காலம் கீறும் கோலம்இங்கு எல்லாமே காலம் போடும்
கோலம் தான்.
உலகத்தை நீ இயக்குவதாய்
உணர்ந்தால் அது இளமை துள்ளும்
காலம்.
எல்லாத் திசைகளிலும் சுத்தி
வருவாய் .
உலகம் இயங்கிறது நீயும்
இயங்குவதாய் உணர்ந்தால் -அது
நடுநிலைக் காலம் ,
திசையை தேர்வு
செய்து போய் வருவாய் .
உலகம் உன்னை விட்டு
இயங்குவதாய்
உணார்ந்தால் முதுமை முடக்கும்
காலம்
அறைகளுக்கு
அடைப்பட்டுக் கிடப்பாய்
அவஸ்தைகளும்
ஆனந்தங்களையும்
அசை போட்டபடியே !
மாற்றியவர் யாரோ ?
விவசாய நிலங்களில் தான் மனித
நாகரிகம் உருவாவனது.
இன்று
விவசாய நிலங்களை கடந்து
வருவதும் , அழிப்பதும் நாகரிகம்
ஆகி விட்டது.
மாதம் கோயில் மைதானமும் கூடிக்
கதைத்த அரசியலும்
இடம் நகர்ந்து சந்தை
தெருக்களுக்கு போகலாம் எனினும்
இன்னும் மாறாமல் கூடிக்
கதைக்கவே மனம் நாடுகிறது.
ஐம்பதில் சன்னதிக்கு போகும் அந்த
வார்த்தையாலம் மட்டும் பிற்போடப்
பட்டு நகர்த்தப்பட்டுக் கொண்டே
இருக்கிறது.
இந்த இருப்பு இருக்கும் வரை
இந்த நகர்வு இருந்து கொண்டே
இருக்கட்டும்.
இல்லம் தானே இதயத்துக்கு
மிக நெருக்க மானது.
அங்கே தானே வாழ்வு
உருகிப் போகின்றது.
அகங்காரம்
நினைவுத் தூபிகள்
எழுப்பப்பட்டு அவை
கோவில்களாகவும் விகாரைகளாகவும்
மாற்றப்பட்டது ஒரு கால நிகழ்வு.
மனிதப் புதைகுழிகளை மறைக்க
கோவில்களையும் விகாரைகளையும்
எழுப்புவது நிகழ்காலம் .
மனிதனின் அகங்காரம்
அடங்கும் இடம் இரண்டு
ஒன்று கடவுள.
மற்றது குழந்தைகள்.
சிவனே முருகனிடம் பாதம் கற்ற
கதை சைவ சமயத்தில் உண்டு.
தன் இழப்பை
குறைப்பதற்காக எதிரி நாட்டின்
மீது அணுகுண்டுகளை ஏவித் தம்
நாட்டுப்படைகளைப் காப்பது தருமம்
ஆகி விட்ட
21ம் நூற்றாண்டு சிந்தனை
உயிர்களை குறித்து கண்ணீர்
வடிப்பது என்ன
மாய மந்திரமோ?
ஒரு நாட்டின் முடிவைத் தனி
மனிதனின் முடிவாகக் கருதும்
ஒருவன் நாடுகளுக்காக எடுக்கும்
முடிவு
எப்படி நன்மை பயப்பதாக
இருக்க முடியும் ?
குறைந்த பட்ச ஜனநாயகத்தையும் ,
உழைப்பையும் தோண்டிப்
புதைப்பதாகத் தானே இருக்கும்?
பனை மரங்களுக்கு
இடையில் வாழ
ஓர் உறுதி மிக்க
சமூகமாக வாழ்ந்தவர்கள்
இன்று உறுதியை இழந்து
பனை மரங்களை மட்டுமல்ல
தமக்கு உள்ளும் வெட்டிச்
சாய்க்கிறார்கள்.
என்ன அவலம் இது?!
மரங்கள் அனல்
மூச்சு விடுகின்றன
எம்மைப் பார்த்து ....
தொல்லியலும் கல்வெட்டுகளும்
நடுகற்களும் எமை மூத்த குடி என
நிறுவி நிற்கலாம்>
நிகழ்கால வாழ்வில்
நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்.
என நிறுவ எதைத் தேடுவீர்கள்?
