கவனப் பிசகில்
எஞ்சியவை
இயலாமைத் துயரைத்தவிர
வேறில்லை
இந் நெடு நடையில்.
அக வாடல்
மிகையில்
பூரித்தணைக்கும்
உன் வாஞ்சையை
எதைக் கொண்டு
நிகர் செய்ய
வாலாட்டும் குழைவில்.
புலரும் பொழுதின்
தொலைவிற்கு
பயண விளக்கான
தோழமையில்
பூக்கிறது
அன்றாடம்
அலுப்புகளற்று
அகாலத்தில்.
யாது மற்று
வறண்டதில்
எதைக் கொண்டு
நிரப்பினாய்
மகிழ்வின்
நம்பிக்கையில்
திளைத்தொளிர.
உன்னால்
மட்டும்தான்
முடிகிறது
ஒரு
ஸ்பரிசத்தில்
உரு மாற்றி
உன்மத்த நிகழ்வில்
பெரும் சாகசமாக்க.
நெருடி நகரும்
பய வாடலின்
அச்சத்திலும்
தேவையானதுதான்
இத் தருணங்கள்
திகட்டிடாத
தேனமுதை சுவைக்கும்
வாய்ப்பாக
வாழ்வானதால்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.