எழுத்தாளர் கற்சுறா புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையானவர்களில் ஒருவர். கவிதை, விமர்சனம், இதழியல் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. எக்ஸில், அறிதுயில் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர்.
இவரது விமர்சனக்கட்டுரைகள் மிகுந்த சீற்றத்துடன் கர்ச்சிப்பவை. அவற்றில் கூறப்படும் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்களை வேண்டி நிற்பவை. ஆனால் அக்கட்டுரைகளில் இவர் கையாளும் விமர்சனப் போக்கு காரணமாக, இவர் எதிர்பார்க்கும் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. அது துரதிருஷ்டமானது. அதற்குக் காரணமாக இவர் கையாளும் விமர்சனப்போக்கே இருந்து விடுவது வருத்தத்திற்குரியது.
உதாரணத்துக்கு அண்மையில் 'டொரோண்டோ'வில் நடைபெற்ற கவிஞர் சேரனின் 'காஞ்சி' நூல் வெளியீட்டில் எழுத்தாளர்களான 'காலம்' செல்வம், 'நான்காவது பரிமாணம்' க.நவம் ஆகியோர் பற்றி இவர் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
1. 'எதை வேண்டுமானாலும் ரொரண்டோவில் புத்தகவெளியீடு என்ற பெயரில் சொல்லிக் கொழுத்திவிட்டுப் போகலாம் என்பதற்கு இவர்கள் சாட்சி. இங்கே ஒன்று செல்வம் அருளானந்தம். மற்றது க.நவம். இவர்களுக்கு இலக்கியம் பற்றியும் அறிவில்லை. அதன் கருத்தியல் பற்றியும் அறிவில்லை.'
இவ்விதம் சாடுவது தனிப்பட்ட தாக்குதல். இதற்குப் பதிலாக அவர்கள் குறிப்பிட்ட விடயங்களை அல்லது அவர்களது ஏனைய படைப்புகளை மேற்கோள்களாக வைத்து ஏன் தான் அவர்களுக்கு இலக்கியம் பற்றி அறிவில்லை, அதன் கருத்தியல் பற்றியும் அறிவில்லை என்று ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருந்தால் அது ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு வழி வகுத்திருக்கும்.
மேலும் க.நவம், செல்வம் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்திருப்பார்கள். கற்சுறா போன்ற காத்திரமான இலக்கியவாதியிடமிருந்து இவ்விதமான தனிப்பட்ட தாக்குதல்கள் ஆரோக்கியமானவை அல்ல.
அடுத்தது காலம் செல்வத்தை இவ்விதம் சாடும் இவர் ஏன் காலம் சஞ்சிகையில் எழுதினார் என்றொரு கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
க.நவம் நான்காவது பரிமாணம் சஞ்சிகையை நடத்தியவர், நீண்ட காலம் எழுத்துலகில் இருப்பவர். அவர் நிச்சயம் இலக்கியப் போக்குகள், கருத்தியல்புகள் பற்றி அறிந்தவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இது என் கருத்து.
இவ்விதமான கற்சுறாவின் கூற்றுகளைத் தனிப்பட்ட தாக்குதல்களாகவே நான் பார்க்கின்றேன்.
2. கற்சுறாவின் அடுத்த குற்றச்சாட்டு: " 'நம்முடன் கூட வாழ்ந்து இறந்து போன இருவரைப்பற்றி காலம் செல்வம் அண்ணன் சொல்லும் மோசமான ஒரு கருத்து நிலை. 30.30 நிமிடத்திலிருந்து 33.50 வரையும் கண்டிப்பாகப் பாருங்கள். மற்றவற்றைப் பின்பு ஆறுதலாகப் பாருங்கள்.'
இங்கு கற்சுறா குறிப்பிடுவது காணொளியில் காலம் செல்வம் கவிஞர் செழியன், ஓவியர் கருணா அவர்களின் ஆளுமை பற்றி நிகழ்வில் கூறியவை பற்றியது.
காலம் செல்வம் குறிப்பிடுவது தவறு என்றால், உண்மையில்லை என்றால் ஏன் அக்கூற்றுகள் உண்மையில்லை என்று தனது காரணங்களைக் குறிப்பிட்டிருந்தால் அது ஆரோக்கியமான தர்க்கத்துக்கு வழி வகுத்திருக்கும்.
இன்று கருணாவும் உயிரோடில்லை. செழியனும் உயிரோடில்லை. ஆனால் அவர்களுடன் இறுதிவரை பழகிய பலர் ,குறிப்பாக தேடகம் குழுவினர் இங்கிருக்கின்றார்கள். அவர்கள் நிச்சயம் உண்மை, பொய் அறிந்திருப்பார்கள். அவர்களில் யாராவது கற்சுறா இவ்விதம் குற்றஞ் சாட்டுவது சரியா அல்லது தவறா என்பதை எடுத்துரைக்கக் கூடும்.
