1
“என்ன நீங்கள்… … அப்படியெல்லாம் நீங்கள் யோசிக்க கூட வேண்டாம்… யார் மீதுதான் எனக்கு கோபம் வர முடியும்…? என் மீது வேண்டுமனால், நான் கோபம் அடையலாம்…!”
இது, ரயிலில் ஏறும் போது அல்தினாய் கூறுவது.
“உங்களை ஏதோ ஒரு வகையில் புண்படுத்திவிட்டோமோ -இப்படி நீங்கள் எம்மிடமிருந்து உடனடியாக பிரிந்து செல்ல” என்பதே கேள்வி. கிட்டதட்ட ஒரு வாரம் அளவில், கிராமத்தில் தங்கி இருக்கப்போவதாக வாக்களித்திருந்த அப்பேராசிரியர், இப்போது, சடுதியாக, 11 மணி நள்ளிரவில் மஸ்கோவிற்கு பயணமாகின்றார் என்ற முடிவு எதிர்பாராததுதான்.
இந்த திடீர் முடிவுக்கு வரும் முன்னர், அல்தினா அவ்விரு பாப்ளர் மரங்களை உற்று பார்த்த வண்ணம் இருந்தார்.
கண்களை சுற்றி, சுருக்கங்கள் விழுந்துவிட்ட இன்றைய வாடிய முகத்துடன், அவர், அந்த பாப்ளர் மரங்களை பார்ப்பதும், தன்னை மறந்து நிற்கும் தருவாயில்தான், அவ்ஓவியன் அவளிடம் கேட்பான்: “அல்தினா அம்மையாரே… இது இலையுதிர் காலம். இலைகள் இப்போது உதிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் வசந்தத்தில்; இந்த மரங்களை வந்து பார்க்க வேண்டும். அப்படி பூத்துக்குலுங்கும்”
“ஆம். உயிருள்ள எல்லாவற்றிற்கும் அதனதன் வசந்தமும், அதனதன் உதிர்காலமும் வந்து போவது இயற்கை தான் போலும்…”
இதன் பின்னரே அவள் தனது நீண்ட கடிதத்தை அவ்ஓவியனுக்கு அனுப்பி வைக்கின்றாள்.
கடிதத்தை கவனத்துடன் படிக்கும் அவன், அவளது வாழ்வையும் சமூகமானது அன்றைய தினத்தில் வாழ்ந்த முறைமையையும் தன் ஓவியத்துள் அடக்கப் பார்க்கின்றான். ஆனால், அதுவோ மாறுகின்ற ஒரு சமூகம்.
“பொழுது புலர்கின்றது. என் ஜன்னல்களை அகலத்திறக்கின்றேன். தூய காற்று உள் நுழைகின்றது. என் சித்திரத்தை இப்போதாவது நான் கண்டுபிடித்து விட்டேனா…”
“சிக்கலான-மிகசிக்கலான வாழ்க்கை இது. இவ்வாழ்க்கை தோற்றுவித்திருக்க கூடிய-பன்முக மானுட விருப்பு வெறுப்புகளை எல்லாம் நான் என் சித்திரத்தில் உள்ளடக்குவது... என்பது…”
சோவியத் இலக்கியம் முன்வைத்த கேள்வி இது. இதன் பல்வகை பரிமாணங்களை யார்தான் உள்ளடக்ககூடும்? யார் இதனை எடுத்தியம்பகூடும்?
2
இவ் வரலாற்று தொடர்புபட்ட வினாவைதான் இவ்ஆசிரியர்-அதிலும் சிறப்பாக, அந்த முதல் ஆசிரியரும்-அந்தப் பிஞ்சி மனங்களிடையே எழுப்புகின்றார். அவர், அவர்களிடை எதை விதைத்திருக்க கூடும்-அன்று அவரது பாத்திரம் அல்லது பங்களிப்பு யாதாய் இருந்திருக்க கூடும் என்பதெல்லாம் வாசகரிடம் மாத்திரமல்லாமல்-ஆனால் வரலாற்றின் கேள்வியும் ஆகின்றது.
