பகுதி IV
சுருக்கம் :
சென்ற கட்டுரைத் தொடரில், தன்னைச்சுற்றி எழக்கூடிய நான்கு விதமான அழுத்தங்களை ஆழ உணரும் பாரதி, இவற்றுக்கு மத்தியில், திலகரின் அரசியலைக் களமிறக்க வேண்டியதன் அவசியத்தினையும், ஆனால் ஆயிரம் வருஷங்கள் பழைமைவாய்ந்த ஓர் சமூகத்தில் தான் பிறந்து வாழநேர்ந்துள்ள யதார்த்தத்தையும், இதற்கொப்ப, மக்களின் மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்ற வேண்டிய தேவைப்பாட்டினையும், நன்கு உணர்ந்து, தன் வியாசத்திற்கு, பிரஞ்ஞையுடன் மதமூலாம் பூசமுனையும், ஓர் விதிவிலக்கான இளைஞனின் அணுகுமுறையை, எடுத்துரைக்க முனைந்திருந்தோம். இவனது செயற்பாடுகள் அல்லது புரிதல் இலகுவில் ஒருவருக்குக் கைவரக்கூடியதொன்றல்ல என்பது தெளிவு. பல்வேறு நூல்களைக் கற்று, ஆழ சிந்தித்து, தெளிந்து, அதேவேளை மக்களின்பால் அபரிவிதமான பரிவையும் தன்னுள் பெருமளவில் வளர்த்துக்கொள்ளும் ஓர் இளைஞனால் மாத்திரமே இத்தகைய முன்னெடுப்புகள் சாத்தியப்படக் கூடும்.
பாரதியின் அணுகுமுறை :
இந்திய மக்களிடை வளர்ந்துவரக்கூடிய தேசிய உணர்வை, திசைத்திருப்ப அல்லது அதனை இடம்பெயர்த்து, அங்கே, குறுகிய அரசியல் சித்தாந்தத்தை விதைத்துவிட, 1905களில் கர்ஸ்ஸன் பிரபு (வைஸ்ராய்) வங்காள மாகாணத் துண்டிப்பை அமுல்படுத்துகின்றான்:
கொழுந்துவிட்டெரியும். இந்தியத் தேசிய உணர்வினை இந்நடைமுறையானது, சிதைத்து, மத அடிப்படையில், மக்களைப் பிரிந்து நிற்கச்செய்துவிடும் என்பது அன்றைய ஆங்கில சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருந்தது.
முஸ்லீம்களாகவும், இந்துக்களாகவும் இந்தியர், கச்சைக்கட்டிக் கொள்வர் என்ற ஓர் எதிர்பார்ப்பின் அடிப்படையில், மேற்படி அரசியல் நகர்வானது, பல்வேறு சமாதானங்களுடன் அன்றைய ஆதிக்கச் சக்தியினரால் நகர்த்தப்பட்டது. உதாரணமாக, வங்காள மாகாணமானது, நிர்வாகக் கடினங்களை ஏற்படுத்தக்கூடிய, அளவில் மிகப்பெரிய மாகாணமாக இருப்பதால், இலகுவில் அதனை நிர்வகிக்கப்பட முடியாது என்பது இச்சமாதானங்களில் ஒன்றாக அமைந்தது.
மறுபுறம், இப்பிரிப்புக்கு எதிராக வேறுவகை சமாதானங்களும் அன்றைய ஆட்சியாளர்களால் அவிழ்ந்துவிடப்படாமல் இல்லை. வங்காள பிரிவுக்கு எதிராக, அதாவது, இத்துரோகச் செயற்பாட்டுக்கு எதிராக, முழுநாடே திரண்டுவிட்ட காலகட்டமது. ரவீந்திரநாத் தாகூர் உட்பட பல்வேறு புத்திஜீவிகளை இத்துரோகம் கவர்ந்து, ஆகர்சித்து இழுத்தெடுத்தது. அதாவது இந்தியத் தேசிய இயக்கம், இத்துரோகச் செயலால், மேலும் வளர்ச்சியுற்றது. உறுதி பூண்டது.
