நனவிடை தோய்தல் 6 - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: சிரிப்பழகன்! -இந்து.லிங்கேஸ்-
- எழுபதுகளில் யாழ் சுப்பிரமணியம் பூங்காவில். வலது கோடியில் இருப்பவர் ரஞ்சித். -
எம்மண்ணின் விடியல் என்பது அத்தனை பேரழகு! விரிந்த மொட்டுக்களின் வாசத்தை அள்ளிவரும் தென்றல்.பல்லவி சரணமாக பவனிவரும் பறவைகளின் சங்கீதம். உயிரை உருக்கும் பெருமாள் கோயில் சுப்ரபாதம்.வானத்தில் துள்ளிக்குதித்து கடலுக்குள் விழுந்து எழுந்து,பனைகளுள் ஒளித்து மறையும் சூரிய உதயம். அடுப்படியில் சுண்டக்காய்ச்சிய ஆட்டுப் பாலின் வாசமும், சாமியறைச் சாம்பிராணி வாசமும் போர்வைக்குள் முடங்கிக்கிடந்த என்னை மெல்லத்தட்டி எழுப்பும்.முகங்கழுவி அடுப்படிக்குள் கால்வைத்தால் சுடச்சுட ஆட்டுப்பால் தேநீரை அம்மா தர,அது தொண்டைக்குள்ளால் உள்ளிறங்க இந்த விடியலின் அழகும்,ஆட்டுப்பால் தேநீரின் சுவையும் பரவசப்படுத்தும் மனசுக்குள் புகுந்து புதுக்கவிதை எழுதும்.அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாளின் புதுவரவு. நல்லூரும் கொடியேறிவிட்டால் இந்த நாட்கள் எமக்கு ஆட்டமும்,கொண்டாட்டமும்தான்!
தன்னை அழகாய் உடுத்திவரும் சிவந்த அந்தி. அதற்கு பொருத்தமாய் பட்டுப்பாவாடை சட்டை.கூந்தல் நிறைய கனகாம்பரம் அல்லது மல்லிகை.வெள்ளிக்கொலுசு கட்டி உலாவந்த கன்னியரின் பாதங்கள் இசைக்கும் மெளனராகம்.காத்திருந்த இளங்காளையரின் எண்ணங்கள் பட்டாம் பூச்சியாய்ப் பறக்க, குளிர்ச்சியான கோயில் வீதியின் மணலும், வானத்தில் நட்சத்திரங்களின் அழகும் பொற்கால நினைவாய் இன்றும் இணைந்து நனவுடை தோய்கின்றது.