- ஓவியம் AI -
நிர்மலனுக்கு அது கனடாவில் முதல் இரவு.. முதல் உறக்கம். பின்னாள்களில் உறக்கத்தைத் தொலைக்கும் இரவுகள் வர வாய்ப்புகள் உண்டு என்பதைச் சிறிதும் உணராதவன் என்பதால் அவன் உறக்கத்தில் நிம்மதியும் ஒட்டியிருந்தது.
வந்தவனோடு ஆறவமர இன்னும் எதுவும் பேசவில்லை, கும்பகர்ணனுக்குச் சொந்தக்காரன் போல் உறங்குகிறான் என்று எண்ணிய தமக்கை, அருகே சென்று தலைமயிரைத் அன்போடு கோதினாள். உடலெங்கும் நிறைந்திருந்த பயண அலுப்பு, இமைகடந்து வழிந்து விழக் கண் விழித்தான்.
வீட்டுக்குள் அறை மாறிப் படுத்தாலே அவனுடைய தொடர்தூக்கத்தில் பல இடைவெட்டுக்கள் ஏற்படும். இன்று தடித்த போர்வையுள் குறங்கிக் கால் மடங்கிப் படுத்தபின் கனவுகள் குழப்பாத கண் கனத்த உறக்கம்.
பிறந்த மண்ணை விட்டுவிலகி, முன்பின் பரிச்சியம் இல்லாத பயணமாய் ஆசையோடு விமானத்தில் ஏறியவன், பாதிப்பயணத்தில்தான் அது பலமணிநேரச் சிறை என்பதை உணர்ந்தான். ஒருவாறாக விமானம் பியர்சன் விமானநிலையத்தில் தரைதட்ட, பலர் விட்ட நிம்மதிப் பெருமூச்சுகளால் விமானம் தள்ளாடி தரித்தது. அவ்வேளை நிர்மலனுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியைச் சற்று நேரத்திலேயே குடிவரவு அதிகாரிகள் இடறினார்கள். ஆங்கிலம் என்ற ஒருமொழியை இருவிதமாய்ப் பேசும் பேரிடைவெளிக்குள் சிக்கித் தவித்து ஒருவாறு வெளியே வந்தான்.
விமானத்தில் வந்தோரை விட வரவேற்க வந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். அக்காவை, அத்தானை தேடிய கண்கள் பெர்மூடா முக்கோணத்தில் சிக்கிய காந்தஊசி போல் திசை தெரியாமல் தடுதடுத்தன.
அவர்கள்தான் இவனைக் கண்டுகொண்டார்கள்.
வெளியே வெண்பால் போல் பனித்தூறல். தூரத் திசைகளிலெல்லாம் பனி மலையெனக் குவிந்திருந்தது.
அக்கா “எங்கட வீடு ஸ்காபுரோ என்ற தமிழ் ஆக்கள் அதிகமாய் இருக்கிற நாகரிகமான ரவுண்;” என்று கூறியிருந்தாள்.
பெற்ற தாயை, பிறந்து வளர்த்தெடுத்த நாட்டைப் பிரிந்து வருகிறோமே எனும் கவலை அவனுக்கு துளியும் தலைநீட்டவில்லை. உறவினர்கள், நண்பர்கள் எனச் சில நல்லமனிதர்களைப் பிரிந்தது உள்லூரக் கவலை தந்தது என்னவோ உண்மைதான்.
முதல்ல ஒரு நல்ல வேலையைத் தேடவேணும். அம்மாவை ஸ்பொன்சர் செய்து கூப்பிடவேணும். கொஞ்சப்பேருக்கு அப்பப்ப காசு அனுப்பவேணும். இதுதான் நிர்மலனின் இப்போதைய இலக்குகள்.
தாய் சிந்தனையில் வந்தாள்.
அம்மாவிற்கு பிறந்த செம்பாட்டுத் திடலை விட்டுவர துண்டற மனம் வராது. அக்கா எப்பவோ கேட்டவ.. ‘நீங்களும் தம்பியுமா கனடாவுக்கு வந்திருங்கோ’ எண்டு. “பெட்டையை கட்டிக் குடுத்தாச்சு. நல்ல மாப்பிளை. சந்தோசமா இருக்குதுகள். அதோடை விட்டிடவேணும். நாங்களும் போய் இதுதான் வாய்ப்பெண்டு ஓட்டுணியளா வாழுறது கேவலம்” எண்டு அம்மா ஒரேயடியா மாட்டன் எண்டுட்டா.
