தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர்.
தேவகாந்தன் எழுதி இதுவரை 12 நாவல்கள் வெளிவந்திருக்கின்றன, இவற்றில் லங்காபுரம், கதாகாலம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கனவுச் சிறை, கலிங்கு ஆகியன அரசியல் பின்புலத்தினைக் கொண்டு கதைசொல்லும் பிரதிகளாக அமைகின்றன. ஒடுக்குமுறைகள் குறித்தும் அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் பேச்சுக்களிலும் எழுத்துகளிலும் மிகவும் அரிதாகவே நேரடியான தனது கருத்துகளைப் பதிவுசெய்திருக்கும் தேவகாந்தனின் நாவல்களில் பெரும்பாலானவை ஒடுக்குமுறைகள் குறித்த கறாரான பார்வைகளையும் பதிவுகளையும் கொண்டவையாக இருப்பது குறிப்படவேண்டியது. இவற்றில் லங்காபுரம், கதாகாலம் ஆகியன முறையே இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மறுவாசிப்புகளாக அமைகின்றன. யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கனவுச் சிறை, கலிங்கு ஆகியன ஈழத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தமிழர்களின் போராட்டங்களைக் கருவாகவும் களமாகவும் கொண்ட Triology ஆகச் சொல்லத்தக்கன. இந்நாவல்களை இவ்வடிவில் எழுதவேண்டும் என்கிற திட்டமிடலும் எழுதுவதற்குத் தான் திட்டமிடவில்லை என்று தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார் என்றாலும் இந்த மூன்று நாவல்களும் ஒருமித்து 1800 – 2015 வரையான நீண்ட காலப்பகுதிகள் வரையான மக்களின் கதையைச் சொல்கின்றன.
இந்த Triology இன் முதலாவது நாவலாக யுத்தத்தின் முதலாம் அதிகாரம் அமைகின்றது. இரண்டாவது பகுதியான கனவுச் சிறை, தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு எதிராக இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தையும் இயக்கங்கள் உருவாகி பின்னர் அவை தம்மிடையே முரண்பட்டுச் சிதைந்துபோன வரலாற்றையும் கூறி, ஈழபோராட்டத்தின் ஆன்மாவின் வீழ்ச்சியைச் சொல்கின்றது. Triology இன் மூன்றாவது பகுதியான கலிங்கு, சமாதான காலத்திலிருந்து மீண்டும் யுத்தம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடங்கி ஈழத்தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக முடிவுக்கொண்டுவரப்பட்டதையும் அதற்குப் பின்னராக நிகழ்ந்த சமூக வீழ்ச்சியையும் சொல்கின்றது. இந்த மூன்று நாவல்களிலும் இடம்பெறும் உரையாடல்கள் முறையே இட து சாரிய / மார்க்சிய, தேசிய வாத, ஆன்மிகச் சட்டகங்களில் நிகழ்வதுவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு அம்சமாகும்.
