* ஓவியம் - AI
வானத்தைக் கருமேகங்கள் முற்றாக ஆக்கிரமித்திருந்தன. மார்கழி மாதத்துக் குளிர் ஊசி துளைப்பதுபோல அவளைத் துளைத்தது. மழை நீர் குட்டைகளாக அங்கும் இங்கும் தேங்கியிருந்தது. சேறும் சகதியாக இருந்த தரையில், காலடிகளை ஒவ்வொன்றாகத் தூக்கித்தூக்கி மெதுமெதுவாக அவள் வைத்தாள். “கவனமப்பா, வழுக்கும். விழுந்திடாதையும்,” அவளுக்குள் ஒலித்த நாதனின் குரல் அவளின் கண்களைத் திரையிடச் செய்தது.
அந்த மப்பும் மந்தாரமுமான சூழலில்கூட, பின்வளவில் நாதன் பயிரிட்டிருந்த தக்காளியும், கத்தரியும், பிஞ்சு மிளகாயும் காய்த்துப் பொலிந்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. அதேநேரத்தில், எப்போதுமே நேர்த்தியாகவிருக்கும் அந்தத் தோட்டம், களைகளால் நிரம்பி அவளைப் போலவே சோகத்தை அப்பிவைத்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோற்றமளித்தது. தண்ணீர் பாய்ச்சுவதும், களைபிடுங்குவதும், பசளையிடுவதுமென செப்ரெம்பர் வரைக்கும் தினமும் நாதனின் மாலைநேரங்கள் அதற்குள்தான் கழிந்திருந்தன. அவன் நேசித்த அந்தத் தோட்டத்தைச் சற்றுச் சீராக்குவோமென்ற நினைப்பில் களைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினாள். “குந்தியிருந்து பிடுங்காமல் ஒரு ஸ்ரூலிலை இருந்துகொண்டு செய்யுமன். முதுகு வலிக்கப்போகுது. அதோடை களையெண்டு நினைச்சுக் கீரையளையும் பிடுங்கிப்போடாதையும்,” மீளவும் அவன் அவளுடன் பேசினான். தோட்ட வேலைகள் என்று எதையும் அவள் இதுவரை செய்ததும் இல்லைத்தான். “நீர் விதைச்சா பெரிசா முளைக்கிறதில்லையப்பா, நான் செய்யிறன். நீர் போய் எனக்கொரு தேத்தண்ணி போட்டுக்கொண்டுவாரும்.” தூக்கிக் கட்டின சாரத்துடனும், முறுக்கேறிய மார்புடனும் வியர்க்க வியர்க்க நிற்கும் நாதனுக்குத் தேத்தண்ணியுடன் அவனுக்குப் பிடித்த கடலை வடையையோ அல்லது பகோடாவையோ சேர்த்து அவள் கொண்டுவருவதும், அவனின் கைகள் அழுக்காக இருந்தால் அந்தச் சிற்றுண்டிகளை அவளே அவனுக்கு ஊட்டிவிடுவதுமான காட்சி அவளின் மனதில் ஓடி மறைந்தது. கண்களை நிறைத்த கண்ணீரை தனது வலது முன்கையால் துடைத்துக்கொண்டவள், பூத்துச் செழித்திருக்கும் பயிர்களைப் பார்த்துப் பூரித்துப்போகும் அவனுடன் தானும் சேர்ந்து அகம் மகிழ்ந்துபோவதை நினைத்துக்கொண்டாள். “இண்டைக்கு எல்லாமே உங்கடை தோட்டத்திலை பிடுங்கினதுதான்,” எண்டுசொல்லியபடி அவள் பரிமாறும், மசித்த கீரைக்கறியையும், மாசிக்கருவாடு கலந்த கத்தரிக்காய் பால்கறியையும், தக்காளியுடன் தாளித்துச் செய்த வெந்தயக் குழம்பையும், பருப்புடன் அவன் ரசித்துச் சாப்பிடும்போது அவளுக்கு ஏற்படும் உவகைக்கு ஏதும் ஈடிருப்பதில்லை.
