* ஓவியம் - செயற்கைத் தொழில் நுட்பம்.
உக்ரைனின் தேர்வு:தனது சொந்தத் தலையிடிகளால், பெரிதும் அவஸ்தைப்பட்டுப்போன அமெரிக்கா, தன் வெளிநாட்டுக் கொள்கையுடன் உள்நாட்டுக் கொள்கையையும் உடனடியாக மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியது. முக்கியமாக, அது தான் எதிர்ப்பார்த்த போர்முடிவை உக்ரைனில் காணக்கிட்டாதது ஒரு காரணமாக இருக்கலாம்.
1963இல், தான் மூடிய தனது கொடூர சிறைகளில் ஒன்றான ALCARTANZNI யை, ட்ரம்ப் மீள திறந்து வைத்து உரையாற்றினார் (05.05.2025). ஆயிரம் காரணங்களை அவர் தேர்ந்து அடுக்கினாலும், அமெரிக்க எழுச்சிகளை கட்டுப்படுத்த மேற்படி திறப்பு விழா தேவையானதுதான் என நிபுணர்கள் கூறுவதாய் உள்ளது. அதாவது, “சுதந்திர அமெரிக்கா” என்ற கனவு எப்போதோ செத்துத்தொலைய, இன்று கை-கால் விலங்குகளுடன், இந்திய மாணவர்கள் 24 மணி நேரத்தில், விமானமேற்றி அனுப்பி வைப்பது அமெரிக்க தர்மமானது. ஆனால், 10 வருடங்களின் முன்னரேயே, உக்ரைனானது இவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் விதி தீர்மானிக்கப்படுகின்றது (2014). (அதாவது, 2009இன் முள்ளிவாய்க்கால் தீர்மானிக்கப்பட்டது போல).
2019இல் வெளியிடப்பட்ட RAND COPERATION அறிக்கையின் பிரகாரம் உக்ரைனை மேலும் ராணுவ ரீதியில் பலப்படுத்துவதும் அதற்காக மேலும் ஆயுதங்களை அதற்கு அனுப்பி வைப்பதும் முக்கியமானது என்று கூறப்பட்டது (அதாவது 2019லேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்படுகின்றது). எனவேதான், நச்சுக் கிருமிகளை உலகம் முழுவதும் பரப்பிப் தள்ளும் பயோ லெப்களை (BIO LABS) உருவாக்கி, கோவிட் போன்ற ஆட்கொல்லி தொற்றுக்களை உருவாக்க தேவையான லெப்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை மேற்கானது, ஆதியோடு அந்தமாக மறுத்திருந்த போதிலும் கென்னடி (ஜுனியர்- 2024 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர்) இது உண்மை என்றும் BIO LABSகள் உக்ரைனில், அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்டன என்பதில் உண்மையுண்டு எனவும் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, உக்ரைனின் அரசியல் அமைப்பினை மாற்றுவதும், தனக்குத் தோதான ஓர் அரசை அங்கு நிறுவுவதும், பெருந்தேசியவாதமான நாசிசத்தை அங்கே வேரூன்றச் செய்வதும் அடிப்படைகளாகின்றன.
‘மெய்டன்’ எழுச்சியானது (MAIDEN) 2014இல் உக்ரைனில் இடம்பெற்றது. அப்போது வெறும் ஹாஸ்ய நடிகராக இருந்த செலன்ஸ்கி, புதிய கட்சி ஒன்றை ஸ்தாபித்துவிட்டார். கிட்டத்தட்ட கோத்தாபாய ராஜபக்ஷ, இங்கே, ‘சிங்கள லே’ (சிங்கள ரத்தம்) அல்லது ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரிலெல்லாம் அநேக அமைப்புகளை உருவாக்கி, பின் இறுதியில், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய அதேவிதத்தில் ‘மெய்டன்’ எழுச்சியை அடுத்து, செலன்ஸ்கியின் கள-இறக்கமும் நடந்தேறுகின்றது. ஆனால், உக்ரைனில், இது, ரஷ்யாவுக்கு எதிரான நகர்வைக் காட்டி நின்றது என்பதே விடயங்களை வேறுபடுத்தி காட்டுவதாய் இருந்தது.
