ஜெயகாந்தனின், சில நேரங்களின் சில மனிதர்களின், ‘கங்காவின்’ முகமே இறுதியில் மாறிவிடுகின்றது. குடிக்கின்றாள், சிகரெட் பிடிக்கின்றாள். அவளது உதடுகள் கூட, மனுவலின் உதடுகள் போலவே கருமைத் தட்டி போகின்றது.
முன்னுரையில், ஜெயகாந்தன், பின்வரும் பொருள்பட எழுதுவார்: “இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லபம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா? இக்கேள்விக்கெல்லாம், வாழ்க்கையானது ‘ஆம் ஆம்’ என பதில் கூறுகிறது.
இதே கேள்வியை, ஐத்மாத்தாவும், கையில் எடுத்துள்ளார் எனலாம்.
மனுக்குலத்தின் காலம் முழுவதிலும், மனிதர்கள், வாழ்க்கைத் தொடர்பில், ஜெயகாந்தன் எழுப்பிய இதே கேள்வியை கையில் எடுத்து பதில் வழங்கியுள்ளனர்.
ஐத்மாத்தாவும், தன் பங்குக்கு இதே கேள்வியை பரிசீலித்துள்ளார். ‘வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? இது சாத்தியமா? வாழ்க்கை இப்படியும் மாறுமா? அல்லது மாறி அமையுமா'-இதுவெல்லாம் ஐத்மாத்தா எழுப்பிய கேள்விகளின் சாரமாகின்றது.
இவ் அடிப்படையிலேயே அவர் தனது ஓவியத்தையும் தீட்ட முனைந்துள்ளார்
அதாவது, அவரது இந்த ஓவியத்திற்கும், தமிழ் இலக்கியம், இதுவரை முன்னிறுத்தி இருக்கக்கூடிய ஓவியத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எம்மை சிந்திக்கவே செய்கின்றன.
‘அக்கினி பிரவேசத்தின் முடிவை மாற்றி எழுதிப்பார்த்தேன். இப்படி நடக்குமா? ஆம்,ஆம் என பதில் கூறியது வாழ்க்கை.
கேள்வி: அப்படியெனில், இவ்வாழ்க்கையை கட்டுவித்தது யார்? இதே மனிதன் தான். விடை இதுவெனில், இதனை மாற்றி அமைக்க வேண்டியதும் அவனது கடமையாகின்றது.
இதனையே ஐத்மாத்தாவும், இக்கால கட்டத்தில், தனது எழுத்துக்களில் படம் பிடித்து காட்ட முயன்றுள்ளார்.
அவரது பார்வையில், இம்மாற்றங்களுக்கு எதிரான சக்திகள், இம்மாற்றங்களை தடுக்க முனைவதும், தடுக்க போராடுவதும் இயல்பானதாகின்றது. எனவேதான். இச்சக்திகளுக்கு எதிராகவும் போராட மனிதன் விதிக்கப்படுகின்றான். ‘புதிய ஆத்திச்சூடியை’ பாரதி படைத்தது அவனது விருப்பம் என்பதிலும் அவன் எதிர்கொண்ட கட்டாயம் என காண்பதே அறிவு. ஐத்மாத்தாவின் நாயகியும், அக்கினி பிரவேசத்தின், நாயகி போன்றே, தன் பதினைந்தாவது வயதில், தன் கன்னி தன்மையை பறிகொடுக்க நேரிட்டது, ஆனால் அவளை தூக்கி நிறுத்தி, ஆற்றுப்படுத்தி, ஒரு குழந்;தைகள் இல்லத்தில் சேர்ப்பித்து, அவளை ஈற்றில் உலகம் போற்றும் ஒரு பேராசிரியராக, மாற்றக்கூடிய அரசியல் சுவாத்தியத்தை, ஜெயகாந்தன் காலத்து மனிதர்கள் உருவாக்கியதாக இல்லை. அவரது எழுத்துக்களும் கூட அத்திசையை நோக்கி நகர்ந்தனவாகவும் இல்லை. ஆனால் ஐத்மாத்தாவின் காலத்து மனிதர்கள் வித்தியாசம் கொள்கின்றனர். வாழ்க்கையின் விதிகளை மாற்ற திடம் கொள்கின்றனர். இங்கேயே, ஜெயகாந்தனின் நாயகி, கங்காவும், ஐத்மாத்தாவின் நாயகி அல்தினாயும் வித்தியாசமான முடிவுகளை பெறுகின்றனர். இதற்கமையவே, இவ்விரு எழுத்தாளர்களும் தமது பரஸ்பர சித்திரங்கனை தீட்ட முனைந்துள்ளனர் எனலாம்.
