- ஓவியம் - AI -
அவசரமாகக் குளித்துவிட்டு வினோ வெளியில் வந்தாள். ஆசைதீரக் குளிப்பதற்கோ, ஆற அமரவிருந்து சாப்பிடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை என்ற நினைவில் கசிந்த கண்ணீர்த் துளிகள் அவளின் முகத்திலிருந்த நீர்த்திவலைகளுடன் சேர்ந்துகொண்டன. ஈரமாயிருந்த முகத்தையும் உடலையையும் துவாயினால் உலர்த்தியபடி, குளியலறைக் கண்ணாடியில் முன் நின்றவளுக்கு தான் வரவர அழகில்லாமல் போவதாகத் தோன்றியது. கன்னங்கள் மேலும் உட்குழிந்தும், கண்களின் கீழிருந்த கருவளையங்களின் அளவு பெருத்துமிருந்தது. சர்மிக்கு வரவர என்னைப் பிடிக்காமல் போவதற்கு இவையும் காரணமோ என மனதிலெழுந்த எண்ணம் அவளை மேலும் அழுத்தியது.
அன்றையப் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, வினோ வேலையிலிருந்து ஒரு மணிநேரம் முன்னதாக வந்திருந்தாள். சர்மி வகுப்புக்கு நேரத்துக்கு வரவில்லை எனப் பாடசாலையிலிருந்து இந்த மாதம் இரண்டு தடவை அழைப்பு வந்திருந்தது. அவளின் இந்தத் தவணைத் தேர்ச்சியறிக்கையும் திருப்தியாக இருக்கவில்லை. இன்றைய சந்திப்பு நிறைய அசெளகரியம் தருவதாக இருக்கப் போகிறதென்ற யதார்த்தம் அவளின் மனதை நெருடியது கூடவே சர்மியுடன் முதல் நாளிரவு நடந்த வாக்குவாதமும் அவளின் நினைவுக்கு வந்தது. சர்மியுடனான பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வுகாணலாம் என்பது உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. தகப்பன் இல்லாத பிள்ளை என்ற என அவள் கேட்டதையெல்லாம் நிறைவேற்றி அவளைச் செல்லமாக வளர்த்ததுதான் பிழையா?
“பத்தாம் வகுப்புக்கு வந்திட்டாய். கொஞ்சமெண்டாலும் பொறுப்பு வேண்டாமே? ஒழுங்காய்ப் படிச்சால்தானே யூனிவசிற்றிக்குப் போகலாம், ஒரு நல்ல வேலையைத் தேடலாம். அல்லது என்னைப்போல பஃற்ரரி வேலையிலைதான் மாயவேண்டியதுதான்!” சர்மி பற்றிய கரிசனையுடன்தான் அவள் சொன்னாள்.
“அம்மா, என்னால முடிஞ்சதைத்தான் நான் செய்யலாம். உங்களுக்குக் கெட்டித்தனம் இருந்தாதானே, அதை என்னட்டை நீங்க எதிர்பாக்கலாம்?” கொம்பியூட்டரில் விளையாடிக் கொண்டிருந்த சர்மி, அதிலிருந்த கண்களை விலக்காமல் எள்ளலாகப் பதிலளித்தாள்.
வேலைமுடிந்த களைப்புடன் வந்திருந்த வினோவுக்குச் சர்மியின் எதிர்வாதம் கோபத்தைக் கொடுத்தது. சடாரென்று அவளின் தோளில் எட்டித் தட்டினாள். “யோசிச்சுக் கதை. பொம்பர் போடுற குண்டுகளுக்கேயும், செல்லடிகளுக்குள்ளேயும் வாழ்ந்துகொண்டு நாங்க நிம்மதியாய்ப் படிச்சிருக்கேலுமே. எவ்வளவு கஷ்டப்பட்டனாங்க எண்டது உனக்கு விளங்கினால்தானே. உன்னைச் சொகுசா இருக்கவிட்டிட்டு எல்லாத்தையும் நான் செய்யிறன். கவனமாய்ப் படி எண்டதைத் தவிர வேறை என்னத்தை நான் உன்னட்டைக் கேட்கிறன்? மேக்கப் போட்டுக்கொண்டு சுத்துறதிலைதான் உனக்கு அக்கறையே தவிர, படிப்பிலை இல்லை,” சிவந்துபோன வினோவின் முகத் தசைகள் துடித்தன. மூச்சு வாங்கியது. ஒரு நிமிடம் ஆழமாக மூச்செடுத்தவள், தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, “எழும்பு, பிள்ளை. முதலிலை வீட்டுப் பாடங்களைச் செய். இந்த அறையை ஒதுக்கு. பிறகு விளையாடலாம்,” சர்மியைப் பார்த்துக் கனிவாகக் கூறினாள்.
