இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம் அமைதி பெறுகின்றது. இனிமையான இசையை இரசிப்பதென்பது ஓர் அலாதியான அனுபவம்! இதனால்தான் “இசையில்லாத வாழ்க்கை இனிக்காது” என்று நீட்சேயும் – ”துன்பத்தைத் துடைப்பதற்கே இசை உண்டாக்கப்பட்டது” என்று ஷேக்ஸ்பியரும் சொல்லிச் சென்றார்கள் போலும்!
மேலும், இசையானது சிந்தனையைத் தூண்டவல்ல ஒரு சிறந்த சாதனமாகும். புறவயமான இன்பத்திலும் மேலாக, இசை அறிவின் ஓர் ஊடகமாகவும், ஆன்ம ஈடேற்றத்தின் சாதனமாகவும், அகவயமாகப் பயன் தரவல்லது. தியானம், முறுக்கேறிய உணர்வுகளிலிருந்து தளர்ந்து விடுபடுதல், மனதில் காட்சிப்படுத்தல் - மற்றும் ஞாபகசக்தி, ஒழுங்கு, ஒழுக்கம், உடலாரோக்கியம், கலை-கலாசார விழுமியங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல் - போன்ற பல்வேறு நன்மைகளையும் இசை தன்னகத்தே கொண்டது.
உலகில் வேறெந்த இனத்திற்குமே இல்லாத இசையுறவு தமிழினத்திற்குள்ளது. தாயின் வயிற்றில் கருக்கொண்டதும் நலங்குப் பாடல், மண்ணில் வந்து பிறந்ததும் தாலாட்டு என்று ஆரம்பித்து - குழந்தைப் பருவத்தில் நிலாப்பாடல், வாலிபப் பருவத்தில் வீரப்பாடல், காதற்பாடல், சற்று முதிர்ந்த பருவத்தில் ஆன்மீகப் பாடல் எனத் தொடர்ந்து, உயிர் பிரிந்த பின்னர் ஒப்பாரிப் பாடல் என்று வாழ்வியலின் அனைத்துப் பருவங்களுக்குமெனத் தமிழ்ப் பாடல்கள் உள்ளன. இது தமிழினத்திற்கு மட்டுமேயுள்ள தனித்துவமான இசை அடையாளம்.
உண்மையில், நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். நாம் நமது தாயின் கருப்பையில் இருந்தபோது, நமது கண்களால் எதையுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால் காதுகளால் அந்த இசையைத் தொடர்ந்து இரசித்துக்கொண்டு இருந்தோம். அது வெறொன்றுமல்ல, நமது தாயின் இதயத்துடிப்புத்தான். எப்போதுமே தாலாட்டுப்போல, அந்த இதயத் துடிப்பின் இசையில நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.
இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, பழங்காலத்திலிருந்து இசைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. பிற்காலத்தில் பண்டைப் பண்ணிசை, செவியற் தமிழிசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, துள்ளிசை எனத் தமிழிசை பல்வேறு வடிவங்களைப் பெற்றது. தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இந்த இசை, இப்போது தமிழிசை எனப்படுகின்றது. விசேடமாக, இது தமிழர்களின் செவ்வியல் இசை முறைமையைக் குறிக்கின்றது. வேற்றுமொழி மரபுகளின் ஆதிக்கத்தில் இது தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. ஆயினும் தற்போது தமிழிசையானது மீளுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் ’தளரா வளர் தெங்கு’ போல மதாளித்து வளர்ந்து வருகின்றது.
இந்த இசையில் இன்னும் மிக முக்கியமான ஒரு சிறப்பு இருக்கிறது! ’சிறுவர்களின் வளர்ச்சிக் கட்டத்தில் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது’ என்பது நவீன ஆராய்ச்சியாளர்களது கண்டுபிடிப்பு. அதுவும் அவர்களின் ’நுண்ணறிவுச் சுட்டி’ எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைச் சிறு வயதிலேயே வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், மிருதங்கம், பியானோ போன்ற ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள அனுமதியுங்கள்! இவற்றின் மூலம் அவர்கள் மேலும் புத்திக்கூர்மை உள்ளவர்கள் ஆகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன!
அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து, விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து, நமது செவிகளை அடைவது தான் இசையாகும். நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்றுதான் நமது காதுகளும் ஒலியைச் செயலாக்கம் செய்கின்றன. இந்த இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழியாகும். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைவிட, இசையால் வெளிப்படுத்துவது மிகவும் சுலபம்.
இந்நிலையில், தமிழிசையானது பாடப்படுகின்ற வரிகள் கேட்பவர்களுக்கு காதில் மட்டும் உறைத்தால் போதாது. மனதிலும் வாங்கிக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மனதிலும் வாங்கிக்கொள்ளப்படுவதற்கு, இசைக்கு மொழி அவசியமாகின்றது. மனதில் வாங்கிக்கொள்ளப்பட வேண்டிய இத்தகைய தமிழிசைப் பாடல்களில் பிழைகள் இருத்தலாகாது. இதனாலேயே, ’சொல்லோடும் பொருளோடும் சுவையோடும் விளையாடும் தமிழ்’ எனத் தமிழறிஞர்கள் சொன்னார்கள்.
இதனை நன்குணர்ந்தவராகவே பிரபல பாடகரான ஜேசுதாஸ் ஆரம்பத்தில் பாடிய ஐயப்பன் பாடலான ஹரிவராசனம் எனும் பாடலையும், ’நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்’ எனும் சினிபாப் பாடலில் ’திருக்கோயிலே ஓடி வா’ எனும் வரியை, ’தெருக்கோயிலே…’ எனத் தாம் பிழையாகப் பாடியதையும் திருத்திப் பாடியிருக்க வேண்டும் எனப் பெருமனதோடு ஓப்புக்கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர், பொது நிகழ்ச்சி ஒன்றில், பெண் அரச ஊழியர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து, பிழையாகப் பாடப்பட்டதைச் சுட்டிக் காட்டியிருந்தார். ‘கண்டமிதில்’ என்னும் வார்த்தை ’கண்டமதில்’ எனவும், ‘புகழ் மணக்க’ எனும் வார்த்தைகள் ‘திகழ் மணக்க’ எனவும் அவர்கள் பாடினார்கள் எனக் கூறியிருந்தமை ஊடகங்களில் பெரும் சர்ச்சையையே கிளறிவிட்டிருந்தது.
தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர் ஒருவர் பாடிய பாரதி பாடலான ‘சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா’ எனும் பாடலை, நான் திரும்ப திரும்பப் பலதடவைகள் செவிமடுத்தேன்; எனது செவிப்புலனுக்கு அவர் ‘சுற்றும் விழிச் சுடர்தான் கண்ணம்மா…’ எனப் பாடியிருப்பதாகவே தென்படுகின்றது!
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…’ எனும் அந்த இனிய தமிழ்ச் சினிமாப் பாடலில் ’ஒவ்வொரு,’ ’சொல்கிறதே’ என ஒருமையைக் குறிக்கும் சொற்களுக்கு நடுவே, ’பூக்களுமே’ என்ற பன்மை எப்படி வரமுடியும்? ‘இளைய நிலா பொழிகிறதே… ‘ எனும் பாடலில் ’உயிரினங்கள் / முகிலினங்கள் அலைகிறதே’ எனப் பாடப்பாட்டிருப்பது போல, பல பாடல்களில் இதே ஒருமை-பன்மைத் தவறுதலை அவதானிக்கலாம்.
’இத்தனை சிறிய மனிதருக்கு / எத்தனை பெரிய மனமிருக்கு?’ எனும் பாடலில் வரும் இத்தனை/எத்தனை எனும் வார்த்தைகள் எண்ணிக்கையைக் குறிப்பிடுவன. பதிலாக அளவைக் குறிக்கும் வகையில், இவ்வளவு/எவ்வளவு என்றல்லவா இச்சொற்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்?
