அ.ந.கந்தசாமி அவர்கள் ஈழத்தின் அவர் காலத்தில் வெளிவந்த பல்வேறு பத்திரிகைகளில் தனது இலக்கிய ஆக்கங்களைப் பதிவிட்டுள்ளதன் மூலம் அவரை அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்குப் பிரபலமடைந்திருந்தார். முற்போக்கு இலக்கியச் செய்தி இதழாக அவ்வேளை வெளிவந்த மொஸ்கோ சார்பு பத்திரிகையான ‘தேசாபிமானி’யில் அவரது படைப்புக்கள் வெளிவந்தன. அத்தோடு அப்பத்திரிகையின் ஆசிரிய பிடத்திலும் பணியாற்றியிருந்தார் என்பதனையும் அறியமுடிகின்றது.
1946ஆம் ஆண்டளவில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி, பின்னர் முறையே சுதந்திரன், வீரகேசரி, ஸ்ரீலங்கா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்களிலும் கடமையாற்றினார். எவ்வாறு இருந்தாலும் இவர் தாம் பணிபுரிந்த அந்தப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தபோதிலும், தனது கொள்கைப் போக்கை – பொதுவுடமைச் சேவையை – கைவிட்டிலர். ஒவ்வொரு பத்திரிகைகளிலும் அவர் பணியாற்றியபோது ஒரு பரபரப்பு தென்பட்டது. தேசாபிமானி – மூலம் நாட்டின் சீர்கேடு, பொருளாதாரச் சீர்கேடு, சுரண்டல், சாதி ஒழிப்பு என்பனவற்றை ஒழிக்கப்பாடுபட்டார். சுதந்திரன் மூலம் நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் என்பனவற்றை வளர்க்க முயன்றார். பத்திரிகைகள் ஏதுவாக இருந்தாலும் அப்பத்திரிகை வாயிலாக நம் கொள்கைகளுக்கு முரசம் கட்டினார். தேசாபிமானி இனத்தின் விடுதலை பற்றி அதிகம் கருத்தூன்றிக் கவனிக்காத காரணமோ என்னவோ, அவர் அப்பத்திரிகையைக் கைவிட்டு சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பீடமேறினார் என்பதற்கு அவருள் தீச்சுவாலையாப் பதிந்த அவர் காலத்து இன விடுதலை வேட்கை என்றுதான் கொள்ளமுடிகின்றது. அதனால்தான் எப்பொழுதுமே தம்முள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், தமிழரசுக் கட்சியிலும் இவரால் பணியாற்ற முடிந்தது போலும். அத்தோடு கம்யூனிஸச் சித்தாந்த அடிப்படையில் சியோனிச வாதம் என்னும் ஒன்று தலைவிரித்தாடி பூர்சுவாக்களாக மொஸ்க்கோ சார்புப் பொதுவுடமைக் கட்சி பற்றிய விமர்சனங்கள் இவர் காலத்தில் எழுந்திருந்ததும், சிங்கள இனவாத்தைக் கண்டிக்காததும் பக்கச் சார்பற்று நடக்காததும் சிங்கள ஆதிக்கம் மொஸ்போ சார்பு போக்கில் காணப்பட்டதும் இவர் தேசாபிமானியின் ஆசிரிய பீடத்தில் இருந்து விலக் காரணமாயிருந்திருக்கலாம்.
இவர் மொழி பெயர்த்து ‘யூதர்களினதும் அராபியர்களினதும் உறவு’ நூல் இன்றும் கருத்தூன்றிக் கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. அதனை மீள் பிரசுரம் செய்வது பொருத்தமாகவும் அமையும்.
இவருக்கு ஆறு அண்டுகள் பிந்தியவரான பிறேம்ஜி ஞானசுந்தரம் இந்தியாவில் கற்றுவிட்டு வந்து தேசாபிமானியில் இணைந்து ஆசிரியர் பீடத்தின் தமிழ்ப் பிரிவான தேசாபிமனியில் எழுதத் தொடங்கினார். ஆனால் இவர்களுக்கிடையேயான தொடர்பு அறாதபடி முற்போக்கு எழுத்தாளர் இணையத்தில் இருவரும் இணைந்து செயற்பட்டனர் என்பதுதான் உண்மை. பாரதியாரின் பெருமதிப்பிற்கு உள்ளான யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலனாரை இனங்கண்டு அவருக்கு அவர் பிறந்தகத்திலேயே நினைவுத்தூபி நிலை நிறுத்த ஈழத்துச் சோமு என இனங்காணப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் (பின்னர் அதன் செயலாளராகப் பணியாற்றியவர்) முயற்சி செய்தபோது அவரின் முயற்சிக்கு முன்மொழிந்து உறுதுணையாகவும் செயற்பட்டுள்ளார்.
சுதந்திரன் பத்திரிகையில் பிரபலமாகப அடிபடும் ‘குயுக்தியார்’ கேள்விபதிலுக்கான பத்தியின் ஆரம்ப கர்த்தாவும் இவரே.
