ஒன்றுநான் ஒரு ஏதெனியன் அல்ல;
கிரேக்கனும் அல்ல;
ஆனால் உலகின் குடிமகன்.
- சோக்ரடீஸ்
கிரேக்க நாகரிகமும் தொடக்ககால மெய்யியலின் கருவூலமும் முதல் இயலில் துலக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவும் மேற்காசியாவும் இணையும் இடத்தில் கிரேக்கம் அமைந்துள்ளது. ஆரம்பகாலத்து கிரேக்க அரசியல் போக்குகளை நூலாசிரியர் வரலாற்று, சமூக அடிப்படையில் அலசியுள்ளார். அரசியல், சமூக மாற்றங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல், சமூக நடத்தைக்கோலங்களை எடுத்துரைக்கையில் பின்வருமாறு எழுதிச் செல்கின்றார்:
“நாட்டில் அன்றிருந்த பொருளாதாரச் சூழலில் ஏழைகளும் விவசாயிகளும் பெரும் கடன் சுமைகளுக்காளாகினர். கடனை அடைக்க முடியாதவர்கள் எஜமானர்களுக்குத் தம்மையே அடிமைகளாக விற்பனை செய்துகொண்டனர். இதற்கிடையில் விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர்களைக் கொண்ட ஒரு நடுத்ததரப் பண்புகளைக்கொண்ட ஒரு வகுப்பும் உருவாகியிருந்தது. இவை, அசைவற்ற சித்திரங்கள் அல்ல. மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஆயத்தமாகி வந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வும் அரசியல் ரீதியான வேறுபாடுகளும் சமூகத்தில் ஒரு கொதிநிலையை உருவாக்கியிருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஏதென்சில் ஒரு புதிய அரசியல் மாற்றம் நிகழ்கின்றது. அரசியல் சமத்துவம், அரசியல் உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், நாட்டின் அரசியலில் மக்களின் பங்களிப்பு போன்ற மக்கள் நிலைப்பட்ட அரசியலுக் கான கோரிக்கைகள் வலுவடைகின்றன. இங்கிருந்துதான் ஜனநாயக அரசியல் தோற்றம் பெறுகிறது. அடிமைகளின் அவலம், எழைகளின் துயரம் என்ற கருத்துகளும் இதன் பின்னணியில் இருந்தன. இந்தக் காலத்தில் நடைபெற்ற அரசியல், சட்டச் சீர்திருத்த வரலாறுகளிலிருந்து இந்த உண்மைகளை நாம் பார்க்கிறோம்” (பக். 6),
“அரசியல், வரலாற்று ரீதியான தாக்கங்கள், கிரேக்கத்தின் அரசியல் சூழ்நிலைகளுக்குச் சில முக்கியமான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தன. அவற்றுள் பாரசிகப் பேரரசு கிரேக்கத்தைத் தனது பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்குவதற்கு எடுத்த முயற்சி முக்கியமானது. எனினும் கடும்போராட்டங்கள் மூலம் கிரேக்க அரசுகள் இதைத் தவிர்க்க முயன்றன. அடுத்ததாகக் கிரேக்கத்தில் ஏதெனிய மக்கள் எழுச்சியையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். ஒழுக்கம், ஆய்வறிவுத் தலைமைத்துவம், ஏதெனியப் பேரரசு உருவாக்கம் என்பவற்றில் இந்த எழுச்சி புலப்பட்டது. இவை தவிர கவிதையும், கட்டடக்கலையும், சிற்பக்கலையும் மனித நாகரிக வரலாற்றில் பெருமை தரும் படைப்புகளாக கிரேக்க நாகரிகத்தை மேலும் மெருகூட்டின” (பக். 9)