அவ அதரப் பழசான ஒட்டடைகளை பிடிச்சுத் தொங்கிற மனிசி. அவவை மாற்ற முயல்வது குதிரைக்கு கொம்பு முளைகிறதுக்குத் தீனி போட்ட கதை.
நிர்மலனும் வெளிநாட்டுக்கு வர விரும்பியவன் அல்ல. அம்மாவோடு இருப்பதே அவன் பெருவிருப்பு.
பல்கலைக்கழகத்தில் நிர்மலனுக்கு இது கடைசி வருசம். முடித்து வெளியே வந்தால் அரசாங்கத்தில் நல்ல வேலை எடுக்கலாம். அது மட்டுமல்ல, நல்ல படைப்பாளனும் கூட. அவர் சிறுகதைகள் பல வார வீரசேகரி போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ஓர் இளம் எழுத்தாளனாக ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தான். உள்லூர இதம்தரும் இந்தப் ‘படைத்தல் பணி’ தாய்மண்ணில்தான் சிறக்கும் என்பது அவன் எண்ணம். இப்போது கூட எழுதி முடித்த ஒரு நாவலை வெளியிடும் வழிகளைத் தேடிக்கொண்டிருந்தவன்தான்.
நிர்மலனின் ஊரில் ஓர் அரசியல்வாதி. சின்னவர் என்ற அடையாளப் பெயரோடு ஊரெங்கும் வாக்குக் கேட்டு அலைந்தவர். அப்போது முகமெல்லாம் பல்லாய் திரிவார். வழிப்போக்கர்களும் தெருப்பிச்சசைக்காரரும் கூட அவருக்கு வாக்குகளாகத் தெரிந்தார்கள். அவர் தோள் சால்வையை இழுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு கெஞ்ச, அவர் மனைவியார் தாலிக்கொடியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொட்டியது இன்றும் அழியா கோட்டுச் சித்திரங்கள்.
ஒருவழியா அவர் வென்றுவிட்டார். இரக்க வாக்குகள்தான் ஏராளம் இருந்திருக்கும்.
சனங்கள் இப்பபோது பலவாறாகப் பேசுகிறார்கள். பாஸ்போட் எடுக்க ஒரு கை எழுத்துப் போடுவதற்கே காசு கேக்கிறாராம்.
நிர்மலன் குடும்பத்துக்கும் நெருக்கமானவர்தான் சின்னவர். என்றாலும் பணம் கேட்கத் தொடங்கிவிட்டார் என்றால் ஆசை ஆளைப் பார்க்காது. அவர் மூலமாக ஒரு வேலை எடுக்கலாம் என நம்பியவள் நிர்மலன் அம்மா. ஆனால் ஊரார் பேச்சு ‘அது சாத்தியமில்லை’ என்பதாகவே இருந்தது. “இவங்களுக்குக் காசைக் கொட்டிக் குடுக்கிறதை விட வெளிநாட்டுக்குப் போனா சண்டையளுக்குள்ள இருந்தும் தப்பலாம் என்ற எண்ணம் வலுத்தது.
அம்மாவின் புறுபுறுத்தல்கள் தாங்கவொண்ண எல்லையை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. நிர்மலனுக்கு தாய் மனவோட்டம் நன்கே தெரிந்திருந்தது. கோழி ஒரு பருவத்தில் குஞ்சுகளைக் கொத்திக் கலைப்பது கோபத்தால் அல்ல. எத்தனை காலம்தான் செட்டைக்குள் செருகிக்கொண்டு திரிவது. தனித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டாமா?
நிர்மலன் ஒற்றைப் பெருவிரலில் நிமிர்ந்து நின்று தீர்மானித்தான். இனி கனடா விசா எடுப்பதுதான் விதியை விலத்தும் ஒற்றை வழி.
இந்த மனத்துணிவும் ‘அக்கா, அத்தான் இருக்கினம்தானே’ எனும் பற்றுக்கோட்டின் பிணைப்பில் துளிர்த்ததுதான்.