இதைவிட, உலகின் மாற்றம் மற்றும், அமெரிக்காவின் உள்நாட்டு நிலவரங்கள்-இவை யாவும் உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடுப்பதற்கு ஏதுக்களாகின. அதாவது, கோத்தபாய ராஜபக்ஷவின் அதிகார கைப்பற்றல், ரஷ்ய-உக்ரைனிய போர், உலக ஒழுங்கின் மாற்றத்தை நோக்கி நகர்வதாய் இருக்கவில்லை. வேறு வார்த்தையில் கூறுவதானால், உக்ரைன் இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.
உக்ரைனிய செல்வங்கள்:
ஜெட் விமானம் முதற்கொண்டு கணனிகள் வரை அல்லது விண்வெளி ராக்கெட்டுக்கள் முதற்கொண்டு கமராக்கள் வரை ‘உலகின் தாதுப்பொருட்களின்’ அவசியம் தொடர்வதாய் உள்ளது. கிட்டத்தட்ட, 12.4 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உக்ரைனிய தாதுப்பொருள் ஒருபக்கம் கொட்டிக்கிடக்க, மறுபக்கம் அதன் கருங்கடல் அடியில் 2 ட்ரில்லியன் கியூபிக் மீற்றர் கன அளவு கொண்ட எரிவாயு படிமங்கள் காணக்கிட்டின. உள்நாட்டுப் பிரச்சினைகளால் தலையிடிப்பட்ட அமெரிக்காவை, இவை வாய்ப்பிளக்க வைத்தன என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
கொள்ளைகளுக்கு பழக்கப்பட்டுப் போன அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்தும் (இந்திய விடுதலை இயக்கத்தைக் கவனத்தில் கொண்டால் அல்லது கறுப்பினர்களை எப்படி எப்படி இவர்கள் அடிமைப்படுத்தி சங்கிலியால் பிணித்து, இழுத்து வந்தார்கள் என்பதை அறிந்தால் அல்லது சிவப்பிந்திய சமூகத்தைக் குதிரைகளில் இருந்து இறக்கி எப்படி அவர்களைக் கூண்டோடு அழித்தனர் எனக் கற்றுக் கொண்டால் அல்லது இலங்கையில் பெருந்தோட்டங்கள் எவ்வாறு காடுகளை வெட்டி உருவாக்கப்பட்டன என்று கண்டுகொண்டால்) உக்ரைனின் செல்வங்கள் ஐரோப்பிய யூனியனையும், அமெரிக்காவையும் வாய்ப்பிளக்க வைத்தன என்பதில் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.
இதுபோக, 2ம் உலக போரின் போது, மூட்டை மூட்டையாக ஹிட்லர் களவாடிய கறுப்பு மண் (Black Soil) என்பதும் உலகின் மிகப்பெரும் தானிய கிடங்கு உக்ரைனிலேயே காணப்படுகின்றது என்ற நாமகரணமும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒலிக்க, அதன் விவசாய நிலங்கள் அமெரிக்காவின் கண்ணைக் குத்தத்தான் செய்யும் என்பது தெளிவாகியது. எனவே தான், MAIDEN புரட்சியானது 2014லிலேயே அவிழ்த்துவிடப்படுகின்றது–ஏனைய “வண்ணநிறப்” புரட்சிகளைப் போல (Colour Revolution).
அடுத்ததாய், 2019இல், இதற்காக, ஹாஸ்ய நடிகரான செலன்ஸ்கி ஜனாதிபதியாய் ஆட்சி ஏறுகின்றார் (கைப்பற்றுகின்றார்). அதாவது முதலில் சட்டத்தை மாற்றுவது. (MAIDEN புரட்சியை அடுத்து). அடுத்து, நடிகர் செலன்ஸ்கியை ஜனாதிபதியாகக் களமிறக்குவது. மூன்றாவதாக ஜெர்மனிக்கான எரிவாயு குழாய்களை வெடிவைத்து தகர்ப்பது (NORD STREAM I & II -2022).