ஆனால், மக்கள் மயப்படுத்தக்கூடிய இப்போராட்டத்தின் அலைகளை, மௌனிக்கச் செய்யும் பொருட்டு, ஆட்சியாளர்கள் தினமொரு காய்நகர்த்தலைச் செய்த வண்ணமாய் இருந்தனர்.
இதுவரையில், இந்தியத் தேசத்தாரிடம் ஆழ்ந்த அனுதாபம் கொண்டவராகத் தோற்றம் காட்டி, இந்திய அரசியல் வானில் தம்மை நிலைநிறுத்தியிருந்த மார்லி அவர்கள், இவ்வங்காள மாகாணத் துண்டிப்பானது, ரத்து செய்ய முடியாத ஒன்று எனவும் ஆனால் இப்பிரிப்பில் சில சில நடைமுறை மாற்றங்களைச் செய்யக்கூடியதாய் இருக்கலாம் எனவும் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்.
அதாவது, ‘இவ்வனுதாப அணுகுமுறை’ கொதித்தெழுந்து, ஒன்றுபட்டு நிற்கும் இந்தியர்களின் மனநிலையைச் சாந்தப்படுத்திச் சிதைத்து தடம்புரட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு இந்நடவடிக்கைக்கூடு அவரிடம் காணப்பட்டது எனலாம். (அதாவது, இவ்விடயம் முடிந்துபோன ஓர் விடயம் என்பதும் அதனால் இனி செய்வதற்கு யாதொன்றும் இல்லை என்பதும், ஆனால் சிற்சில மாறுதல்களை வேண்டுமானால் இதில் மேற்கொள்ளலாம் என்பதும் அவரது கூற்றாகியது).
இவ்வணுகுமுறை பொருத்து பாரதி என்ற, இவ் இளம் இளைஞன் பின்வருமாறு எழுதுகின்றான்: “மார்லி, அடிக்கடி ‘அனுதாபம், அனுதாபம்’ கூச்சலிடுவதாலும்... அரை அனுதாபம் காட்டியதாலும், மேற்படி நினைப்பு (மேற்படி நினைப்பினால் இத்துண்டிப்பை ரத்து செய்ய முடியும் அல்லது ஆங்கிலேயருடன் சிநேகம் கொள்வதால் பற்பல நன்மைகள் உண்டு. ஆக்கப்பூர்வமான மாற்றங்களைப் பெற்றுக்கொள்ளலாம் போன்ற நினைப்பு) வளர்ச்சிப் பெறுவதாயிற்று” (அடைப்புக்குறியிலுள்ளவை எம்முடையதாகும்).
பாரதி தொடர்வார்: “பெங்காளத் தலைவர்கள், பத்திரிகைகள் மூலமாகவும் உபந்நியாசங்கள் மூலமாகவும், மேற்படி நம்பிக்கையை அடிக்கடி வெளியிட்டு வந்தார்கள்”.
அதாவது, ஓர் கருத்தானது எப்படி பத்திரிகைகள் மூலமாகவும் உபந்நியாசங்கள் மூலமாகவும், மக்களிடை திணிக்கப்பட்டு, கட்டி எழுப்பப்படுகிறது என்பதனையும் இவ்இளைஞன், அன்றே, புரிந்து வைத்தவனாக இருக்கின்றான். (இன்றைய எமது கருத்துருவாக்கிகள் பொருத்து இன்று நாம் உணரத் தலைப்படுவதுப்போல).
இச்சூழலில், ராய்ட்டரில் வெளிவந்து, பெரும் கலக்கத்தை உண்டுபண்ணிய “தந்தி” செய்தியை இவ்இளைஞன் சுட்டிக்காட்டுகின்றான்: “மார்லி... காட்டனுக்குப் பின்வருமாறு மறுமொழியளித்தார்: ‘பெங்காள மாகாணத் துண்டிப்பைக் கவர்மென்டார் உறுதியாகிவிட்ட விஷயமென்று கருதுகிறார்கள்”.
“...வேறுமுறைப்பாடுகள் எவையேனும் (பிரிப்பை, இரத்து செய்வதை விடுத்து) கொண்டுவரப்பட்டால்... அவற்றைக் கவனிக்கச் சித்தமாயிருக்கின்றேன்...” (கிட்டத்தட்ட இலங்கையின் வடகிழக்குப் பிரிப்பைப் போன்றது இது எனலாம்).