கதையின் பிரகாரம், இந்த பேராசிரியர் அல்தினாவிற்கும், ஒரு முதல் ஆசிரியர், என்பவர் அமையவே செய்கின்றார்.
கலாம் கூட, தன் முதல் ஆசிரியரான சிவசுப்பிரமணிய ஐயரை, தனது பிற்காலத்திலும் மறந்தாரில்லை. தானொரு அணு விஞ்ஞானியாக, விண்வெளி ஆய்வாளாராக, ஏவுகணை நிபுணராக, பிற்காலத்தில் வளர்ந்து விட்டிருந்தாலும் தனது சிவசுப்பிரமணிய ஐயரை அவர் மறந்தாரில்லை.
“எமது வகுப்பறைக்குள் அவர் நுழையும் போதே அவரது அறிவும் தூய்மையும் அவரில் ஒளிவீச கண்டோம். அவரே எமது வாழ்வினதும் அறிவினதும் திறவுகோல் ஆனார். எமது கனவு உலகையும், அறிவுலகையும் ஒன்றுசேர அவர் அகல திறந்துவிட்டார். அவர் படிபித்த அனைத்துமே, எம் இள நெஞ்சில் அறையப்பட்ட பசு மரத்தாணிகள் ஆயின. …”
ஐத்மாத்தாவின், அல்தினாவும் இப்படி கூறுவாள்: “இந்த விஞ்ஞானத்தை எல்லாம் எப்படி கிரகிப்பது? இதையெல்லாம் எங்களால் கிரகிக்க முடியாதுபோகும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும், இவ்வாறான கடிமான நேரங்களிளெல்லாம், என் மனதில் என் முதல் ஆசிரியர் தோன்றுவார். அவர் என்னுள் விதைத்துள்ள நம்பிக்கை விதைகளையெல்லாம் நான் பொய்யாக்க முடியாது… ஒருமுறை கூட நான் பின்வாங்க போவதில்லை என்று அவரிடம் நான் உளமாற கூறிக்கொள்வேன்.."
நாவலின் பிரகாரம் அவளது முதல் ஆசிரியிர் தூய்ஷன் ஆவார்.
எழுத்துப் பலகையை, எமது சின்னஞ்சிறு முழங்கால்களின் மேல் வைத்துக்கொண்டு எப்படி எழுதுவது என்பது முதல், பென்சில்களை எப்படி பிடிப்பது என்பது வரை அவர் சொல்லி தந்தார்…
விறகு கட்டுகளையும் வைக்கோல் போர்களையும் தன் முதுகில் சுமந்து வந்ததல்லாமல் கிராமத்தினுள் நுழைந்து அனைத்து சின்னஞ் சிறுசுகளையும் பள்ளிக்குத் திரட்டி வந்து… பின்னர் நாடு அன்று போரில் விழுந்த போது போர் முனைக்கும் சென்று…
அவரது மாணவர்களில் பலரும் யுத்தத்தில் மாண்டு போயினர்… ஆனால் அவர்கள், இறுதி வரை சோவியத்தின் உண்மை வீரர்களாக, உண்மைப் புதல்வர்களாக இருந்தனர்.
இன்று யுத்தம் நிறைவடைந்த நிலையில், யுத்த முனையிலிருந்து திரும்பி, இன்று கிராமத்தின் கூட்டு பண்ணையின் ஒரு முதிய தபால்காரராக முற்றுப் பெற்றுள்ளார் எனலாம்.