11 கோடி டாலரில்” அமைக்கப்பட்ட, புட்டினின் செல்லப்பிள்ளையான NORD STREAM குழாய்கள், உக்ரைனின் தாதுப்பொருட்களின் குவியல்களான 12.54 ட்ரில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது, புறக்கணிக்கத்தக்கதாகின்றன. இதனை, ஜெர்மனியின் ஏஞ்சலாவும் ஏற்றுக்கொள்வார் என்பதில் ஐயமில்லை. (இதனாலேயே அம்மையார் அவர்கள் MINSK ஒப்பந்தத்தின் போது அதிதீவிரமாக புட்டினுக்குப் போக்குக்காட்டி உழைத்தார் எனலாம்).
ரஷ்யாவை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது:
அமெரிக்காவின் உள்நாட்டுத் தலையிடிகள் ஒருபுறமிருக்க, அது தனது “காவல் நாயகன்” அந்தஸ்தைக் தக்கவைத்துக் கொள்வதென்றால் சில விடயங்களைச் செய்துதான் ஆக வேண்டியுள்ளது. மீன் அளவுக்கதிகமாய் வாயைத் திறந்துவிட்டதோ என்ற கேள்வியும் இங்கு எழாமல் இல்லை. இருந்தும், அமெரிக்காவின் தற்போதைய நிலையை எண்ணிப்பார்க்கும் போது வாயை இப்படித்தான் திறந்தாக வேண்டியுள்ளது–வேறு வழியில்லை என்றானது.
இக்காரணத்தால்தான், தான் எதிர்பார்த்த திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாக அல்லது கனவுகள் எல்லாம் குழைந்துவிட, மிகவும் கோபமடைந்த, பைடன், “புட்டின் ஒரு வேசியின் மகன்” எனத் தூற்றத் தொடங்கிய பின்னணியும் எழுகின்றது.
கொள்ளையடிப்பதையே ஒரு பிரதான தொழிலாகக் கொண்ட ஒரு நாட்டுக்கு, (இவை எல்லாம்) புதினமில்லாத ஒன்று என்றாலும், உலக ஒழுங்கு என்பது இன்று மாற தொடங்கியுள்ளது என்பதே விடயமாகின்றது. மீனின் வாய், அளவுக்கதிகமாகத் திறந்து விட்டது என அபிப்பிராயப்படுபவர்கள் உலகில் கூடித்தான் போனார்கள்–கிஷோர் மஹுபானி, கிசிஞ்சர் உட்பட.
சோவியத் ஏற்படுத்திய இருவிதமான பாதிப்புகள்:
2ம் உலக யுத்தத்தின்போது 8.9 மில்லியன் போர் வீரர்களைச் சோவியத் ரஷ்யா பலி கொடுத்தது என்பது போல ஒரு பதிவின் படி, ஜெர்மனியின், 5.3 மில்லியன் போர் வீரர்கள் மறித்து விட்டனர் எனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. (இப்புள்ளிவிபரங்களின் உண்மைத் தன்மை கேள்விக்குரியது). ஆனால், விடயம் யாதெனில், இந்தப் பாதிப்புக்களை, இன்றைய ரஷ்யா எவ்வாறு கொண்டாடத் துணிந்ததோ அதேபோன்று அமெரிக்காவும், கொண்டாடத் துணிந்தது என்பதிலேயே விடயம் காணப்படுகின்றது.
உதாரணமாக, இப்படி வெற்றிவாகை சூடிய சோவியத்தையே நாம் இல்லாமலாக்கிச் சிதைத்து விட்டோம் எனப் பைடன் மார்த்தட்டியவேளை, புட்டின், ரஷ்யாவின் மேற்படி வரலாற்றில் இருந்து, இன்றைய யுத்தத்திற்கான வீரத்தை உறிஞ்சிக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கி இருந்தார்.