பாடல்களை இசையமைக்கும்போதான சந்தங்களின் தேவை கருதி, இத்தவறுகள் கருத்தில் கொள்ளப்படாமல் விடப்பட்டிருக்கலாம் எனச் சமாதனம் சொல்லப்படக்கூடும். பாடலின் சந்தத்தின் பொருட்டு ‘நேற்று என் வீடுவரை வந்து போ’ என ஒரு வரியிலும், ‘னாய் நீ’ என அடுத்த வரியிலும் பாடுவது பாரதூமான அபத்தமல்லவா? தமிழ் மொழியைக் கற்பதற்கான முயற்சியில் ஈடுபடும் – குறிப்பாக வெளி நாடுகளில் – சிறார்கள் மனதில் இவை குழப்பத்தை விளைவிக்கக்கூடிய தவறுதல்களல்லவா?
மேலும் ல, ள, ழ, ன, ண, ர, ற, ஞ, ங போன்ற எழுத்துகளின் வேறுபாடுகள் தெரியாமையால், தமிழ் – தமில், வாழ்க – வால்க, வாழ்த்து – வால்த்து, வாழிய – வாலிய… எனவும், வணக்கம் – வனக்கம், வண்ண – வன்ன எனவும், பொங்கு தமிழ் – பொஞ்கு தமில் எனவும் தவறாக உச்சரிக்கின்ற அபாயங்கள் என்பன ஒரு சில உதாரணங்களாகும். தமிழ்ப் பாடல்களைப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் எழுதி, மனனம் செய்து ஒப்புவிக்கும்போதும் இத்தகைய உச்சரிப்பு வழுக்கள் ஏற்பட வாய்ப்பாகிவிடுகின்றன.
கனடா போன்ற புலம்பெயர் தேசங்களில் உள்ள சிறார்களுக்கு எமது பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோரிடத்து பெரிதும் காணப்பட்டு வருகின்றமை ஒரு நல்ல அறிகுறியே. இவ்வாறு கலைகளைக் கற்றுக்கொள்ளும்போது, ’ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்துவது’ போல, தமிழ் மொழியையும் சேர்த்துக் கற்பதற்கான வாய்ப்பும் பிள்ளைகளுக்குக் கிடைக்கின்றது. இத்தகைய சூழலில் எமது பிள்ளைகள் சந்திக்கும் இது போன்ற சவால்கள் யாவை? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம்? என்பவற்றை ஆசிரியர்களும் பெற்றோரும் அறிந்திருப்பதும், அவற்றிற்கான மாற்று நடிவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வதும் அவசியமாகும்.
தமிழ்ப் பாடல்களின் சொற்களை ஆங்கிலத்தில் எழுதிச் சாதகம் பண்ணும் பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு சில புதிய உபாயங்களை இசை ஆசிரியர்கள் சிலர் கையாண்டு வருகின்றனர். உதாரணங்களாக – ல/ள/ழ போன்ற குறில் எழுத்துகளை ஆங்கிலத்தில் la/lla/zha என்றும், அவற்றின் நெடில் எழுத்துகளை a என்ற ஆங்கில எழுத்தின்மேல் ஒரு – (கோடு/dash) இட்டும் வேறுபடுத்திக் காட்டிக் கற்பித்து வருகின்றனர். அதேவேளை பேச்சொலியியல் (Phonetics) அடிப்படையில் இலகுவும் எளிமையும் புதுமையும் வாய்ந்த, தர்க்கரீதியான தமிழ் கற்பித்தல் முறைமை, இவ்வாறான உச்சரிப்புச் சிக்கல்களைத் தவிர்க்கப் பெரிதும் உதவும் என்பதை இசை ஆசிரியர்களும் கருத்தில் கொள்வது நன்று!
செவ்வியல் இசையை வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க முன்வரும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயமொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ராகங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது மாயாமாளவகௌளை ராகத்தின் வழியாகச் சுரவரிசைகளைக் கற்பித்தல் வழக்கமாகும். இந்த ராகத்தின் இலகு தன்மையே இதற்கான காரணமாகும்.
இதேபோன்று இலகு தன்மையைக் கொண்ட இன்னொரு ராகம் சங்கராபரணம். ‘O Canada’ என்னும் கனடிய தேசிய கீதமும், ‘Twinkle Twinkle Little Star,’ ‘ABCD EFG HIJK LMNOP’ ஆகிய சிறார்களுக்கான மரபுவழி ஆங்கிலப் பாடல்களும் இதே சங்கராபரணம் எனும் ராகத்தினை அடியொற்றிப் பிறந்த பாடல்கள். இந்த சங்கராபரணமும் ஏனையன போலப் பலவகைத் திறன்களைக் கொண்டது; இனிமையானது, இலகுவானது, கம்பீரமானது, மனக் கிளர்ச்சி ஊட்டக்கூடியது, உடல் - உளநோய் தீர்க்கவல்லது எனக் கண்டறியப்பட்ட இன்னொரு ராகமாகும்.
