முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இல்பொருள் உவமை அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் இல்பொருள் உவமை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

இல் பொருள் உவமை அணி

உலகில் இல்லாத, நடைபெற முடியாத ஒன்றினை உவமையாகக் கொண்டு ஒரு பொருளை விளக்கிக் காட்டுவது இல் பொருள் உவமை அணி எனப்படும்.

தேய்வுஇலா முகமதி

கைகேயியிடம் கூனி வந்து இராமனுக்கு முடிசூட்ட இருப்பதை கூறுகிறாள். உடனே கைகேயியின் அன்பு எனும் கடல் ஆரவாரித்தது. தேய்வில்லாத முகமாகிய திங்கள் ஒளியுடன் விளங்கி தோன்றியது. ஞாயிறு முதலிய சுடர்களுக்கு எல்லாம் தலைமை என்று சொல்லத்தக்க அளவு ஒளி வீசும் பொன்மணிமாலை ஒன்றை கைகேயி, கூனிக்குக் கொடுத்தாள்.

“ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வுஇலா முகமதி விளங்கித் தேசுர “
(மந்தரை சூழ்ச்சிப் படலம் 145)

இதில் தேயாத மதி என்று புலவர் பாடியுள்ளார். தேயாதமதி என்பது உலகில் இல்லாத ஒன்று. ஆகவே இப்பாடல் இல் பொருள் உவமையாகும்.

கமலம் பூத்த தொடுகடல்

இராமன், சீதை திருமணத்தைக் காண அயோத்தியிலிருந்து அனைவரும் மிதிலை நோக்கிச் செல்கின்றனர். பொன் வளையல்கள் அணிந்த மகளிர் கூட்டம் கிண்கிணிமாலை அணிந்த குதிரைக் கூட்டங்களில் சுற்றிலும் வருகின்றனர். இக்காட்சி தாமரைப் பூக்கள் மலர்ந்த கடல் அலை போல இருந்தது. கடலில் தாமரை பூக்காது.

“பொற்றொடி மகளிர் ஊரும் பொலன்கொள் தார்ப் புரவி வெள்ளம்
கற்றுற கமலம் பூத்த தொடுகடல் திரையின் செல்ல
கொற்ற வேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடுந்தேரில் போனான்”
(எழுச்சிப் படலம்755)

அலைகள் வீசுகின்ற கடலில் தாமரை மலர் மலராது. இவ்வாறு உலகில் நடவாத ஒன்றை உவமையாகக் கூறியுள்ளார். இப்பாடல் இல்பொருள் உவமையாயிற்று.

கார்க்கடல் கமலம் பூத்தது

வீடணனின் அறிவுரைகளை ஏற்காத இராவணன் அவனை வெளியே செல்லுமாறு கூற, வீடணன் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து இராமனைக் காண வருகிறான். இராமனை வானர வீரர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். இலட்சுமணன் கையில் வில்லுடன் இருக்கின்றான். வெண்ணிறமான குரங்குகள் சூழ்ந்து இருப்பது பாற்கடல் போலக் காட்சியளிக்கிறது. அதன் நடுவே இராமன் நிற்கிறான். அவருடைய கண், கால்கள் செந்நிறத் தாமரை மலர்களாக விளங்க, கருங்கடலில் தாமரை பூத்தது எனும் பொலிவோடு இராமன் நிற்கும் காட்சியை வீடணன் கண்டான் என்று கம்பர் கூறுகிறார்.

" மார்க்கடஞ் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்குகாப்ப
நாற்கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாமப்
பாற்கடல் சுற்ற விற்கை வடகரை பாங்கு நிற்பக்
கார்க்கடல் கமலம் பூத்ததுஎனப் பொலி வானைக் பண்டேன்"
(வீடணன் அடைக்கலப்படலம் 434)

கருங்கடலில் தாமரைப் பூக்காது. இவ்வாறு உலகில் நடவாத ஒன்றை உவமையாகக் கூறியுள்ளார். இப்பாடல் இல்பொருள் உவமையாயிற்று.

நாய் தர கொள்ளுஞ் சீய நல்லர

அங்கதன் இராவணனிடம், இராமனின் தூதனாகச் சென்றபோது அவனைத், தன் வசப்படுத்த இராவணன் முயன்றான். ஆட்சியைத் தருவதாக ஆசைக் காட்டினான். அதற்கு அங்கதன் ஒரு நாய் கொடுப்பதைச் சிங்கம் பெறாது என்று நடைபெற முடியாத ஒன்றைக் கூறினான்.

