
- எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் 'நெய்தல் நடை' சிறுகதைத்தொகுப்புக்காக எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய முன்னுரை! -
நடைமுறை வாழ்வின் ஒவ்வொரு அடுக்குகளையும் நேர்மையுடன் பதிவு செய்பவை படைப்பிலக்கியங்கள். ஒரு படைப்பாளி எழுதும் போது உணரப்படும் விடயங்களாக உள்வாங்கல், நோக்கம், செயல், வெளிப்பாடு என்பன இருக்கின்றன. எதை எழுத வேண்டும் என்ற தீர்மானம் உறுதியான பின்னரே வார்த்தைகள் பிறக்கின்றன. பிரச்சனைகளோடும் பல கேள்விகளோடும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்கின்ற சமூகம் இது. அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை அனுபவிக்கும் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்களை அடையாளம் காட்டுவதாகவே இந்த படைப்பிலக்கியங்கள் அமைகின்றன. அதனால் ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்துக்கானதாக மாறிக் கொள்கின்றன. அந்த வகையில் நேர்மையுடன் படைக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் வரவேற்கத்தக்கதே.
சமீப காலமாக தனது எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகில் கவனம் பெற்று வருபவர் ரஞ்ஜனி சுப்பிரமணியம். மருத்துவராக பணி புரிந்த இவர் தனது ஓய்வுக் காலத்தின் பின்னரே எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்தார். புனை கதைகளுடன் கட்டுரை, திறனாய்வு என்று பல துறைகளிலும் தன் பங்களிப்பை வழங்கி வருகிறார். நல்ல வாசிப்பாளர். சமூகம் பற்றியும் சக மனிதர்கள் பற்றியும் ஆழ்ந்த நேசிப்பு உள்ளவர். அவருடனான உரையாடல்களில் இந்த நேசிப்பின் வெளிப்பாட்டை உணர்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அதிக காலங்கள் இலங்கையின் தென் பகுதிகளில் வசித்தவர். பல இன மக்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தவர். கனிவும் கருணையும் இயல்பெனக் கொண்ட இவருக்கு பொருத்தமாக கிடைத்த மருத்துவத் தொழில், மனிதர்களுடன் அதிக நேரம் செலவிட இவருக்கு வாய்ப்பாக அமைந்தது. இன மத பேதம் பார்க்காமல் மருத்துவப் பணியை செவ்வனே செய்யவும் முடிந்தது.
இதுவரை இவர் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளைத் தொகுத்து “நெய்தல் நடை”எனும் தலைப்பில் ஜீவநதி பதிப்பகம் இந்நூலை வெளியீடு செய்திருக்கிறது. 2022 ம் ஆண்டு இவரது முதலாவது சிறுகதையான “அன்றொருநாள்” ஞானம் சஞ்சிகையில் வெளிவந்தது. இவருடைய முதலாவது சிறுகதையே இலக்கிய ஆர்வலர்களிடையே கவனம் பெற்றுக் கொண்டது என்றே சொல்லவேண்டும். காலமாற்றம் தமிழ் அடையாளத்தையே மாற்றிவிட்ட நிலமையைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற வலியை பெருமூச்சாக வெளிப்படுத்தியிருப்பார். தான் இளம் வயதில் பணிபுரிந்த இடத்தைப் பல வருடங்கள் கழித்து போய் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்ல ஒரு கல்விக் கூடத்தின் அடையாளம் கூட மாறிப்போன போது ஏற்படுகின்ற ஏக்கப் பெருமூச்சு அது. அதை வார்த்தைகளில் கோர்த்துத் தந்த விதம் அவரை ஒரு சிறந்த படைப்பாளியாக நிலை நிறுத்தப் போதுமானதாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து இவரது எழுத்துக்கள் பல சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணைய ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாகின. அவ்வப்போது இவரது கதைகளை படித்திருந்தாலும் இத்தொகுப்பின் பன்னிரண்டு கதைகளையும் ஒருசேரப் படிக்கும் போது ஏற்பட்ட உணர்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு வாழ்க்கை முறைகள், பலதரப்பட்ட மனிதர்களின் அறிமுகம் ….
இந்த மனித மனங்களுக்குள் உள்ளுறைந்து போயிருக்கும் உணர்வுகளை உருவி எடுத்து வார்த்தைகளாக்கித் தந்திருக்கிறார். அவை சமகால வாழ்வின் பிம்பங்களாக பிரதிபலிக்கின்றன.