ஆனால், சர்மி எந்த அசைவுமற்றிருந்தாள். சர்மியுடன் மேலும் சண்டைபிடிப்பதற்கு வினோவுக்கு வலுவிருக்கவில்லை. தன்னுடைய வேலைகளைப் பார்த்துவிட்டு அவள் பேசாமல் படுத்துவிட்டாள். காலையில் சர்மி வினோவுடன் எதுவும் பேசாமலேயே பாடசாலைக்குச் சென்றுவிட்டாள். அது வேறு வினோவின் மனதை அழுத்தியது.
X X X
வெளியில் மறை இருபதில் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. உடல் முழுவதையும் தடித்த ஆடைகளால் மூடிய பின்னர், அதற்கு மேல் ஜக்கற்றை அணிந்துகொண்டாள். வேகமாக வீசிய காற்று முகத்தில் தெளித்த பனித் துகள்கள் முகத்தை விறைக்கச் செய்தன. பாடசாலையை அடைந்தவள், விறைத்துப்போயிருந்த முகத்தில் சற்று மலர்வைப் பலவந்தமாகப் பரவவிட்டுக்கொண்டு முன்கதவைத் திறந்தாள். தன்னார்வத்தொண்டு செய்துகொண்டிருந்த மாணவர்களில் ஒருவர் அவளை வரவேற்று, சர்மியின் ஆசிரியர்களை எந்தெந்த அறைகளில் சந்திப்பது என்றொரு அட்டவணையைக் கொடுத்தார். அதன்படி அவள் சந்தித்த அத்தனைபேரும் கிட்டத்தட்ட ஒரே விடயத்தையே ஒப்புவித்தார்கள். “சர்மி எல்லோருக்கும் உதவிசெய்வா, எந்த நேரமும் சிரித்த முகம். ஆனால், வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை. வீட்டுப்பாடங்கள் செய்துகொண்டு வருவதுமில்லை. உங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அறிவித்திருந்ததுபோல. சிலவேளைகளில் வகுப்புக்களுக்கும் பிந்தித்தான் வாறா. இதுகளைப் பற்றி அவவுடன் கதைத்தனீர்களா? இப்படியான கரிசனைக்குரிய நடத்தைகளில் அவ ஈடுபடும்போது, பொதுவில் எவ்வகையான பின்விளைவுகளை நீங்கள் அவவுக்கு வழங்குவீங்க? உங்களின் சொல்லைக் கேட்காவிடில் என்ன செய்கிறனீங்க? சர்மியை எப்படி ஒழுங்காட்சிப் படுத்துறீங்க?”
அந்தக் கேள்விகள் எதற்குமே அவளால் ஒழுங்கான பதிலைக் கூற முடியவில்லை. அவளின் ஐந்து அடி உடல் மூன்றடியாகக் கூனிக்குறுகிப் போனது. தொண்டை அடைத்தது. வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே தோற்றுப்போய் விட்டேன் என்ற அவளின் உணர்வு கண்ணீராக வெளியேறியது. “உங்களைக் கவலைப்படுத்துவதற்காக நாங்கள் இவற்றைச் சொல்லவில்லை. அவவின் நன்மைக்காக நீங்களும் நாங்களும் சேர்ந்து சேர்ந்து வேலைசெய்ய வேண்டும், இந்தப் பழக்கங்களை மாற்றவேண்டும்,” என்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகளுக்கு எப்படியான பின்விளைவுகளை அவள் கொடுக்கலாமென்பதற்கு சில உதாரணங்களை அவர்கள் கூறினர். அவற்றில் எதையாவது தன்னால் செய்யமுடியுமா என அவள் யோசித்தபோது அவளுக்குத் தலைகனத்தது. தலையிடித்தது.