இப்பள்ளிக்கு, ‘தூய்ஷன் பள்ளி’ என பெயர் சூட்டியிருக்கலாம் தானே… நான் இம்முன்மொழிவை செய்யத்தான் போகின்றேன்… உங்களின் ஆதரவும்… …”
திரு. கனி அவர்கள் மொழிபெயர்த்த, மகாகவி இக்பாலின் வரிகள் வருமாறு:
“எம் இதய கிரணங்கள்
சூரியனுடன் சம்பாஷிக்கின்றன…
உடைந்த ஓர் கண்ணாடி துண்டு,
இன்று,
உலகையே பிரதிபலிக்க முயல்கின்றது…
கருணை மேகம்
தன் மேலாக்கை
தோட்டத்திலிருந்து இழுத்தெடுத்து
மறைகையில்
என் ஆன்மாவின்
ஆசை அம்புகளில்
சிற்சில துளிகளையும்
கொட்டியப்படி சென்று
மறைந்தது…” (இக்பால்: மொழிபெயர்ப்பு: சு.P.ஆ. கனி)
இவ்வரிகள், கலாமின் கூற்றுகளுடனும் ஐத்மாத்தாவின் வார்த்தைகளுடனும் ஓப்பு நோக்கத்தக்கவையே. ஒரு முதலாசிரியன், சின்னஞ்சிறு உள்ளங்களில் எதைத்தான் எழுதுவது? அவர்களின் நெஞ்சக்கதவுகளையும் எப்படிதான் திறக்ககூடும்-திறந்து….
3
ஒரு சோவியத் முதல் ஆசிரியரின் முன், இரண்டு கடமைகள் இருந்தன.
ஒன்று, இளம் நெஞ்சங்களின் கதவுகளை திறப்பதென்பது. பின், அவற்றிடை சோவியத் கலாச்சாரத்தை எப்படி விதைப்பது என்பதே இரண்டாவதாகும்.
இவற்றின் முதல் கடமை குறித்து அப்துல் கலாம், இக்பால் போன்றவர்கள், மேலே கதைக்க முற்பட்டிருந்ததை பார்த்தோம். இளம் நெஞ்கங்களில் அறிவுலகை கட்டுவிப்பதும், அவர்களின் கற்பனை-கனவுகளை திறந்து விடுவதும் கடமைகளின் ஒரு கூறாகின்றது. இதற்காக, இம்முதல் ஆசிரியர்கள் கொடுக்கும் விலை அசாதாரமானது. தன்னலம் தாண்டிய இவர்களது பங்களிப்புகளால், இவர்களை விட இவர்களது மாணார்கள் உயர்வது சகஜமானது. இவர்கள் ஏணி படிகள் என சமயங்களில் வர்ணிக்கப்படுவதும் வாஸ்துவமே. ஒரு நாகரிகத்தை ஒரு தலைமுறையினரிடமிருந்து மறு தலைமுறையினருக்கு இவர்கள் கட்டி வளர்த்து, உயர்த்தி ஆராவாரமின்றி ஆற்றும் பணி முக்கியமானது. சிவசுப்பிரமணிய ஐயர் வகுப்பறையில் நுழையும் போதே ஒளி வீசியது, தூய்மை பெருக்கெடுத்தது என்றெல்லாம் கலாம் கூறுவதன் பின்னால், இதற்காக இம்மனிதர்கள் கொடுத்த விலை என்ன என்பதே கேள்வியாகின்றது.
ஆனால் இரண்டாவது கடமையானது மனுக்குல வரலாற்றுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இது தனித்து வாதிக்கப் பட வேண்டியதாகின்றது.
4
ஜெயகாந்தன், தனது ‘அக்கினி பிரவேசம்’ அல்லது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, அல்லது கங்கை எங்கே போகினறாள்’ போன்ற நாவல்களை எழுதியபோது அவர்முன் விரிந்து கிடந்த வாழ்க்கையானது பொதுவானது. ஆனால் ஐத்மாத்தா, தனது “முதல் ஆசிரியர்” என்ற குறுநாவலை தீட்டியபோது அவ்வாழ்வு மாறிப்போயிருந்தது.
‘ஒரு குடத்து நீருடன்’ விடயங்களை சமாளிப்பது இப்போதைக்கு முடியாததாகின்றது. இனி கங்கா குடிகாரியாக (சில நேரங்களில் சில மனிதர்கள்’) அல்லது ‘மரணமே பேரின்பம்' என போதித்து கங்கையில் மூழ்குபவளாய் இருப்பதற்கு வாழ்வும் சரி சமூகமும் சரி சம்மதிப்பதில்லை.