யுத்தத்தின் முதலாம் அதிகாரம் நாவல் பற்றிக் குறிப்பிடும்போது, இது யுத்தத்தின் கதை அல்ல, யுத்தம் உருவானதன் கதை என்று குறிப்பிடுகின்றார் தேவகாந்தன். 1800 ஆம் ஆண்டளவில் மெல்ல மெல்ல தன்னெழுச்சியான முனைப்புகளினால் உருவான குடியேற்றங்களின் தோற்றம் தொட்டு, பின்னர் சமூக வளர்ச்சியுடன் சேர்ந்துக் குடியேற்றங்களும் பரவலாகிச் செல்லுகின்றதையும் அதே சமயம் திட்டமிட்ட முறையில் பேரினவாத அரசினால் நடைமுறைப்படுத்த குடியேற்றத் திட்டங்களும் பின்னாளில் அதிகரித்துச் செல்கின்ற காலப்பகுதியையும் இந்த நாவல் கொண்டுள்ளது. இந்நாவலின் முதலாம் பதிப்பு 2003 இல் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. கோ. கைலாசநாதன் வரைந்த அதன் அட்டைப்பட ஓவியம் குறித்து நூலில் “வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட குருவி” என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார் தேவகாந்தன். உண்மையில் இந்நாவலே வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட மனிதர்களின் கதைதான். வெவ்வேறு காரணங்களுக்காக புதிய இடங்களுக்குச் சென்று அங்கே வெவ்வேறு தொழில்களைச் செய்து நிலைபெற்ற மக்கள் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற கதைகளின் தொகுப்பாக யுத்தத்தின் முதலாம் அதிகாரம் அமைகின்றது. குறிப்பாக 1950கள் முதல் ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டத்தில் ஒன்றிணைவதை இந்நாவல் பதிவுசெய்திருக்கின்றது. “சங்கானை, அச்சுவேலி, சுன்னாகம், பருத்தித்துறை, கரவெட்டியென்று வடமாகாணத்தின் பல்வேறு இடங்களில் பரவிவரும் சாதிக் கலவரங்களினால் ஒரு வெடிச் சத்தம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த காலம் அது, அத்துடன் மந்துவில் பக்கமாயும் எழுந்திருக்கின்றது” என்று சாதியத்துக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் தொடக்கம் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இன்றைய வாசிப்பும், சொற்களின் பிரயோகம் பற்றிய பிரக்ஞையும் “சாதிக் கலவரம்” என்று குறிப்பிடுவதை சாதியத்துக்கெதிரான போராட்டம் என்று குறிப்பிட்டிருக்கலாம் என்று என்பதையும் சேர்த்தே வாசித்துக்கொள்கின்றன.
சாதியத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்ட அன்றைய காலத்திலும் “காலப்போக்கில் எல்லா சாதீய ஏற்றத் தாழ்வுகளும் மறைந்துவிடுமென்று அவர் உளமார நம்பின” கதாபாத்திரங்கள், சாதிய ஒடுக்குமுறையை பாத யாத்திரைகள், சட்டப் போராட்டங்கள் போன்றவற்றின் மூலமாக ஒழித்துவிடலாம் என்றும் நம்பிக்கொண்டுதான் இருந்திருக்கின்றன. புரட்சிகரமான வேலைத்திட்டம் பற்றிய தொலைநோக்குப் பார்வையொன்று இல்லாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் சட்டரீதியான போராட்டங்களும் பாத யாத்திரை போன்ற அகிம்சாவாத அணுகுமுறைகளும் போராட்டக் காரர்களைத் தணிவிப்பதற்கான உபாயமாகவே அமைந்துவிடும் என்பதையே வரலாறு எமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றது.
அதேசமயம் சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தின் வன்முறையை ஆயுதமாக எடுத்த ரத்தினம் என்பவர் கொலைசெய்யப்படுகின்றபோது அதுகுறித்த சீனச் சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையைப் பற்றி உரையாடும் ரகுநாதன், தேவராசனிடம் பின்வருமாறு குறிப்பிடுகிறான் “தனிமனிசரை அழிக்கிறது மூலம் சமூக விடுதலையை வெண்டெடுக்க ஏலாதெண்டு அது (கட்சியின் கருத்துநிலை) சொல்லுது. எந்தச் சமூகக் கொடுமையையும் மக்களின்ர போராட்டத்தாலைதான் அழிக்க ஏலுமெண்டது அதுகின்ர வாதம். அப்படியிருக்கேக்கை, தனிநபர் அழிப்பிலை நம்பிக்கையும், கட்சித் தொடர்பு ஈடுபாடு அனுதாபம் எண்டு எதுவும் இல்லாதிருந்த ரத்தினத்தின்ர கொலை, தன்ரை சமூகத்தின்ரை நலனிலை அக்கறையுள்ள சராசரிக்கும் கொஞ்சம் கூடிய ஒரு தனி ஆளின்ர கொலையாய் மட்டுமாயே இருக்க ஏலும். கட்சி இவயளப் பெரிய தியாகிகளாய்க் கொண்டாடியிடாது”.