“வாய் தரத்தக்க சொல்லி என்னையுன் வசஞ் செய் வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்த அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானேயிதற்கினி நிகர்வே றேண்ணின்
நாய் தரக் கொள்ளுஞ் சீய நல்லரசு என்று நக்கான்”
(அங்கதன் தூதுப் படலம் 943)

உலகில் இல்லாத நடைபெற முடியாத ஒன்றினை பாடியுள்ளதால் இது இல்பொருள் உவமையணி ஆகும்.

தவ்வாது இரவும் பொலி தாமரை

சரவங்க முனிவரை அழைத்துச் செல்வதற்காக வந்த இந்திரன் குறித்து கூறும்போது, சிவந்த வேலினை உடைய அவ்வீரர் அந்த ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்த அந்த வேளையில் இரவு நேரத்தில் குவியாது மலர்ந்திருக்கின்ற தாமரை மலர்களைப் போலத் தனித்தனியே விளங்குகின்ற ஆயிரம் கண்களை உடையவனாகிய தேவர்களின் அரசனான இந்திரன் அங்கு வந்தான்.

“செவ் வேலவர் சென்றனர் சேறல் உறும்
அவ்வேலையின் எய்தினன் ஆயிரமாம்
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன்”.
(சரவங்கன் பிறப்பு நீங்கு படலம் 73)

சூரியனைக் கண்டபோது தாமரை மலரும். இரவில் குவியும் இயல்புடையது..இரவிலும் குவியாத தாமரை என்று உலகில் நடைபெறாத ஒன்றை உவமையாகப் பாடியுள்ளதால் இப்பாடல் இல்பொருள் உவமையாகும்.

கடல் ஒன்றினோடு ஒன்று மலைக்கவும்

இருவர் கண்களினின்றும் வெளிப்படும் தீயினைப் பற்றிக் கூறும்போது வாலி சுக்கிரீவர்கள் போரிடும் திறம், கடல்கள் ஒன்றோடொன்று போர் செய்தலையும், இந்நிலவுலகத்தைப் பாதுகாப்பதான மேருமலைகள் இரண்டு ஒன்றோடொன்று போர் செய்தலையும், கோபம் என்கின்ற குணமே இரண்டு ஆண் வடிவங்களைக் கொண்டு எதிர் எதிராய்ப் போர் செய்தலையும் காணாத நமக்கு இவ்வுலகத்தில் வலிமையுடைய வாலி சுக்கிரீவர்கள் செய்யும் கொடிய போருக்கு வேறு எந்த உவமையையும் கூறத் தெரியவில்லை. இப்பாடலில் இல்பொருள் உவமை அணி பயின்று வந்துள்ளது.

“கடல் ஒன்றினோடு ஒன்று மலைக்கவும் காவல் மேருத்
திடல் ஒன்றினோடு ஒன்றுஅமர் செய்யவும், சீற்றம் என்பது
உடல்கொண்டு இரண்டாகி உடற்றவும் கண்டி லாதேம்
மிடல் இங்குஇவர் வெந்தொழிற்கு ஒப்புஉரை வேறு காணோம்”
(வாலி வதைப் படலம் 275)

கடல்களும், மலைகளும் ஒன்றோடொன்று போரிடும்தன்மை என்பது உலகில் கிடையாது ஆனால் இத்தனை பெற்ற கடல்களும், மலைகளும் ஒன்றோடொன்று போரிட்டன போல் இருந்தது என்று உலகில் நடைபெறாத ஒன்றைக் கம்பர் பாடியிருப்பது இல்பொருள் உவமையாகும்.

வான்தனில் வரைந்தது

இராமன் மீது கொண்ட காமவெறியினாலே வருந்தி வெதும்புகின்ற மனமுடையவளான சூர்ப்பணகை, இராமனது ஒளி வீசும் அழகிய தோள்களில் தன் கண்களைப் பதித்தாள். ஆனால் பதித்த கண்களை நீக்கும் ஆற்றல் அற்றவளை ஆகாயத்தில் தீட்டப்பட்ட ஒரு பெண்ணின் ஓவியம் போல அசைவற்று நின்றாள்.

“வான்தனில் வரைந்தது ஓர் மாதவர் ஓவியம்
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல் தன்சுடர் மணித்தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்”
(சூர்ப்பணகைப் படலம் 244)

ஆகாயத்தில் வரைதல் என்பது நடவாத ஒரு செயலாகும். உலகில் நடைபெறாத ஒன்றினால் பாடல் பாடப்பட்டுள்ளதால் இப்பாடலில் இல்பொருள் உவமை அணியாக வந்துள்ளது.