சோலோன் சட்ட சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள், சோக்ரடீசுக்கு முந்தைய அயோனிய சிந்தனை, தேலிஸ் இன் நீர்த் தத்துவம், தொன்மைக்கால அயோனிய விஞ்ஞானம் போன்றவற்றினை விளக்கிய பின்னர், இதன் தொடர்ச்சியாக சோக்ரடீஸ் இன் மெய்யியல் எவ்வாறு மாற்றங்களோடு புதியதோர் அணுகுமுறையில் தோற்றம் பெற்றது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். “அனெக்சகோரசை சோக்ரடீஸ் கற்கத் தொடங்கிய போது அனெக்சகோரஸ் வழக்கமான இயந்திரீகக் காரணிகளோடு தனது சிந்தனையை நிறுத்திவிட்டதாக அவர் தெரிந்துகொண்டார். இந்த முறையின்படி உலகானது எந்த நன்மையான நோக்கத்திற்காகவும் வடிவமைக்கப்பட வில்லை என்ற ஒரு கருத்துத் தோற்றம் பெறுகின்றது. எனினும் அனெக்சகோரஸ் விட்டுச்சென்ற இந்த வகைச் சிந்தனையைச் சோக்ரடீஸ் தொடரவில்லை. இயற்கையின் அடிப்படைக் கூறுகளை விசாரணை செய்வதற்கோ புறவயப் பொருள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கோ சோக்ரடீஸ் முயலவில்லை. பிளேட்டோவும் ஷெனோபனும் தருகின்ற விவரிப்புகளின்படி நோக்கினால் இயற்கை என்றால் என்ன என்ற ஆய்வு அல்ல; உலகில் மனித வாழ்வு என்றால் என்ன என்பதுதான் சோக்ரடீசின் விருப்பத்திற்குரிய (பக். 17) ஆய்வுப்பொருளாக இருந்தது.
இதுவரை மெய்யியல் தனக்கென வரையறுத்துக்கொணடிருந்த ஆய்வும் விசாரணையும் மற்றொரு துறைக்கு மாறுகின்றன. அவை மனித வாழ்க்கையையும். மனித ஒழுக்கத்தையும், சமூக ஒழுங்கையும் நோக்கித் திரும்புகின்றன. அதாவது ஒவ்வொரு தனிநபரையும் ஒவ்வொரு ஆன்மாவையும் ஒழுக்க வாழ்வையும் அறிந்து கொள்வதைப் பற்றிய சிந்தனை தொடங்கியது. இவை சோக்ரடீசிய விசாரணையின் கருப்பொருளாகின (பக். 18). சோக்ரடீசின் கருத்தில் ஆன்மாவினுடைய முழுமை அறிவின்றிச் சாத்தியமற்றது. அதாவது நாம் பெறுமானம் உள்ளவை என்று நினைக்கின்ற விடயங்கள் பற்றிச் சரியான தீர்வையும் விளக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அறிவு முக்கியமானதாகும். இதுதான் சோக்ரடீஸ் கண்டறிந்த அறிவுக்கும் நன்மைக்கும் இடையிலான தொடர்பாகும். இது அவருடைய அடிப்படைக் கொள்கை எனக் கருதலாம். இதுவே சோக்ரடீசின் ஒழுக்கவியல் சிந்தனையில் எதிரொலிக்கும் "ஒழுக்கமே அறிவு என்ற கோட்பாட்டின் ஊற்றாகவும் அமைகிறது. 'தன்னை அறிதல்' (உன்னையே நீ அறிவாய்) என்ற சோக்ரடீசிய மெய்யியலுக்கு உயிரூட்டும் அடிப்படைக் கருத்தாகவும் இதைக் கொள்ளலாம் (பக்.23).
இரண்டு
வெற்றுவாதங்களில் மனநிறைவு கொள்பவராக இருந்தால்
விதண்டாவாதிகளிடம் நீங்கள் சொற்போர் நடத்தலாம். ஆனால்
மனித வாழ்வை ஒருபோதும் நீங்கள் அறியப்போவதில்லை.
