் மத்திய தரைக்கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், (11.08.2024) மேலும் 154 தொமோஹொவுக் ஏவுகனைகளை சுமந்த ஒரு நீர்மூழ்கி கப்பலையும் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அனுப்பியதும். இதேபோன்று இன்னுமோர் போர் கப்பலையும் மத்திய கிழக்கிற்கு அனுப்பியதும் குறிக்கத்தக்கது. ஆபிரஹாம் லிங்கன் என்ற விமானத் தாங்கி கப்பலானது, கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு பிரம்மாண்டமான போர் கப்பல்களை தனது தாக்குதல் குழுவில் உள்ளடக்கி இருப்பதும் எண்ணி பார்க்கத் தக்கது.
இருந்தும் இவை அனைத்தும் ஈரானின் ஒரு பழிவாங்கும் தாக்கத்தை முடுக்கி விடுவதாக இல்லை. அல்லது, ரஷ்யா, பெரிய அளவில், இதற்கு, பதிலடியாக தனது படைகளை நகர்த்தியதாகவும் இல்லை.
ஆக, ஈரானை தூண்டுவது என்பது பொய்த்துப் போன ஒரு சங்கதியாகி விட்டது.
சுருக்கமாக சொன்னால், எதிரியை பிரித்து விடுவது என்பது அருமையான சாணக்கியம் என்று பஞ்சதந்திர காலத்திலிருந்து எமக்கு எடுத்து சொல்லப்பட்டாலும், அதனை எதிரியின் கண்ணில் சந்தேகம் விழாது அரங்கேற்றுவது எப்படி என்பதுவே கேள்வியாகின்றது.
வேறு வார்த்தையில் கூறினால் Kursk போரை ஒரு புறமாகவும், மத்திய கிழக்கு போரை மறு புறமாகவும் கட்டவிழ்ந்து விட்டால் ஈரான்-ரஷ்யா கூட்டிணைவுக்கான சாத்தியக் கூறுகள் இல்லாது ஒழித்துவிடலாம் என்பதுவே மேற்கின் திட்டமாயிற்று.
பகுதி IV
இதற்காக இரண்டு வகை வேலைதிட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. ஒரு புறம், இஸ்ரேலை கொண்டு, ஈரான் மீது தாக்குதல் நடாத்தி, ஈரானை போரில் இழுத்து விட்டு, முழு மத்திய கிழக்கையும் போர் பதற்ற சு10ழலில் தள்ளி, விடும் ஒரு பயங்கர திட்டம்.
மற்றையது, இது வரையில் அல்லாத முறையில், பரந்த அளவில், ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய போரை தூண்டி விடும் திட்டம். அதாவது, ஒருபுறம் ரஷ்யாவை தூண்டி விடுதல். மறுபுறம் ஈரானை தூண்டி விடுதல். இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான், என்பதை இப்போது, தனிப்பட விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப் போர் திட்டமானது, இரண்டு நாடுகளையுமே, அதாவது ஈரானையும் ரஷ்யாவையும், தனி தனியே, தனித்து, போராட செய்வதற்கூடு, ஈற்றில் இரண்டு நாடுகளையுமே, பலவீனமடைய செய்து விடும் என்ற தந்திரோபாயத்தை உள்ளடக்கியது. அதாவது, இவை, ஒன்றையொன்று ஆதரிக்க முடியாத வகையில், இவ்விருமுனை போரானது முன்னெடுக்கபடுவதால், இது செலன்ஸிகின் பார்வையிலும், வரவேற்க்கப்படுவதாகவே இருக்கும் என்பது கணிப்பு. (ரஷ்யாவை பலவீனப்படுத்தும் யாதொன்றும் செலன்ஸிகிக்கு மகிழ்ச்சியையே தரும்.)!
