மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் குடும்பம் - சி. செந்தாமரை எம்.ஏ., பி.எட்., முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 30 -
- எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி -
முன்னுரை கரிசல் இலக்கியத்தின் வழியாகக் கிராமிய மக்களின் எளிய வாழ்வியலைத் தம் எழுத்தின் வழியாக வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. இவர் தமது 21வது வயதில் தனது முதல் சிறுகதையான ‘பரிசு’ எனும் சிறுகதையினை எழுதினார். அச்சிறுகதை செம்மலர் இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன் போன்ற ஜனரஞ்சக இதழ்களில் வெளிவரத் தொடங்கின. இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் ஆறு நாவல்களையும், ஆறு குறுநாவல்களையும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதித் தமிழன்னைக்கு அணிசெய்துள்ள இவருக்கு மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர்களுக்குச் சமூகம் மற்றும் அரசியல் பார்வை தேவை என்பதை வலியுறுத்தும் இவர், நுட்பமான அரசியல் அறிவாளியாக விளங்கியதுடன் தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவும் இயங்கியுள்ளார். இத்தகைய சமூக சிந்தைனை கொண்ட படைப்பாளியான மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணப்படும் குடும்பம் குறித்தான கருத்தியல்களை, உறவுகளை, சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குடும்பம்
ஆளுமைப் பருவம் எய்திய ஆணும் பெண்ணும் உரிய சமூக அங்கிகாரத்துடன் கூடி வாழ்வதே குடும்பம் எனப்படுகின்றது. இத்தகைய அமைப்பில் கணவன், மனைவி, இவர்களின் பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர். இத்தகைய குடும்பம் ஒரு தனி அலகு அல்லது தனிக்குடும்பம் என்று வழங்கப்படுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட இத்தகைய குடும்பங்கள் ஒன்றிணைந்து இரத்த உறவுடைய ஒரு தலைமையின் கீழ் வாழ்வது கூட்டுக் குடும்பமாக அறியப்படுகின்றது.