- யாழ் பண்ணைப் பாலம் -நான் இன்னும் வாழ்கின்றேன்.
என் நினைவுகளோ மெல்லச்சாகின்றன.
அது காலத்தின் கட்டாயம்.
அதற்குள்
மண்ணுக்கு நீர்போல
மனசுக்கு நினைவுகள்தாம்
என்றும் வாழ வைக்கும்.இல்லையா?
ஆதலால்
யாழ். பண்ணைப்பாலத்தில்
சாய்ந்திருந்து
அந்த அந்தியில் என் கண்குளிக்க
அப்பொழுதில் ஒரு கதை சொல்லவா?
நீலவானம் மெல்லமெல்ல
அதன் கரையை வெளுக்கத்தொடங்கிவிட்டது.
காகங்கள் கரைவதையும் குறைத்துக்கொண்டன.
நாங்கள் வளர்த்த கோழிகளும்
பக்கத்து அயலில் உள்ள வளவுக்குள்ளேயும்
மேய்ந்துவிட்டு
எல்லாம் சேர்ந்து கூட்டமாய்
எங்களின் காணிக்குள் வரத்தொடங்கி விட்டன.
கிணற்றடியில் நின்ற வாழைகளுக்குள்ளே
அந்த அந்தியின் சிவப்பு விழுந்து எழும்பும்
அழகை பார்த்துக்கொண்டே
கோழிகளுக்கு நான் ஆசையாய்ப்போடும்
கொஞ்ச அரிசியையும், நெல்லையும் எடுத்து
குந்தில குந்தியபடி முற்றத்தில் தூவிப்போட
"கோ..கொக்கொக்கொக்"என அன்பை
அவை பரிமாறியதை நான் உணர்ந்தேன்.
"பதிபதிபதி" யென்றதும் அவைகள்
பதுங்க ஒவ்வொன்றாகப்பிடித்து
அதுகளிடம் கதைத்து சிலதைக்கொஞ்சிவிட
அதுகளும் சந்தோஷமாகப்பறந்து
மரக்கொப்புகளுக்குள் ஒளித்து படுக்கைக்குத்
தயார்.
ஆடுகளுக்கும் பிண்ணாக்கு, தவிடு குழைத்து
அவைகளுக்கும் சாப்பாடு கொடுத்துத் தடவி,
கிடாயின் கொம்புபிடித்துத்தள்ளி விளையாடி,
அந்த உயிர்களின் வாசங்களையும்
நுகர்ந்துகொண்டிருக்கையில்
அம்மா காய்ச்சிய ஆட்டுப்பால் தேநீரின்
வாசம் மூக்கைத்துளைக்குது.
அதுவும் மூக்குப்பேணியில்.
சாம்பலும், புளியும் போட்டு மினுக்கிய
செம்பு, மண்சட்டிகள், மூக்குப் பேணிகள்,
அகப்பைகள், பானைகள்,
அத்துடன்
கல் அரிக்க அரிக்கன்சட்டி, கேத்தல்,
மூங்கில் புட்டுக்குழல், இடியப்ப உரல்,
மோர்ப்பானை, மத்து
என இன்னும் பல
அம்மாவின் கைபடாத பாத்திரங்கள்
அங்கே எதுவுமில்லை.
உறிகூட குசினியை அலங்கரித்த காலமது.
இருப்பினும்
பாத்திரங்களுக்குள்ளும், ஈர விறகுகளிற்குள்ளும்
உடலை வருத்தி எமக்காக
அன்று போராடிய அம்மாவிடம் இருந்து ஒரு குரல் -
" பிள்ளைகள் இந்தாங்கோ தேத்தணி.
பெரியதம்பி நீ குடித்துவிட்டு அப்பாவிடம் போய்ற்றுவா.
அவர் பார்த்துக்கொண்டு நிற்பார்"
எனக்கோ இனியில்லையென்ற
சந்தோஷம்.
வீட்டிலிருந்து நடந்து
யாழ்.போதனா வைத்தியசாலைக்குச்
செல்லவேண்டும்.
அங்குதான் அப்பா வேலைசெய்கின்றார்.
இப்ப வெளிக்கிட்டாத்தான்
எல்லாக் கோயில்களுக்கும்
ஒரு கும்பிடு போட்டுக்கொண்டுபோ
கச்சரியாயிருக்கும்.
அத்துடன் சந்திக்குச்சந்தி தேநீர்க்கடைகளில்
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்
பாட்டுக்கள் கேட்கலாம்.