எண் கையர்

கரன் வதைப் படலம் சேனைகளில் இருந்த அரக்க வீரர்களில் சிலர் எட்டு கைகளைப் பெற்றவர்கள். சிலர் ஏழு கைகளைப் பெற்றவர்கள். சிலர் நெருப்பைச் சொரிகின்ற கண்களை உடைய ஏழு முகங்களை உடையவர்கள். சிலர் எட்டு முகங்களை உடையவர்கள். வலிமையான கால்களை உடையவர்கள். அவர்கள் உயிர் உள்ள அனைத்தையும் தன் பெரிய கைகளால் வாரி எடுத்து வாயிலேப் போட்டு உண்பதில் விருப்பம் உள்ளவர்கள். அழிவில்லாதவர்கள். எட்டுகை, ஏழு கை என்பது இருப்பதற்கு இயலாது.

“எண் கையர் எழு கையர் ஏழும் எட்டும் ஆய்க்
கண் கனல் சொரி தரும் முகத்தர் காலினர்
வண் கையின் வளைத்து உயிர்வாரி வாயில் இட்டு
உண் கையில் உவகையர் உலப்பு இலார்களும்,”
(கரண் வதைப் படலம் 405)

ஒரு மனிதருக்கு ஏழுகைகள், எட்டுக்கைகள் இருப்பது என்பது இல்லாதது.

உலகில் நடைபெறாத ஒன்றினால் பாடல் பாடப்பட்டுள்ளதால் இப்பாடலில் இல்பொருள் உவமை அணியாக வந்துள்ளது.

மலை இனம் வருவது

கரன் வதைப் படலத்தில் கொலை செய்யும் தொழிலில் விஷத்தைப் போலக் கொதிக்கும் மனத்தை உடைய அரக்கர்கள் மண்ணின் மீதும், விண்ணின் மீதும் இடைவெளி இல்லாமல் நெருக்கம் ஏற்பட்டதால் பெரிய மலைகளின் மேல் மலைக் கூட்டங்கள் வருவது போல, மலை சிகரங்கள் தோறும் கால் வைத்துத் தாவிச் சென்றார்கள். ஒரு மலையின் மீது இன்னொரு மலை கூட்டம் வருவது என்பது இயலாது இல்லாத ஒன்றை உவமை கூறியுள்ளார்.

“நிலமிசை விசும்பிடை நெருக்கலால் நெடு
மலைமிசை இனம் வருவது போல் மலைத்
தலைமிசை தலைமிசை தாவிச் சென்றனர்
கொலைமிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார்”
(கரன் வதைப் படலம் 414)

குழையுறு மதியம் பூத்த கொம்பனால்

குழைகளைப் பெற்ற சந்திரனை ஒரு மலராகப் பெற்ற பூங்கொம்பு போன்றவளான சீதை மனம் தளர்ந்து வருந்த, ஒப்பற்ற வில்லை ஏந்திய மேருவைப் போன்ற இராமன், இலைகளால் வேயப்பட்ட பர்ணசாலையில் இருந்து மலைக் குகையில் இருந்து வெளியே எழுந்து செல்லும் ஆண் சிங்கத்தைப் போல மேகங்களைப் போல முழங்கும் கூறிய பற்களைக் கொண்ட அரக்கர்களைச் சந்திக்கக் கோபம் கொண்டு சென்றான்.

“குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர
தழையுறுசாலை நின்றும் தனிச்சிலை தரித்த மேரு
மழை என முழங்குகின்ற வாள்எயிற்று அரக்கர்காண
முழையின் நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான்”
(கரன் வதைப் படலம் 424)

சந்திரனை மலராகப் பெற்ற என்பது உலகில் நடைபெறாத ஒன்றினால் பாடல் பாடப்பட்டுள்ளதால் இப்பாடலில் இல்பொருள் உவமை அணியாக வந்துள்ளது.

முத்தலைக் குரிசில்

பெரிய சேனையை உடையவனும், அளவில்லாத ஆற்றலை உடையவனும், பொன்னாலான முடியை உடையவனும் கூறிய நுனியை உடைய அம்புகளால் மழை பெய்கின்ற வில்லை உடையவனும், மூன்று கண்களை உடைய சிவனது கையில் உள்ள சூலம் போன்ற தோற்றத்தை உடையவருமான மூன்று தலைகளைப் பெற்றுள்ள திரிசரன் எனும் தலைவன் அங்கு வந்தான். மூன்று தலை இருப்பது என்பது இயலாத காரியம்.

“அத் தலைத் தானையன் அளவு இல் ஆற்றலன்
முத் தலைக் குரிசில் பொன்முடியன் முக்கணான்
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான்
வைத் தலைப் பகழியால் மழை செய் வில்லினான்”
(கரன்வதைப் படலம் 472)

உலகில் நடைபெறாத ஒன்றினால் பாடல் பாடப்பட்டுள்ளதால் இப்பாடலில் இல்பொருள் உவமை அணியாக வந்துள்ளது.