நேரம்போகப் போக, எலும்புகளைச் சில்லிடச்செய்யும் அந்தக் குளிர் காற்றை அவளால் தாங்கமுடியவில்லை. மீளவும் வீட்டுக்குள் போனாள். யன்னலோரமாக இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தபடி, அதற்கு முன்னுக்கிருந்த ஸ்ரூலில் காலைநீட்டி வைத்துக்கொண்டு நாதன் பேப்பர் வாசித்துக்கொண்டிருப்பதுபோல அவளுக்குப் பிரமையாக இருந்தது. அதிலேயே சில நிமிடங்கள் அவள் அசையாது நின்றாள். அவளின் நெஞ்சு படபடத்தது, உடல் நடுங்கியது. அவளுக்குள் பெருமூச்சுக் கிளர்ந்தது. அவனின் நீலத் துவாயும் அந்தக் கதிரையிலேயே கிடந்தது. அவன் அன்று விட்டுச்சென்றவை எல்லாம், அவன் கடைசியாகப் படுத்திருந்த படுக்கைவிரிப்பு உள்ளடங்கலாக அங்கங்கேயே இருந்தன. வழமையில் இருப்பதுபோல சாய்மனைக் கதிரை அருகேயிருந்த கதிரையில் போய் அவள் அமர்ந்தாள். வீடு நிசப்தமாக இருந்தது. தொலைந்துபோய்க் கொண்டிருந்த நேரங்களை நினைவூட்டும் சுவர்க்கடிகாரத்தின் ரிக்ரிக் ஒலி மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கணங்களின் சூனியங்கள் அவள் நெஞ்சை வதைத்தன.
“நீங்க இல்லாம நான் எப்பிடியப்பா வாழுறது? எனக்கென்ன தெரியும்?” வாய்விட்டுக் கதறியழுதாள் அவள்.
அடுத்த நாள் அவள் கண்விழித்தபோது, பத்து மணியாகியிருந்தது. சூரிய வெப்பம் யன்னலூடாக அவளைச் சூடேற்றிக்கொண்டிருந்தது. இரவு சரியாக நித்திரை கொள்ளாததால் உடல் அசதியாக இருந்தது. அத்துடன் எழும்பி என்னத்தைச் செய்கிறது என்ற எண்ணத்தில் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் வீட்டுக்கு முன்பாக ஒரு ஓட்டோ வந்து நிற்பது யன்னலுக்கூடாகத் தெரிந்தது. கேற்றைத் திறந்துகொண்டு வந்தவளைப் பார்த்தபோது அவளால் நம்பவே முடியவில்லை. அவுஸ்ரேலியாவில் வாழும் அவளின் சினேகிதி ஈஸ்வரிதான் கையில் ஒரு பொதியுடன் வந்துகொண்டிருந்தாள். வேகமாகப் படுக்கையிலிருந்து எழுந்தவள் ஓடிப்போய் ஈஸ்வரியைக் கட்டிக்கொண்டு, பெரிதாகக் குரலெடுத்துக் கதறினாள். ஈஸ்வரியும் அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
“இப்பிடி என்னைத் தவிக்கவிட்டிட்டுப் போட்டாரே! இனி நான் என்ன செய்வன் ஈசு? எப்பிடி வாழப்போறன்? எனக்கென்ன தெரியும்?” அவளின் குரல் பிசிறியது.
“லலி, எனக்கு விளங்குது, நாதன் இல்லாதது மிகப் பெரிய இழப்புத்தான்! அதுவும் அப்படி அநியாயமாகக் கொல்லப்பட்டது --- தாங்கமுடியாத வேதனை!” ஈஸ்வரி லலிதாவின் தலையை ஆதரவாக வருடினாள்.
“ரோட்டிலை ஆர்தான் இங்கை ஒழுங்கா வாகனம் ஓடுறாங்கள். எத்தனை முறை அதைப் பத்தியெல்லாம் இவர் பேப்பரிலை எழுதியிருக்கிறார். ஆனா, ஆர் வாசிக்கினம், ஆர் பின்பற்றுகினம்? கடைசியிலை இவரையும் அதற்குப் பலியாக்கிப்போட்டாங்கள்... தெரியும்தானே, இவர் கொழும்புக்குப் பயணம்செய்த அந்த வாகனம் வலு வேகமாய்ப் போய் மரத்திலை மோதி ... இவரோடை சேத்து மூண்டு பேரைக் கொண்டிருக்கு.” கேவிக்கேவி அழுதாள்.