இது ஒரு புறம் இருக்க, மேல் குறிப்பிட்டவாறு, நீர்மூழ்கி கப்பல், விமான தாங்கி கப்பல் மற்றும் ஏனைய பிரம்மாண்டமான போர் கப்பல்கள் - இவற்றை புதிதாக களமிறக்கி மத்திய கிழக்கு பிரதேசத்தில் தேவையான பதற்ற நிலையை உருவாக்குவதன் மூலம் ஈரானும் போரில் இறங்க, அல்லது போருக்குள் இழுத்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றது.
அதாவது ஈரானும் ரஷ்யாவும், கடுமையாக தூண்டிவிடப்படுவது திட்டமாகின்றது. இதற்காகவே Kursk போர்முனை, பல்வேறு, ‘கதைகளின்’ துணையோடு, புதிதாய் திறந்து விடப்படுகின்றது. இது போன்று, மறுபுறத்தே, ஈரானும் போரில் புதிதாய் கலந்துகொள்ள அல்லது இழுத்து எடுக்க வழிவகை செய்யப்படுகிறது.
பகுதி V
ரணில் போன்றே, இன்னுமொரு, பனங்காட்டு நரி என வர்ணிக்கப்படுவர், துருக்கியின் அதிபர் எர்டோகன் ஆவார். இவரது நகர்வுகளும் ரணிலுடைய நகர்வுகளை போன்றே கண்ணை மயக்கக் கூடியது.
சில தினங்களின் முன், துருக்கியின் ஈரானிற்கான தூதுவர் பின்வருமாறு முழக்கமிட்டு இருந்தார்: இம் முழக்கத்தின் படி, துருக்கியானது, இனியும் நேட்டோ கூட்டமைப்பில் இருப்பதை சட்டை செய்ய போவதில்லை என்றும், இனியும் அது ஈரானை தொடர்ந்து அமைதி பேணும் படி கோர முடியாது எனவும், ஈரான் ஆனது, அமெரிக்கா-இஸ்ரேல் ஆகிய நாடுகளை அவையவற்றின் முழங்காலில் மண்டியிட செய்து விட வேண்டும் என்றும், இதுவே ஈரான் ஆனது, ஹமாசின் தலைவரை கொன்று தீர்த்தமைக்கான, சரியான பழி வாங்கும் நடைமுறையாகும் எனவும் கூறியிருந்தார்.
இதனையே, இனி, சுருக்கி, கூறுவோம் என்றால்:
1.இனி துருக்கியானது, நேட்டோ கூட்டமைப்பை, பொருட்படுத்தப் போவதில்லை.
11.இனியும் துருக்கி ஈரானை பொறுமை காக்கும் படி, கோரப்போவதில்லை.
111.இனியும் ஈரானானது அமைதி காக்க தேவையில்லை. முக்கியமாக ஹமாஸ் தலைவரின் கொலைக்குப் பிறகு.
IV. ஈரானானது, உடனடியாக, அமெரிக்கா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளையும் அவற்றின் முழங்காலில் மண்டியிட செய்ய வேண்டும்.
இனியும் மத்திய கிழக்கில் ஏனைய நாடுகள், ஈரானின் படையெடுப்புக்காக காத்திருக்காமல், தாங்களாகவே முன் வந்து போரை ஆரம்பிக்க வேண்டும்.. (Tukish Monitor ; Hindhustan Times : : 21.08.2024)
இதே போன்று, இதே தினங்களில், துருக்கியின் வெளிநாட்டு அமைச்சரும், தமது தூதுவரை ஒத்ததாய், அமெரிக்காவானது இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்குவதற்காய் தமது நாடு உயரிய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது என்றும் ஒரு பிரகடனத்தை இஸ்ரேலுக்கு எதிராக வெளியிட்டார்.