வீட்டுக்குப் போனதும், மேக்கப் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்தெறிந்தால் சர்மியின் கவனம் இனிமேல் மேக்கப்பில் இருக்காது என்ற நினைப்புடன் அவளின் அறையை வினோ சல்லடை செய்தாள். அப்போது, ஆண் மாணவன் ஒருவனுடன் சர்மி கட்டிப்பிடித்தபடி இருந்த படமொன்று அவளின் கையில் அகப்பட்டது. அது சாதரணமான அணைப்புப்போல அவளுக்குத் தோற்றவில்லை.
அந்த நேரம் வேகமாகத் தன் அறைக்குள் நுழைந்த சர்மி, “என்ர அறைக்கே நீங்க என்ன செய்யிறியள்?” என இரைந்தாள்.
“இது யாரடி?”
“என்ர பிரெண்ட்.”
“பிரெண்ட் எண்டால்?”
“என்ர போய்பிரெண்ட்”
“போய்பிரெண்ட்? படிக்கிற வயசிலை உனக்கென்னடி போய்பிரெண்ட்? பள்ளிக்கூடத்துக்கு நேரத்துக்குப் போகாமல் அவனோடையோ சுத்துறாய்?”
ஆத்திரத்துடன் அடிப்பதற்காக அவள் உயர்த்திய கையைச் சர்மி எட்டிப் பிடித்தாள், “எங்கை அடியுங்கோ பாப்பம்!” சர்மி சவால்விட்டாள்.
“அடிச்சால் என்னடி செய்வாய்? எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை நான் வளக்கிறன்... உனக்கு... உனக்கு...” சத்தம்போட்டு அவள் அழுதாள். பின்னர் என்னசெய்வதெனத் தெரியாமல் அவளின் தங்கை தனோவை அழைத்து நடந்ததைச் சொல்லிக் குமுறினாள்.
X X X
அடுத்த நாள் வழமைபோல சமைத்துவிட்டு, வேலைக்குச் செல்லவதெற்கென உடுப்பு மாற்றுவதற்குச் சென்றபோது, அவளின் கைத்தொலைபேசி ஒலித்தது. அடுத்த முனையில் இருந்த குரல், “என்ர பெயர் வனிதா, சிறுவர் உதவிச் சபையிலிருந்து பேசுறன். உங்கட மகளிடமிருந்து எங்களுக்கு அழைப்பொன்று வந்திருந்தது. அது பற்றிக் கதைப்பதற்கு இண்டைக்குப் பின்னேரம் உங்களின் வீட்டுக்கு வரவிரும்புறன். பின்னேரம் 4 மணிக்கு வரலாமா?” என்றது. ஏன், எதற்காக என அவள் எதுவுமே கேட்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதையும், என்ன நடக்கப்போகிறது என்பதையும் விளங்கிக்கொள்வதில் அவளுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. மனம் ஒடிந்துபோனது.
வேலையில் கவனம்செலுத்த முடியவில்லை. சர்மியுடனான பிரச்சினைகளையே அவளின் மனம் மீளமீள அசைபோட்டுக் கொண்டிருந்தது. ‘அரச மானியத்தில கிடைக்கிற வீடெடுத்து, அவளுக்கெண்டு தனியறையைக் குடுத்து அவளைத் தனிமைப்படுத்தினதுதான் எல்லாத்துக்கும் காரணமெண்டு அம்மா சொல்றது சரியா?’ அடிக்கடி கண்களில் திரையிட்ட கண்ணீரை முழங்கையால் துடைத்தபடி, பாண் செய்வதற்கான மாவை உருட்டும் மெசினைச் சுத்தம்செய்து கொண்டிருந்தாள். திடீரென உருள ஆரம்பித்த உருளை ஒன்றுக்குள் அவளின் இடது கை அகப்பட்ட வலியில் அவள் கதறிய கதறல் கேட்டுப் பக்கத்திலிருந்த எல்லோரும் ஓடிவந்தனர். கையை எப்படியோ அவள் வேகமாக இழுத்துவிட்டாள், எனினும், துண்டிக்கப்பட்ட கடைசி மூன்று விரல்களிலிருந்தும் கொட்டுப்பட்ட இரத்தம் அவளை மயங்கி விழச்செய்தது.