“வீதி விதிமுறைகளை ஆக்கள் பின்பற்றாமல் இருக்கிறது ஆக்களின்ர பிழை மட்டுமில்லை. அரசாங்கத்தின்ர பிழையும்தான். எங்கட நாட்டு நிலையை நினைச்சா பெருந்துயரம்தான்.” பெருமூச்சு விட்டுக்கொண்ட ஈஸ்வரி, “ம், வா, லலி வீட்டுக்கை போயிருந்து கதைப்பம்,” என்றபடி லலியை ஆதரவாக அணைத்தபடி வீட்டுக்குள் சென்றாள்.
ஹோலில் மாட்டப்பட்டிருந்த நாதனின் படத்தின் அருகேயிருந்த சோபாவில் அமர்ந்த லலிதா அந்தப் படத்தைப் பார்த்து மீளவும் அழத்தொடங்கினாள். அவளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்ட ஈஸ்வரி, லலிதாவின் இடது கையைத் தன் வலது கைக்குள் பிணைத்தபடி தன் சினேகிதியின் முகத்தைக் கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஈசு, நீர் நம்பமாட்டீர், அவர் என்னை ஒரு பிள்ளை மாதிரித்தான் பாத்துக்கொண்டார். 18 வயசிலை வாழ்க்கைப்பட்டதிலையிருந்து அவர்தான் எனக்கு எல்லாமே. எனக்கு இனி யார் இருக்கினம்? எல்லாமே போட்டுது!” அவள் விழிகளிலிருந்து திரண்ட கண்ணீர் ஈஸ்வரியின் கைகளில் பட்டுத்தெறித்தது.
லலிதாவின் முதுகை ஆதரவுடன் வருடிக்கொடுத்தபடி, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒற்றைக்குருவி வர்ண ஓவியத்தை ஈஸ்வரி பார்த்தாள். பின்னர், லலிதாவிடம் திரும்பித் தாழ்ந்த குரலில் சொன்னாள். “அவரைப்போல உமக்கு உறுதுணையாக இருக்க யாருமில்லைத்தான். விளங்குது லலி. சின்ன வயசிலேயே கலியாணம் கட்டினதாலையோ என்னவோ உம்மடை உலகம் வீடாகவே இருந்திட்டுது. வேலை ஒண்டு இருந்திருந்தால் கொஞ்சம் கவனத்தைத் திசைதிருப்பவாவது வழியிருந்திருக்கும்.”
“நினைச்சதெல்லாம் நடக்கிறதில்லையே! ஆமிக்காரன்களின்ர பிரச்சினைகளிலிருந்து என்னைக் காப்பாற்றுறதுக்காண்டி, இயக்கத்திலை நான் சேர்க்கப்படாமத் தடுக்கிறதுக்காண்டி, எனக்குக் கலியாணம் கட்டிவைக்கிறதுதான் நல்ல வழியெண்டு அம்மாவும் அப்பாவும் நம்பிச்சினம். அந்த நெருக்கடியான நிலைமை என்னையும் அதுக்கு ஒத்துக்கொள்ளச் செய்தது. என்ன, கலியாணம் கட்டிப்போட்டும் படிக்கலாமெண்டு நினைச்சன். அதுதான் நடக்கேல்லை... கட்டினவுடனேயே பிள்ளை வந்திட்டுது. எல்லாத்தையும்விட பிள்ளைதானே முக்கியமெண்டு நினைச்சன். அதாலை அப்படியே வீட்டிலை இருந்திட்டன். ம், படிச்சிருக்கலாம்தான்.” லலிதா பெருமூச்செறிந்தாள்.
“பிள்ளை, நீ சரியாய்க் குளிக்க வாக்கமாட்டாய், பிறகு குழந்தைக்குச் சளி பிடிச்சிடும். நான் வாக்கிறேன்... இங்கை விடு, நான் தீத்துறன், அப்பத்தான் அவள் வடிவாய்ச் சாப்பிடுவாள்,” என்றெல்லாம் நாதனின் அம்மா உதவிக்கு முன்நின்றதை படிச்சிருக்கலாம்தான் என்ற அவளின் வார்த்தை அவளுக்கு நினைவுபடுத்தியது.
“சரி நடந்தது நடந்ததுதான். அதை மாத்தேலாது. ஆனா, உமக்கு இன்னும் காலமிருக்கு. மனசைத் தேற்றிக்கொள்ளும், என்னால் ஆனதை நான் உமக்குச் செய்வன், அழாதையும்!” லலிதாவின் கண்ணீரை ஈஸ்வரி ஆதரவுடன் துடைத்துவிட்டாள்.