பலர் அபிப்பிராயப்படுவது போல கிஷோர் மஹுபானியும் சோவியத்தின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் அமெரிக்கா அல்ல. ஆனால், சோவியத்தில் உள்ளடங்கிய உள்ளார்ந்த காரணிகளே சோவியத்தின் வீழ்ச்சிக்கான காரணம் என அவர் அபிப்பிராயப்படுவார். அதாவது, பைடன் மிக பெரிய தவறொன்றை இழைத்து விட்டார் என்று இந்த அடிப்படையிலேயே கிஷோர் மஹுபானி கூறுவதாய் உள்ளது.
மறுபுறத்தில், புட்டினோ அன்றைய சோவியத்தே, இன்றைய புதிய ரஷ்யாவின் தேசிய வாதத்தை முனனெடுக்க உதவுகின்றது என்பதைக் கண்டு கொள்கின்றார். இதனாலேயே 2ம் உலக போரின் அடிப்படை கூறுகளான ஸ்டாலினின் தலைமைத்துவத்தையும் ரஷ்ய மக்களின் வீரத்தையும் அவர் மறப்பதற்கில்லை. இது, ஸ்டாலினின் அன்றைய கூற்றை, ஒரு விதத்தில் நினைவுபடுத்தவே செய்கின்றது: “எனது உடலைத் தோண்டியெடுத்து வீசத்தான் செய்வார்கள். அது தெரிந்த ஒன்றே. ஆனால் வரலாறானது நாம் செய்த நற்கருமங்களை மறப்பதற்கில்லை–அதனை அவர்கள் எந்நாளும் போற்றுவார்கள் - மக்கள் எங்களை அன்போடு பாராட்டி மலரஞ்சலி செலுத்தவே செய்வார்கள்”.
புட்டின் மலர்களை வைத்து, 2ம் உலகப் போரின் நினைவாலயத்திற்கு அஞ்சலி செலுத்தும் போதும் முழங்காலிடும் போதும் இவ்வரிகள் நினைவில் தைப்பதாகவே இருக்கின்றன.
இதுபோக, இன்று புட்டின், 2ம் உலகப் போரின் (நாசிகளுக்கு எதிரான போரின்), 80வது வருட கொண்டாட்டத்தை “நாசிகளுக்கு எதிரான ரஷ்யாவின் வெற்றி” என்ற தொனிப்பொருளில் நடத்த முன்வந்தே இருக்கின்றார். இதற்காக 29 ஏனைய உலக தலைவர்களையும் ரஷ்யாவுக்கு வரவழைத்துள்ளார் - சீனத்தின் சீ-ஜின்-பிங் உட்பட.
இவற்றைக்கண்டு, கொந்தளித்துப்போன செலன்ஸ்கி கூறினார்: “இந்தத் தலைவர்கள் வருகை தரலாம்தான். ஆனால், இவர்களின் பாதுகாப்புக்கான எந்த உத்தரவாதத்தையும் உக்ரைன் தருவதற்கில்லை…”.
அநாகரிகமான இப்பயமுறுத்தல் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் பலராலும் நிந்திக்கப்பட்டது.
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெத்வேதெவ் (2008-2012) பின்வருமாறு கூறியிருந்தார்: “அப்படியெனில், இதுபோலவே, உக்ரைனின் தலைநகரமான கியெவ் 9ம் திகதி முதல் இருக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் ரஷ்யாவால் வழங்கமுடியாதிருக்கின்றது”.
ஆனால், இக்கூற்றுக்களை லட்சியம் செய்யாத சீ-ஜின்-பிங் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாஸ்கோவில் இறங்கி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். (08.09.2025).