- சோக்ரடீஸ்
வாதக்கலையின் ஆனான்களான சோபிஸ்ட்டுகள் பற்றிய ஆய்வாக இவ்வியல் அமைந்துள்ளது. ‘கி.மு 5ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் கிரேக்கத்தின் அரசியல் கருத்துகளிலும் மனிதர் பற்றிய கருத்துகளிலும் ஏற்பட்ட பொதுவான ஆர்வத்திற்கு சோபிஸ்ட்டுகளின் செயற்பாடுகளுடன் தொடர்பிருந்தது. சோக்ரடீசுக்கு சற்று முந்திய காலப் பிரிவை சோபிஸ்டுகளின் சிந்தனைக் காலம் எனலாம். கிமு 5ஆம் நூற்றாண்டளவில் மெய்வியலையும் கலையையும் பயன்படுத்திக் கல்வின் போதனைகளில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினரே சோபிஸ்ட்டுகள். சோபிஸ்ட் (sophist) என்ற கிரேக்க பதத்தின் மூலச்சொல் sophs என்பதாகும். சோபஸ் என்றால் திறன்கள் அல்லது அறிவு என்று பொருள். அடிப்படையில் கைவினை, கலை, அறிவியல், பண்பாட்டு உள்படப் பல்வேறு துறைகளில் சரளமான அறிவைப் பெற்றுள்ள ஒருவரை இந்தச் சொல் குறிக்கிறது. ஞானி, பேரறிவாளன் என்ற பொருளும் இதற்கு உண்டு. அரசியலிலும் வணிகத்திலும் வெற்றியடைவதற்குரிய கல்விப் பயிற்சியை சோபிஸ்ட்டுகள் வழங்கினர். சிந்திப்பதற்கும் பேச்சுக்கலைப் பயிற்சிக்கும் தேவையானவற்றைப் போதித்தனர். வாதம் செய்து வெற்றி பெறுவதற்கான பல நுட்பங்களை அவர்கள் கற்று கொடுத்தனர். தந்திரமான முறைகளைப் பயன்படுத்தி, மயிர் (பக். 25) பிளக்கும் வாதங்களில் ஈடுபடுபவர்கள் சோபிஸ்டுகள் என்று மக்கள் கருதினர்’ (பக். 26). பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சோபிஸ்ட்டுகள், வெவ்வேறு கலாசாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தகவல் களஞ்சியங்களாகவும் விளங்கினார்கள் என்பதையும் சோபிஸ்ட்டுகளின் தலைவராக விளங்கிய புரட்டகோரஸ், ஜோர்ஜியாஸ் போன்ற சோபிஸவாதிகள் பற்றியும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
சோபிஸ்ட்டுகளின் முறையை விதண்டாவாத முறை என்றும், சோக்ரடீசினுடைய முறையை இயக்கவியல் வாதமுறை என்றும் குறிப்பிடலாம். கேள்வி பதில் முறையில் அமைந்திருந்த சோக்ரடீசிய முறையைப் பிளேட்டோ இயக்கவியல் முறை என்று பெயரிட்டதோடு, பகுப்பாய்வுக்கான மிகச் சிறந்த மெய்யியல் முறை என்றும் அதைப் பெருமைப்படுத்திப் பேசியுள்ளார். முதலாவது இந்த முறையின் அடிப்படை நோக்கம் உண்மையைக் கண்டுபிடிப்பது. இரண்டாவது நோக்கம் உண்மையைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான அறிவை மற்றவர்களுக்கு வழங்குவது. இந்த இரு நோக்கங் களையும் அடைவதற்கு சோக்ரடீசிய இயக்கவியல் முறை மிகச் சிறந்த கருவி என்று பிளேட்டோ கருதினார். அத்தோடு, மெய்யியல் ரீதியாக உண்மையான நோக்கங்களைச் சிறப்பாக எடுத்துப் பேசக்கூடிய முறை என்றும் சோக்ரடீசிய முறையைப் பற்றி பிளேட்டோ குறிப்பிடுகிறார். ஏனெனில், இங்கு கூறப்பட்ட இரண்டு நோக்கங்களிலும் அறிவின் மீதான ஆவல் முதன்மைக் கூறாக அமைந்துள்ளது. பிளேட்டோவின் கருத்துப்படி விதண்டாவாதமுறை உண்மையைக் கண்டறிவதற்கு எதிரான முறை. விதண்டாவாத முறையில் அறிவியல் ரீதியான நோக்கங்கள் எதுவும் இல்லை. இந்த முறை முன்வைக்கக்கூடிய கல்வி நோக்கங்களில் எவ்விதப் பெறுமானமும் இருக்கவில்லை என்றும்,சோபிஸ்ட்டுகளின் முறையில் எவ்வித மெய்யியல் பெறுமானங்களும் இல்லை என்றும் பிளேட்டோ குறிப்பிடுகிறார் (பக். 43),.