நேரத்தையும் கேட்டுக்கேட்டு
விறுக்கா நடக்கலாம்.
அங்கே போனால்
அப்பா எனக்கு
யாழ்.பலநோக்குக்கூட்டுறவுச்சங்கத்திற்கு
முன் இருக்கும்
சிவக்கொழுந்து கடையில்
உழுந்துவடையும், பால் தேத்தணியும்
வாங்கித்தருவார்.
சிவக்கொழுந்து அப்புவும் புதுசா
நாறல் பாக்கெடுத்து
அப்பாவுக்கு பாக்கு வெட்டியால்
வெட்டிக்கொடுக்கும்போது எழும்
இருவரின் உரையாடல் கேட்பதற்காகவும்,
அப்பா வெற்றிலைபோட்டு
அதன்பின் 3 றோஸஸ் சிகரெட் குடிக்கும்போது வரும்
வாசத்தை மணப்பதற்காகவும்,
அதற்கடுத்து வரும் சம்பவங்களுக்காகவும்
நான் வீட்டிலிருந்து அப்பாவுடன் உலாவர
எப்போதும் தயார்.
நான் பிறந்ததும் அப்பா வாங்கிய
என் வயதுடைய அந்த 'றலி'சைக்கிளின்
பின்சீற்றில் நான் இருக்க
அப்பாவும்,
" பிள்ளைக்கு இண்டைக்கு என்ன மீன் விருப்பம்"
என்றபடி சைக்கிளை மீன்சந்தை நோக்கி
மிதிக்கின்றார்.
நான் சொல்ல வருவது
பழைய யாழ்.மீன் சந்தை. சுத்திவர வாசங்கள்
எம்மைக்கட்டிப்போட்ட காலமது.
அவற்றை கால்நடையாய் நடந்து,
நுகர்ந்து, ருசித்து, ரசித்து வாழ்ந்த
வாழ்வது.
அந்த மண்ணின் வாசம் அது.
ஒரு வழியால் நுழைந்தால்
பாய்க்கடை, பழக்கடை, பாக்கு, வெற்றிலை,
புகையிலை பலசரக்குக்கடை,
மரக்கறி, பனங்கட்டி, பனங்கிழங்கு,
பனாட்டு, சுளகு,
பனையோலையால்
பின்னிய பெட்டிகள் எனக்
காற்றில் வந்த வாசங்கள்தாம் க
டைகளின் விலாசங்களாய் அறிமுகப்படுத்திய
அந்த வாழ்வுதனை இன்னும் சொல்லவா?
இயற்கை எமக்களித்த வரத்தை,
அந்த வாழ்வியலை எம்மவர் காப்பாற்றிய
காலம் அது.
ஆதலால்
அங்கே எப்போதும் சந்தையென்றால்
ஒர் ஈரலிப்பு. வியாபாரியில்
ஒரு செந்தழிப்பு.
அவர்கள் முழங்கால் மடித்து இருக்கும்
தேக அப்பியாசம்.நெற்றியிலும்,
பேசிய விதத்திலும் அன்பிருந்தது.
அதனால் வாங்கிய அனைத்திலும்
ருசியும், பலமும் இருந்தன.
கலப்படம் இல்லாத மனச்சாட்சி
குடிகொண்ட காலம் என்றால்
அது நம் முன்னோர் வாழ்ந்த
அக்காலம்.
யாழ்ப்பாணம் என்றால்
அப்போது இ.போ.ச தரிப்பிடத்தைச்
சுற்றிவந்தால்
தடக்கி விழுந்தால்
கடைகள் என்பார்கள்.
ஆஸ்பத்திரிக்கு முன்னால்
துவாகத்தோடம்பழங்களையும்,
மாம்பழம்,
முந்திரிகையென மேசைபோட்டு
அடுக்கியபடி கூறிக்கூறி விற்பர்
சிலர்.
பக்கத்தில்
சில Morris Minor, Volkswagen Taxi களும்,
குறைந்தது ஒரு மையம் ஏற்றும்
காராவது அங்கே நிற்கும்.
அடுத்து வந்தால் இடது பக்கத்தில்
சிற்றி பேக்கரி பாண், பணிஸ், கேக்கின் வாசம்.
வலதுபக்கம் உள்ள கடைகளுக்குப்
போகவேண்டுமென்றால் சைக்கிளால்
இறங்கி நடக்க வேண்டும்.
அதற்காகவே
சிறிதாக இரு பக்கங்களிலும்
மேடுபோட்டுக்கட்டியிருந்தார்கள்.