வெளிநாட்டு வாழ்வைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருந்தால் அங்கு சென்று ஆங்கிலத்தில் நாலு வசனத்தைத் தொடர்ச்சியகப் பேசப் எழுதப் பழகி உருப்படும் திசையில் யோசித்திருப்பான். கனடாவில் அள்ளுகொள்ளையாக நடைபெறும் புத்தக வெளியீடுகள் பற்றி அளவுக்கதிகமாக அறிந்திருந்தவன் நிர்மலன். ஐநூறுபக்கத்தில்; எழுதி முடித்த நெடுங்கதையை பிறந்த குழந்தையை தூக்கும் வாத்சல்யத்துடன் நெஞ்சோடு அணைத்து நெட்டுயிர்த்து பயணப் பையில் அடுக்கிய உடுப்புகளின் இடுக்கில் செருகிவைத்தான்.
இதைத் தாய் கண்டுவிட்டாள்.
“இங்கைதான் அதை எழுதிறன,; இதை பேப்பருக்கு அனுப்பப்போறன் எண்டு நேரத்தை வீணடிச்சாய், உதுகளை அங்கை ஏன் காவுறாய், அங்க போய் அதுகளுக்குக் கரைச்சல் குடுக்கப் போறியோ”
“என்ன சொல்லுறாயணை.. கிழமைக்கு கிழமை வீரகேசரியிலை இருந்து வாற செக்குகளை மாத்தி உனக்குத்தானே தாறனான்”
“ஓ....அதுகளை சேத்துத்தானே நான் இங்கை கோட்டை கட்டி வைச்சிருக்கிறன். அங்கை போய் உந்த பேய்;கூத்துகளை விட்டிட்டு அக்கா, அத்தார் சொல்லிறதைக் கேட்டு நல்ல பிள்ளையா நட.”
“நானிங்கை கெட்ட பிள்ளையாத்தானே நடந்தனான்? நான் போனபிறகு என்ரை அருமை உங்களுக்குத் தெரிய வரும். நான் வெளியிடப் போற என்ரை நாவலை உங்களுக்குத்தான் சமர்ப்பிப்பன்.”
இவன் எழுத்துகளைப் பயன் தராக் கூத்துகளாகவே எண்ணும் தாய்க்கு வழக்கம் போல் எதுவும் முழுமையாகப் பிடிபடவில்லை. “நாவல், நாவல் எண்டு வாய்க்குவாய் சொல்லுறான், பனி கொட்டுற அந்த மண்ணிலையும் நாவல்மரம் நிற்கும் போல” என்று எண்ணியிருப்பாரோ என்னவோ?
“வர்ற வெள்ளிக்கிழமை கண்டுப்புளியடி வைரவருக்கு ஒரு பூசை செய்யப்போறன். முற்போக்கு, பிற்போக்கு கதையள் பேசாமை வந்து கும்பிடு.”
அம்மாவோடு கதைச்சுப் பிரயோசனமில்லை. இதுகளுக்கு விளங்கக்கூடியதா வள்ளுவனாவது ஒரு ஈரடியை எழுதிபோட்டுப் போய் சேந்திருக்கலாம். கனடா போயிற்றா இந்த ஆக்கினையள் இருக்காதுதான்.
அக்கா தந்த தேனீரைக் அருந்தியபடி ஊர்ப்புதினங்கள் எல்லாவற்றையும் நாவலை எழுதுவது போன்றே கூறினான். கதையோடு கதையாக தன் நாவலைப் பற்றியும் கூறி, அதைக் இங்கு வெளியிட இருக்கும் தன் விருப்பத்தையும் சாடைமாடையாகத் தெரிவித்தான். அம்மாவைப் போல் அக்கா குத்திக் குதறமாட்டாள் என்ற நம்பிக்கை நிர்மலனுக்கு. நிறைய இமிக்கிறேசன் வேலையள் கிடக்கு.. முதலிலை அதைக் கவனி. மிச்சத்தைப் பிறகு பார்ப்பம் எண்டு ஒரு வார்த்தையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அக்கா.