இந்த நாவலில் வருகின்ற ரகுநாதனுக்கும் தேவராசனுக்குமான உரையாடல்கள் நாவலின் உயிர்ப்பான பகுதியாக அமைவதுடன் அன்றைய சமூக அரசியல் செல்நெறியை எடுத்துச் சொல்வதாகவும் அமைகின்றன. குறிப்பாக இயக்கமொன்றைக் கட்டியெழுப்புதல், அமைப்பாக்கம் ஆகிய நோக்குகளுடன் செயற்படுகின்ற ரகுநாதன், சந்தியாப்பிள்ளையுடன் இணைந்து தன் நண்பன் தேவராசனுடன் செய்கின்ற உரையாடலை இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ரகுநாதன், சந்தியாப்பிள்ளை – தமிழரசுக் கட்சிச் சார்பான கருத்துநிலையுடைய தேவராசன் என்ற பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது நல்லதோர் வாசிப்பைத் தருகின்றது. மேலும் ஈழத்தில் தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டம் வெற்றிகரமாகவும் காத்திரகரமாகவும் அமைவதற்கான காரணிகளில் ஒன்றாக வெவ்வேறு அரசியல், கருத்துநிலை, வர்க்க, சாதியப் பின்புலங்களைக் கொண்டவர்களை ஒன்றிணைத்து ”தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” உருவாக்கப்பட்டதைச் சொல்வதுண்டு; நாவலில் சந்தியாப்பிள்ளை தேவராசனிடம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,
“எங்கட சமூக நிலையைப் பற்றியும் நீர் கொஞ்சம் அக்கறைப்பட வேணும், கெதியில தீண்டாமைக்கெதிரான வெகுஜன இயக்கமெண்டும் ஒரு அமைப்பு துவங்க இருக்கு. எந்தச் சாதியிலை இருக்கிறவையும் இதில சேரலாம். மனச்சாட்சி இருக்கிறவைக்கான ஒரு அமைப்பு இது. இப்ப பாரும் உங்கட அரசியல் ஈடுபாடு தமிழரசுக் கட்சியோட என்றாலும் சாதிக் கொடுமைக்கெதிராய் இந்த அமைப்பிலை தாராளமாய்ச் சேந்து உழைக்கலாம். உங்கட சாதி ஆக்களை இந்த விஷயத்தில நெருங்கவே ஏலாமல் இருக்கு. எனக்கெண்டால் ஏனெண்டு விளங்கேல்லை”.
இங்கே சந்தியாப்பிள்ளை குறிப்பிடுகின்ற “உங்கட சாதி ஆக்களை இந்த விஷயத்தில நெருங்கவே ஏலாமல் இருக்கு” என்பது மிகவும் கனதியான கூற்று, ஏன் நெருங்கவே ஏலாமல் இருக்கு என்பது பற்றிய தேடலே ”சமூக சலுகைகள்” பற்றிய புரிதலையும் பெரியாரியம் நோக்கிய நகர்வையும் எனக்கு ஏற்படுத்தியது.
நாவலில் இடதுசாரி நிலைப்பாடு கொண்ட, ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் சமூக விடுதலைக்காகச் செயற்படுகின்ற பாத்திரமாக ரகுநாதனின் பாத்திரம் உள்ளது. பன்றித் தலைச்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலைப் பாத்திரம் வகித்தவர்களில் ஒருவனாகவும் ரகுநாதன் இருக்கின்றான், அதேநேரம் இன ஒடுக்குமுறை குறித்தும் தெளிவான நிலைப்பாடுடையவனாக அவன் இருக்கின்றான். நாவல் முழுவதும் சிறந்த கரப்பந்து (Volleyball) விளையாட்டு வீரனாகக் குறிப்பிடப்படும் ரகுநாதன், தனது கருத்துநிலைக்காகவும் செயற்பாடுகளுக்காகவும் இளைஞர்களைத் திரட்டுவதற்கா உபாயங்களில் ஒன்றாக விளையாட்டையும் விளையாட்டுச் சங்கங்களையும் பயன்படுத்துகின்றான். நாவலின் பிற்பகுதியில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் செயற்பாடுகள் ஒடுக்கப்பதற்குப் பின்னரான நிலைமையில் தேவராசனுக்கும் ரகுநாதனுக்குமான பின்வரும் உரையாடல் மிகவும் நுட்பமாக அவதானிக்கவேண்டியது,