அப்பொழுதே எல்லாக்கடைகளிலும்
வாழைக்குலை வரவேற்பாக இருந்தது.
அதைவிட
மாம்பழம், முந்திரிகை, பீடா, வெற்றிலை,
இனிப்பு இருக்கும்.
சில கடைகள் சிறிய சர்பத் கடைகளாகவும்,
இன்னும் சில தேநீர்க்கடைகளாகவும்
ஸ் தரிப்பில்
நின்றுகொண்டு பார்க்கையில்
வந்தோரை சுண்டி இளுத்தது உண்மை.
வியாபாரம் படுத்துவிடக்கூடிய இடமல்ல
யாழ்.பஸ்தரிப்பு.
இன்னும் கொஞ்சம் எட்டிப்பார்த்தால்
ராணி திரையரங்கு.
இடதுபக்கம் போனால்
முடக்கில் சாராயக்கடை.
அங்கிருந்து பார்த்தால் வை.சி.சி.கு.வின் கடை.
பக்கத்தில் சுந்தரம் மற்றும்
சுப்பிரமணியம் மருந்துக்கடைகள்.
புகையிலைக்கு வை.சி.சி.குனாவை
அடியாது என்று அப்பா சொல்வார்.
சாராயக்கடை முடக்கால் வலதுபக்கம் திரும்பினால்
கஸ்தூரியார் வீதியின் இரு பக்கங்களிலும்
சவப்பெட்டிக்கடை தொட்டு கண்ணாடிக் கடை,
ரதி வாச்சின் மணிக்கூட்டுக்கடை,
சாம்பசிவம் சயிக்கிள் கடை,
மணியம் சயிக்கிள் கடை,
இடதுபக்ககுச்சு ஒழுங்கைக்குள்
செருப்புக்கடை, மாமிசக்கடை
பள்ளிவாசல்.
அப்படியே நேராக வந்தால்
ஸ்ரான்லி றோட்.
அந்த வீதியின் வலது பக்கம்
வெலிங்டன் திரையரங்கு.
இடது பக்கம் ஒன்று
மானிப்பாய் வீதியாகவும்,
மற்றையது கே.கே.எஸ் வீதியாகவும்
செல்லும்.
கே.கே.எஸ் வீதியில்தான்
வண்ணார்பண்ணைச்சிவன் கோயில்.
மோரின் ருசிக்கு சிவன் கோயிலடிதான்.
ஏன் எதற்காக என இத்தனை விளக்கம் என்றால்
நம் காலடிபட்ட ஒவ்வொரு வீதிக்கும்
ஒரு வாசனையிருந்தது.
ஸ்ரான்லி வீதியென்றால்
கம்பி, செப்பு, பித்தளை, தகரம், கார் உபகரணங்கள் என
அத்தெரு மணக்கும்.
வாழப்பழக்கடையும் மருந்துக்கடைகளும்
வீசிய வாசம்கூட எமக்கு இதமாகத்தானிருந்தது.
ஒன்றை மட்டும் எம்மால் மறக்க முடியாது.
ஆஸ்பத்திரி பின் வீதி.
அது நாறும்.
அந்த முடக்கில மூச்சை அடக்கி
பஸ் ஸ்ரான்ட் மட்டும்
இழுத்துப்பிடிக்கவேண்டும்.
சரி வீட்டில் இருந்து வெளிக்கிட்டால்
நேரத்தைப்பொறுத்து
என் கால்கள் திரும்பும்.
பிறவுண் றோட், நீராவியடி, நாவலர் றோட்,
பெருமாள் வீதி, வெலிங்டன் தியேட்டர் சந்தி,
அப்படியே
விக்ரர் அன் சன்ஸ்,
ஞானம்ஸ் ஸ்ருடியோ,
பஸ் ஸ்ரான்ட்டால் வந்தால்
யாழ்ப்பாண ஆஸ்பத்திரி.
இல்லையென்றால்
நீராவியடி,யாழ்.இந்துக்கல்லூரி, கஸ்தூரியார் றோட்,
அப்படியே வை.சி.சி.கு கடை அப்படியே ஆஸ்பத்திரி.
"கதைசொல்லிக்கொண்டு வந்த என்கண்கள்
இடையில் ஏன் கலங்குகின்றன?
"மண் மட்டுமா வாசம்?
என்னோடு வாழ்ந்தவர்களில் எத்தனை உயிர்கள்
இப்போது இல்லையே.