சுருக்கமாக கூறினால், Kursk படையெடுப்பானது ஒரு புறம் நடந்தேறுகையில், ஈரானையும் போரில் இழுத்துவிட்டு முழு மத்திய கிழக்கையும் போர் பதற்றத்துள் தூண்டிவிட்டால், ரஷ்யாவானது இரண்டு தோணிகளில் கால் வைத்த நிலைக்கு தள்ளப்பட்டு, தடுமாறும் ஒரு நிலைமையை அடைந்து, தோல்வியை தழுவிவிடும் என்பது நம்பிக்கையாகும். இதற்காக, நவீன ஆயுதங்களை, மத்திய கிழக்கிற்கு (இரண்டாம் விமான தாங்கி கப்பல் உட்பட) அனுப்புதல். கூடவே, துருக்கியை வைத்து நாடகம் ஒன்றையும் நடத்துதல், என்பவை திட்டமாகின்றது.
பகுதி VI
ஆனால், நடைமுறையில், இத்திட்டம் நிறைவேறக் கூடிய சாத்திய கூறுகள் மிகக் குறைவானதாகவே காணப்படுவதாக இருக்கின்றது. (ஐந்தாம் படையை எதிர்பார்த்து தழிழ் மக்கள் காத்திருந்தது போல).
எதிர்பார்த்த படி ஈரான், தற்சமயத்திற்கு, போரில் இறங்குவதாக இல்லை. மாறாக, தனது நாடு, இது தொடர்பில், அனுபவிக்கும், பல்வேறு கொந்தளிப்புகளை – அவை உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் அல்லது மத்திய கிழக்கின் ஏனைய நாடுகள் தரும் அழுத்தங்கள் காரணமாயும் இருக்கலாம் - அவற்றை நிதானமாய், மிக நிதானமாய் ஈரான், கையாள்வதாகவே காணக்கிட்டுகின்றது.
ஆனால் ஈரானின் இவ்வமைதியை அல்லது அதன் சுய கட்டுப்பாட்டை செயலிழக்க செய்யும் வகையில், அல்லது அதனை மேலும் சோதிக்கும் வகையில், துருக்கி போன்றே இஸ்ரேலும், ஈரானை போரில் இழுத்தெடுக்க, கடுமையான பிராயத்தனங்களை செய்து வருகின்றது.
ஹமாசின் Haniyehp இன் கொலையை அடுத்து, யாரும் எதிர்பார்க்காத நிலையில் மேலும் இரண்டு ஹிஸ்புல்லா தலைவர்களை 17.08.2024 இல் இஸ்ரேல் கொன்றொழித்தது. (Ahamed Abuara and Rafet Dawasi)i). இருந்தும் ஈரான் அசைந்ததாக இல்லை. தொடர்ந்து இஸ்ரேலானது, ஈரானை மேலும் மேலும், தூண்டி விட, சிரியாவின் இராணுவத் தளங்களின் மீது குண்டுமழை பொழிந்து, வானவேடிக்கை நிகழ்த்தியது (23.08.2024). இருந்தும், இஸ்ரேலின் இந்த கொலைகளோ அல்லது சிரியா மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல்களோ அல்லது துருக்கியின் சித்து விளையாட்டுகளோ ஈரானை அசைத்ததாக இல்லை.
இந்த மௌனங்கள், ரஷ்யாவும்-ஈரானும் ஏற்கனவே ஓர் இரகசிய ஒப்பந்தத்திற்கு வந்து சேர்ந்திருப்பதைத்தான் காட்டுகின்றது. முதலில் Kursk ! –அடுத்ததே ஈரான்!! - இப்படியாக, இரு போர்களை, அடுத்ததாய் - அதாவது ஒன்று முடிய ஒன்று, என நகர்த்தும் திட்டம், இரு நாடுகளிடையும் இருப்பதை இவை காட்டுகின்றன.
இவ்விரு நாடுகளுமே, இவ் விடயங்களில், ஒன்றுடனொன்று, கலந்தாலோசித்து ஒற்றுமையாய் செயற்படுவதாகவே தெரிகின்றது.
பகுதி VII
இச் சூழ்நிலையே Blinken இதே தினங்களில் இஸ்ரேலில் களங்மிறங்கினார் (19.08.2024)
அதாவது, பிளான் A , சரிவராத பட்சத்தில், பிளான் B யை நடைமுறைப்படுத்தியாக வேண்டியுள்ளது.