இத்தந்தியின் வாசகங்களை, சுட்டிக்காட்டும் பாரதி, பின்வருமாறு எழுதுகின்றான்: “உறுதியாகிவிட்ட விஷயம் என்று சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்? ”
“நியாயப்படி, முறைப்பாடுகள் கொண்டுவந்தால் அவற்றை ‘அனுதாபத்துடன்’ கவனிக்க முடியுமென்று (வேறு) சொல்கின்றார். இவர் அனுதாபத்தை ஆற்றில் எறி”.
“இனி யார் எப்படி கூறி என்ன? மார்லி கையிலும் புல்லரின் கையிலுமா நம் தேசத்தின் கதி பொறுத்திருக்கின்றது...”
“இவர்களுடைய அதிகாரம்... நாளை போய்விடும்... நம்முடைய சந்ததியார்... இங்கே நிலைத்திருக்கப் போகிறவர்கள், தலைமுறை தலைமுறையாக... இப்போராட்டத்தை... ஆத்திரம் குறையாமல் நடத்திவந்தால்... இறுதியில் வெற்றி அவர்கள் பக்கமேயாகும்...” (இந்தியா: பெங்காள மாகாண துண்டிப்பும் இந்திய மந்திரியும்: 14.07.1906).
இச்சிறிய வியாசத்தில் பாரதி தன் இருபத்து நான்காம் வயதில் இப்படியான ஓர் அரசியல் முதிர்ச்சியுடன் எழுதுவது ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றுதான்.
பத்திரிக்கைகளின் அரசியல் நோக்கங்கள், அவற்றின் கருத்துருவாக்கங்கள் என்பனவற்றை அவன் மதிப்பிட்டு வைத்துள்ளதைப்போலவே அன்றைய ஆதிக்கச் சக்தியினரின் நரித்தனமிக்க தந்திரம் மிகுந்த நகர்வுகளை, முக்கியமாக, இவ்வாதிக்கச் சக்தியினரின் (நண்பர்கள்) எனப்படுவோர் முன்நகர்த்தும் அரசியலின் ஆழ-அகலங்களை, நன்கு உள்வாங்கி அவற்றை மக்களின் மேடையில் அம்பலப்படுத்துவது தன் கடமை எனக் கருதி நிற்கின்றான் இவ்இளைஞன்.
அவனது இந்நகர்வில் இவனது ஆத்திரமும் கொப்பளிக்கின்றது. அதேவேளை, எழுத்தின் நயமும் குறைவுறாதப்படியும் இருக்கின்றது.
கைலாசபதி குறிக்கும்; “உணர்ச்சிப் பிழம்பாகக்” காட்சியளிக்கும் இவன், அதேவேளை, அதனையும் மீறி தேர்ந்த ஒரு அரசியல் ஞானம் கொண்ட அரசியல் வாதியாகவும் காட்சித்தருகின்றான். அவனது வாழ்வின் இப்புள்ளி இந்திய வரலாற்றின் குறிக்கத்தக்கப் புள்ளியாகின்றதா என்பதும் அதற்குரிய காரணங்கள் எவை எவை என்பனவெல்லாம் வேறுவகைப்பட்ட கேள்விகளாகின்றன.
- Thomas carlyle (1795 - 1881) -
2
இது போலவே அவனது அறிமுகங்களும் வித்தியாசப்படுவதாய் உள்ளன. உதாரணமாக, திலகரின் ஐம்பதாவது பிறந்தநாள் பொருத்து அவன் எழுதும் குறிப்பில் (Thomas Carlyle – 1795-1881) எனும் தத்துவ ஆசிரியனை மேற்கோள் காட்டுகின்றான். (கணனியின் ஆதிக்கம் இல்லாத அக்காலத்தில் இது அவனது பரந்துபட்ட வாசிப்புத்திறனையும், தேடுதலையும் சுட்டிக்காட்டவே செய்கின்றது).
