சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் 8 ஆண்டுகள் 1984-92 வசித்தவர். .அவர் அந்த அனுபவங்களை அப்போது மூன்று நாவல்களாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது.
அவரின் முதல் நாவல் மற்றும் சிலர் மதுரை சின்னாளபட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த, திமுக ஆட்சி காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரை பற்றியக் கதை. ஐதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலுங்கானா போராட்ட பின்னணியையும் கொண்ட நாவல்..தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இடம்பெற்றது. முன்பு நர்மதா, மருதா, டிஸ்கவரி ஆகிய பதிப்பகங்கள் இதை வெளியிட்டுள்ளன.
நகரம் 90 என்ற நாவல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிரிவுகள் செய்த குழப்பங்கள் அதன் மூலமாக அடிக்கடி முதலமைச்சர் மாறிக்கொண்டிருந்த சூழல்.. அப்படியான சூழலில் மத கலவரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை மாற்றிய மோசமான ஒரு காலம் இருந்தது., மதக்கலவரம் மூலமாக முதலமைச்சர் பதவியை கைப்பற்றி சாதாரண மக்களை பதவிக்காக பலி கொண்ட அரசியல் கலவரச் சூழலை பற்றிய நாவல் இது .. குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கிய போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுப்ரபாரதிமணியன் செல்லும் வாய்ப்பை தந்த நாவல்.
சுடுமணல் மூன்றாவது நாவல். தேசியம் என்பது மாயம் என்பதை நிரூபிக்கும் வகையில் தண்ணீர் பிரச்சனை வருகிற போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் வேறு மாநிலச்சுழலில் அந்நியமாக்கப்படுவதும் பற்றிய அனுபவங்களை ஹைதராபாத் பின்னணியில் எழுதியிருந்தார்., இந்த நாவல் பதினாறு பதிப்புகள் வெளியாகி இருப்பதும் மலையாளம்,, ஆங்கிலத்தில் மொழியாகி இருப்பதும் சிறப்பாகும்.
இந்த மூன்று நாவல்கள் மூலமாக சுமார் 1960-95 ஆண்டுகால ஹைதராபாத் தமிழர்களின் வாழ்க்கையை இந்த நாவல்களில் சுப்ரபாரதிமணியன் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. வேற்று மாநிலச் சூழலில் தமிழர்களின் அந்நியமாதல் சூழலை விவரித்துள்ளது.
அசோகமித்திரன் அவர்களின் சிறுகதைகளும் 18 ஆவது அட்சக்கோடு போன்ற நாவல்களும் ஹைதராபாத் தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் அமைந்தவை.. அவற்றை சுப்ரபாரதிமணியனின் இந்த நாவல்களின் முன்னோடியாகக் கொள்ளலாம்
( ரூபாய் 480 காவ்யா பதிப்பகம் வெளியீடு சென்னை )
பதிவுகளுக்கு அனுப்பியவர் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.