இப்பிண்ணனியிலேயே, மோடியும், 20–21 ம் திகதிகளில் தனது போலந்து-உக்ரைன் விஜயங்களையும் மேற்கொண்டார். இதே போன்று, புட்டினும் தன்பங்குக்கு செச்னியா, அசர்பஜன் போன்ற நாடுகளுக்கு தனது ‘திக்’ விஜயங்களை மேற்கொண்டார்.
புட்டினின், செச்னியா உரையை அவதானமாக நோக்குமிடத்து, அவர் எளிதில் அசைந்து கொடுக்கும் நிலையில் தற்போது இல்லை எனலாம்.
இவை அனைத்துமே வேறு ஒரு படி நிலைக்கு எம்மை அள்ளிச் சென்று நிறுத்துவதாக உள்ளது.
பகுதி VIII
புட்டினை பொறுத்தவரை, முதலில் Kursk வெற்றியை உறுதி செய்தல் என்பது பிரதான விடயமாகின்றது. உக்ரைனிய-ரஷ்ய போரில், 26ம் திகதி நடந்த வான்வெளி தாக்குதலே, மூன்று வருடங்களில், ரஷ்யாவால் நடத்தப்பட்ட, மிகப்பிரமாண்டமான தாக்குதல் எனக் கூறப்படுகின்றது. 27.08.2024, அல் ஜஸிராவின் அறிக்கையின் படி 26ம் திகதியில் மாத்திரம், ரஷ்யாவானது 127 ஏவுகணைகளாலும் 109 ட்ரோன்களாலும் உக்ரைனை தாக்கியதாக கூறப்படுகின்றது. இவ் ஏவுகணைகள் பல திக்குகளில் இருந்து ஏவப்பட்டன என்றும், ஒவ்வொன்றும் வித்தியாசமான வேகங்களுடனும், வித்தியாசமான உயரங்களிலும், உக்ரைனின் 15 மாகாணங்களையும், ஒரே நேரத்தில் தாக்கின என்றும் கூறப்படுகின்றது. இது போலவே இன்று வெளியிடப்பட்டுள்ள ரஷ்ய போர் அறிக்கைகளின் பிரகாரம், Kursk சண்டையில் இதுவரை தான் 7000 உக்ரைனிய போர் வீரர்களை கொன்று விட்டதாகவும், 73 தாங்கிகளையும் 500 இற்கும் அதிகமான ஏனைய பல்வகைப்பட்ட கலச வாகனங்களை அழித்து விட்டதாகவும் கூறுகின்றது. இது வெறும் கதையாக கூட இருக்கலாம். ஆனாலும், கூட்டி, கழித்து பார்க்கும் இடத்து ரஷ்ய தாக்குதல் பிரம்மாண்டமானதாய் இருந்திருக்கின்றது என்பது தெளிவு – போதாதற்கு, பைடனும் இத்தாக்குதலை கண்டித்தார் என்பது கவனத்திற்குரியது.
ஆனால் இவ் வான்வெளி தாக்குதலின் முக்கியத்துவம், ரஷ்ய ஏவுகணைகள், உக்ரைனின் பாதுகாப்பு ஏவுகணைகளை, சமாளித்து, தமது இலக்கை அடைவதில் வெற்றி கண்டுள்ளன என்பதுவே ஆகும். அதாவது, மேற்கின் அனைத்து, செயற்கை கோள்களை அல்லது அவற்றின் வலையமைப்புகளை, மீறி இத்தாக்குதல்கள் தமது இலக்கை எட்டியுள்ளன அல்லது வில்லியம்ஸ் அல்லது வில்மோரின் இருப்புகள் இங்கே சட்டை செய்யப்படவில்லை அல்லது அவர்களின் இருப்பை மீறியே இத்தாக்குதல்கள் மூலம் தனது விண்வெளி ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இச்செயதியானது, தற்போதைய உலக ஒழுங்கை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. விண்வெளியில் பலம் இழந்த ஒருவர் அல்லது ஆதிக்கம் குறைந்த ஒருவர், உலக ஒழுங்கிற்கு தலைமைத் தாங்குவது என்பது நடைபெற முடியாத ஒரு விடயமாகும். எனவே போரின் உக்கிரத் தன்மையானது, மேலும் முன்னேறுமானால் அது புதிய கட்டங்களுக்கு நாடுகளை இட்டுச் செல்லக் கூடியதுதான்.