கார்லைல் குறிப்பிடும் வீர பூஜையை அறிமுகப்படுத்தி, பின், திலகர் தொடர்பில் ஆற்றப்படும் பூஜைகளை ஒப்பிட்டு, இவன் ஆற்றும், சாமர்த்தியவாதம் குறிக்கத்தக்கதாகின்றது. கூறுகின்றான்: “வீர பூஜையானது ஒரு தேசத்தின் அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும்”. கார்லைல் என்ற ஆங்கில ஞானியார், வீர பூஜையைப்பற்றி ஓர் முழு கிரந்தம் எழுதியிருக்கின்றார். “எந்தக் காலத்திலும், வீர பூஜை விஷயத்தில் மிகுந்த சிரத்தைக் கொண்டிருந்த எமது நாட்டார்கள், அது மிகவும் அவசியமாயிருக்கும் இந்த தருணத்தில், சும்மா இருந்துவிடலாகாது” (இந்தியா: 14.07.1906 : திலகரின் ஐம்பதாவது பிறந்தநாள்).
இங்கே விடயம் இவன் கார்லைலை, தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மட்டும் காணப்படவில்லை. ஆனால், - இவ் அறிமுகமானது எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதுவே குறிக்கத்தக்கதாகின்றது.
தோமஸ் கார்லைல் (Thomas Carlyle) எனும் இத்தத்துவஞானி, கிட்டத்தட்ட முழுமையாக நீட்சேயின் வார்ப்பாகவே திகழுபவர். சம காலத்தவர். கதாநாயகர்களே உலகை முன்னேற்றுபவர்கள் என்றும், இதன்போது, வன்முறைகள் நடந்தேறுவது தவிர்க்க முடியாதவை என்பதும் இவரது வாதமாகும். மேலும், மேற்படி வரலாற்று நாயகர்களை வணங்கி வழிவிட வேண்டியது, மக்கள் சைன்னியத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்று என்பதும் இத்தத்துவ அறிஞன் சிபாரிசு செய்யும் விடயமாகிறது. (இத்தத்துவங்கள் குறித்து மக்சிம் கோர்க்கியின் விமர்சனங்களைப் பார்ப்பது பயன்தரத்தக்கது)
ஆங்கிலேய உளவுத்துறையைச் சாந்தப்படுத்த, மேற்படி கார்லையிலை இறக்குமதி செய்யும் பாரதி, இவரைத் தமிழ் வாசகரிடம் அறிமுகப்படுத்தும் வேளை, கதாநாயகர்களை வணங்கும் இவரது நிலைப்பாட்டை அவன் அறிமுகம் செய்தானில்லை. அதாவது, இக்கதாநாயகர்களே வரலாற்றை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற கார்லைலின் போதனைக்குப் பாரதி, வக்காலத்து வாங்கவும் இல்லை. மொத்தத்தில் கார்லைலின், மொத்தத் தத்துவத்தை, பிரபல்யப்படுத்தாமல், எல்லைப்படுத்தி, நகர்ந்திருப்பது அவதானத்துக்குரிய ஒன்றாயிருக்கின்றது.
அதாவது ஓர் அறிமுகத்தை ஆற்றும் பொழுது, அவ்அறிமுகத்தின் தேர்வு மாத்திரமல்ல, ஆனால் தான் அறிமுகம் செய்யக்கூடிய தத்துவத்தில் எந்தெந்தப் பக்கங்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்தப் பக்கங்களை ஏற்க வேண்டும், என்பதனையும் இவ்இளைஞன் தெரிந்து வைத்திருப்பதே இங்கே கோடிடக்கூடியதாக இருக்கின்றது.
மொத்தத்தில், ஆதிக்கச் சக்தியினரின் அரசியல் நகர்வுகளின் சூட்சுமத்தையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் அரசியலை மாற்றி கட்டமைக்க முனையும் அடிவருடி பத்திரிகைகளையும், மறுபுறத்தே, ஆங்கில உளவுத்துறையைச் சாந்தப்படுத்த வேண்டிய தேவைப்பாட்டையும், ஆனால் இதன்போது அறிமுகம் செய்யவேண்டிய சிற்சில தத்துவவாதிகளின் பலவீனமிக்கப் பக்கங்களையும் ஒருங்கே உணர்ந்தவனாக, இவ்இளைஞன் காட்சி தருகின்றான் என்பதிலேயே, பாரதி என்ற மகாகவியின், மேதவிலாசம் முளை விடுவதாக இருக்கின்றது.