தாமரைப் போல் கரு ஞாயிறு

இந்திரன், இராமனைக் கண்டு துதித்தான். தேவர்களின் அரசனான இந்திரன் அந்த இடத்தில் காண்பதற்கு அரிய நான்கு வேதங்களின் கனி போன்றவனான இராமனைத் தாமரையைப் போலும் கண்களைப் பெற்ற கருப்பு கதிரவனைக் காண்பது போலத் தன்னுடைய ஆயிரம் கண்களாலும் பார்த்தான்.

“கண் தாம் அவை ஆயிரமும் கதுவக்
கண் தாமரைப் போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியின்
கண் தான் அரு நான் மறையின் கனியை”
(சரவங்கன் பிறப்பு நீங்கு படலம் 95)

கருப்பு சூரியன் என்பது உலகில் இல்லாத ஒன்று. உலகில் நடைபெறாத ஒன்றினால் பாடல் பாடப்பட்டுள்ளதால் இப்பாடலில் இல்பொருள் உவமை அணியாக வந்துள்ளது.

மலை மலையைத் தழுவுதல் போல

இராவணனைக் கண்ட கும்பகர்ணன், ஒரு மலை நிலத்தில் படுத்தாற் போல பூமியில் விழுந்து வணங்கினான். அவ்வாறு வணங்கிய உடனே நிலைபெற்ற ஒரு மலை மிக நீண்ட கால்களுடன் நடந்து வந்த மற்றொரு மலையினைத் தழுவிக் கொண்டது போன்ற தன்மை உடையனவாய் இராவணன் தன்னுடைய நீண்ட தோளினால், அவனை இறுகத் தழுவிக் கொண்டான்.

“நின்ற குன்று ஒன்று நீள் நெடுங்காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ யன்ன செய்கையான்“
(கும்பகர்ணன் வதைப் படலம். 1284)

ஒரு மலை இன்னொரு மலையைத் தழுவுதல் என்பது உலகில் இல்லாதது. உலகில் நடைபெறாத ஒன்றினால் பாடல் பாடப்பட்டுள்ளதால் இப்பாடலில் இல்பொருள் உவமை அணியாக வந்துள்ளது.

விஷம் ஒரு மலையின் வடிவம் பெற்று நடந்து வந்தது போல

விராதன் நடந்து வந்த தோற்றத்தைக் கூறும் போது, செவ்வொளி மிகுந்த அடர்ந்த சுருட்டை மயிர்கள் பொருந்திய தலையை உடையவனாகி, விஷம் ஒரு மலையின் வடிவம் பெற்று நடந்து வந்தது போல, பெரிய மேகங்கள் சூழ்ந்து தங்கிய மலைகள் தனது நடையின் வேகத்தால் வெளிப்படும் காற்றினாலே பஞ்சுபோல நிலை கெடும்படி மிக விரைவாக வில்வீரர் எதிரே வந்தான்.

“செஞ்சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த சென்னியன்
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்ததென மா“
(விராதன் வதைப்படலம்6)

விஷம் ஒரு மலையின் வடிவம் பெற்று நடந்து வந்தது போல,என்பது உலகில் நடைபெறாதது. உலகில் நடைபெறாத ஒன்றினால் பாடல் பாடப்பட்டுள்ளதால் இப்பாடலில் இல்பொருள் உவமை அணியாக வந்துள்ளது.

முடிவுரை

உலகில் இல்லாத, நடைபெற முடியாத ஒன்றினை உவமையாகக் கொண்டு ஒரு பொருளை விளக்கிக் காட்டுவது இல் பொருள் உவமை அணி எனப்படும். தேய்வுஇலா முகமதி, கமலம் பூத்த தொடுகடல், கார்கடல் கமலம் பூத்தது, நாய் தர கொள்ளுஞ் சீய நல்லர, தவ்வாது இரவும் பொலி தாமரை, கடல் ஒன்றினோடு ஒன்று மலைக்கவும், வான்தனில் வரைந்தது, எண் கையர், மலை இனம் வருவது, குழையுறு மதியம் பூத்த கொம்பனால், முத்தலைக் குரிசில், தாமரைப் போல் கரு ஞாயிறு, மலை மலையைத் தழுவுதல் போல, விஷம் ஒரு மலையின் வடிவம் பெற்று நடந்து வந்தது போல என்று உலகில் இல்லாத ஒன்றினால் உவமையாகக் கம்பர் பாடியுள்ளார். இப்பாடல்களில் இல்பொருள் உவமையணி வந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
2.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
3.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R