கண் விழித்தபோது அவள் மருத்துவமனையில் இருந்தாள். கையில் சத்திரசிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இடது தோளும், கையும் பலமாக வலித்தன. அதைவிட அவளுக்கு மனம் அதிகமாக வலித்தது. சர்மியும் தனோவும் அவளைப் பார்க்க வந்திருந்தனர். சர்மி அவளையும் அவளின் கையையும் பார்த்து பார்த்து அழுதாள். அவளும் அழுதாள். இனியும் அந்த வேலையைச் செய்து சர்மியை வளர்க்கமுடியுமா என்பது அவளுக்குப் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. கண்ணீர் மல்கியபடி நின்றுகொண்டிருந்த தனோ இருவரையும் ஆறுதல்படுத்தினாள்.
X X X
ஐந்து நாள்களின் பின் வீட்டுக்குப் போனவளைச் சந்திப்பதற்கு வனிதா வந்திருந்தா.
“உங்களுக்கு நடந்த விபத்தைப் பற்றி அறிஞ்சன். வெரி சொறி, வினோ. இருந்தாலும், என்ர கடமையை நான் செய்யவேண்டியிருக்கு. அண்டைக்கு உங்கட மகளுக்கும் உங்களுக்கும் நடந்த சம்பவம் பற்றிக் கதைக்கலாமா?”
“இது என்ர விதி,” அவள் விக்கிவிக்கி அழுதாள்.
“ம்ம், கஷ்டம்தான், வெரி சொறி. ஆனா, அண்டைக்கு என்ன நடந்ததெண்டதை விளங்கிக்கொள்றதுக்கு உங்கட பக்கக் கதையையும் நான் அறியோணும்.”
“என்னத்தைச் சொல்றது? அவ ஒழுங்காய்ப் படிக்கிறதில்லை, மிகக் குறைஞ்ச புள்ளிகள்தான் எடுத்திருக்கிறா. அதோடை வகுப்புகளுக்கும் பிந்தித்தான் போறாவாம்.”
“அது தொடர்பாக நீங்க என்ன செய்தனீங்க?”
“நான் ஏசினான், நீங்க எண்டா என்ன செய்வீங்க, ஏச மாட்டீங்களா? நான் கஷ்டப்பட்டு வேலைசெய்யிறதே … ஏன் வாழ்றதே அவவுக்காகத்தான்!” வலது கையால் தலையைத் தாங்கியபடி அவள் அழுதாள்.
“உங்களுக்குச் சரியான ஏமாற்றமாய்த்தான் இருந்திருக்கும். ஆனா, அடிக்கிறது பிழை, அது வன்முறை எண்டது உங்களுக்கு விளங்குதா?”
“கையைத் தூக்கினான், ஆனா அடிக்கேல்லை. சரி, இனிமேல் அப்பிடி நடக்காமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்றன்.”
“நீங்க அடிக்கடி அடிக்கிறனீங்க எண்டு சர்மி சொல்றா. பிள்ளையளைக் காயப்படுத்தாம ஒழுங்காட்சிப்படுத்த நீங்க கற்றுக்கொள்ளவேணும். செயல்களுக்கான பின்விளைவுகளை நீங்க கொடுக்கலாம். அதோடை சர்மி வளர்ந்திட்டா, அவவுக்கு நீங்க விஷயங்களை விளங்கப்படுத்தலாம்.”
“நான் என்ன சொன்னாலும் அவ கேட்கிறதில்லை. அண்டைக்கும் அவ வாய்காட்டினா, எனக்குக் கோவம் வந்திட்டிது.”
“கோவம் வாறது வாஸ்தவம்தான். ஆனா அதைக் கையாளத் தெரியவேணும். இனி, நீங்களும் நானுமாய் சேர்ந்து வேலைசெய்வோம். எது சரி, எது பிழை எண்டதை சர்மிக்குச் சொல்லிக்கொடுப்பம். பள்ளிக்கூடத்துக்குச் சர்மி நேரத்துக்குப் போறதுக்கு எப்படி உதவிசெய்யலாமெண்டு பார்ப்பம்.”