3
பத்திரிகை தொடர்பிலும், ஆங்கில ஆட்சியாளரின் நுணுக்கமான நகர்வுகள் தொடர்பிலும், பிறநாட்டுச் சாத்திரங்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது தொடர்பிலும், இவ்இளைஞன் மேற்கொண்டிருக்கக்கூடிய நுணுக்கமான அறிவினை மேலே தொட முயற்சித்திருந்தோம்.
இதே தினங்களில், இவன், இதே பத்திரிகையில் எழுதியிருந்த மேலும் இரண்டு வியாசங்கள் எமது கருத்தைக் கவருவன.
ஒன்று: பானர்ஜியின் வெற்றி. மற்றது தூத்துக்குடியிலே மிஸ்டர் வாலரின் கூத்துக்கள். (இந்தியா:16.07.1906).
வாலரின் கூத்துக்கள் கட்டுரையில் தூத்துக்குடி நிருபர் ஒருவரின் கடிதம் மேற்கோள் காட்டப்படுகின்றது: “வெள்ளை கம்பனியினருக்குப் போட்டியாக ஏற்பட்டிருக்கும் சி.வா.கம்பனியாரை இவர் பலவாறாக, இமிசிக்க நிச்சயம் புரிந்துவிட்டார் என்று தெரிகிறது. ‘வெள்ளைக்கம்பனியார்’, சுதேசியக் கம்பனியின் படகின்மேல் தமது படகை வேண்டுமென்று மோதிவிட்டார்கள் என்பதாக சி.வா.கம்பனியார்… பிராது கொண்டு வந்தார்கள்… வாலர், மேற்படி பிராதை நமக்கு நேராக அனுப்பிவைக்கும்படி… சப்- மஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவு அனுப்பியிருக்கின்றார்…” (வாலன்:தூத்துக்குடியின் ஹெட் மாஜிஸ்ட்ரேட் : அல்லது துணை கலெக்டர் - சீனி.விசுவநாதன்)
“பொலிஸ் இன்ஸ்பெக்டரை(யும்)… அழைத்து… நீர் இந்த விஷயத்தில் யாதொன்றும் செய்ய வேண்டியது இல்லை… எல்லாம் நானே நடாத்திக்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டார்”. (பக்கம் 295-296)
மேற்படி பந்தியில், இரு கப்பற் கம்பனிகள், சம்பந்தப்பட்டுள்ளன என்பது தெளிவு. ஒன்று, சி.வா. எனும் சுதேசிய கம்பனி மற்றது வெள்ளையரின் கப்பல் கம்பனி.
அடுத்த கட்டுரையான பானர்ஜியின் வெற்றி என்ற கட்டுரையில் பாரதி என்ற இவ்இளைஞன் பின்வருமாறு கூறுகின்றான்:
“பானர்ஜி, தம்மீது, துர்ப்புத்தி கொண்ட உத்தியோகஸ்தர்களால் கொண்டுவரப்பட்ட இரண்டாவது கேஸிலும்… விடுதலை பெற்றார். இவரை… தண்டனை செய்திருந்த மாஜிஸ்ட்ரேட்டையும், அந்த தண்டனையை உறுதி செய்த ஜில்லா ஜட்ஜியையும்… ஹைகோர்ட்டார் வெகு அவமதிப்பாகப் பேசித் தீர்ப்பெழுதி இருக்கிறார்கள்…” (பக்கம் 291).
“(இவற்றை)… சில வெள்ளை பத்திரிகைகள் ஸ்தோத்திரம் புரிந்தன…” (பக்கம் 292).
“ஜனங்கள்… மூடஉத்தியோகஸ்தர்கள் விதித்ததே விதியென்று கஷ்டப்பட… செய்கிறார்கள்”.
மேற்படி இரண்டு வியாசங்களும் கீழ்வரும் இரு உண்மைகளை எமக்கு தெரிவிப்பதாய் உள்ளன.
