எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின் கவிதைத்தொகுப்பு "பாவை என்று சொல்லாதே என்னை" - மனஓசை வெளியீடு. 72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. புகலிடத் தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன். எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின் (செல்வி சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி. இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்திலிணைந்துப் போராடி மறைந்தவர்கள். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.
ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்)< பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள், யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
தொகுப்பின் 'என்னுரை' சந்திரவதனாவின் எழுத்துலகப் பயணத்தைச் சுருக்கமாக விபரிக்கின்றது. இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைக்கு இவர் அனுப்பிய க்விதை அந்நாளில் பிரபல ஒலிபரப்பாளராக விளங்கியவர்களில் ஒருவரான இராஜேஸ்வரி சண்முகத்தின் பாராட்டைப் பெற்று ஒலிபரப்பானதாக (1981) 'என்னுரை'யில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய 'பூவும் பொட்டும்' மங்கையர் மஞ்சரி பெண்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில்தான் அந்த 'வயல்வெளி' என்னும் கவிதை ஒலிபரப்பானது. நன்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளர்கள் பலரின் அடித்தளமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இருந்திருக்கின்றது. இவரது சகோதரி சந்திரா இரவீந்திரனின் எழுத்துகப் பயணமும் 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையிலேயே ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்னும் சிறுகதை மூலம் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை அவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதியிருந்தார்.
அதே சமயம் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டியவர் இவரது தந்தையாரான தியாகராஜாவே என்பதையும் 'என்னுரை' எடுத்துக்காட்டுகின்றது. சிறுவயதிலேயே தியாகராஜா அவர்கள் நாட்குறிப்பேடொன்றின்ச் சந்திரவதனாவுக்கு வழங்கி அவரது அன்றாட அனுபவங்களை எழுதும்படி தூண்டியிருக்கின்றார். அதுவே பின்னர் அவரது எழுதுலகப் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இச்சமயத்தில் வீடெங்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்களால் நிறைத்திருந்த என் தந்தையாரின் நினைவுகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவே என் எழுத்தார்வத்துக்கும் தீனி போட்டது.
- எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் -
இத்தொகுப்பின் 'பாவை என்று சொல்லாதே என்னை' என்னும் பெயரைப் பார்த்ததும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிதைகளை மையமாக இத்தொகுப்பு அமைந்திருக்குமென்றெண்ணினேன். தொகுப்பு அதனைப் பொய்ப்பிக்கவில்லை. பல கவிதைகள் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கின்றன. இத்தொகுப்பு பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதோடு, நனவிடை தோய்தல்களாகவும் அமைந்திருக்கின்றன. அந்நினைவிடைத் தோய்தல்கள் சந்திரவதனா தன் வாழ்வில் சந்தித்த பல்வகை அனுபவங்களை, இழப்புகளை, அவற்றால் எழுந்த நீங்கா நினைவுகளை வெளிப்படுத்துகின்றன. அவரே 'என்னுரை'யின் இறுதியில் கூறுவதுபோல் அவரது 'உணர்வுகளின் வடிகால்கள்' அவை.
தொகுப்பின் தலைப்புக் கவிதை 'நானும் ஒரு பெண்'. இதன் வரிகளே 'பாவை என்று சொல்லாதே என்னை'
'பாவை என்று
சொல்லாதே என்னை.
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை.'
இக்கவிதை வரிகள் அனைத்தும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவை.
'வீணை என்று
சொல்லாதே என்னை.
நீ மீட்டுகையில் நாதமிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மெளனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை.'
' பூ என்று
சொல்லாதெ என்னை.
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை'.
இவ்விதம் ஆணாதிக்க சமுதாயமொன்றில் விடுதலைக்காக ஏங்கும் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதையின் இறுதி வரிகள் அன்புடன் கூடிய மென் உறவுக்காக ஏங்கும் 'பெண் என்று மட்டும் ,எண்ணு என்னை, அது போதும் எனக்கு' என்று முடிகிறது.