“நீர் அவுஸ்ரேலியாவிலை இருந்துகொண்டு என்னத்தைச் செய்யமுடியும், ஈசு? எனக்குக் காய்கறி வாங்கிக்கூடப் பழக்கமில்லை, எது நல்ல மீனெண்டு தெரிஞ்செடுக்கவும் எனக்குத் தெரியாது. வங்கிக்குப் போனதே இல்லை. ஒரு இடத்துக்கு போறதுக்கு எந்த பக்கமாய்ப் போற பஸ் எடுக்கவேணுமெண்டதுகூட எனக்குத் தெரியாது. எப்பிடி என்னாலை தனிய வாழ ஏலும்?” அவளின் குரல் உடைந்தது.
“காய்கறிகளைப் பேரம் பேசி வாங்க உனக்குத் தெரியாது பிள்ளை. எது நல்ல மீனெண்டும் நீ கண்டுபிடிக்க மாட்டாய். அவங்க உன்னை ஏமாத்திப் போடுவாங்கள்,” என வெளிவேலைகள் எல்லாத்தையும் மற்றவர்களே செய்ததால், அவளின் பொழுதுகள் குசினிக்குள் மட்டும் அடங்கிப்போனதும், சமையலுக்குக்கூட நாதனின் அம்மாவின் அறிவுறுத்தல்களில் தங்கியிருந்ததுமான அவளின் வாழ்க்கை அவளின் கண்முன் விரிந்தது.”
“இந்த நிலைமையிலை உம்மைப் பாக்கிறது எனக்குப் பெருங்கஷ்டமாயிருக்கு.” ஈஸ்வரிக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்து, குரல் கரகரத்தது.
“ஒரு மாசமா யாரோ ஒரு ஆள் சாப்பாட்டோடை வந்துகொண்டிருந்ததாலை சொல்லி அழவாவது ஒரு துணையிருந்தது. இப்ப தங்கைச்சிதான் அப்ப அப்ப வந்து அதை இதை வாங்கித்தருவாள். அவளும் அம்மாவைப் பாக்கோணும், அவளின்ர குடும்பத்தைப் பாக்கோணும். அதோடை எவ்வளவு காலத்துக்கு இப்பிடி நான் அவளிலை தங்கியிருக்கேலும்?”
ஈஸ்வரி பெருமூச்செறிந்தாள். “எல்லாம் விதிதான், ம், யாரை நோக... சரி எழும்பும், உமக்குப் பிடித்த கோழிப் புரியாணியை, உமக்கு விருப்பமானமாரி, முஸ்லீம் ஆட்கள் சமைக்கிறமாரி சமைச்சுக் கொண்டுவந்திருக்கிறன். வாரும் சாப்பிடுவம்.”
லலிதாவைக் கையில் பிடித்துக்கொண்டுபோய் சாப்பாட்டு மேசையிலை ஈஸ்வரி இருத்தினாள். பிறகு தானே கோப்பைகளை எடுத்துப் பரிமாறினாள்.
“பிள்ளையள் எப்படியிருக்கினம் லலி?”
“இரண்டுபேரும் கொழும்பு யூனிவேசிற்றியிலைதான். மகள் மூண்டாம் வருஷத்திலும், மகன் முதலாம் வருஷத்திலும் விஞ்ஞானப் பிரிவில இருக்கினம். அப்பா இல்லாதது அவைக்கும் பெரிய இழப்புத்தான். படிப்புக்கு உதவிகேட்கிறதாய் இருந்தாலென்ன, செலவுக்குக் காசு வாங்குறதாயிருந்தாலென்ன, ஏதாவது ஆலோசனை கேட்கிறதாயிருந்தாலென்ன, எல்லாத்துக்குமே அப்பாதான். அவரும் சயன்ஸ் ரீச்சர் தானே. இனி அவைக்கு யார் வழிகாட்டுவினம் எண்டதுதான் எனக்கு இப்ப ஒரே யோசனை. ‘கண்ணைக் கட்டிக் காட்டிலை விட்டதுபோல’ எண்டு சொல்லுவினமே, எனக்கு இப்ப அப்பிடித்தான் இருக்கு.” சாப்பிடுவதை நிறுத்திவிட்டு லலிதா மெளமானாள்.