அதுதான்!
ஒவ்வொரு திசையிலும்
ஒவ்வொரு தெருக்களிலும்
இப்போ நினைவுகள் உறங்குகின்றன.
சரி இனிப்போதும். என் கதைக்கு வருகின்றேன்.
அப்பா சைக்கிளை உளக்கிக்கொண்டே
சுபாஷ்கபே கண்டு மீன் சந்தைக்கு
பின்னேரமீன் வாங்க வருகின்றார்
.பின்னேரக்கறியின் ருசி.
அது ஒரு தனி ரகம்.
அதுவும் வேர்க்க,வியர்க்க
ஓடிஓடி வேலைசெய்த
களைத்த உடம்புக்கு
உடன்மீனில் கறிவைத்துச்
சாப்பிட்டுப் பார்த்தால் புரியும்.
அதற்காக அப்பா முடிந்தவரை
சைக்கிளில்வந்து,
அதனை ஓரிடத்தில் நிறுத்திப்பூட்டிவிட்டு,
சந்தைக்குள் நுழைவார்.
இப்பொழுது நானும் அப்பாவுடன் நுழைந்தால் 2
பெற்றோல்மாக்ஸ் மட்டும் எரியுது.
அதைவிட அரிக்கன் லாம்புகளைக்
கொளுத்திக்கொண்டு
மீன் வியாபாரம்
அந்தமாதிரி அமர்க்களமாயிருக்கு.
மீன்சந்தையின் ஆரவாரமும்,
வழுக்கி விழாமல் இருப்பதற்காக
அரிக்கன் லாம்புகள்
ஆங்காங்கே கண் சிமிட்டிக்கொண்டிருக்கின்றன.
அதுகூட அந்த வயசுக்கு ரசிக்கத்தக்க
நட்சத்திரங்கள்தாம்.
அப்பாவை 'ஐயா வாங்க,ஐயா வாங்க' என்று
பலர் கூப்பிட்டாலும்
அப்பா அவருக்குப்பிடித்த
விளை, ஒட்டி, ஓரா, திரளியிலேயே
அவரது கண்கள் தாவுகின்றன.
எனக்கோ
அந்தப்பொழுதில் பிடிச்ச மீனை
எப்பொழுது கறிவைத்துச்சாப்பிடுவோமென்று
வாயூறுது.
மீனை வாங்கிக்கொண்டு
டைனமோ டயருடன் ஒட்டிச்சுழன்று,சுழன்று
ஹெட்லைட்டின் வெளிச்சம்
இன்னும் கன்னாதிட்டிச்சந்தியை நிலவாக்க
அப்பாவின் வேகமும், வியர்வையும்
போட்டி போடுது.
இருந்தாலும் அப்பா என்னுடன்
அன்றைய நாளை மீட்டுக் கொண்டே
வந்தார்
பள்ளிப்படிப்பில் சொல்லித்தந்த
"தாயிற்சிறந்த கோயிலுமில்லை,
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை"
என்பதை அப்பா வரும் வழியிலேயே
வாழ்ந்துகாட்டினார்.
அப்படியே
கதைத்துக்கதைத்து
வீடு வந்தாச்சு.
அப்பா உடனே கிணற்றடியில்
கை,கால், முகம் கழுவி
அதற்குப்பின்
மீன் வெட்டிப்
பதமாய் மஞ்சள், உப்புப்போட்டு
பிரட்டிக்கொடுத்தவுடன்,
அம்மா
அடுப்புமூட்டிக் கறிவைத்து,
மீன் தலையில் சொதியும்,
அயல்மணக்க நாலு துண்டாவது
மீன் பொரியல் பொரித்து
எம்மை இருத்திப்
பந்திவைத்த
எனது பெற்றோரின் வாழ்வுதனைப்
பதிவதால் மகிழ்கிறது
என்மனம்.
அப்பா முதலில் என்னைப்
பண்ணைக் கடற்கரைக்குத்தான்
கூட்டிக்கொண்டு வருவார்.
அதுவும்
சூரியன் மெல்ல,மெல்ல
மெதுவாக மறையும்
அந்திசாயும் நேரத்தில்.
அப்பா, அம்மா, தம்பி,
சொந்தங்கள்,
ஆடுகள், கோழிகள்
கூடிச்சமைத்திருந்த
அந்தப் பொழுதுகளையும்
நினைத்து
நனவிடை தோய்கின்றேன் நான்.
'நினைத்தாலே இனிக்கும் தொடரும்]