'நாற்குணம்' என்னும் கவிதையில் பெண்ணை அடிமையாக்கியோர் நாணப் போராடுகின்றார்கள் பெண் போராளிகள். இருந்தும் ,
'சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை.
ஆணாதிக்கமும் அடக்குமுறையும்
முற்றாக ஒழியவுமில்லை.'
'தொலைக்காதே உன்னை' பெண்ணே! நீ, கிளர்ந்தெழு! அழுவதை மறந்திடு. போரிடவும் துணிந்திடு! ' என்று பெண்களை நோக்கி அறைகூவல் விடுக்கிறது.
'வழக்கம்போல் அடுப்படிக்குள்' கவிதை
'அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற் நினைப்பை
கொளுத்தி எறிந்தவள் மாலதி'
என்று சமையற்காரியாய், போகப்பொருளாய் இருப்பதுதான் பெண்ணின் வரைவிலக்கணம் என்னும் நிலையை மாற்றியவள் பெண் போராளியான மாலதி என்று கூறும் கவிஞை கவிதையைக் கீழுள்ளவாறு முடிக்கின்றார்:
'...
கடுகடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்..
அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல..'.
மாலதி போன்ற பெண் போராளிகளின் இருப்புக் கூட சமுதாயத்தில் பெண்ணின் நிலையை மாற்றவில்லையே என்று இங்கு கவிஞை வேதனைப்படுகின்றார்.
'களிக்கும் மனங்களே கசியுங்கள்' இயக்கத்துக்கு உதவும்படி வேண்டும் பிரச்சாரக் கவிதையாகக் கருதலாம்.
புற்று நோய் அலுலகத்தில் கூட பணி புரியும் பெண்ணொருத்திக்கு புற்றுநோய் காரணமாக அவளது மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க இருக்கின்றார்கள். அப்பெண்ணுக்கு அது தரும் வேதனையை எடுத்துரைக்கும் கவிதை, ஆணாதிக்கச் சமுதாயத்தில் மார்பகத்தை வெறும் உறுப்பாக உணராமல், போகப்பொருளாகக் கருதும் நிலையும் அப்பெண்ணின் துயரத்துக்குக் காரணம் என்பதை மறைமுகமாகச் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் இக்கவிதையும் பெண் விடுதலைக்கவிதைகளில் ஒன்றாக இனங்காணப்பட முடியும்.
'உனக்காய் வாழ்' என்னுங் குறுங்கவிதையும் '
'பெண்ணே!
ஊருககாய் வாழாதே!
உனக்காய் வாழ்! '
என்று பெண்ணை எழுச்சி கொள்ளக் கோரிக்கை விடுக்கிறது.
இன்னுமொரு குறுங்கவிதை ' உனதாய்'. அது
'உனது இருப்பு ,
உனது விருப்போடு,
உனதாய் இருக்கட்டும்'
என்று அறிவுரை கூறுகிறது.
'உனக்கு விடுதலை வேண்டும்' கவிதை
'பெண்ணே!
உனக்கு விடுதலை வேண்டும்.
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்' என்று வேண்டுகின்றது.
'ரணம்'
'உனக்காக
என் சுயத்தை எல்லாம் இழந்தது
போதும்...
இழப்பதற்கு என்னிடம்
இனி எதுவுமே இல்லை'
என்று தன்னை உணர்ந்து சுயபரிசீலனை செய்த பெண்ணொருத்தியின் உளநிலையினை வெளிக்காட்டும்.
'பால்வினை' என்னும் இன்னுமோர் குறுங்கவிதை ஏழ்மையினால், மனிதர்களின் இச்சையினால், சூழ்ச்சியினால் , பால்வினைக் கிண்றுகளுக்குள் தள்ளப்பட்டு , உடல்களுடன் உள்ளங்களும் ஊனமான பெண்களைப்பற்றி வருந்தும்.