இவன் வார இதழ்களில் எழுதிய கதைகளை அக்கா, அத்தான் இருவருமே வாசிப்பார்கள். “இந்த எழுத்துகள் சோறு போடாது, பிழைக்கிற வழியைப் பார”; என்று அக்கா ஒருதடவை வாட்சப்பில் எழுதியிருந்தாள். ஆனால் அத்தான் வேறு இரத்தம். ‘உன்ரை எழுத்து நடை வித்தியாசமாயும், வீரியத்துடனும் இருக்கு. விட்டுடாதை தொடர்ந்தும் எழுது’ என்று ஊக்கப்படுத்தியிருந்தார். “வெளியிடப்போற நாவலிலை அத்தானுக்கு நன்றி சொல்லி ஒரு பக்கத்தை சேர்க்கவேணும்” என்று எண்ணும் அளவுக்கு அத்தானின் வார்த்தை அவனை ஊக்கப்படுத்தியிருந்தது. அத்தான் ஒரு நல்ல வாசகர்.
வாரந்தோறும் கனடாவில் நிடைபெறுகின்ற நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நிர்மலனின் ஆசைக்கு எண்ணை ஊற்றிக்கொண்டிருந்தன. அத்தானை மெல்லமெல்ல அரிக்கத் தொடங்கினான். இவன் இந்த மண்ணில் முதல் காலூன்றவேண்டும், பின் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்யலாம் என அத்தான் கருதியிருந்தாலும் நிர்மலனின் தொடர் அரிப்பு, நிர்மலனின் வெளியீட்டு விருப்பத்தை ஏற்கச் செய்தது.
“சரி, எனக்கு இதிலை அனுபவமில்லை.. ஆனா சிலபேரைத் தெரியும். அவை புத்தக வெளியீடுகளோடை ஊறிப்போனவை. அவையிற்றைக் கதைப்பம்.”
வட்சப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அத்தான் சட்டென சத்தம் போடாமல் துள்ளிக்குதித்தார். “தம்பி கிட்ட வா. அடுத்த சனிக்கிழமை புத்தகக் கண்காட்சியோடை ஒரு நூல் வெளியீட்டு விழாவும் இருக்கு. அங்க போனா பலரையும் காணலாம். உனக்கும் ஒரு கனடா வெளியீட்டைப் பத்தினவொரு ஐடியா கிடைக்கும்” என்றார்.
‘பசித்த நாயின் வாயில் சிக்கின எலும்புத்துண்டாய்ச் சுவைத்தது’ அத்தான் சொல். நிர்மலன் அத்தானின் சுண்டுவிரலில் தொங்கும் ஆறாம் விரலானான்.
அந்தச் சனிக்கிழமைக்காக ஆறுநாள் காத்திருந்தவன் நிர்மலன். காலை ஒன்பது மணிக்கே வெளிக்கிட்டுத் தயாராகிவிட்டான். நிர்மலனின் இந்த அந்தரிப்பும் வெளிக்கீடும் அக்காளுக்கு ஆச்சரியமாய் இருந்திருக்கவேணும்.
அவள் “தம்பி எங்கை போறதுக்கு வெளிக்கிட்டு நிக்கிறாய்” எண்டு சமயசந்தர்ப்பம் தெரியாமல் கேட்க, இவன் வழக்கம்போல கூரையை பார்த்து முழுச, கோப்பிக் கப்பை வலக்கையில் வைத்து ஊதியூதி அதை பல வெளிகளிலும் ஆட்டி உஸ்ணத்தை தாக்கட்டும் இரசாயனப் பரீட்சையில் மூழ்கியிருந்த அத்தார் குறுக்கே புகுந்தார்.
“தம்பி.... உந்த புத்தகக் கண்காட்சியலெல்லாம் சொன்ன நேரத்திலை துவங்கறதில்லை. மத்தியானத்துக்கு பிறகுதான் சூடுபிடிக்கும். நாங்கள் லஞ்செடுத்திட்டு வேணுமெண்டா உண்ட களைக்கு அரைத்தூக்கம் ஒண்டும் போட்டிட்டு ஆசறுதியா போகலாம். போய் உடுப்புகளை கழட்டிபோட்டு றிலாக்ஸ் பண்ணு.” என்று கூறிவிட்டு அக்காளின் பக்கம் திரும்பாமல் மறுபடி கோப்பியின் வெப்பத்தை ஆற்றும் முயற்சியைத் தொடர்ந்தார்.