அதாவது, காலம் வித்தியாசப்படுகின்றது. மனிதர்கள் ஒரு புதிய சமூகத்தை சமைக்க முடிவு செய்துள்ளார்கள். பணம், மேலும் ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை. பணம், மனித வாழ்வை ஆட்டி வைக்கவும் போவதில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது.
வேறுவார்த்தையில் கூறின், பாரதியின் மானுட கலகப் பூச்சிகள், இப்படித்தான் தமது காலத்தில் செயற்பட்டுள்ளனர். இவர்கள் புதிய பள்ளியை மாத்திரமல்ல, புதிய பண்ணைகளை மாத்திரமல்ல, ஆனால், இவற்றை ஆக்கும் புதிய மனிதர்களையும் உருவாக்கி விடுகின்றனர்.
காலம் காலமாக மனிதர்களும், மதங்களும் ஆர்வப்பட்ட சுயநலம் கடந்த மனிதர்களை இவர்கள் உருவாக்கி விடுகின்றன. இவர்களின் ஒரு துளியே அல்தினாவும் முதல் ஆசிரியரான தூய்ஷேனும். ஐத்மாத்தா கூறுகின்றார்: 'தூய்ஷனின் மாணவர்கள் பலர் யுத்தத்தில் மாண்டு போயினர். ஆனால் அவர்கள் ரஷ்யாவின் உண்மை புதல்வர்களாயிருந்தனர’.
இதனுடனே நாம் ‘ஒரு குடத்து நீரின்’ தார்ப்பரியத்தையும் புரிந்தாக வேண்டியுள்ளது.
5
‘குடத்து நீரில்’ தேங்கக்கூடிய தார்மீக கோபங்களை கண்டுணரும் அதே வேளை, அதன் எல்லைபாடுகளை காண்பதும் தேவையானதாகின்றது.
இவ்அடிப்படையிலேயே ஒரு தேசியத்தின் கோரிக்கையை (பிரிந்து போகும் உரிமைகள் உள்ளடங்களாக) அல்லது ஒரு ரஷ்ய விவசாயியின் கோரிக்கையை (உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்) அல்லது எமது பெண்ணிலைவாதிகளின் பல்லேறு நிலைப்பாடுகளை வேறுபடுத்தி அல்லது, தனிமைப்படுத்திப் பாராமல் இவற்றையும் ஒன்றிணைத்து ஒரே கலாச்சாரமாகக் கட்டியெழுப்பும் தேவைப்பாடு முன்னிலைக்கு நகர்கின்றது. இக்கோரிக்கைகளில் மிக ஆழமாக ஓடும் மன உணர்வுகளை குறிப்பிடத்தக்க அளவில் உள்வாங்கியவர்களில் தலையானவர் லெனின் என குறிப்பிடலாம். அதாவது ‘பிரம்ம தேவனின் கலை’ என்று கூற வருகையிலேயே பெண் விடுதலை அல்லது தேசிய விடுதலை அல்லது சாதிய விடுதலை, இவை யாவற்றையும் ஒருங்கிணைக்கும் உள்ளம் கொண்ட மனிதர்கள், காலத்தில் உதிக்கவே செய்தனர்.
அதாவது, ஜெயகாந்தன் ஆதங்கப்படும் ‘காலத்தால் எற்றுண்டு எதிர்நீச்சல் போட்ட பெண்கள்’ இனியும் கங்கையில் மூழ்கவோ அல்லது மதுவில் மூழ்கவோ அனுமதிக்க படபோவதில்லை. அதாவது, ‘விட்டுபிரியும்’ மனிதர்களும் இங்கே தோற்றம் கண்டுவிட்டனர். எழுத்தும் இங்கு மாற்றியமைக்க வேண்டிய தேவைப்பாட்டை எதிர்நோக்குகின்றது. இதுவே, ஐத்மாத்தாவின் எழுத்துக்களின் அத்திவாரமுமாகின்றது.