இவரது பார்வை விசாலித்தது. பிற மனிதர்கள் மீது பரிவு கொண்டது. பிற சூழல்களின் விளைவுகளை மனம் உணரும் தருணங்களை வெளிப்படுத்தும் விதம், இவர் ஒரு மருத்துவராகவும் ஆழ்ந்த சமூக நேசிப்பாளராகவும் இருப்பதால்தான் சாத்தியமாகிறதோ என்று எண்ண வைக்கிறது. தனக்கென ஒரு கதை சொல்லல் முறைமையை இவர் கையாள்கிறார். அந்த முறைமை ஒவ்வொரு பாத்திரங்களுடனும் நம்மை ஒன்றிப் போகச் செய்யும் அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. ஆழமான உணர்வுப் பரிமாற்றங்களை நமது மனதுக்குள் நிகழ்த்துகிறது. வாழ்வில் விரியும் மனித நேயத்தின் தவிப்பை பல கதைகளில் காண முடிகிறது. ஒப்பனை இடப்படாத, அலங்காரங்களால் பூசப்படாத இயல்பான மனிதர்கள் உலா வரும் களமாகப் பார்க்க முடிகிறது. நாள் தோறும் நாம் பார்க்கும் மனிதர்கள்தானே என்று கடந்து போக முடியாதவாறு நம்மைக் கட்டிப் போட்டு வைக்கிறது.
இக்கதைகளின் பேசு பொருளாக மனிதர்களின் அலைவுற்ற வாழ்க்கை இருக்கிறது. ஏழையோ பணக்கார்ரோ வாழ்வோடு முட்டி மோதி வாழ வேண்டிய சூழல்…
பொய் சொல்லி பிச்சை கேட்கும் மனிதர்களை அறச்சீற்றத்தோடு சாடும் இவர் இனவேற்றுமை காட்டாது சாட்சி சொல்ல முன்வரும் மனிதரையும் அடையாளம் காட்டுகிறார். மருத்துவரின் பார்வையோடு அணுகிய இரண்டு கதைகள் இருக்கின்றன. வசதி படைத்த பெண்ணுக்கும் வசதியற்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலின் பின்னர் இருவரும் எடுக்கும் முடிவுகளின் தன்மையில் இருக்கும் வேறுபாடு, அதில் உள்ள யதார்த்தம் எம் மனங்களில் வந்து அறைகிறது. பதில் சொல்ல கடமைப்பட்ட இச்சமூகத்திற்கான கேள்வியாகவும் அமைகிறது.
ஒரு மருத்துவரின் அணுகுமுறை ஏழைகளுக்கும் நெருக்கமாக இருக்கவேண்டிய அவசியத்தை இன்னொரு கதை பேசுகிறது. அந்த ஏழைப் பெண்ணுக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் அன்பும் அக்கறையுமான இணைப்பை அற்புதமாக சித்தரித்த கதை இது. இறுதியில் “ உங்க கைகளை ஒரு தடவை மோந்துக்கிடவா ..” என்று அந்த ஏழைப்பெண் கேட்கும் போது வாசகமனம் உடைந்து போகிறது. உணர்வின் நெகிழ்ச்சியான வெளிப்பாடு அது. கலங்கிய முகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் துயரை புரிந்து கொண்ட மனதின் வெளிப்பாடுகளை வார்த்தைகளில் பார்க்கமுடிந்தது. அதே சமயம் வாழ்வின் இயல்பான தருணங்களை நகைச்சுவையாகவும் எழுத இவரால் முடிகிறது. . யதார்த்தமான ஒன்றை மிக இலகுவாக சொல்லிச் செல்வது. உரையாடல் வழி அது நிகழ்கிறது.
பெண் பற்றிய இவருக்கான புரிதல் தனித்துவமானது. எந்த சந்தர்ப்பத்திலும் தோற்றுப் போகும் பெண்களை இவர் வடிவமைப்பதில்லை.. தெளிவோடு வாழ்வை நகர்த்திச் செல்லும் பெண்களையே அதிகம் அறிமுகம் செய்கிறார். அதே சமயம் பேச்சற்று நிற்கும் பெண்களின் பிரச்சனைக்குக் கூட இச்சமூகமே காரணம் என்று அறைந்து கூறுகிறார். பெண்களுக்கான பிரச்சனைகளை உரையாடும் களமாகவும் ஒரு கதையை வடிவமைத்திருக்கிறார். இருவிதமான மனநிலையிலிருக்கும் ஆண்களின் பார்வையிலும் இது பேசப்படுகிறது.
“ பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான பரப்புரையோ அரசியலோ அல்ல. இரு பாலாரும் தத்தமது வலிமைகளையும் பலவீனங்களையும் நன்கு புரிந்து பரஸ்பர நம்பிக்கையுடன் விட்டுக் கொடுத்தும் தட்டிக் கொடுத்தும் சமமாக வாழ்வது. வரையறைகள் தனி மனித ஒழுக்கம் இரு பாலாருக்கும் சமமாக வேண்டும். அவளது உணர்வுகளையும் வலிகளையும் ஒரு பெண்ணின் மனதைக் இருந்து ஆண்கள் நீங்கள் புரிந்து கொள்ளுங்களேன். “
இது கதையின் ஆண் பாத்திரத்தை நோக்கி அல்ல முழு ஆண்களையும் நோக்கி பைரவியால் சொல்லப்படுகின்ற வார்த்தைகள். பெண்களின் உணர்வுகளை ஆண்களும் மதிக்கவேண்டும் என்ற ஆதங்கம். புரிந்து கொள்ளவேண்டும் என்ற தவிப்பு. இது கல்விப் பின்புலமோ பொருள் வசதியோ அற்ற எளிமையான, வலிமையற்ற பெண்களுக்குமான குரல்.
இவருடைய எழுத்து நடை அழகானது. புதிய புதிய வார்த்தைகளைக் கோர்த்து எழுதப்பட்ட சரளமான நடை. எழுதும் ஒவ்வொன்றும் நம் முன்னே காட்சிகளாக விரிந்து கொள்கிறது. தொய்வற்ற வாசிப்புக்கு அது ஏற்றதாய் அமைகிறது. மனித உறவுகளின் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் அழகிய தருணங்களை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். இது மனங்களுக்கிடையேயான புரிதலை, அதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைகிறது. எழுத்தின் நோக்கம் சொல்லுகின்ற வித்த்தில்தான் நிறைவு கொள்கிறது. தான் உணர்ந்ததை வாசக மனதிற்கு கடத்துவதில்தான் வெற்றி பெறுகிறது. இவருடைய கதைகள் நம் மனதோடு தொடர்த்து உரையாடிக் கொள்கின்றன. அதற்கான இவரது உழைப்பு மிக அதிகம். புதிய களம் ஒன்றைத் தெரிவு செய்யும் போது அதற்கான நடைமுறைகளை நுட்பமாக உணர்ந்து உண்மைத்தன்மை மாறாது எழுதுகிறார். நெய்தல்நடை இதற்கு நல்ல உதாரணம். வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தந்த கதை. மனிதமனம் உணர்வுகளால் நிரம்பியது. பழகும் ஒருவரை எப்படி, எந்த உறவில் ஏற்றுக் கொள்வது என்பதை நல்லுணர்வோடு எழுதப்பட்ட கதை. கடலின் அலைகளோடு பேசிக்கொண்டு கரையோரம் நாமும் பயணித்துச் சென்றது போன்ற அனுபவத்தை ஏற்படுத்திய கதை.
எந்தப் பக்கச் சார்புமின்றி தனக்கு அறிமுகமாகும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலையும் அதன் முரண்களையும் இயல்பாக எழுத்தில் கொண்டு வருகிறார். இவை மெய்மையின் தரிசனங்கள். அதை எங்கும் இவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. இளம் வயதில் தவறு என்று தெரியாமல் செய்த பிழையை உணர்ந்து பிராயச்சித்தம் செய்ய தீர்மானிக்கும் மன உணர்வை எழுதும் போது ஊடுருவி நிற்கு மனிதநேயம்..அது ஒரு ஏழைக் குழந்தையின் வளர்ச்சிக்குப் படிக்கட்டாய் மாறும் விதத்தை அழகாக சொல்லியிருப்பார். மனிதர்களுக்கிடையே உள்ள இயல்பான பண்புகளை வெளிப்படுத்த இயலாமல் புறச்சூழல் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களும் அமைந்து விடுவதுண்டு. அதற்குள்ளிருந்து மீண்டு எழுவதில் அவர்களது போராட்டம் ஆரம்பமாகும். அத்தகைய சந்தர்ப்பங்களே நிமிர்ந்து வாழ மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கும். அந்த நம்பிக்கையைத் தருபனவாக இருக்கின்றன இவரது எழுத்துக்கள். அந்த நம்பிக்கையை வாசகரும் உணரும் விதமாக எழுதுவதுதான் இவரது பலம் என்பேன்.
ஈழத்து இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்கும் எழுத்துக்களை இவர் தொடர்ந்தும் தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அதற்கு இவரது முதலாவது தொகுதியான “நெய்தல் நடை” சான்றாக அமைகிறது. இலக்கிய வாசகர்களிடையே கவனம் பெறும் தொகுதியாகவும் இது இருக்கும் எனவும் நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