பின்னர் சர்மியுடனும் வனிதா கதைத்தா. முடிவில் இருவரையும் ஒன்றாகச் சந்தித்தா. “சர்மி, அம்மாவுக்கு விபத்து நடந்திருக்கு, நீங்க அவவுக்கு ஒத்தாசையா இருக்கோணும். அம்மா, நீங்க சர்மியோடை மனம்விட்டுப் பேசுங்கோ, நீங்க ரண்டு பேரும் ஒத்துக்கொள்ளுறமாதிரியான ஒழுங்குமுறைகளை உருவாக்கிக் கொள்ளுங்கோ. ரண்டு கிழமையிலை நான் திரும்பவும் சந்திக்கிறன், சரியா?”
வனிதா போய்விட்டா. சாப்பாடு செய்துகொண்டு தனோ வீட்டுக்கு வந்திருந்தாள். “அக்கா, நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. முதலில நீ உன்னைக் கவனி. கொஞ்ச நாளைக்கு சர்மியை நான் என்னோடை வைச்சிருக்கிறன்.”
ஏதோ ஒரு மாற்றம்வருமென்ற நம்பிக்கையுடன் அவளும் அதற்குச் சம்மதித்தாள்.
சர்மி வந்து, “அம்மா போட்டு வாறன்,” என்றாள். அவளால் சர்மியுடன் மனம்விட்டுக் கதைக்க முடியவில்லை. அவளின் கண்களைக் கண்ணீர் திரையிட்டது, நெஞ்சு விம்மியது,
அவர்கள் போனதும், வீட்டில் வெறுமை மேலும் பூதாகாரமாகத் தெரிந்தது. வினோவுக்குத் தன்மேல் பரிதாபமாக இருந்தது. 2009இல், வன்னியில் நடந்த உச்சக்கட்டப் போரின்போது, வீட்டுக்கொருவர் என்ற ஆள்சேர்ப்பின்படி இயக்கத்தில் சேர்க்கப்பட்ட அவளின் கணவனை நினைத்து அவள் கதறியழுதாள். ஐந்து வருடத் தாம்பத்தியம் அழிக்கப்பட்டபோதும், மூன்று வயதில் இருந்த சர்மிக்காகத் தான் வாழவேண்டுமென அன்று அவள் நினைத்தாள். அதற்காக அவள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், இன்றோ தன் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை.
X X X
பெரிய பிரச்சினையென்று எதுவுமில்லாமல் ஒன்றரை மாதம் கழிந்தது. ஆஸ்பத்திரியும் வீடுமென வினோவின் நாள்கள் நகர்ந்தன. இடையிடையே தனோவுடன் சர்மி வினோவிடம் வருவாள். பிணைப்பை ஒட்டமுடியாமல் ஏதோ ஒன்று தடைசெய்ய, ஏனோ தானோவென அவளும் சர்மியும் பேசிக்கொள்வார்கள். எல்லாம் ஒழுங்காகப் போகிறதா எனத் தனோவிடம் கேட்டு அவள் தெரிந்துகொள்வாள்.
வழமைபோல அன்றிரவும் தனோவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது.
“அக்கா, உனக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாதெண்டு ஒரு கிழமையா நான் ஒரு விஷயத்தை மறைச்சுக் கொண்டிருக்கிறன். இனியும் மறைக்கேலாது.”
“என்னவாயிருந்தாலும் சொல்லு, தனோ. சர்மி சொல்லுக்கேட்கிறாளில்லையே?”
“பள்ளிக்கூடத்தாலை அவள் நேர வீட்டுக்கு வாறதில்லை. இரவிலும் போனிலைதான் இருக்கிறாள். என்ன, ஏது எண்டு கேட்டாலும் ஒண்டும் சொல்றதில்லை. நேற்றுப் பின்னேரம் இவர் மோலுக்கை அவளை ஒரு பெடியனோடை கண்டவராம். இனியும் நாங்க இங்கை அவளை வைச்சிருக்கிறது சரிவராதெண்டு அவர் நினைக்கிறார்...”