வாழ்வை நம்பிக்கையுடன் பார்ப்பது, இயற்கை அல்லது மனிதனை நேசிக்க ஆரம்பிப்பது இங்கே இயல்பாக நடந்தேறுவதாய் உள்ளது. இதுவே, ஏனைய பல இலக்கிய போக்குகளில் இருந்து இதனை வேறுப்படுத்துவதாகவும் உள்ளது-எமது போர்கால இலக்கியம் உட்பட.
6
மாக்சிம் கார்க்கியின் சோவியத் இலக்கியங்கள், ஐத்மாத்தாவின் சோவியத் இலக்கியங்களிலிருந்து இரண்டு விதங்களில் வேறுபடுகின்றன. ஒன்று, கார்க்கி தன் நாவலான ‘தாயை’ப் படைத்தளித்த போது, நாளை மாற்றத்தை உண்டுபண்ண கூடிய மனிதர்களையும் அதற்காக அவர்கள் தமது ஸ்தாபனத்தை கட்டியெழுப்பும் போக்கினை ஒரு கோர்வையாக கோர்த்துப் படைத்தளித்தார். அம்மனிதர்கள், வியர்வையினையும், ரத்தத்தினையும் ஆறாக சிந்தி, ஓர் சமூகத்தை உருவாக்கிய பின் அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதற்கெதிராக செயற்படகூடிய சக்திகளை தோலுரித்து காட்ட தமது பிற்காலத்தைய எழுத்துக்களை படைக்கத் துவங்கினார். தனது இறுதி நூலான ‘கிளிம்மின் வரலாறு’ உட்பட.
ஆனால் ஐத்மாத்தாவின் எழுத்துக்கள் இவற்றிலிருந்து வேறுபடுகின்றன. ஒரு சின்னாப்பின்னப்படுத்தப்பட்ட சமூகம், தன்னையும் தனது நாகரிகத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும் பொருட்டு இவரது எழுத்துக்கள் அரணாகின.
மறுபுறம் கார்க்கியின் எழுத்துக்களை உருவாக்கித்தருவதில் ரஷ்ய இலக்கியம் (டால்ஸ்டாய் முதல் புஷ்கின் வரை) என்ன பாத்திரத்தை வகித்திருக்க முடியுமோ அதற்கு சற்றும் குறையாமல் ஐத்மாத்தாவை உருவாக்குவதிலும் இவ்வகை இலக்கியங்கள் ஆழமான பங்குகளை ஆற்றியிருக்கக் கூடும். இதனாலோ என்னவோ எம்மிடம் உள்ள ஒரே செல்வம் எமது இலக்கியம்தான்-எமது, கோயில்கள் அவை என்பதாக கார்க்கி கூறுவார். தமிழ் இலக்கியங்களும் இவ்வகை பங்களிப்புகளை வித்தியாசமான அளவுகளில் ஆற்றாமலில்லை என்பதனையும் இங்கே நாம் சுட்டிகாட்ட வேண்டிய கடப்பாடுடன் இருக்கின்றோம். மகாபாரதம், இராமாயணம், பாரதி என விரிய கூடிய ஒரு பாரம்பரியத்தில் இக்கூற்றுக்கான இடம் இல்லாமல் போகவில்லை. இப்பின்னணியிலேயே நாம் ஐத்மாத்தாவையும் எமது போர்கால இலக்கியத்தையும் ஒப்பிட்டு அணுக வேண்டியுள்ளது. பணி கடினமானதுதான் இருப்பினும் போற்றத்தக்க ஒன்று என்பதில் ஐயமில்லை.
ஐத்மாத்தாவின் ஓவியன் பின்வருமாறு கூறுவான்: ‘எனது சித்திரத்தில் எதைதான் நான் உள்ளடக்குவது… ஜன்னல்களை அகலத்திறக்கின்றேன். புதிய காற்று உள் நுழைகின்றது’. முதல் ஆசிரியனும் இத்தகைய கேள்வியை எம்முள் விட்டுச்செல்வதாக நாம் கொள்ளலாம். இக்கேள்விகள் எம்மையும் ஜன்னல்களை அகலத்திறக்க கோருவதாகவும் இருக்கக்கூடும்.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.