“எனக்குத் தெரிந்த லலி நல்ல சுறுசுறுப்பானவள். பள்ளிக்கூடத்திலை மாணவ தலைவியா இருந்தவள். வகுப்பிலை மொனிற்றராக இருந்தவள். அவள் மனம் வைச்சால் எல்லாம் முடியும்.” ஈஸ்வரி லலிதாவின் தோளைத் தட்டிக்கொடுத்தாள்.
“அது அந்தக் காலம். சின்ன வயசு. இப்ப நான், அதுவும் இந்த வயசிலை ...”
“வயசு எண்டது வெறுமன ஒரு இலக்கம்தான் லலி. அதோடை இன்னும் 40 வருஷம் நீர் வாழப்போறீர். உமக்குள்ளை இருந்த திறன்கள் இன்னும் உமக்குள்ளைதான் இருக்கு.”
“அதோடை அந்த வயசிலை ஒரு அசாத்தியத் துணிச்சல் இருந்துது.”
“ஓம், ஓம், எனக்கு ஞாபகமிருக்கு. 95இல இடம்பெயர்ந்த காலங்களிலை, நிவாரணப் பொருள்கள் வாங்கப்போன உம்மடை அம்மாவுக்கு சர்பிரைஸ் கொடுக்கிறதுக்காண்டிப் பத்து வயசிலேயே அடுப்புமூட்டிச் சமைச்சிருக்கிறீர்.” ஈஸ்வரி உற்சாகத்துடன் சொன்னாள்.
“களைச்சுப்போய் வந்த அம்மாவுக்கு அது நம்பமுடியாத புளுகமா இருந்துது. அப்பாக்கும் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டவ. அப்பிடித்தான் பத்தாம் வகுப்புப் படிக்கைக்கே அம்மாவுக்கு ஒரு சத்திரசிகிச்சை நடந்து பெரியாஸ்பத்திரியிலை இருந்தவ. அப்ப பொழுதுபோக்குறதுக்காக அவ வாசிக்கிறதுக்கெண்டு ரண்டு கதைப்புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு ஒரு நாள் நான் தனிய பஸ்சிலை தெல்லிப்பழையிலிருந்து யாழ்ப்பாணம் போயிருக்கிறன்.”
“அதுதான் சொன்னனே, நீர் மனம் வைச்சால் உம்மாலை ஏலும். எங்காவது ஒரு வேலையைத் தேடிக்கொண்டீர் எண்டால், பொழுதும் போகும். திருப்தியும் கிடைக்கும். நீர் உறுதியா இருக்கிறதுதான் பிள்ளையளுக்கும் நல்லது. சாப்பிட்டு முடியும், நல்லாயிருக்கா?”
தலையை ஆட்டின லலிதா, ஓம் நல்லாயிருக்கு, தாங்ஸ் ஈசு. என்னாலை இப்ப பெரிசாச் சாப்பிட முடியேல்லை. பிறகு சாப்பிடுகிறேன் என்றாள். சரி விடும் பரவாயில்லை, என இருவரும் சாப்பிட்ட கோப்பைகளை எடுத்த ஈஸ்வரி லலிதா தடுக்கத்தடுக்க விடாமல் அவற்றைக் கழுவினாள். பின்னர் மீளவும் இருவரும் போய் சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
ஈஸ்வரியின் கையைப் பற்றியபடி, “வேலைசெய்கிறதுக்கு என்னட்டை என்ன கெட்டித்தனம் இருக்கு? 12ம் வகுப்புக்குப் பிறகு எதையும் படிகேல்லை. 22 வருஷமா வீட்டிலை இருக்கிறன். ரண்டு வருஷத்துக்கு முதல் கச்சேரியிலை ஒரு கிளார்க் வேலையிருக்கு, விருப்பமோ எண்டு எங்களோடை படிச்ச பத்மாவைத் தெரியும்தானே. அவ கேட்டவ. பிள்ளையளும் இவரும் எனக்கது கஷ்டமெண்டு விடேல்லை. இவ்வளவு காலமும் வீட்டுக்கை இருந்திட்டு, இனி என்ணெண்டு வேலைக்குப் போறதெண்டு நானும் வேண்டாம் எண்டிட்டன்.” எனக் குழப்பத்துடன் சொன்னாள் லலிதா.