என்று வலியுறுத்துகிறது. கலாச்சாரம், பண்பாடு, அம்மா, அம்மம்மா வழிமுறையில், சமூகச் சங்கிலியை உடைத்தெறிய முடியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணுக்கு முதலில் அவளிடமிருந்து விடுதலை வேண்டும் என்கின்றது.
'உன் பலம் உணர்ந்திடு' குறுங்கவிதை தாயகத்தில் 'வெண்கலத்துடன் போராடிய பெண்களின் கைகள் சுடுகலன்கள் ஏந்தி நிற்கையில், புகலிடத்திலோ தமிழ்ப்பெண்கள் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் தம் வலிமை உண்ராமல் கண் கலங்குகின்றார்கள்' என்று விழுப்புணர்வை ஏற்படுத்தும்.
'பெண்ணே நீ இன்னும் பேதைதானே!'
'மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்!....
நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்.
பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் என்ன சொல்வார்?' என்று கேள்வி கேட்கும்.
இவ்விதம் தொகுப்பின் பல கவிதைகள் , தொகுப்பின் தலைப்புக்கேற்பப் பெண் விடுதலையை வலியுறுத்துபவையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
'சுதந்திரம்' இலங்கையின் சுதந்திரம் தமிழ் மக்களுக்குச் சுதந்திரத்தைத் தரவில்லை. மாறாக 1958 தொடக்கம் 1983 வரையில் இனரீதியிலான வன்முறைகளைத்தாம், அடக்குமுறைகளைத்தாம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்க முடியாது அந்நியநாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற கோழைகள் என்று தன்னை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார் சந்திரவதனா:
'கொழும்பு றோட்டில்' போர்ச்சூழலில் தாயகம் திரும்பிய பெண் ஒருத்திக்கு . அங்கு நிலவிய பாதுகாப்புரீதியிலான அடக்குமுறைகள் ஏற்படுததும் பொலிஸ் ரிப்போர்ட், திடீர் சோதனைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்று பல இடர்களை விபரிக்கிறது.
'உயிரோடு திரும்புவேனா' புகலிடமான ஜேர்மன் நாட்டில் குழந்தைகளை விட்டு விட்டு , படுக்கையில் இருக்கும் தாயைப் பார்க்கச்செல்லும் பெண்ணொருத்தி, தாய் மண்ணில் நிலவும் அனர்த்தங்கள் கண்டு தளராமல் செல்வதை எடுத்துரைக்கும்.
இழந்த மண்ணின் , இனிய இறந்த காலத்து நினைவுகளால் எழும் கழிவிரக்கத்தை வெளிக்காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் சில உள்ளன. அவற்றிலொன்று 'சுகமான நினைவு'. சிறிது நீண்ட கவிதை. வாசிக்கையில் வாசகருக்கும் சுகமான இனியதோர் உணர்வினைத்தரும் மொழி கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது. 'செங்கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவ, செம் மஞ்சட் கதிர்களை கதிரவன் வீச, பறவையினம் சிறகடிக்க, வண்டினங்கள் ரீங்கரிக்க், குயிலினங்கள் இசைபாட, மெல்லென விடிந்தது அங்கெனது காலை' என்று இழந்த காலத்து நனவிடைதோயதலின் இனிமையில் , அதனால் விளைந்த கழிவிரக்கத்தில் மூழ்கிக்கிடக்கும் உளத்தை இக்கவிதை விப்ரிக்கின்றது.
...
'நிமலராஜன்' ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை ப்ற்றிப் பேசும். பேச்சுரிமையற்ற சூழலில் நினைவாகிப் போன ஒருவனாக அவரை விபரிக்கும்.