இவையனைத்தும் ஒரு புறம் இருக்க,Kursk வெற்றியை உறுதி செய்யும் அதே வேளை ஈரானை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடும் ரஷ்யாவுக்கு உள்ளதாகவே இருக்கின்றது. ஆனால் அமெரிக்கா-இஸ்ரேல் பார்வையானது இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமுற்று காணப்படுகின்றது. ஈரானை யுத்தத்தினுள் இழுப்பதே இந்நாடுகளின் குறியாகின்றது.
இக்காரணத்தின் அடிப்படையிலேயே, இஸ்ரேலின் அடுத்தடுத்த கொலைவெறிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும், அதே போன்று, துருக்கி போன்ற நாடுகளின் சித்து விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன. ஆனால் புட்டினின் பார்வையோ, Kursk வெற்றியை நிச்சயித்த பின், இஸ்ரேலை நோக்கி அசைவதாய் இருக்கும் என நம்பலாம். இச்சூழ்நிலையே, மேற்கின், பிளான் B இறக்கப்பட வேண்டிய நிர்பந்தமும் எழுகின்றது.
பகுதி IX
சில தினங்களின் முன் மோடி, எப்படி போலந்துக்கும்-உக்ரைனுக்கும் (20-21ம் திகதிகளில்) பயணத்தை மேற்கொண்டு இருந்தாரோ, அதேபோன்று, பிளிங்கனும், இதே தினங்களில் இஸ்ரேலுக்கு தன் பயணத்தை மேற்கொண்டிருந்தார். (19.08.2024). ஆனால் இதைவிட முக்கியமானது அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரியான (NSA) சுலைவானின் சீன விஜயம் என்பதனைக் குறிப்பிடலாம். (26.08.2024).
அதாவது, சீனத்தை மேற்படி போரில், நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கேற்க விடாததற்கான உத்தரவாதத்தை சுலைவான் பெற்றுவிடுவதே, இப்பயணத்தின் முக்கிய குறிகோளாக இருக்க கூடும்.
சுருக்கமாக சொன்னால், உக்ரைனையும் அதே நேரத்தில் இஸ்ரேலையும் காப்பாற்றியாக வேண்டிய தேவைப்பாட்டை அடிப்படையாக கொண்டதே, அமெரிக்க ராஜ தந்திர நகர்வுகளின் சாரம் என கூறலாம். இதனால் தான் 2016 இற்கு பின்னர் இவ்வகையான உயர்மட்டத்திலான ஓர் அமெரிக்க அதிகாரியை (NSA), சீனத்துக்கு, அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதுவே, 'பிளான் B' யின் களமிறக்கத்தை சுட்டி காட்டுவதாக இருக்கிறது. ஆனால் இது காலம் கடந்த ஓர் நகர்வோ என்ற சந்தேகத்தையும் இது எழுப்புவதாகவே இருக்கின்றது. ஏனெனில், புட்டினின் அடி, உக்ரைனில், மிக உறுதியானதாகவே காணக்கிட்டுகின்றது.
மிக அண்மையில், செலன்ஸ்கி (சில தினங்களின் முன்) அமெரிக்க ஆயுதங்களை, உக்ரைன், தங்கு தடையின்றி பாவிக்கும் அதிகாரத்தை, அமெரிக்கா தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிய போது, அதனை மறுத்த அமெரிக்கா, தான் வழங்கும் ஆயுதங்கள் எல்லைப்புற சண்டைகளுக்கானதே அன்றி, ரஷ்யாவின் ஆழ் பரப்பை தாக்கவல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகின்றது. இக்கூற்றானது அமெரிக்க பேச்சாளர்களான கர்பியாலும் அதேபோன்று பென்டகன் பேச்சாளரான பெற்றிக் ரைடனாலும் உறுதி செய்யப்பட்டது. (27.08.2024)
ஆனால் இந்நிலைப்பாட்டுக்கான, காரணங்கள் புட்டினால் உருவாக்கப்பட்டமையே.