அக்கா இவனைப் பார்த்த பார்வையில் அம்மா தெரிந்தாள்.
புத்தகக்கண்காட்சி மண்டபத்தை நோக்கிக் கார் போய்க்கொண்டிருந்தது. “அத்தான் என்ரை நாவலை எங்கை குடுத்துப் பிரிண்ட் பண்ணப்போறம்?” என்று கேட்டான் நிர்மலன்.
”அவசரப்படதே.....இந்தியாவுக்கு அனுப்பி எடுக்கிறது செலவு குறைவு. அதுக்கு இங்க ஆள் இருக்கு. அவரோடையும் கதைப்பம். ஒண்டை மட்டும் ஞாபகம் வைச்சுக்கொள்.. கொக்காவுக்கு முன்னாலை இந்தப் புத்தகக்கதையை விரிச்சுப் போடாதை, சோத்திலை மண் விழுந்திடும்”
நிர்மலன் மௌனமாய்ப் புன்னகைத்தான்.
என்னப்பு சொல்லுறது விளங்குதோ?
“ஓமோம் விளங்குது அத்தான்” ஒலிப்பில் நக்கல் சற்றுத் தூக்கலாகவே இருந்தது.
“என்னத்தை விளங்கினது”
நிர்மலன் சிரிக்காமல் “ வீட்டுக்கு வீடு வாசப்படி எண்டு விளங்குது” என்றான்.
இதற்குள் கார் ரோட்டை விட்டு இடப்பக்கமாய் திரும்பி புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறும் மண்டப வாசலை அடைந்தது. வேறு சில கார்களும் சமாந்திர ஒழுங்கில் நிறுத்தப்பட்டிருந்தன.
உள்ளே சென்றார்கள்..
அளவான மண்டபம்தான். ஒரு புறத்தில் கண்காட்சி நூல்கள் அடுக்கப்பட்டிருந்தன. மறுபுறத்தில் நூல் வெளியீடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் சிலர் செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் ஒரு பெட்டியைத் தூக்கேலாமல் தூக்கிக்கொண்டு வந்தார். அவர் பின்னாலும் சில பெட்டிகள் வந்தன. அவர்தான் நூலை வெளியிடுபவராக இருக்கவேண்டும். மற்றுமொரு மூலையில் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருந்தன.ஊரைப்போல் இனிப்பை சுற்றி இலையான்கள் பறக்கவில்லை.மனிதத் தலைகள்தான் குவிந்து தெரிந்தன.
நிர்மலனுக்கு அங்கு யாரையும் தெரிந்திருக்கவிலை. ஆனால் கனடா எழுத்தாளர்கள் எனச் சிலருடைய பெயர்களை அறிந்திருந்தான். ஓரிவர் யாழ்ப்பாணத்தில் நடத்திய வெளியீடுகளிலும் கலந்துகொண்டிருந்தான். அந்த முகங்கள் இப்போது நினைவில்லை. நினைவில் இருந்தாலும் இன்று பிரயோசனப்படாது.அங்கு காடாய் மண்டிய மயிரோடு அலைஞ்சவை இங்கை பின் வழுக்கையராத் திரியினம்.அடையாளம் அழிஞ்சுபோய் இருக்கும் யாழ்ப்பாணி சுழியன் கண்டியளோ. மூச்சுக்கு மூவாயிரம் முறை மூளையை பாவிக்கிறவன்.தலை எப்பவும் கொதகொதத்து கொண்டு இருக்கும்.அதிலை மயிர் தங்குமோ,பொசுங்கிப் போகும்.பின் வழுக்கைதான் எங்கடை ‘ரேட்மாக்’
நிர்மலனின் வழுக்கை ஆய்வை அத்தார் தடுத்தாட்கொண்டார்.
“தம்பி நீ ஹோலுக்குள்ளை போய் புத்தகங்களைப் பார். இங்கை என்ரை சிநேகிதர்மார் சிலர் நிக்கினம். பிறகு இவையளை பிடிக்கேலாது. கதைச்சிட்டு வாறன்” என்றவர் விலகிச் சென்றுவிட்டார்.