சந்திரவதனா செல்வகுமாரனின் அண்ணன், தம்பியர் இருவர் போராளிகளாகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். ஒரு குடும்பத்துக்கு இது மிகப்பெரிய இழப்பு. காலத்தால் அழிக்க முடியாத பெருந்துயரம். தொகுப்பின் முதல் , இறுதிக்கவிதைகள் இவ்விதம் போராட்டத்தில் அமரத்துவம் அடைந்த சகோதரர்களைப்பற்றி நினைவு கூர்கின்றன. இறுதியாக அவர்கள் நினைவுகளில்தாம் இருக்கின்றார்கள். தொகுப்பின் முதற் கவிதையான 'நினைவுகள்' மூத்தக்கா என்றழைக்கும் தம்பியைப்பற்றியும், சின்ன வார்த்தைகளால் சீண்டும் அண்ணனைப்பற்றியும் நினைவு கூரும். இறுதிக்கவிதை 'தம்பிமார்'. அண்ணன் , தம்பிமார்' பற்றிய நினைவுகளின் வெளிப்பாடு. ஒரு வகையில் இத்தொகுப்பை அவர்களுக்கான் அஞ்சலித்தொகுப்பாகவும் கருதலாம். தொகுப்பைத் தொடங்கும், முடிக்கும் வாசகர் ஒருவருக்கு அவர்களை நினைவூட்டும் வகையில் இந்த ஒழுங்கமைப்பு அமைந்திருக்கின்றது.
இவை தவிர மனம் , காதல் என மானுட வாழ்வின் முக்கியமான ஏனைய விடயங்களைப் பற்றிய கவிதைகளும் தொகுப்பிலுள்ளன.
புயலடித்துச் சாய்ந்த மரமொன்றின் குரல் 'புயலடித்துச் சாய்ந்த மரம்'. அதன் இளமைப்பருவத்தில் மரத்தை அல்லும் பகலும் தழுவிக் கிடந்த தென்றல் அதன் முதுமையில் புயலாக மாறிச் சீர்குலைத்தது ஏன் என்று கேட்கின்றது. 'கனிதரும் காலம் போய்விட்டாலும், நீ களைப்பாக வரும்போதெல்லாம் இளைப்பாற இடம் தந்திருப்பேனே, வேரோடு சாய்த்து விட்டாயேமென்று அது வேதனையுறுகின்றது. இது மரத்தின் கவிதை மட்டுமா? அல்லது மானுடர் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கும் , விமர்சிக்கும் ஒரு குறியீட்டுக் கவிதையா? அர்த்தங்கள் பலவற்றை அறிந்து கொள்ள வைப்பவை எழுத்துகள். இதுவும் அவ்வகை எழுத்துகளில் ஒன்று.
சந்திரவதனா செல்வகுமாரனின் 'பாவை என்று சொல்லாதே என்னை' கவிதைத்தொகுப்பு!' பெண் விடுதலை, பெண் போராளிகளின் மேன்மை, சமூகத்தில் தீர்க்கப்படாமலிருக்கும் சீதனம் போன்ற ஆணாதிக்கச் சின்னங்கள், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதுகாப்புரீதியிலான பிரச்சினைகள், காதல் போன்ற தனி மனித உணர்வுகள் பல்வேறு விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்ட , அவை பற்றிய அவரது நினைவுகளின் திரட்டு. எளிமையான, இதயத்தை இழுத்துப் பிடிக்கும் மொழி நடை அவரது முக்கிய பலம். உருவகங்கள் அதிகமில்லாவிட்டாலும், ஆங்காங்கே உவமைகள் சில உள்ளன. எதுகை, மோனைகள் நிறைய உள்ளன. கவிதையின் அடிநாதமாய் இருப்பது அது வெளிப்படுத்தும் உணர்வு. கவிதைகள் அனைத்துமே கவிஞையின் உண்மை உணர்வுகளின் வெளிப்பாடுகள். போலித்தனமான வறட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அல்ல. அதனால் வாசிக்கையில் நெஞ்சைத் தொடுகின்றன. வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.