படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -
வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.
சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம். எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது ! யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.