“ஓ! சரி, போனது போகட்டும். உம்மாலை செய்யக்கூடிய வேலையைத் தேடலாம்தானே. வேலை கிடைச்சிட்டா செய்யச் செய்யப் பழகியிடும். பத்மாவோடை கதையும். ஏதாவது வேலையிருக்கா எண்டு கேளும். முந்திக் குணம் ரீச்சர் கெமிஸ்ரி படிப்பிக்கேக்கை எனக்குக் ஒண்டும் விளங்கிறதில்லை. எனக்கு முன்னாலை இருக்கிற உம்மைப் பாப்பன். நீர் தலையாட்டினால், பிறகு உம்மட்டைக் கேட்கலாமெண்ட ஆசுவாசம் எனக்கு வந்திடும். நீர் அந்தமாரி நல்லா விளங்கப்படுத்துவீர். அதாலை எங்காவது முன்பள்ளிகளிலும் வேலையிருக்கா எண்டும் பாக்கலாம்.”
“ஈசு, சும்மா என்னைத் தேற்றுறதுக்காகச் சொல்றீரோ, அல்லது உண்மையிலே என்னாலை ஏலுமெண்டு நினைக்கிறீரோ?”
“லலி, உமக்குத் தெரியும், நான் சும்மா கதைக்கிறதில்லை. நாதன் ஒரு தடவை வருத்தமாயிருக்கேக்கை, 25 வயசுக்குப் பிறகு, பிள்ளையளைப் பள்ளிக்கூடத்திலை கொண்டுபோய் விடுறதுக்காண்டிச் சைக்கிள் ஓடப்பழகினீர்தானே. உம்மாலை ஏலும். என்னை நம்பும். இங்கை மூண்டு கிழமை நிற்பன். நேரம் இருக்கேக்கை எல்லாம் நான் வந்து உமக்குக் கொம்பியூட்டர் சொல்லித்தாறன்.“
“பிள்ளையள் கொழும்புக்குப் போனப்போலை வட்ஸ்அப்பிலை, ஈமெயிலிலைதான் அதிகமாய்க் கதைக்கிறவை, இவர் சொல்லித்தான் அவையளைப் பற்றிய விஷயங்களை நான் அறிஞ்சுகொள்றனான். அவையோடை அப்பிடி என்னால தொடர்புகொள்ள முடிஞ்சால் அதே பெரிய ஆறுதலாயிருக்கும்.”
“ஓ, நிச்சயமா, அதுகள் ஒண்டும் பெரிய ரொக்கற் சயன்ஸ் இல்லை எண்டது வாற கிழமை உமக்கு விளங்கும்.” சாதுவாகப் புன்னகைத்தாள் ஈஸ்வரி. லலிதாவுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
ஒரு வாரம் கழிந்தது. ஒரு மாலை நேரத்தின்போது, நாதன் சாயும் சாய்மனைக் கதிரையில் போய் அவள் சாய்ந்தாள். சூரியன் மறையும் நேரம் அது. வெளியில் குருவிகள் பாடிக்கொண்டிருந்தன. சூரியனின் கதிர்கள் அடிவானத்தைப் பொன்நிறமும் ஊதாவும் கலந்த கலவையில் வர்ணம்பூசிக் கொண்டிருந்தன. காற்று ரீங்காரித்தது, வாசல் திரைச்சீலையுடன் அது விளையாடியது. கண்களை மூடியபடி ஒரு நிமிடம் அவள் ஆழமாக மூச்செடுத்தாள். கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது. வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்ற நினைவு, மலையின் உச்சியின் மேல் நின்று கீழிருக்கும், அதாள பாதாளத்தைப் பார்ப்பதுபோன்ற பயத்தைக் கொடுத்தது. ஒரு அடியாவது முன்னெடுத்து வைக்காதவரை நாதனின் ஞாபகங்களின் நினைவுகளுடனே நீச்சலடிக்க வேண்டியிருக்கும். அது அவளை மூழ்கவைக்கலாமேயன்றி கரையேற வைக்காது என்பதும் மெதுமெதுவாக அவளுக்குப் புரிய ஆரம்பித்தது.
பத்மாவின் தொலைபேசி இலக்கத்தை அவள் தனது தொலைபேசியில் தேடினாள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.