ஒன்று, மேற்படி சட்டவிரோத செயற்பாடுகள், சட்டத்தை ஸ்தாபிப்பவர்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்ற உண்மையையும், இப்போக்குக்குப் பின்னணியாய் அமையும் காரணமான, சுதேசிய கப்பல் கம்பனிகள் அல்லது சுதேசிய செல்வம் அல்லது சுதேசிய முதலீடுகள் அல்லது சுதேசிய வர்த்தகம் - சி.வா.கம்பனியாரைப் போன்று ஒரு கட்டத்தில் எழுச்சியுற்று , வெள்ளை கம்பனியாருடன் போட்டியில் இறங்குவதையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளன.
வரலாற்றில் நிகழ்ந்தேறும் இப்போட்டிகளுக்கேற்ப தாம் இயற்றிய சட்டத்தைத் தாமே புறக்கணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்சியாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
அதாவது, இன்றைய சர்வதேசிய சட்டங்கள் இஸ்ரேலிய படுகொலைகளை எப்படி நிராகரிக்கின்றனவோ அல்லது இலங்கை சிறுதீவில் சிறுபான்மையினரை ஒடுக்கும் பொருட்டு விகிதாசார சட்டங்கள் எப்படி நிராகரிக்கப்படுகின்றனவோ அல்லது வட-கிழக்கு பிரிப்பை நிச்சயம் செய்ய எப்படி சட்டமானது வளைக்கப்படுகின்றதோ, அதே போன்று இப்புள்ளியிலும் சட்டமானது ஆங்கிலேயரால் நிராகரிக்கப்படுகின்றது.
வேறு வார்த்தையில் கூறினால், சாத்திரங்களைத் தோற்றுவிப்பது ஒருபுறம். அந்த சாத்திரங்களை தின்றுதீர்க்க வேண்டி இருப்பது யதார்த்தத்தின் மறுபுறம்.
அதாவது ஓர் அலையை தடுக்க அணையானது உடைக்கப்படுகின்றது. இதனையே பாரதி பின்னர் ஓர் சூழ்நிலையில் எழுத நேர்ந்தது : “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” (1912).
ஆனால், இவ்வரிகளுக்குப் பின்னணியாய் அமைந்துபோகும் யதார்த்தங்களே இக்கட்டுரைக்கு, முக்கியப்படுகின்றன.
அதாவது, சுதேச முதலீடுகளின் வளர்ச்சி அல்லது சுதேசிய வர்த்தகத்தின் வளர்ச்சி என்பது, ஒரு புள்ளியில், வெள்ளைக் கம்பனிகளுடனே போட்டியில் ஈடுபடும் யதார்த்தமானது, ஓர் குறித்த அரசியலை இந்தியாவில் கட்டுவிக்கும் முகாந்திரமாகிறது.
இவ்வரசியலின், முன்வரிசையில் அல்லது முன்நிலையில் இவ்இளைஞன் நிற்கின்றான் என்பதே இங்கு முக்கியப்படும் செய்தியாகின்றது. சீனி.விசுவநாதன் எழுதுவார்:
“வா.உ.சிதம்பரனார் சுதேசியக் கம்பனியை ஆரம்பித்து நடாத்துவதற்கு முன்னமேயே பி.ஜ.எஸ்.என்.கம்பனி என்ற பெயரில் ஓர் சுதேசியக் கம்பனி இயங்கி வந்ததாகத் தெரிகின்றது”. (பக்கம் : 297).
அண்மையில் வேங்கடாசலபதி அவர்கள் (Steamer) ஓர் 40வருட ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும், (2024) சீனி.விசுவநாதன் இதுகுறித்து, கிட்டத்தட்ட 15வருடங்களின் முன்னரே தொட்டுக்காட்டியுள்ளமை குறிக்கத்தக்கதாகின்றது. அதாவது சீனி.விசுவநாதனின் தேடல் பாரதி தொடர்பாக மாத்திரமன்றி அவர் வாழ்ந்த சூழலையும் சேர்த்து ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகின்றது. இது, அவரது சோர்வுறாமல், உழைக்கும் நல்லியல்பைக் காட்டுவதாகின்றது. இருந்தும், இருவருமே, ஒரே காலத்தில் இவ்வுண்மைகளைக் கண்டறிந்திருக்கவும் வாய்ப்புண்டு.