ஜேர்மனியின், நேட்டோ தளத்தை, ரஷ்ய ட்ரோன்கள் தாக்கின என்ற குற்ற சாட்டுக்கு, ரஷ்யா இன்று வரை சரியான பதில் எதையும் அறிந்ததாக இல்லை (26.08.2024) எனக் கூறப்படுகின்றது. இவையனைத்தும், பிளான் B, இறக்கப்பட வேண்டிய நிர்பந்தங்களை சுட்டிக்காட்டுவதாய் உள்ளது. இருந்தும் ரஷ்ய-ஈரான் ஆகிய இருநாடுகளின் விடயத்திலும், அவர்களிடம் இது போன்ற 'பிளான் B' என்ற ஒரு விடயம் இருப்பதாக தெரியவில்லை.
முதலில் Kursk அதற்கடுத்து இஸ்ரேல் என்ற பார்வையே, அவர்களிடம் தற்சமயத்திற்கு நிலைநாட்டப்பட்டு விட்டதாக தெரிகின்றது. ஆனால் இஸ்ரேலின் சீண்டுதலும் (தொடர் கொலைகளும்), அமெரிக்காவின் ஆயுத பரப்புகையும் விடயங்களை எதனை நோக்கி இட்டு செல்லும் என்பதனை கூறமுடியாது உள்ளது. ஏனெனில், இப்போரின் உக்கிரமானது, படிப்படியாக அணு ஆயுதங்களின் பாவிப்பை நோக்கி இட்டுச் செல்லுமா அல்லது ஒரு மூன்றாம் உலகப் போர் நிலையை நோக்கி இட்டுச் செல்லுமா, என்பதெல்லாம் கேள்வியாகின்றது.
ரஷ்யாவின், சிரேஷ்ட்ட அமைச்சர்களில் ஒருவரான லெவ்ரோவ், இப்போரின் கூடிவரும் உக்கிரத் தன்மைகளை தெளிவுப்படுத்தி மூன்றாம் உலகப் போரின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். (27.08.2024) அதாவது, மேற்கானது, தற்போதைய உலக ஒழுங்கை காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதி முயற்சியாக, அணு ஆயுதங்களை நோக்கி நகரக்கூடும் என்றால், அதில் சீனம், கலந்து கொள்ளாது தனித்து இருக்க வேண்டும் என்பதனை வற்புறுத்துவதற்காகவே, சுலைவான், இறக்கப்பட்டுள்ளார் என்ற கதையும் உண்டு.
சுருக்கமாக கூறினால் இக்கதையின் படி, பிளான் B ஆனது, ஊகிக்க முடியாத சில எல்லைகளை தொடுவதாகவே உள்ளது எனலாம். இத்திட்டத்தின் தலையாய பண்பு சீனத்தை தனிமைப்படுத்தாது அல்லது ரஷ்ய-சீன உறவை சீர்குலைப்பது என்பதாகின்றது. இவ் விஜயமும், ரஷ்யாவின் அண்மை வான்வெளி தாக்குதலும், லெவ்ரோவின் எச்சரிக்கையானது, சூனியத்திலிருந்து புறப்பட்ட ஒன்றல்ல என்பதனை நிரூபிப்பதாக உள்ளது. இவையனைத்துமே, தற்போதைய ரஷ்ய உக்ரேனிய போர் நிலவரங்கள் தோற்றுவிக்கக் கூடிய அதி முக்கிய சித்திரங்களாகும் என்பதனையே உலகு இன்று காணவேண்டியுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.