ஆனால், இதனைவிட முக்கியமாக 2ம் உலகப் போர் கொண்டாட்டத்தில் பேரணியாகக் கலந்து கொண்ட நன்கு உடை உடுத்திய சீனத்து போர்வீரர்களின் குறிப்பிடத்தக்க சைனியம், கண்ணைக் கவருவதாய் அமைந்தது (13 வெளிநாட்டு சைனியத்தில் சீனத் துருப்புகளும் தனித்த ஒரு பிரிவினராகக் காணப்பட்டனர் என்பது சீன-ரஷ்ய தோழமையுணர்வைக் குறிப்பது ஆகும்).
இது அமெரிக்காவையும் ஐரோப்பிய யூனியனையும் இங்கிலாந்தையும் செலன்ஸ்கியையும் திகிலடைய செய்த ஒரு விடயமாகும். காரணம், இது புதிய உலகின் தோன்றலை அல்லது புதிய உலக ஒழுங்கமைப்பின் (Multi Polar World) தோன்றலைச் சந்தேகமின்றி உறுதி செய்வதாகின்றது.
ஆரம்பத்தில் கர்ஸ்க் வெற்றியின் போது தாம் 76,000 உக்ரைனிய போர் வீரர்களைக் கொன்றொழித்து விட்டதாகக் கூறிய புட்டின் இப்போது, இந்த முழுப் போர் நடவடிக்கைகளின் போது, மூன்று ஆண்டுகளில் நிர்மூலமாக்கப்பட்ட உக்ரைனிய ஆயுதங்கள் தொடர்பில் பின்வரும் தகவல்களைத் தந்தார்: “03 ஆண்டுகளில் தாம் 55,000 ட்ரோன்களையும் 600 விமான எதிர்ப்பு சாதனங்களையும், ஆயிரக்கணக்கான தாங்கிகளையும் 602 போர் விமானங்களையும் நொறுக்கித் தள்ளியுள்ளதாகவும் இவற்றுடன் 283 ஹெலிகொப்டர்களையும், ஆயிரக்கணக்கான ஆர்ட்டிலரிகளையும் ஆயுத கிடங்குகளையும் ரஷ்யா அழித்து விட்டன” என்றும் கூறிய போது, இப்போரின் உண்மைத் தன்மையை உலகு காணக்கூடியதாக இருக்கின்றது.
அதாவது, இப்போரானது ஊடகங்கள் காட்டியது போல வெறுமனே சகதி குழிகளுக்குள், இறங்கி ஏறும் முழு உலகமே (மேற்கு) திரண்டு வந்து, ரஷ்யாவை எதிர்த்த போர் முறையாகியது. எனவேதான், இத்தனை அடிகளையும் வாங்கிய பின்னர், பைடனின் கோபம் கரை கடந்ததாகிறது. “இவர் ஒரு வேசியின் மகன்” என அவர் கூற முடிவதில் ஞாயம் இருப்பதாகவே உள்ளது. சுருக்கமாய்க் கூறுவோமெனில், ஒரு புதிய ஒழுங்குக்கான போர்முறை என்று கூறலாம்.
அதாவது, இப்போரின் வாயிலாக, உலகின் முகமானது தீவிர மாற்றங்களுக்கு உள்ளாக தொடங்கியுள்ளது என்பது உண்மையாகின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இக்கொண்டாட்டத்திற்கான சீனத்தின் வருகை, வெறுமனே ஓர் அழைப்பை ஏற்பதாய் இல்லாது, உலகில் தங்கள் தங்கள் பங்கு என்ன என்பதை ஆலோசிக்கும் விஜயமாக அமைகின்றது. இவை அனைத்தும் சாத்தியமாகியது ஓர் உக்ரைன்-ரஷ்ய போரினால் என்றால் அது மிகையாகாது.