“தனோ, நான் ஏதோ பாவம் செய்திருக்கிறன். நீ, இண்டைக்கே அவளை இங்கை கொண்டுவந்துவிட்டிடு.” வினோவுக்கு நெஞ்சடைத்தது.
“நாளைக்கு வெள்ளிக்கிழமைதானே. பின்னேரமாய்க் கூட்டிக்கொண்டு வாறன். சொறி அக்கா.”
தனோ சர்மியைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டுப் போனதும், வினோ சர்மியைக் கூப்பிட்டாள். “அம்மா, காயப்பட்டிருக்கிறன் எண்டதைப் பற்றி உனக்கொரு அக்கறையுமில்லையே? ஏன் வெறும் சுயநலப் பேயா இருக்கிறாய்.”
“நான் என்னத்திலை சுயநலமாயிருக்கிறன்? உங்களுக்கு நடந்ததைப் பற்றி எனக்கும் கவலைதான், அதுக்காண்டி நான் எந்த நேரமும் அழுதுகொண்டிருக்கேலுமே?”
“உன்னை அழுதுகொண்டிருக்கச் சொல்லி நான் சொல்லேல்லை. எனக்கு இன்னும் வேதனையைத் தராமல் இருக்கப்பார் எண்டுதான் கேட்கிறன்.”
“உங்களுக்கு நான் செய்தனான்?”
“பள்ளிக்கூடம் முடிஞ்சதும் நேர நீ வீட்டுக்குப் போறதில்லை எண்டுதான் சித்தி உன்னை இங்கை திரும்பக் கொண்டுவந்து விட்டிருக்கிறா. அவையின்ர பிள்ளையளும் உன்னைப் பாத்துப் பழகியிடுவினமெண்டு சித்தப்பா பயப்பிடுகிறார். ஒரு நாள் மோலிலை உன்னை அவர் கண்டவராம்…”
“நான் என்ர பிரெண்ட்ஸ்சோடை சந்தோஷமாக இருக்கிறது பிழையே? இது கனடா, இங்கை சுதந்திரமிருக்கு!” சர்மியின் குரல் உயர்ந்தது.
“நான் உன்னோடை வாக்குவாதப்பட விரும்பேல்லை. நீ என்னோடை இருக்க வேணுமெண்டால் என்ர சொல்லைக் கேட்டு நட. அவ்வளவும்தான்”
“நீங்க சொல்லுறது சரியெண்டால்தானே நான் செய்யலாம். வனிதா சொன்னது ஞாபகம்தானே.”
“பிள்ளைகளின்ர நன்மைக்காண்டித்தான் பெற்றோர் எதையும் சொல்லுவினம். எனக்கும் சித்திக்கும் உன்ர வாழ்க்கையில இருக்கிற அக்கறை அந்த வனிதாவுக்கு இருக்காது.”
“நீங்க சட்டம் போடுறதுக்கு முதல் நான் ஒண்டு சொல்றன். என்ர பிரெண்ட்ஸ்சோடை பழகக்கூடாதெண்டு நீங்க சொல்லேலாது.”
“பழக வேண்டாமெண்டு நான் சொல்லேல்லை. ஒழுங்காய்ப் பள்ளிக்கூடத்துக்குப் போ. நல்லாய்ப் படி. இப்ப உனக்கு போய்பிரெண்ட் ஒண்டும் தேவையில்லை எண்டுதான் நான் சொல்றன்.”
“பீற்றரை நான் சந்திப்பன், கதைப்பன். நீங்க அதைத் தடுக்கேலாது.”
“சரி, கதை, கதைக்கிறதை நிற்பாடேலாது எண்டது எனக்கும் தெரியும். ஆனா அவனோடை கண்டபடி திரியேலாது, அப்பிடித் திரியிறதா நான் அறிஞ்சா, நீ இங்கை என்னோடை இருக்கேலாது. அதோடை பள்ளிக்கூடம் விட்டதும், உடனை வீட்டுக்கு வந்துடோணும்.”
“ஓ, நீங்க என்னைப் பயப்படுத்துகிறீங்களோ. சரி, அப்பிடியெண்டால் நான் இங்கை இருக்கேல்லை.”
