- எழுத்தாளர் 'ஈழக்கவி' ஏ. எச். எம். நவாஷ் -
ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.
1980களிலிருந்து கவிதை எழுதிவரும் ஈழக்கவியின் ஏவாளின் புன்னகை, இரவின் மழையில் ஆகிய கவிதைத் தொகுதிகள் இவரை குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவர் என நிறுவியுள்ளன. விமர்சகர், ஆய்வாளர் என்ற வகையில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் விரிவாகவும், ஏராளமாகவும். எழுதியுள்ளார். ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு, பிரமிள் கவிதைகள் ஒரு நுண்ணிய உசாவல், அழகியல் மெய்யியல் ஆகிய இவரது நூல்கள் இவ்வகையில் முக்கியமானவை.
ஈழத்துத் தமிழறிஞர்களான பேராசிரியர்கள் சுவாமி விபுலாநந்தர், தனிநாயகம் அடிகளார், க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், ம. மு. உவைஸ் முதலியோர் பற்றிய ஈழக்கவியின் சிறு நூல் வரிசை இவர்கள் பற்றிய பயனுடைய அறிமுகமாகவும், ஆய்வாகவும் மதிக்கத்தக்கது.
இவ்வரிசையில், இப்போது ஈழத்தின் முக்கியமான மெய்யியல் அறிஞர்களுள் ஒருவரும், கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் எம். எஸ். எம். அனஸின் சமீபத்திய நூலான மெய்யியலின் பெருங்கனவு சோகரடீஸ் பற்றிய ஒரு அறிமுக மதிப்பீடாக ஈழக்கவியின் இந்நூல் வெளிவருகின்றது. ஒரு நம்பகமான சுற்றுலா வழிகாட்டிபோல பேராசிரியர் அனஸின் கனதியான இந்நூலுக்குள் வாசகரின் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் ஈழக்கவி. மூல நூலை வாசிக்கமுன் ஈழக்கவியின் இந்த அறிமுகத்தை வாசிப்பது வாசகரின் வாசிப்புப் பயணத்தை இலகுவாக்கும் என்று நம்பலாம். நண்பர் ஈழக்கவிக்கு என் பாராட்டுகள்.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.