சோபிஸ்ட்டுகளின் விதண்டாவாத முறை ஏதென்ஸ் நகரில் மக்கள் இடையில் பிரபலம் பெற்றிருந்தது. ஆனால், அதற்கு எதிரான விமர்சனங்களும் அடிக்கடி முன்வைக்கப்பட்டன. சோக்ரடீசையும் அவருடைய வாதக் கலையையும் பலர் சோபிஸ்ட்டுகளின் வாதத்துடன் ஒப்பிட்டதோடு அவரை ஒரு சோபிஸ்ட்டாகவும் கருதினர். கிரேக்க நாடக ஆசிரியர்கள் இந்தப் பின்னணியில் அவரை கேலிக்குரிய பாத்திரமாகவும் சித்திரித்தனர். மேகங்கள் நாடகத்தில் அரிஸ்தோபனீஸ் இதைத் தான் செய்திருந்தார். மேகங்கள் நாடகத்தின் முதற்காட்சியிலேயே சோபிஸ்ட்டுகளின் மீதான அதாவது, சோக்ரடீசின் மீதான கேலிக்குரிய உரையாடல்களைப் பார்க்க முடியும். ஸ்டெர்ப்சியாடஸ் ஒரு விவசாயி. பெலப்போனேசியன் போரினாலும் தனது மகனின் ஆடம்பரத்தாலும் பெரும் கடன் தொல்லைக்கு ஆளாகியிருப்பவன். அவனது மகன் பீடிப்படெஸ் குதிரைச் சவாரிகளில் மிகுந்த ஆசையுள்ளவன், ஓர் ஊதாரி. மேகங்கள் நாடகம் இந்த இருவரின் உரையாடலுடன்தான் தொடங்குகிறது. சோக்ரடீசின் (அதாவது சோபிஸ்ட்டுகளின்) விவாத முறையைப் பயன்படுத்தி, தனது கடன்காரர்களிடமிருந்து தப்புவதற்கு ஸ்டெர்ப்சியாடஸ் ஆசைப்படுகிறான். நாடகத்தின் முதற்பகுதியின் சுருக்கத்தை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார் (பார்க்க, பக். 39, 40),
மூன்று
மாற்றத்தின் இரகசியம் உங்களுடைய
முழு ஆற்றலையும் பழைமையில் குவிப்பதல்ல.
புதியதைக் கட்டியெழுப்புவதே!