சர்மிக்கும் அவளுக்கும் இடையில் நடந்த பிரச்சினையைத் தனோவுக்குச் சொல்லி அவள் மறுகினாள். வேறு எப்படித்தான் தான் கதைத்திருக்க முடியுமெனக் கேட்டாள். அவள் சொன்னவை சரியென ஆமோதித்த தனோ, வீட்டில்தானே சர்மி எப்படியும் இருக்கவேண்டும் என்பதால் அவள் சொல்லுக்கேட்டுத்தானே ஆகவேண்டும் என்றும், அவளை உறுதியாக இருக்க்கும்படியும் ஆலோசனை சொன்னாள்.
X X X
அடுத்த திங்கள்கிழமை மாலை, திரெபி முடிந்துவரும்போது பனிப் புயலடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பனிக் குளிரின் தாக்கத்தில் கைவிரல்கள் இல்லாத இடங்கள் வழமையிலும் அதிகமாக அவளுக்கு வலித்தன. அந்த வலியையும் விறைப்பையும் குறைக்கும் முயற்சியாக அவ்விடத்தை வெதுவெதுப்பான துவாய் ஒன்றால் அவள் உருவிக்கொண்டிருந்தாள். அப்போது, வனிதாவிடமிருந்து அவளுக்கு மீளவும் அழைப்பு வந்தது.
“உங்களுக்கும் சர்மிக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பற்றிச் சர்மி சொன்னா. இதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியிருக்கு எண்டு எனக்கு வருத்தமாயிருக்கு. உங்களோடை தொடர்ந்து வாழுறதுக்கு சர்மி விரும்பேல்லை. வீட்டிலை ஒரு பிள்ளை இருக்க விரும்பாட்டி, இருக்கத்தான் வேணுமெண்டு சொல்லி நாங்க வற்புறுத்தேலாது. நாளைக்கு நான் உங்கட வீட்டை வந்து அவவின்ர பொருள்களை எடுத்துக்கொண்டு போகலாமா? அதுகளை எடுத்துவைக்கிறதுக்கு உங்களால ஏலுமா அல்லது சர்மியே என்னோடை வந்து அதுகளை எடுக்கலாமா?
வினோவுக்கு அவளின் காதுகளை நம்ப முடியவில்லை. ‘என்னையே சுத்திச் சுத்தி வந்த என்ர பிள்ளைக்கு இப்ப நானொரு தேவையில்லாத ஆளாய்ப் போயிட்டனா? அம்மா என்ற உறவே அவளுக்கு இனித் தேவையில்லையா?’ வினோவுக்குத் தலைசுற்றியது. ஓரிரு நிமிட மெளனத்தின் பின் சரி போகட்டுமென மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.
“நானே எல்லாத்தையும் எடுத்து வைக்கிறன், நீங்களே வந்து எடுத்துக்கொண்டு போங்கோ.”
“வெரி சொறி, வினோ. உங்க ரண்டு பேரின்ரையும் மனமும் விரைவிலமாறி, உறவை மீளவும் புதுப்பிச்சுக் கொள்றதுக்கு என்ர வாழ்த்துகள்!”
கொட்டிக்கொண்டிருந்த பனி மழையுடன் இப்போது சாதுவான இடிமுழக்கமும் இணைந்து கொண்டது. வினோவின் உடலும் மனமும் மரத்துப் போயிருந்தன. வெளியே குவிந்திருந்த அந்த அடர் இருள் உள்ளேயும் அவளைச் சூழப் பரவுவதுபோல அவள் உணர்ந்தாள். எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழிந்தன. அவளின் வலி அவளை இவ்வுலகுக்கு மீளக் கொண்டுவந்தது.
‘சரி, இத்தனையையும் மேவி வாழ்ந்திட்டன், புதிசா இனி இது என்னை என்ன செய்யப்போகுது,’ தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். தேநீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. கேத்திலை வலது கையிலெடுத்து இடது பெரு விரலால் குழாயைத் திறந்து கேத்திலுக்குள் தண்ணீரை நிரப்பினாள்.
கண்ணீர் அவளின் கன்னங்களை நனைத்து ஓட, அவளுக்கு விக்கலெடுத்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.