புதைகுழிகளையா?,
புனைகதைகளையா?
அவமான உளிகளால்
செதுக்கபடாமல்
அன்புக்கரங்களால்
அணைக்கப்பட்டிருந்தால்
எத்தனை மனிதர்களின்
வாழ்க்கை மாறிப் போயிருக்கும்?
ஆனாலும் என்ன
எங்கேயும் சிலர் எழுந்து தான்
நிற்கிறார்கள்
எம்மை ஆதரிக்க ,
எம்மை காப்பதற்காக>
சிலவேளைகளில்
அமைதி அடைவோம் !
திரை
சில மாற்றங்களை ஏற்றுக்
கொண்டும்
சில மாற்றங்களை ஏற்க
மறுத்தும்
அலை பாயும் மனம்.
புதுமைக்கும் , பழமைக்கும்
இடையே பதுங்கிக் கொள்ளும்.
பயமும் கொள்ளும்.
புதிய மாற்றங்கள் எல்லாம்
புதுமையாக இருந்து விடாது.
பழயவையும் பகுத்தறிவைத்
தாண்டி ...
இருந்து விடாது.
ஏதோ கால ஓட்டத்துக்குள்
அள்ளுப்பட்டு வாழ்ந்து விட்டுப்
போவதே இங்கு
வாழ்வாகி விடுகிறது.
கிழக்கிலிந்து மேற்கிற்கும்,
வடக்கிலிருந்து
தெற்கிற்கும்
இருக்கும் நாலு முடி மயிர்களை
வைத்துத் தலையை
மூடிக்கொள்ள முயற்சிப்பது தான்
ஒரு சிலர்
செய்யும்
தலை அலங்காரம் .
அதில் , இன்று நானும் ஒருவன்.
விதேசம்
நீச்சல் அடிக்க நீரின்றி
உறைந்து போன தேசத்தில்
அவனது சிந்தையும்
அசைவுகள் குறைந்து மயக்க
நிலைக்குப் போனதாக
விஞ்ஞானம் கூறலாம்.
அவனை மீளாத்துயிலிருந்து
தூண்டி மீட்க நிற்கும்
உறவுகள்..
நவீன இலத்திரன் கருவிகளில்
ஒரு செயற்கை படர்கிறது.
எங்கே தொடர்வது?
புதிய வட்டங்கள்
நாள்களை வரைய
அவன் நினைவுகளுடன்
அவஸ்தையைத் தானே
அனுபவிக்கிறான்
நாளைய நகர்வுகளை
யார் அறிவாரோ !
இறக்கிற உடலுக்கு இருபது
இடம் பூஜை வைக்கிறாய் ,
மரணப்படுக்கையிலும்
மார்பு துடிக்க
நமக்குள்ளேயே பிரிவுகள் ஏன் ?
ஊரைப் பகைத்து அல்லவா
சில உறவுகள் இங்கே துளிர்க்கிறது
வேரிலே அல்லவா பலா காய்க்கிறது !
யாரைச் சுட்டுவது?
யாப்பு கிழிகிறது .
எனினும் என்ன தொடர்புகள் அற்ற
தொலை தூரங்களில் வாழ்வு நகர்கிறது.
அன்று , 15ம் வயதில் 10ம் வகுப்பில்
படித்த நண்பர்களின் முகம்
மனக்கண்ணில் வந்து போகலாம்.
அவர்கள் சிலர் 60வயதைக்
கொண்டாட .... கொண்டாடியும்
இருக்கலாம்.
இளமைப்பருவத்தையும்
இனிய நினைவுகளையும்
மீட்டுப் பார்ப்பது தானே
இன்று வாழ்வாகி விடுகிறது.
இயற்கைச் இடர்
மரணங்களை விதைக்கிற
பூமியில்
மனிதம் எப்படி மலர
முடியும் ?
கண்டத்தட்டு நகர்தல்களில்
கண்மறைந்து போனவர்களை
கண்கள் தேடியும்
கிடைக்கவில்லை.
கலக்கம் இன்றும் தீரவில்லை.
விளக்கம் இங்கு தேவையில்லை.
விதைப்பு இங்கு பேரிடியே !