“நீளவாக்கில் சமாந்திர மேசைகளில் புத்தகங்கள் சீராக அடுக்கப்பட்டிருந்தன. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ புதிய பதிப்பு அழகான அட்டைப் படத்தோடு ஓர் அடுக்கில் தெரிந்தது. அதை எப்போதோ படித்த ஞாபகம். இன்னும் அது அவன் நினைவில் இருந்தது. புத்தகத்தை எடுத்துப் பார்க்கையில் முதல் காதலியை ஸ்பரிசித்த அதே ஸ்மரணையை மீண்டும் உணர்ந்தான். தேன் நுகரும் வண்ணத்துப்பூச்சியைப் போல் நூல்கள் பலவற்றைத் தொட்டுப் பார்த்தும் சிலவற்றை விரித்துப் பல வரிகளைப் படித்தவாறும் உலா வந்தான். சிலவற்றை வாங்க விருப்பு இருந்தாலும் அத்தானின் பர்சில் கைவைக்கும் நினைப்பில் நயத்தக்க நாகரீகம் சீ என்று துப்பியது.
கண்காட்சி மேசையருகே பலரோடும் பேசியவாறு பரபரப்பாகத் திரிந்த ஒருவர், அவ்வப்போது நிர்மலனைப் பார்த்துக்கொண்டிருந்தார். நிர்மலனுக்கும் அது தெரிந்தது. அவர்தான் இந்தக் கண்காட்சியை நடத்துபவராக இருக்கவேணும் என நினைத்துக்கொண்டான்.
நிர்மலன் ஜெயமோகனின் நூலொன்றுக்கு அருகே சென்றபோது, “தம்பி இஞ்சை புதுசா தெரிகிறீர்.. கனடாவுக்குக் கிட்டடியிலை வந்தனீரோ?” குரல் கேட்டுத் திரும்பினான். அவர்தான்.. கண்காட்சிக்காரர்.
“ஓம்...இப்பதான் ஒரு மாதத்துக்கு முதல்ல..”
நிர்மலனை விழிகளால் விழுங்கிச் செரித்த அந்த மனிதர் மேலும் தொடர்ந்தார்.
“இங்க புத்தகங்களைப் பார்க்கிற விதத்திலையும் புரட்டுற விதத்திலையும் யார் நல்ல வாசகன் எண்டுறதை நான் கண்டு பிடிச்சிருவன். கனநேரமாய் நல்ல புத்தகங்களோட மினக்கிடுறியள். கட்டாயம் நீங்கள் நல்ல வாசகனாய்தான் இருக்கவேணும். பிடிச்சதை எடுங்கோ சின்ன டிஸ்கவுண்ட் போட்டுத்தாறன். (திரும்பி ஜெயமோகனின் நூலைப் பார்த்துவிட்டு) எங்கடை எழுத்திலை இண்டைக்கு ஜெயமோகன்தான் உச்சம். ஜெயமோகனை வாசியுங்கோ உங்களுக்கும் எழுதவரும்”
சில கணத்துக்குள் நூல் விற்பனைக்கும் ஜெயமோகனுக்கும் விளம்பரம் செய்துவிட்டு புன்னகைத்தார்.
நிர்மலனுக்கு ‘நரியின் புன்னகை’ என்று எப்போதோ வாசித்து மறந்த ஒரு கதை நினைவில் மீண்டது
மறுபுறத்தில் கதிரை அடுக்குவது, விழா மேசையை ஒழுங்குபடுத்துவது என்ற இடையறாத பரபரப்பில் நூல் வெளியீட்டாளர் உட்பட பலர் ஓடியாடித் திரிந்தனர். பட்டுவேட்டி சட்டையில் வந்திருந்த வெளியீட்டாளரின் பாதி வழுக்கை வழியே வியர்வை வழிந்துகொண்டிருந்தது.
நூல் வெளியீட்டுக்கெனக் குறித்த நேரம் கடந்துவிட்டிருந்தது. அங்கு நின்றிருந்தோருக்கு அது கேள்விக்குரியதாக இருக்கவில்லை. அவர்கள் இதர்க்கு பழக்கப்பட்டவர்களாகத் தெரிந்தார்கள்.