- சோக்ரடீஸ்
மரபுகளை மறுத்த ஏதேனிய அரசியல் பயணம் பற்றிப் பேசுகின்றது மூன்றாவது இயல். ‘சோக்ரடீஸ் வழக்கு விசாரணை பல பரிமாணங்களைக் கொண்டது. ஆழமான பிரச்சினைகள் அதில் உள்ளன. அது நடை பெற்ற காலப் பகுதி, கிரேக்க அறிவுநிலை, சோக்ரடீசின் வாழ்க்கை, அவர் எதிர்நோக்கிய வாழ்க்கையின் இலக்கு, அவருடைய சிந்தனைகள், அவருடைய விவாதமுறை, வாழ்வின் முடிவு பற்றிய அவருடைய இலட்சியங்கள் என்பன அவற்றுள் ஒன்று கலந்துள்ளன. சோக்ரடீசிற்கு எதிராக இருந்துவந்த ஐயங்களும் பகைமை உணர்வுகளும் அவரைக் குற்றவாளியாக்குவதில் முக்கிய பங்காற்றி உள்ளன. அதேவேளை சோக்ரடீசை விசாரித்த நடுவர் மன்றம் (நீதிமன்றம்), ஏதெனியக் குற்ற விசாரணைச் சட்டத் தொகுதி, ஏதெனிய நிர்வாகம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இவை தனித்தன்மை வாய்ந்தவை. வழக்கு விசாரணையின் படிமுறை நடவடிக்கைகள், விசாரணை ஒழுங்குபடுத்தப்பட்ட விதம், வாதி, பிரதிவாதி தரப்பிலான முன்வைப்புகள், அவற்றிற்கான நேர அவகாசம் போன்றனவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்’ - இவை சார்ந்த விடயங்களை விமர்சன கண்ணோடத்துடன் இவ்வியல் ஆராய்ந்துள்ளது.
பெருக்லீயன் யுகம் என்று கூறப்படும் காலத்தில் சோக்ரடீஸ் வாழ்ந்தார். அது ஏதென்சின் ஒரு முக்கிய அரசியல் காலப் பகுதி. பெரிக்கிளிஸ் (கி.மு 495-429) மன்னன் கிரேக்கம் கண்ட சிறந்த ஆட்சியாளராக கருதப்படுகின்றார். அவர் ஜனநாயக அரசியலை ஆதரித்ததோடு, அதன் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். அது இன்று நாம் பேசுவது போன்ற முழுமையான ஜனநாயக முறையாக இருக்கவில்லை. ஆயினும் அது ஒரு மாற்றத்தையும் மக்களாட்சிக் கருத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய தாராள ஆட்சிமுறை என்று உறுதியாகக் கூறுலாம் என்கிறார் நூலாசிரியர். மக்கள் ஜனநாயக நம்பத்தொடங்கிய காலத்தில் சோக்ரடீஸ் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டார். இதனால் சோக்ரடீஸ் எதிர்கொண்ட நெருக்கடி பற்றியும் அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணைகள் பற்றியும் அவற்றின் நியாயமின்மை பற்றியும் விரிவாக ஆராந்துள்ளார். பிளேட்டோவின் தொடக்ககால படைப்புகளான யூதிப்ரோ, அப்போலொஜி, கிரிட்டோ, பீடோ போன்றவை சோக்ரடீசுக்கு எதிரான நீதி விசாரணை, அவர் சிறையில் அடைக்கப்படல், நண்பர்களின் உறவு, மரண தண்டனை வழங்கப்படுதல், மரணமும் வாழ்வும், முதுமையும் மரணமும், ஆன்மாவும் மரணமும் போன்ற பல விடயங்களை பேசியுள்ளன. பிளேட்டோவின் யூதிப்ரோ என்ற நூலில் எவ்வாறு சோக்ரடீஸ் மீதான விசாரணைக்காட்சிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்பதை காட்சிமொழியாக பேராசிரியர் அனஸ் விபரித்துள்ளார். அரச அழைப்பின் பேரில் மன்னனின் பிரதிநிதியான ஆர்க்கோனின் மன்றத்திற்கு சோக்ரடீஸ் செல்கிறார். சமயத்தோடு தொடர்பு படுத்தப்பட்ட சோக்ரடீஸ் மீதான குற்றச்சாட்டுகள் மன்னன் முன்பாக கொண்டுவரப்பட்டிருந்தன. அந்த நாட்டின் சட்டப்படி, மெலிட்டசினால் கொண்டுவரப்பட்ட