வெளிச்சம்
இன்றைய சில எழுத்தாளர்களின்
படைப்புகள்
எதிர்காலக் கடமைகளை
சுருக்கி கொண்டு படைப்பதால்
அவை சமூக மனித உணர்வுகளை
கொச்சைப் படுத்தி நிற்கின்றன.
இருண்டு போன வறட்டு
கொள்கையுடன் வாழ்வோருக்கு நீ
ஏன் வெளிச்சம் ஏற்றுகிறாய்?
அவர்களிடம் இருக்கும்
இருட்டு எண்ணம் தெளியாமல்
அவர்களை எப்படி
வெளிச்சத்திற்கு வர முடியும்?
விடய அறிவு இல்லாமல்
வரும் வார்த்தைகள் எல்லாம்
விமர்சனங்களாகி விட முடியாது
அவை விபரீதங்களை
விதைக்கத் தான்
படைக்கப் பட்டவையாகி விடும்.
மனிதன் என்றும்
தனக்கு வெளியேயும்
உள்ளேயும்
வெளிச்சம்
பாய்ச்சப்படுவதைத்தான்
விரும்புகிறான்
வெளியே வெளிச்சம்
கிடைத்தவர்கள்
பிரமுகர்களாகவும்
உள்ளே வெளிச்சம் தெரிந்தவர்கள்
ஆன்மீகவாதிகளாகவும்
திகழ்கிறார்கள்
அடையாளங்கள் மீது
கட்டப்பட்ட சுயம் உடைமைகளை
உருவாக்கிறது
தேவைகளை பெருக்கி
தேடலுடனேயே வாழ்வை
ஆசை வெளியில் மனம்
நாடி ஓடுகிறது
இறுதியில் ஆனந்தம்
அங்கு இல்லை என
அறிகிறது .
நீ பரப்பும் தொற்று நோய்
புன்சிரிப்பாகவே இருக்கட்டும் !
எந்திரன் 3
தேறாத நாட்களாக சில நாட்கள்
இருந்து விட்டுப் போகட்டும்.
அவற்றோடு என்றும் உறங்கி
விடக் கூடாது என்பதே வாழ்க்கைப்
பாடமாக அமையட்டும்.
சில படிகள் இறங்குவதால்
நன்மை பயக்கும் எனில்
அதை செய்து தானே பார்க்க
வேண்டும்.
நாம் கற்றுக் கொடுத்த இயந்திரம் ,
தானே கற்றுக் கொண்டு
இயங்கிற ' நுண்ணறிவு '
நாளை , சிலவேளை அதிகாரத்துக் துணை
போய் , ஒரு ஆக்கிரமிப்பாக
மாறலாம்
மனித இயல்புகளையே கேள்விக்
குறியாக்கலாம் ?
எனவே எதையும்
விழிப்புணர்வுடன் செயற்படுத்துவதே
மனித சமூகத்திற்கு உகந்ததாக
அமையும் , அமையட்டும் !
கேளாய் மகனே!
யார் பற்ற வைத்தார்கள் என்று
என்றாவது ஒரு நாள்
தீக்குச்சி கவலை கொண்டது
உண்டா?
உரசும் போது அது எப்போதும்
உணர்வினை வெளிக்காட்டி
விடுகிறது.
அது எந்த விபரீதங்க்கள் குறித்தும்
கவலை கொள்வதில்லை.
நீயோ மனித மனத்துடன்
வாழ்பவன் ஒவ்வொன்றின்
மதிப்பு அறிந்து தான்
செயற்பட வேண்டும்.
புதுமை
சித்திரையாள் சேலை
கட்டி வருவாள்
சென்ற இடம் சிறப்புத்
தேடித் தருவாள்
வட்டமுடைய கண்ணுடையாள்
வருவாள்
வாசல் தோறும் வசந்தம்
அள்ளித் தருவாள்
வண்ணத் தமிழ் பாட்டுடையாள்
வருவாள்
வையகத்தில் வளத்தை நிறைத்துத் தருவாள்
புத்தாண்டாய் புவிதனிலே
வருவாள் அவள்
புத்துணர்வு புகழும் நிதமும்
தருவாள் .
மடந்தை
கனவுகளால் துரத்தப்படும் நான்
கதைகளால் வாழ்ந்து விடுகிறேன்
பேசாத மனிதனாய்
சொற்களை இழந்து போகிறேன்.