மறுபுறம் இவ்இளைஞன், அன்றைய இந்தியாவில் நிகழ்ந்தேறும் இந்நுணுக்கமான மாற்றங்களை உள்வாங்குவது மாத்திரமன்றி, மேலே குறித்தவாறு, இதனை எதிர்க்கும் முன்னணிப்படை வரிசையில், செயல் வீரனாக நிற்பதும் தெரிகின்றது.
சீனி விஸ்வநாதன் அவர்கள் தமது குறிப்பில் தொடர்ந்தும் எமுதுவார் :
“வடபுலத்தில், சுதேசிய இயக்கத்தில் பெங்காளம் முன்னணியில் திகழ்ந்தது போல், தென்னகத்தில் தூத்துக்குடி விளங்கியது என்பதைப் பாரதி சொல்லாமல் சொல்லிவிட்டார்''.
வேங்கடாசலபதி அவர்களும், 15வருடங்களின் பின்னர் மேற்படி உண்மையை மீண்டும் ஒருதடவை சுட்டிக்காட்டியிருந்தாலும் தூத்துக்குடி அல்லது தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் ஓர் எண்ணப்பாடு பாரதியிடம் இருந்தது எனக்கூறுவது சற்று ஐயுறவானது.
பாரதிதாசனுக்கும் அல்லது திராவிட இயக்கத்தினருக்கும் அல்லது அண்மித்த இந்திய ஆதிக்கச் சக்திகளின் நகர்வுகளுக்கும், இவ்வகை அரசியலை முன்னெடுப்பது என்பது இலகுவாக இருந்திருக்கும். (தழிழகத்தை முன்னிலைப்படுத்தும் நகர்வு).
ஆனால் பாரதி எனும் மகாகவிஞனின் பார்வையில், அதுவும் குறித்த அக்காலக்கட்டத்தில், அவன் இவ் எல்லைகளைத்தாண்டி பயணித்தவன் என்பதும், மனிதன் தான் கட்டியுள்ள தளைகலெல்லாம் சிதறட்டும் என்று ஆர்பரித்தவனும் அவனே ஆவான்.
இது போல், பானர்ஜியின் வெற்றி என்ற கட்டுரையில் பின்வரும் குறிப்பையும் அவன் எழுதாமல் விடல்லை:
“நீதி அதிகாரத்தையும், நிர்வாக அதிகாரத்தையும் ஒரே மனிதன் வசம் ஒப்புவிக்கக் கூடாது என்ற ஏற்பாடு இருக்குமானால்… (பக்கம் - 292).
“சட்ட வலுவேறாக்கம்” (Separations Of Powers) என்ற கருதுகோள் இன்று சட்டம் படிப்போரிடை போதிக்கப்பட்டுவரும் வேளையில் மேற்படி வரிகள் அர்த்தப்படுவது யாது என்பது இலகுவாக விளங்கக்கூடும்.
ஆனால், அன்றைய ஆங்கிலேயரின், இஸ்ரேலிய படுகொலைகளை ஒத்த, சாத்திரங்களை தின்று தீர்க்கும், காட்டுமிராண்டி ஆட்சியை, அம்பலப்படுத்தும் போது, வெறுமனே ஒரு அரசியல் கோதாவில் எடுத்தெறிந்து பேசாமல், சட்ட வலுவேறாக்கம் குறித்து வாதிக்க முற்படுவது, இவ்இளைஞன் எத்தகைய ஓர் தளத்தில் இயங்க முற்படுகின்றான் என்பதை கூறுவதாகின்றது. அதாவது, இவனது அரசியலானது, மேலோட்டமான அரசியல் அல்ல என்பதும், அது ஆழமும் நுணுக்கமும் நிறைந்தது, என்பதும் குறிக்கத்தக்கதாகின்றது.
இந்தப் புரிதலிலேயே, வரலாற்றின், எப்புள்ளியில் இவ்இளைஞன் நிற்கின்றான் என்ற கேள்வி அணுகப்பட வேண்டியுள்ளது.
(வணக்கத்துடன்: காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுப்பு 1 : சீனி விஸ்வநாதன் - பக்கங்கள் : 297 வரை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.