வீணைக் கொடியுடைய வேந்தனே/ தொடத்தொட மலர்ந்ததென்ன?/ அதோ அந்தப் பறவைபோல / பூவே இளைய பூவே/ நிலாக் காயும் நேரம் / பெண்மானே சங்கீதம் பாடவா/ பூவே வாய் பேசும் போது/ அன்று வந்ததும் அதே நிலா/ கண்மணி அன்போடு/ புல்வெளி புல்வெளி தன்னில்…. போன்ற சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சினிமாப் பாடல்கள் சங்கராபரணம் இராகத்தைத் தழுவி இசையமைக்கப்பட்டவையாகும்.
அவ்வகையில் சங்கராபரணம் ராகத்தை அடியொற்றி வெளிவந்த பாடல்கள் கனடா போன்ற வெளிநாடுகளில் சங்கீதம் பயிலும் மாணவர்களுக்கு இனிமையானவையாகவும், இலகுவானவையாகவும், நன்கு பரிச்சயமானவையாகவும் இருப்பதனால், அவற்றைக் கற்பதும் கற்பிப்பதும் சுலபம்; அவை மனதில் நிலைத்து நிற்பதும் சுலபம்!
முடிவாக ஓர் அடிக் குறிப்பு: பல வருடங்களுக்கு முன்னர் ஸ்காபுரோ, மிட்லண்ட் வீதியில் கிளை பிரிந்து செல்லும் வே ப்றைற் கோர்ட் எனும் வீதியில் தமிழிசைக் கலா மன்றத்தினர் முதலில் தமக்கென ஒரு கட்டடத்தைக் கொள்வனவு செய்து, நடத்திய திறப்பு விழாவுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். சற்றேனும் எதிர்பாராத வகையில் என்னையும் சில வார்த்தைகள் அதில் பேசுமாறு, மன்றத்தின் தலைவர் நண்பர் ஸ்ரீபதியும் பத்திராதிபர் நண்பர் கனக மனோகரனும் வேண்டுகோள் விடுத்தனர். அன்றைய சிற்றுரையில் நான் சொன்ன முக்கியமான விடயம் இது –
“ஒரு மனிதன் மரணிக்கும்போது, கடைசியாகச் செயலற்றுப் போகும் புலனுறுப்பு செவிப்புலனாகும்” என அறிவியல் கூறுகின்றது. அதில் எவ்வித பிசகுமின்றி, 'செவிப் புலனைப் பெற்றதே பிறவிப் பெரும்பயன்' என்பதற்கொப்ப, எனக்கும் அவ்வாறே ஆக வேண்டும் என நான் எபோதும் இறைஞ்சுகிறேன். காரணம், கடைசிக் கணத்திலும் இனிய சங்கீதத்தைச் செவியுற்றவாறே எனது உயிர் உடலைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டும்!”
இசைக்கவும், இசையை
இரசிக்கவும் தெரிந்தவர்கள்
பாக்கியசாலிகள்!
உசாத்துணைகள்:
க. நவம், 2002 வருடாந்த இதழ், தமிழிசைக் கலாமன்றம் 2002.
Collin Barras, ‘Did Early Humans or Animals Invent Music?’ Earth, Sept 07, 2014.
திண்டுக்கல் தனபாலன் – dindigulthanabalan.blogpost.com
சங்கீத சாஸ்திரம், கு. வேலாயுதபிள்ளை, ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 1966.
Sankaraaparanam Cine Tamil songs -
https://youtu.be/ai5kOxxNr70?si=ACPCBMkQRPOJAird
பயன்மிக்க தகவல்களைத் தந்துதவிய சகோதரிகள் ஷாந்தினி வர்மன், சுகல்யா ரகுநாதன், துணைவி ஷியாமளா நவம் ஆகியோர் எனது நன்றிக்குரியவர்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.