ரஷ்யாவின் கடும் கொள்கைகளில் மாற்றங்கள்:
ரஷ்யா தனது அணு ஆயுதங்கள் சம்பந்தமான நிலைப்பாடுகளில் ஏற்படுத்தி உள்ள மாற்றம் முக்கியமானதாகின்றது. வட கொரியாவை போல், புட்டினுக்குப் பக்க பலமாய் இருந்த சீனாவைத் தவிர பைலோ-ரஷ்யாவும் புட்டினின் தோளோடு தோள் நின்ற நாடாகின்றது. இதன் விளைவாக, நேட்டோவின் கோப பார்வை, ரஷ்யாவைத் தாண்டி அதன் அண்டை நாடான பைலோ-ரஷ்யாவையும், உள்ளடக்க முயன்றது என்பது குறிப்பிடத்தக்கதாகின்றது. அதன் எல்லைபுறங்களில், எதிரிகளின் நடமாட்டங்களும் ட்ரோன் தாக்குதல்களும் நாளும் அதிகரித்த வண்ணமாய் இருந்தன. இந்நிலையிலேயே புட்டினும் அறிவிக்க நேர்ந்தது:
ரஷ்யா மாத்திரமல்ல அதன் நேச நாடுகள் ஏதேனும் ஒன்றுகூட தாக்கப்பட்டால் எமது அணு ஆயுதங்கள் தகுந்த பதிலடியைக் கொடுக்கும். இவர்கள் “எதனால்” தாக்கப்பட்டார்கள் என்பது எமக்குப் பொருட்டல்ல. ட்ரோன்களினாலும் இவர்கள் தாக்கப்படலாம். மேலும், உக்ரைன் தனது தாக்குதல்களை, பிற நாட்டில் இருந்து அல்லது அதன் சார்பாய் வேறு நாடுகள் நடத்தினாலும் கூட, இவ்விரு நாடுகளுமே எமது அணு ஆயுத தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். தாக்குதல்கள் அணு ஆயுத பிரயோகங்களால், ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. ரஷ்யாவின் இறையாண்மைக்கு, அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அல்லது பயமுறுத்தலாய் விடயங்கள் உருவாகுமிடத்து எமது அணு ஆயுதங்கள் பதில் கூறலாம்.
இவ் ரஷ்ய அணு நிலைப்பாடுகள் கடந்த கால அதன் அணு நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது, கடுமை மிக்கதாய் விளங்குகின்றன என்பதில் சந்தேகமில்லை. கடந்த காலத்தில் நாங்கள் அணு ஆயுதத்தைப் பிரயோகிக்கும் முதல் நாடாக இருக்கப் போவதில்லை என்பது போன்ற “வாழைப்பழ எண்ணக்கருக்களே” ரஷ்யாவில் நிரம்பி வழிவதாய் இருந்தன. இது தவிர, ரஷ்யாவைப் போன்றே, உலகத்தின் முகமும் பாரிய மாற்றங்களுக்கு உள்ளானது என்று கூறுவது தகும்.
Ocean பயிற்சிகள் என ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ஒன்றாய் நடாத்திய பிரமாண்டமான ராணுவ ஒத்திகை உலகைத் திகைப்படைய செய்தது எனலாம் (10.09.2024). கிட்டத்தட்ட 400 கப்பல்களையும், 120 விமானங்களையும், 90,000 போர் வீரர்களையும் உள்ளடக்கிய இவ் ஒத்திகை குறிப்பிடத்தக்கது. ஆர்டிக் கடல் தொடக்கம், கெஸ்பியன், மத்திய கிழக்கு கடல் வரை வியாபித்திருக்கக் கூடிய இப்போர் நடவடிக்கை பல அர்த்தப்பாடுகளை உள்ளடக்கியதாக காணப்பட்டது. அதாவது, சர்வதேச கடல்பரப்பு என்பது இப்போது பிறிதொரு பரிமாணத்தை எட்டுவதாய் இருந்தது.
மேற்கின் உலகு “சுதந்திர” கடல் பரப்பைக் (தனக்கானதாய் மாத்திரம்) கட்டியெழுப்ப முற்படுகையில், சீனாவும் ரஷ்யாவும் இணைந்தாற்போல் கடலின் சுதந்திரத்தை ஆழ நிறுவ முற்பட்டன, தம் வழியில், எனக் கூறலாம்.