மண்டபத்துக்குள் ஒரு அறுபது எழுபது பேர் வரையில் நின்றிருக்கலாம். அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவராக இருந்திருக்கவேண்டும். ஆங்காங்கு கும்பலாகக் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். பெரும்பாலானோர் கையில் ஒரு நூலை வைத்திருந்தனர். கண்காட்சி விற்பனையில் வாங்கியதாக இருக்கலாம். நானும் ஒரு நல்ல வாசகன் என பிறருக்குக் காட்டவும் அது உதவக்கூடும். நிர்மலன் தன் வெறும் கைகளைப் பொக்கற்றுக்குள் திணித்துக்கொண்டான்.
தூரத்தே நண்பர்களுடன் சிற்றுண்டி உண்டபடி பேசிக்கொண்டிருந்த அத்தான், நிர்மலனை அருகே வருமாறு அழைத்து நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவன் எழுத்தாளன் என்றதும் சற்று நிமிர்ந்து பார்த்தார்கள். அவ்வளவுதான்.
விழா தொடங்கியது. நிர்மலன் நிகழ்வைக் கவனிப்பதற்காக முன்னால் சென்றமர்ந்தான். அத்தான் நண்பர்களுடன் பின்னால் அமர்ந்து கொண்டார்.
தலைமையும் தொகுப்பும் ஒருவர்தான் போல. அகவணக்கம் செய்தார்கள். யாருக்கு அகவணக்கம் என்பது தனித்துவமாக இல்லாமல் பொதுப்படையாக இருந்தது. அது இப்போதெல்லாம் விழா தொடக்கத்துச் சம்பிரதாயங்களுள் ஒன்றாகிவிட்டது. அந்நாள்களில் அதற்கிருந்த தனித்துவம் இன்றில்லைப்போல் தெரிகின்றது.
தொகுத்தவரே அனைவரையும் வரவேற்றுக்கொண்டார். தன்னுரையில் நூலாசிரியர் பற்றிய சில குறிப்புகளைச் கூறினார். நிர்மலன் அதை உற்றுக்கேட்டான். தாயகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இங்கே அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களைத் தொகுத்து எழுதிய நூல் என்று தெரிந்தது. அதைத் தவிர அவர் வேறெதுவும் நூல் பற்றிப் பேசவில்லை. ஆனால் ஏதோதோ சம்மந்தா சமந்தமில்லாமல் பேசினார்.
அவருடைய உரை பேச்சுத்தமிழிலேயே இருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக தெருவில் நின்று உரையாடுவதைப்போல பேசினார். சில பகிடியளும் விட்டார். சிலதுக்கு மட்டும் சபையினர் சிரிக்க முயன்று தோல்வியைத் தழுவினர்.. யாரோ நேரம் போய்விட்டது என்பதைச் சைகையால் உணர்த்த முடித்துக்கொண்டு அடுத்தவரைப் பேச அழைத்தார்.
அவர் கையில் வெளியிடப்படவிருக்கும் நூலை வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். ஆசிரியரின் பிறந்த ஊர், அவருக்கும் தனக்குமான உறவு, அவருடைய ஆசிரியப் பணி போன்றவற்றை மட்டுமே கூறிக்கொண்டிருக்க தலைமை எனப்பட்டவர் சைகை காட்ட, “இவ்வளவு சிறப்பான மனிதர் எழுதிய இந்த நூலும் சிறப்பானதே” என்ற முத்தாய்ப்போடு அமர்ந்தார்.
பேச மற்றுமொருவர் அழைக்கப்பட்டார். சிரித்தபடியே தான் ஒரு சின்னவன், பேசத் தெரியாதவன் என்று கூறிக்கொண்டு பேச ஆரம்பித்தார். நூல் வாசிப்பின் முக்கியத்துவம் என்ன என்று கூறத்தொடங்கிய அவர், “நான் புதுமைபித்தனால் பித்தானேன். பின் ஜெயகாந்தனை வாசித்தேன், கி.ரா.வில் கிறங்கிப்போனேன். இன்று ஜெயமோகனில் மயங்கிக் கிடக்கிறேன்” என தன் வாசிப்புப் புலமையைப் பெரிதும் சிலாகித்துக்கொண்டார். மாஸ்ரரும் நல்ல வாசகன் என்பதால்தான் இப்படி எழுதியிருக்கிறார் எனக் கூற அவருடைய நேரமும் முடிந்து விட்டிருந்தது.