‘அக்கினி பிரவேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் வரிசையில் மூன்றாவதாய் ‘கங்கை எங்கே போகின்றாள்’ என்பதனையும் ஜெயகாந்தன் எழுத நேரி;ட்டது. முடிவு: ‘ஐயோ! இதென்ன?... யாரோ என்னை ஜலத்துள்ளே இழுக்கறாளே… நான் ஜலத்துள்ளே, நதியிலே, கங்கைக்குள்ளே போயிண்டேயிருக்கேனே… Gulp… முழுங்கு, கொழந்தே, முழுங்கு… பேரின்பமான மரணம் மகளே…’
'காலத்தின் அலைகளால், ஏற்றுண்டு, ஓய்ந்து போன' ஓர் ஆத்மாவாக எண்ணித் திருப்தியடையாதா, ஐத்மாத்தாவின் காலத்து மனிதர்கள், பிரிதொரு முடிவை அவர் வடித்து தர அவருக்கான அடித்தளத்தை இடுகின்றார்கள்.
ஜெயகாந்தன், தனது ‘அக்கினி பிரவேசத்தை’ முதன்முதலாய் 1970 களில் எழுதினார். ஒரு பிராமண்ய பதின்வயது பாலகி, தன் அறியாதனத்தால், ஒரு மழை நாளில், தன் கன்னி தன்மையை சூதுவாது அற்று பறிகொடுத்தவளாகின்றாள்,
ஐத்மாத்தாவின் கதையிலும், இதனை போன்று நிகழ்வுகள் இட்பெற்றாலும், இங்கே அவளது கன்னி தன்மை பலாத்காரமாய் சூறையாடப்படுகின்றது.
ஜெயகாந்தனது கதையிலும், இதே பதின் வயது பெண்ணின் வாழ்வானது, அஸ்தமிக்கும் போகும் வண்ணம், இவ்வெறி கொண்ட சமூகம் காறி உமிழ்ந்து அவளை ஒதுக்கி வைத்திருக்ககூடிய நிலையில், அவளது கனவுகள், ஆசாபாசங்கள் ஓரங்கட்டப்பட்டு, அஸ்தமிக்கப்படகூடிய ஒரு சூழலில் அவளது அன்னை ஒரு குடத்து நீருடன் வருகின்றாள். அதனை மகளின் தலையில் வார்க்கின்றாள்: ‘மறந்து போ’ என
இவ் அசரீரீயானது, புரட்சிகரமானது-ஜெயகாந்தன் இந்தளவு எழுதியதே, இவ்வெறிகொண்ட சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் புரட்சி என வர்ணிக்கப்பட்டது.
பாரதியின் எழுத்துக்களை ஒரு கணம் மறப்போம் எனில், இதனை நாம் கொண்டாடலாம் தான்.
ஆனால், மறுபுறத்தில், ஐத்மாத்தாவின் நாயகிக்கு, அன்னையுமில்லை, தந்தையுமில்லை. முற்று முழுதான ஒரு அனாதை அவள். அதைவிட, ஓர் கொடுமைக்கார சித்தியின் வீட்டில் வளர்பவள். உண்மையில் இக்கொடும் நிகழ்வுக்கு, அச்சித்தியே ஒரு பங்குதாரியாகவும் இருப்பவள்.
இத்தகைய யதார்த்தங்களின் மத்தியிலேயே, அதாவது, அன்றைய சீரழிவுற்ற ரஷ்யாவில்தான், காளி, தன் கடைகண் கொண்டு பார்க்க துணிந்துள்ளாள். ‘குழந்தைகளே, எப்படிப்பட்ட எதிர்காலம் உங்களுக்கு உண்டு’ என கட்டுடனிருக்கும் லெனின், சுவரிலிருந்து கூறுவதும், இதனுடன் காந்தி தனது பொக்கை வாயை திறந்து, புன்சிரிப்புடன், இந்திய பொலிஸ்நிலைய சுவரில் காட்சியளிப்பதும் தகுந்த ஒப்பீடுகளே ஆகும்.
ஒரு குடத்துடன் வருவதை போல வந்து, அல்தினாவை தூக்கி நிறுத்தி, அவளையும் ஓர் ரஷ்ய கங்கையில் மூழ்கி எழ செய்து, தெரிந்தோ தெரியாமலோ, அச்சொட்டாக இதே வார்த்தைகளை கூறி, ‘அதாவது மறந்துபோ’ என்று உபதேசித்து, அவளை ஓர் புகைவண்டியில் ஏற்றி, ஓர் அனாதை இல்லத்தில் சேர்ப்பித்து, படிபித்து, அவளை ஓர் பேராசிரியராக தரம் உயர்த்திய இந்த இளைஞன் அல்லது மனிதன் யார்? ஓர் பின்னடைந்த லம்பாடி கூட்டத்தை சேர்ந்த அபலை பெண்ணை, ஒரு வெறும் போக பொருளாய் மாத்திரமே அல்லது கூடிபோனால் தமது வைப்பாட்டியாக மாத்திரமே வைத்துக் கொள்ள துடிக்கும் ஓர் சமூகத்தில், இல் இளைஞன் யார்-இப்புதிய யுகத்தின் நாயகன் யார் என்ற கேள்வியானது இலகுவில் கடந்து செல்ல முடியாத ஒன்றே ஆகும்.