கடவுள் நிந்தனைக் குற்றச்சாட்டுகளுக்கான பூர்வாங்கப் பதில்களை வழங்குவதற் காகவே சோக்ரடீஸ் அங்கு சென்றிருந்தார். இந்த விடயங்களோடு சோக்ரடீசுக்கு எதிராக மெலிட்டஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் அவற்றுக்கு அவர் பதில் தரும் காட்சிகளையும் யூதிப்ரோ உள்ளடக்கியுள்ளது. யூதிப்ரோ சோக்ரடீசின் வாக்குமூலங்களை மதிப்பிடுவதற்கான முக்கிய படைப்பாகும். ஒரு முக்கிய காட்சியை யூதிப்ரோ இவ்வாறு கூறுகிறது. யூதிப்ரோ தம்மீது இருந்த கொலை வழக்கு ஒன்றிற்காக அந்த மண்டபத்துக்கு வந்திருந்தார். யூதிப்ரோ ஒரு கற்பனைப் பாத்திரம் அல்ல; அவர் ஓர் உண்மை நபர் என்றும் அவரைப் பிளேட்டோ நன்கு அறிந்திருந்தார் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலாவது கட்டமாக ஆர்க்கோனின் மண்டபத்தில் யூதிப்ரோ சோக்ரடீசை சந்திக்கும் காட்சி. அப்போது நிகழ்கின்ற உரையாடலை நூலாசிரியர் தந்துள்ளார் (பார்க்க, பக். 57 -59). ‘யூதிப்ரோ உரையாடலின் காட்சி மாறவில்லை. ஆனால் உரையாடலில் சில திருப்பங்கள் நிகழ்கின்றன’ என்ற கருத்துடன் இன்னுமொரு உரையாடலையும் பதிவிட்டுள்ளார் (பார்க்க, பக். 59-63),
‘சோக்ரடீஸ் இன் வழக்குப் பற்றிய பிளேட்டோவின் மீள்பதிவுகளும் விளக்கமும் அடங்கிய நூல் அப்போலொஜி. அப்போலொஜியா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் ‘விளக்கம்’ என்பதாகும். உரையாடல் ரீதியான விளக்கமாக அன்றி நீதிபதிகளின் முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணை உரைகளின் வடிவத்தில் அப்போலொஜி நூல் எழுதப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் தமது குற்றங்களுக்கு மறுப்புரை கூறுவது போல அமைந்துள்ளது. விசாரணைகளின் போது சோக்ரடீசினால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. வழக்கு விசாரணை நடைபெறும் போது வழக்கு மன்றத்தில் பிளேட்டோ வந்திருந்தார். அதனால், அவரால் பேசவைக்கப்பட்டுள்ள சோக்ரடீஸ் இன் பதில் உரைகள் பெருமளவில் நம்பக்கூடியவையாகும். சோக்ரடீஸ் நச்சுப் பானத்தைக் குடித்து இறந்த அந்தச் சந்தர்ப்பத்தில் பிளேட்டோ அங்கு இருக்கவில்லை. இதனை அவருடைய பீடோ நூலின் மூலம் நம்மால் அறிய முடிகின்றது. அத்தோடு வழக்கு விசாரணை நடைபெறும்போது, சோக்ரடீசின் ஏனைய நண்பர்களும் 501 அல்லது 500 நீதிபதிகளும் (ஜூரர்கள், நடுவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்) அங்கு இருந்தனர். இது அல்லாமல் இந்த வழக்கின் பிரபலத்தாலும் உணர்ச்சிமயமான தன்மையாலும் கவரப்பட்ட பெருந்தொகைப் பொதுமக்களும் அங்குக் கூடி நின்றனர்’ என்று பிளேட்டோ முன்வைத்த உரைகளின் நம்பகத்தன்மையை பேராசிரியர் அனஸ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இதனை நிரூபணமாக்க மர்லின் பீரிஸ், டி.பி.பொன்னம்பெரும ஆகியோர் எழுதிய ‘சோக்ரடீஸ் ஜீவன சரிதய’ (சோக்ரடீஸ் வாழ்க்கைச் சரிதம்) என்ற சிங்க நூலில் (!999) இருந்து பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டியுள்ளார்.