ரகுநாதன்: அண்ணா உயிரோடை இருக்கேக்கை இதை நீ சொல்லியிருந்தால் நானும் கேட்டிட்டு அசண்டையீனமாய்த்தான் விட்டிட்டு இருந்திருப்பன், சங்கம், கட்சி, கொள்கையெண்டு எவ்வளவோ உழைக்க எனக்கு வெறி இருந்தது அப்ப,
தேவராசன்: இப்ப
ரகுநாதன்: அந்த அளவுக்கு இல்லை, வொலிபோல் ரீமில கனபேர் இல்லை, என்ர வயசிலையுள்ள பாதிப்பேர் ஊரிலை இல்லை, மிச்சம் பாதிப்பேருக்கு எதுவும் அக்கறை இல்லை, நான் மட்டும் தனியாய் நிண்டு கொடி பிடிக்க ஏலுமோ இனி
என்ற இந்த உரையாடல், பிரச்சாரம் செய்வதற்கும் ஒன்றிணைப்பதற்கும் அமைப்பாக்குவதற்கும் விளையாட்டுச் சங்கம், சன சமூக நிலைய போன்ற சமூக அமைப்புகள் இயங்கவேண்டியதன் அவசியத்தைப் புலப்படுத்துவதாகவும் அமைகின்றது. அதுபோல, நாவலில் இதற்கு முன்னதாக தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மீது ஆதிக்க சாதியினரால் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டபோது, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினர் அமைப்பை மௌனித்துவிட்டு அதேநேரம் தாம் சிதறிச் சிதைந்துவிடாமல் ஒரு வலையமைப்பைப் பேணுவதற்கு எவ்விதம் சனசமூக நிலையங்களும் விளையாட்டுச் சங்கங்களும் உதவின என்பதுவும் “குருந்தடி, மதகடிப் பகுதிகளிலிருந்த வாலிபர்கள் சனசமூக நிலையம், வாசிகசாலை, விளையாட்டுக் கழகம் என்பவற்றின் செயற்பாடுகளும் மட்டும் தங்களை அடக்கிக் கொள்ளவேண்டியதாயிற்று” என்பதாற் புலனாகின்றது.
ஈழத்து எழுத்தாளர்களில் அரசியற் கருத்துகளை பெரிதாகத் தெரிவிக்காத தேவகாந்தன் இத்தனை நுட்பமான அரசியல் நாவல்களை எழுதியிருக்கின்றார் என்பது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கின்றது. அவருடனான ஆரம்பகால சந்திப்புகளில் கோப்பிக்கடைகளில் இரண்டடி நீளமும் இரண்டடி அகலமும் கொண்ட மேசையில் எதிர் எதிராக இருந்தபடி நீண்டநேரம் இருந்து உரையாடத் தொடங்குவோம்; ஆனால் அவர் பேசுவது எதுவும் கேட்காது என்று சொல்லுமளவு மிக மிக மெல்லிய குரலில் பேசுவார் தேவகாந்தன், ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி அவருக்குப் பக்கத்தில் வந்தமர்ந்து அவர் பேசுவதைக் கேட்பேன், அப்போதும் கூட உன்னிப்பாக க் கேட்டால்தான் அவர் பேசுவது கேட்கும்; அப்படியான தேவகாந்தனின் நாவல்கள் அரசியலை அழுத்தமாகப் பேசுவதாக அமைந்திருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. நாவலில் ஓரிடத்தில் பின்வருமாறு வரும்:
“(தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் போராட்டத்தால்) வேறொரு எதிர்பாராத நன்மை விளைந்தது. அதனை நான் வெகுவாய்ச் சிலாகிக்கின்றேன். போராட்டத்துக்கான தீரத்தை அது தமிழ் மக்களிடையையே விளைத்தது”
சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் தந்த தீரமென்கிற அக்கினிக் குஞ்சினை நாம் சரியாகக் கையாளாமல் எங்கோ தூக்கி எறிந்துவிட்டோம் என்றே இப்போது நினைக்கத் தோன்றுகின்றது.
தேவகாந்தனின் எழுத்துகள் குறித்த முன்னைய கட்டுரைகள்
நன்றி - https://arunmozhivarman.com