வ.ந.கிரிதரனின், ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ தொகுதியில் இடம்பெற்றுள்ள 'வீடற்றவன்' கதையில் இதே எண்ணக்கரு வந்து போகாமலில்லை. வீடற்ற ஒரு நபர், தனது பையில் கிடக்கும், ஓர் இருபத்தைந்து சத நாணய குற்றியை நீட்டி பிடிக்கின்றாள் ‘ வைத்துக்கொள். உன் பெண் குழந்தைகளுக்காக… அவர்களுக்கு,.. ஓர் அவசர நிலை ஏற்படுமானால்… உன்னை தொலைபேசியில் அழைக்க…’
ஆக, ஓர் ஆணாதிக்க சமூகத்தில், குரல்கள் அவ்வப்போது நசிக்கப்படாமல் இல்லை. ஆனால் வெறும் ஒரு குடத்து நீர் மாத்திரம் விடயங்களை சீர்படுத்தவும் போவதில்லை. இதற்கு முசிறந்த உதாரணம் ஜெயகாந்தனின் கங்காவாகவும் இருததல் கூடும். குடியும், சிகரெட் புகைத்தலும் அல்லது கங்கையில் மூழ்கி ‘பேரின்பத்தை’ எய்துவதுமே தீர்வு என்ற உலகத்திலிருந்து, இந்த புதிய இளைஞனின் வருகையை ஐத்மாத்தா படம் பிடித்தது தற்செயலானதல்ல. கம்யூனிஸ்ட் கட்சிதான் என்னை அனுப்பி வைத்தது என்பான் அவன். இவனது, ‘அக்கினி பிரவேசத்து’ குடத்து நீர், பின்வருமாறு உருகொள்கின்றது: ‘குதிரையிலிருந்து இறங்கு அல்தினாய்… நான் குதிரையை அப்புறமாய் புல் மேய விடுகின்றேன்… நீ குளி… நடந்ததை மற…’
‘நீல நீரலைகள் என் மீது வந்து வந்து மோதின… கைகளில் நீரை அள்ளி அள்ளி தெளித்துக் கொண்டேன்… குளிர்ந்த நீர் என்னை சிலிர்க்க செய்தது. தெளிந்த நீரின், ஆழத்திற்கு மெது மெதுவாய் செல்ல தொடங்கினேன். நீரலையே… இந்நாளின் மாசுகளையெல்லாம் எடுத்துக்கொள்வாய்… நீ எப்படி தூய்மையாக இருக்கின்றாயோ… அதே போல் என்னையும் தூய்மையானவளாய் ஆக்கிவிடு… என்னையறியாது இப்படியாய் ஏதேதோ எல்லாம் முணுமுணுத்தவாறே நீராட துவங்கினேன்…’
புகைவண்டி புறப்பட்டது. தூய்ஷேன் வண்டியோடு ஓடி வந்தார்… படி, அல்தினாய் படி… அவர் குரலெடுத்து கூவினார்.
ஜெயகாந்தனின் நாயகியும், ஒரு நதியில் மூழ்குகின்றாள்தான், ஆனால், அங்கு… ‘முழுங்கு கொழந்தே… மரணம் பேரின்பம்… என்றே கூறப்படுகின்றது. இங்கோ,’ படி அல்தினாய்’ என்று கூறப்படுகின்றது.
ஒருவேளை, இவ்வேறுபாடானது, அதிகமாக காளி கடைக்கண் வைத்ததன் விளைவாக இருக்கலாம். புதிய பாலங்கள், புதிய சாலைகள், புதிய பள்ளிகள், புதிய வயல்கள்…
இனி, ஐமாத்தாவும் குழம்பிபோவது இயற்கைதான். மாறும் இந்த சமூகத்தில் எதனை அவர் சித்திரமாக வடிப்பது.
தெளிவத்தை ஜோசப் போன்றோருக்கு கற்பு பறிபோவது என்பதே ஒரு முழு நாவலுக்கான விடயதானத்தை தந்திருக்ககூடும். (பார்க்க: காலங்கள் சாவதில்லை, 1924)
ஆனால், இங்கோ குறித்த விடயமானது இரண்டே இரண்டு வரிகளால் மாத்திரம் கூறப்படுகின்றது: “என் பதினைந்தாவது வயதில் என் கன்னி தன்மை பறிக்கப்பட்டது.’ ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கூட இந்த இரண்டு வரிகளாலேயே விடயம் கூறப்படுவதாய் உள்ளது.
ஆக, ஜெயகாந்தன் (1970), தெளிவத்தை (1974), எனத் தொடரகூடிய தழிழ் இலக்கியப்பரப்பில், ஐத்மாத்தாவின் வருகை ஒரு புது ஏற்பாடாக பார்க்கப்படலாம்.
ஆகவே, கேள்வியானது பின்வருமாறு வடிவம் பெறல்கூடும்: இலக்கிய வாதிகளில் இவ்வணுகு முறையை வேறு பிரிப்பது எது? இவ்வித்தியாசங்களை ஏற்படுத்துவது எது?
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.