கம்பராமாயணத்தின் பாவிகம் - அறம் வெல்லும்! பாவம் தோற்கும்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
முன்னுரை
அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது கம்பராமாயணத்தின் பாவிகமாகும். இப்பாவிகத்தினைக் கம்பர் தேவைப்படும் இடங்களிலெல்லாம் கதாப் பாத்திரங்கள் மூலமும், ஆசிரியர் கூற்றின் வாயிலாகவும் வலியுறுத்திக் கூறுகிறார். உலகில் அறம்தான் வெல்லும், அறம்தான் வெல்லவேண்டும் என்ற பாவிகத்தைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
பாவிகம்
காப்பியத்தின் பண்பாகப் ’பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகின்றது. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படை கருத்தினையேப் பாவிகம் என்று கூறுவர்.
“பாவிகம் என்பது காப்பிய பண்பே”
(தண்டியலங்காரம் 91)
நூல் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினைப் பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது பாவின் தனி செயல்களிலோ, பகுதிகளிலோ தெரிவதில்லை. தொடக்க முதல் முடிவு வரை நூலை முழுவதிலும் பார்க்கும் போதே பாவிகம் விளங்கும்.
அறத்தின் ஆற்றல்
எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்கி, தருமம் தழைக்கவில்லையோ, அப்பொழுதெல்லாம் அறத்தை நிலைநாட்டப் பரம்பொருள் அவதரிப்பதாகக் கம்பர் கூறுகிறார்.
" அறம்தலை நிறுத்தி வேதம்
அருள்சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச்
செந்நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உகநூறித், தக்கோர்
இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொன் பாதம்
ஏத்துவார் பிறப்பு அறுப்பான்"
(பிணிவீட்டுப்படலம் 1125)
என்ற கம்பராமாயணத்தின் பாவிகம் காப்பியம் முமுவதும் ஒலிக்கிறது.