“சோக்ரடீஸ் அங்கு விவாதித்தவற்றைத் தவறான முறையில் பிளேட்டோவால் பதிவு செய்திருக்க முடியாது. செய்திருக்க முடியாத காரியமாகும். அக்காலத்தில் சோக்ரடீஸ் கூறியவற்றை நேரடியாகக் கேட்ட கிரேக்கர் பலர் இருந்தனர். இந்த வகையில் பிளேட்டோ முன்வைக்கும் விவரிப்புகளும், குற்றச்சாட்டுக்கு எதிராகச் சோக்ரடீஸ் முன்வைத்த நியாயங்களும் விசாரணைகளின் சாராம்சமாக இருக்க முடியும்,”
‘ஒரு நாடக உரையாடல் போல் அமைந்துள்ள பிளேட்டோவின் வழக்கு விசாரணைக் காட்சிகள் மனதைத் தூண்டும் இலக்கியத்தை நினைவூட்டுபவை. சோக்ரடீஸ் ஒரு வினோதமான மனிதர். வாழ்வை அவர் எதிர்கொண்ட விதம் வித்தியாசமானது. நாம் அறிந்தவரையிலும் நமக்குக் கிடைக்கும் சாட்சியங்களின் படியும் தமது உயிரைப் பாதுகாப்பதில் சோக்ரடீஸ் அக்கறை காட்டுபவர் அல்ல. வழக்கு விசாரணையில் நீதிபதிகளைத் தமது சிந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் மாற்றும் விதத்தில் சோக்ரடீஸ் பேசினாரே ஒழிய நீதிபதிகளின் நல்லெண்ணத்தை வெற்றி கொள்ளும் நோக்கத்தில் அவர் செயல்படவில்லை. ஷெனோபனின் எழுத்துக்களில் கூட பிளேட்டோ கூறுவதைப் போன்ற கருத்துக்கள்தாம் தரப்பட்டுள்ளன’ என்று மர்லின் பீரிஸின் (!999) சிங்கள வரிகளை தமிழ் படுத்தி விளக்கியுள்ளார்.
‘பெறுமதியானது என்று கிரேக்கர் கருதிய எல்லாவற்றின் மீதும் சோக்ரடீஸ் கேள்வி எழுப்பினார். ஏன், எதற்காக என்று கேட்டார். இதனால் எழுந்த பிரச்சினைகள் அனைத்தையும் பெரும்பாலான சூழ்நிலைகளில் அவர் தன்னந்தனியாக எதிர் கொண்டார். தமது காலத்தின் ஊழல் மலிந்த சமயத்திற்கும் சமூக-அரசியல் நிறுவனங்களுக்கும் எதிரான அல்லது மாற்றுக் கருத்துகளை சோக்ரடீஸ் பேசினார். சமூகத்திலும் ஏதென்ஸ் அரசியலிலும் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தது உண்மை யாயினும் ஏதென்சில் அவரை விரும்பாதவர்கள் இருந்தனர்’ (பக். 66). சோக்ரடீஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த மூன்று முதன்மையான நபர்களைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். மேலும் மேகங்கள் நாடகத்திற்கு எதிரான கருத்துக்களும் இந்த இயலில் முன்வைக்கப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்
அனஸ், எம்.எஸ்.எம்., 2022, மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ், அடையாளம், புத்தாந்தம்.
அனஸ், எம்.எஸ்.எம்., 2006, மெய்யியல் கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை, குமரன், கொழும்பு.
அனஸ், எம்.எஸ்.எம்., 2001, தற்கால இஸ்லாமிய சிந்தனை, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
அனஸ், எம்.எஸ்.எம்., 1996, விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானங்களும் – ஒரு முறையியல் நோக்கு, பண்பாட்டு ஆய்வு வட்டம், பேராதனை.
கிருஷ்ணராஜா, சோ, 1982, விமரிசன முறையில், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
மர்லின் பீரிஸ், டி.பி., பொன்னம்பெரும, 1999, சோக்ரடீஸ் ஜீவன சரிதய (சிங்களம்), கொழும்பு.
சரிநிகர், 1998 பெப். 11
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.m