இவரின் எழுத்துக்கள் மானிடவர்க்கத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும். சாதி சமய வேறுபாடுகள், ஆண்டான் அடிமை அமைப்பு, சாதி வித்தியாசங்கள், வர்க்க வேறுபாடுகள் போன்ற கைவிலங்குகளை அறுத்தெறிந்து சுதந்திரமானதும், சகோதரத்துவமானதும், சமத்துவமானதுமான சகவாழ்வினை வேண்டி நின்றதனாலேயே கலாநிதி க. கைலாசபதி அவர்கள் ‘கட்டறுத்த புரோமத்தியஸ் என்று கருதப்படும் வகையில் முற்போக்கை முழுமூச்சாகத் தழுவிக்கொண்டவரும் முற்போக்கு இலககிய அணியின் மூத்த பிள்ளைகளுள் ஒருவருமான அ.ந. கந்தசாமி' என்று குறிப்பிடுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. பைபிளில் வரும் ஒரு கதைதான் ‘கட்டறுத்த புரோமத்தியஸ்’ ஆகும். புரோமத்தியஸ் (Prometheus) நெருப்பின் கடவுளான ஒலிம்பஸிடமிருந்து (Olympus) நெருப்பைப் பறித்து உலக மக்களுக்குக் கொடுத்தமைக்காகத் தண்டிக்கப்பட்டவர். இதனால் அவருக்குக் கிடைத்த தண்டனை மலைக் கற்பாறைமீது கட்டிவைத்து கழுகுகளுக்கு உணவாக்குவதாகவும், அந்தத் துன்பத்தை அனுபவிக்க வைத்தாகவும் வரும் கதையை பேராசிரியர் கைலாசபதி அ.ந.கவோடு இணைத்து பாராட்டி எழுதினார் என்றால் அக்காலத்தில் அ.ந.க.வின் எழுதுகோலின் தாக்கம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை உணரமுடிகின்றது. சமுதாயத்தைத் தனது நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் வாயிலாக வரைந்தவர் அ.ந.க அவரகள்.
நான் கொழும்பில் இ.போ.ச. வில் பணியாற்றிய வேளை முற்போக்கு அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்குச் செல்வது வழமையாக இருந்தது. அதற்கு என்னோடு இருந்தவர்களும் முக்கிய காரணம் எனலாம். இன்று அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தெ. இராஜேந்திரன்,, சிவஞானம் போன்றவர்களின் உறவே அதற்கும் முக்கியமானதாக இருந்தது..
பக்கம் சாராத முனைப்புடன் செயற்பட்ட பிரேம்ஜி அவர்களைப் பொதுச் செயலாளராக் கொண்டு 1954 ஜீன் 27ல் ஆரம்பிக்கப்பட்ட ‘முற்போக்கு எழுத்தாளர் இயக்கம்’ ஆரம்பிக்க முக்கியமாக இருந்தவர் அ.ந.க என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களும் அ.ந.க அவர்களும் வெவ்வேறு திசைகளில் பணியாற்றினாலும் பொதுமையானவற்றில் இணைந்து செயற்பட்டமை அ.ந.க அவர்களின் சமூகப்பற்றையும் மக்கள் அவலங்களை இடித்துரைக்கும் பங்களிப்புமே காரணாக அமைந்தது. அ.ந.க. அவர்களின் பேனாவின் தாக்கத்தால் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அ. அமிர்தலிங்கம் ‘சீனாவில் மழைபெய்யதால் இங்கு குடைபிடிக்கின்றார்கள்’ என்று சீன சார்புப் பொதுவுடமைக் கட்சியினரை சாடியபோதும் மொஸ்கோவில் குடைபிடிக்கின்றார்கள் என்று ஒருபோதும் பேசியது கிடையாது என்றால் அதற்கு அ.ந.கவும் ஒருவராக இருந்திருக்க வேண்டும்.
பேர்டன் ரஸ்ஸல் எழுதிய யூத-அரபு உறவு என்னும் பதிவினை தமிழில் மொழிபெயர்த்தவர் அ.ந.க. அரபு உலகத்தில் தீராத பகையை அக்காலத்து அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூமனும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த வின்சன் சேர்ச்சிலும் உலக யுத்தத்தில் கிட்லரை வீழ்த்தவும் யப்பானிய அரசை சீரழிக்கவும் உதவிய வெக்னர் என்னும் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரேல் என்னும் நாட்டை அரபிய மக்களின் இடத்தில் வழங்கி இன்றளவும் இவ்விரு இனங்களுக்குமிடையே தீராத பகையை ஏற்படுத்தக் காலாக இருந்தவர்களை வெளிச்சம்போட்டுக் காட்ட இதனை மொழிபெயர்த்தார் என்றால் அவர் உலக சமுதாயத்தையும் கருத்திற் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை.
அத்தோடு வெட்ட வெட்டத் தளைக்கும் இனமாக யூதர்களைக் காட்ட அவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ரோமர்களால் அனுபவித்த கொடுமைகளையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை. இனம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் முரண்பாடு இல்லாதவராக தன்னைக் காட்டிக்கொண்ட அ.ந.க.அவர்கள் தமிழினத்தின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இனவிடுதலை முக்கியமானது என்பதனை எடுத்துக்காட்டியுள்ளார். முற்போக்குச் சிந்தனைகளால் கவரப்பட்ட அ.ந.க அதனில் நின்றும் இம்மியளவும் பிசகாது அனைத்துத் தரப்புப் பத்திரிகைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளமைக்கு அனைத்து மக்களும் இவற்றைப் படிக்கவேண்டும் என்பதற்காகவே என்பதையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். இதற்கு அவரது பரந்த நோக்மே காரணமாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.