அமெரிக்காவின் உடன்பாடுகள்:
ரஷ்யாவின் கர்க்ஸ் வெற்றியை அடுத்தும், தற்போதைய புட்டினின் அறிவிப்பும்-ஆகிய இரண்டையும் சேர்த்து வாசிக்குமிடத்து-அவை வெளிப்படுத்தக் கூடிய உண்மைகள் ட்ரம்பை ஒரு பேச்சு வார்த்தையை நோக்கி அசையச் செய்கின்றன.
ட்ரம்ப் அவர்கள், தொடர்ந்து உக்ரைனின் தாதுப்பொருள் சம்பந்தமான உடன்படிக்கையையும் பிரேரிக்கவே செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில், வெள்ளை மாளிகையில் இருந்து செலன்ஸ்கியை வெளியே துரத்திவிடுவது போல நாடகமாடியும், பின்னர் தான் புட்டினின் நண்பன் என்று நாடகமாடியும் ஓர் சமாதான பேச்சுவார்த்தையை அவர் முன்னெடுக்க முனைந்திருந்தார். இருந்தும், இவற்றின் பின்னால், உக்ரைனின் தாதுப்பொருட்கள் சாடையாகத் தென்பட தொடங்கின எனப் பலரும் அபிப்பிராயப்பட்டதில் உண்மை இருக்கவே செய்தது.
ஆனால், ரஷ்யாவின் நிலைப்பாடோ மிகவும் கறாராக இருந்தது. “இனியும் நாங்கள் விளையாட்டுகளில் ஈடுபட போவதில்லை” என்பது லெப்ரோவின் கூற்றாகியது. அதாவது, ரஷ்ய முகமானது இன்று மாறியுள்ளதையே இது காட்டுவதாய் உள்ளது. காரணம், ட்ரம்ப்-செலன்ஸ்கி பேச்சுவார்த்தைத் தொடங்கிய போதே நான்கு தாதுப்பொருட்கள் சுரங்கத்தையும் புட்டின் வளைத்துப் போட்டுவிட்டார் என்ற செய்தி கசியத் தொடங்கியிருந்தது. (YASTURUBETSKE, NOVOPOLAVATVSKE, AZOVSKE, MASURIVSKE)
இனி ட்ரம்ப்-செலன்ஸ்கி “எந்தத்” தாதுப்பொருளுக்காக ஒப்பந்தம் செய்கின்றார்கள் என்ற கேள்வி நிபுணர்களால் எழுப்பப்பட்டு அது எந்த தாதுப்பொருளையும் (Earth Rare Material) உள்ளடக்கவில்லை. ஆனால் இது வெறுமனே, எண்ணெய், அலுமினியம், எரிவாயு போன்றவற்றை மாத்திரமே உள்ளடக்கியது எனக் கூறப்பட்டது. ஆனால் இக்கைப்பற்றுகையுடன் இனி உக்ரைனுடன் உடனடியான ஒரு சமாதானத்துக்கு தான் தயார் எனப் புட்டினால் கூறப்பட்டது. (இலக்குகளை ஏற்கனவே அடைந்ததினாலோ?)
இவற்றுடன் சீ-ஜின்-பிங் உட்பட 29 தலைவர்கள், வெற்றி கொண்டாட்டத்திற்கு வருகை தருகின்றனர் என்பதும் BRICS இன் வாங்கும் திறன் பு-7 இன் வாங்கும் திறனை விட இன்று அதிகரித்து காணப்படுகின்றது என்ற உண்மையும், உக்ரைன்-ரஷ்ய போரை உலக ஒழுங்குக்கான ஓர் போராக (Multi Polar World) காண முற்படுவதாகின்றது. இதன் தீவிரம், உக்ரைனிய-ரஷ்ய போர்முனையில் காணப்படுவது போல இன்னுமொரு போர் முனையும் இன்று அவிழ்த்து விடப்படுகின்றது: இந்திய–பாகிஸ்தான் போர்முனை!.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.