ஒருவர் தொப்பியோடு பேச எழுந்தார். தொப்பியோடு பேசினார். தான் வெளிப்படையாகப் பேசுவதாகக் குறிப்பிட்டார். இந்த நூல் புலம் பெயர்ந்தோர் வாழ்வின் ஆவணம் என்றார். தான் எழுதிய நூல்கள் குறித்துப் பேசினார். தனக்கும் தமிழக எழுத்தாளர்களுக்கும் உள்ள தொடர்பைக் கூறினார். தொப்பியோடு முடித்துக்கொண்டார்.
நிர்மலன் தனக்குள் சிரித்துக்கொண்டான். தன் மொட்டைத்தலையைப் பிறருக்குக் காட்டவிரும்பாத இவர், தன்னை வெளிப்படையான ஆள் எண்டு எப்படிக் கூறலாம். இந்தளவுக்கு மொட்டையை மறைக்கிறவன், மனசை எந்தளவுக்கு மறைப்பான்?
நிர்மலன் திரும்பிப் பார்த்தான். கண்காட்சி நூல் வணிகம் நடைபெற்றுக்கொண்டுதானிருந்தது. கண்காட்சியாளர் தன் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். பின்னால் பலர் சிற்றுண்டி அருந்தியவாறு சிறு குழுக்களாக கூடி நின்று பத்தும் சிலதும் பறைந்து.கொண்டிருந்தார்கள்
இன்னும் சில பேச்சுகள்......
நிறைவில் நிகழ்ந்த உரைகளால் களைத்துத் தளர்ந்திருந்த நூலாசிரியர் பேச எழுந்தார். கனடா தந்த அனுபவங்களை நூலாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். நூலை வாங்கி ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவருடைய களைப்பும் முதல் நூல் வெளியீடு என்ற உணர்ச்சிப் பெருக்கும் கடந்தோடிய நேரமும் அவரை அதிகமாகப் பேச அனுமதிக்கவில்லை.
நிர்மலன் அந்த நூல் குறித்து யாரேனும் விரிவாகப் பேசுவார்கள், அதன் நிறைகுறைகளை விமர்சனம் செய்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்துபோனான்.
நூலை யாரோ வெளியிட்டார். யாரோ பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பலர் நூலை வாங்கினார்கள். அத்தானும் ஒரு நூலை வாங்கினார். விழா நிறைவுக்கு வந்ததாகக் கூறினார்கள். நூலை எழுதியவரோடு சிலர் படம் எடுத்துக்கொண்டார்கள்.
விழா நிறைவுற்ற பின்னரும் பலர் தமக்குள் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல்கள் பலவும் விழாவோடு தொடர்புபடாத பிற விடயங்களைப் பற்றிப் இருப்பதாகத்தான் நிர்மலனுக்குத் தெரிந்தது.
கறையான்கன் கட்டிய புற்றுக்குள் பாம்புகளும் எலிகளும் ஓடி விளையாடுகின்றன என்ற உணர்வே அவனுக்கு ஏற்பட்டது.
இருவரும் கார் தரிப்பிடத்துக்கு வந்தார்கள். விற்கப்படாத நூல்களைக் கொண்ட பெட்டிகளை எழுத்தாளரின் உதவியாள் ஒருவர் காரில் ஏற்றிக்கொண்டிருந்தார். மறுபுறத்தில் விற்கப்படுவதற்கான நூல்களைக் கொண்டு வந்த காலியான பெட்டிகளை விற்பனையாளர் குப்பைத் தொட்டிக்குள் போட்டுக்கொண்டிருந்தார்.
“தம்பி எப்பிடி விழா? உன்ர நூலை இதைவிடச் சிறப்பா வெளியிடலாம்” என்றார் அத்தான்.
“இல்லை அத்தான்... இப்ப வேணாம்.. நான் கனடாவிலை படிக்கவேண்டியதுகள் கனக்கக் கிடக்கு. பிறகு பாக்கலாம்” என்றான் நிர்மலன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.