இப்பதிவுக்கு எதிர்வினையாற்றுபவர்கள் இத்தர்க்கத்தை ஆரோக்கியமாகக் கொண்டு சென்றால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையுமென்று கருதுகின்றேன்.
கற்சுறாவின் சீற்றத்துக்குக்காரணமான தடயத்தார் வெளியிட்ட காணொளி இதுதான் - https://www.youtube.com/watch?v=qc2V67_yLaQ
கற்சுறாவின் முகநூற் பதிவு - https://www.facebook.com/katsura.bourassa/posts/pfbid0QPSwkNcFWRvMEyWZoTpAAqRBVxGgHQSEpu8Uv76wvS9inq2RKnHAHTb2G37Egkvil
எதிர்வினைகள்
கற்சுறா Katsura Bourassa
இக்கருத்தினை வெளிப்படுத்தியதற்கு நன்றி. எனது முகநூல் பதிவுகள் என்னுடைய கோபத்தின் பதிவுகளே! என்னை ஒரு எழுத்து ஆளுமை என்றோ கவிஞன் என்றோ யாரும் அழைக்க விரும்புவதில்லை. ஏனெனில் என்னுடைய கொள்ளளவு எனக்குத் தெரியும். அதனால் யாரும் என்னைக் கவிஞன் என்று குறிப்பிடும் பொழுது கூச்சம் எழும். அந்த அடையாளத்திற்குள் - கட்டமைப்பிற்குள் நான் இல்லவேயில்லை என்பதனை முதலில் சொல்லிவிடுகிறேன்.
'இவரது விமர்சனக்கட்டுரைகள் மிகுந்த சீற்றத்துடன் கர்ச்சிப்பவை. அவற்றில் கூறப்படும் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்களை வேண்டி நிற்பவை. ஆனால் அக்கட்டுரைகளில் இவர் கையாளும் விமர்சனப் போக்கு காரணமாக, இவர் எதிர்பார்க்கும் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. அது துரதிருஷ்டமானது. அதற்குக் காரணமாக இவர் கையாளும் விமர்சனப்போக்கே இருந்து விடுவது வருத்தத்திற்குரியது' என்று சொல்லியிருக்கிறீர்கள்.
இலக்கியம் என்பதும் ஒருவரது எழுத்து என்பதும் இந்த சமூகத்திற்கு ஏன் என நாம் யோசித்தால், வாழ்காலம் பூராவும் யுத்தத்திற்குள் புரண்டு சிதைந்த ஒரு சமூகத்திற்கு எழுத்து என்பது இன்னொரு உன்னத தளத்திற்குரிதாக மாறியிருக்க வேண்டும். அது நமது சமூகத்தில் நடைபெற்றிருக்கிறதா என்றால் எம்மிடம் என்ன பதில் இருக்கிறது? புனைவுத்தளத்தில் கூட எழுத்தை அடையாளம் காட்டுவதை விடவும் எழுத்தாளர்களின் விம்பங்களைக் காவுவதில் நாம் கரைந்து போகிறோம். அந்த விம்பங்களை கேள்விகளற்று வழிபடவே நம்மவர்கள் முன்நிற்கிறார்கள். அவர்கள் மீது ஏற்படும் கோபம் மிகவும் எரிச்சலடைய வைக்கிறது. அதனால் அந்தக் கோபம் தீரும் வரை திட்டிவிடுகிறேன். எனது திட்டல்கைளை முகநூலில் உடனடியாகச் செய்தாலும் எனது முழுமையான கட்டுரைகளில் அவற்றை விபரமாகவே ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறேன். எதையாவது நான் ஆதாரம் இல்லாது எனது முழுமையான கட்டுரைகளில் சொல்லியிருந்தால் அடையாளம் காட்டுங்கள். முகநூலில் எல்லாம் விபரமாக எழுதிவிட முடியாது. அவசரத்துக்கு அப்படியானவர்கள் மீது காறித் துப்பிவிட்டுச் செல்ல முடியும். அவ்வளவே!
Navaratnam Giritharan
//முகநூலில் எல்லாம் விபரமாக எழுதிவிட முடியாது. அவசரத்துக்கு அப்படியானவர்கள் மீது காறித் துப்பிவிட்டுச் செல்ல முடியும். அவ்வளவே!//
முகநூலில் நிறையவே எழுதலாம். அல்லது உங்கள் வலைப்பூவில் எழுதலாம். முகநூலில் இணைப்பைக் கொடுக்கலாம். முகநூல் இருப்பது காறித்துப்புவதற்காக அல்ல. முகநூல் நட்புக்கான இருப்பிடம். பல்வகைச் சிந்தனை மிக்கவர்களும் நட்புடன் இணைந்து பயணிக்குமிடம். ஆனால் பலர் முகநூலைக் காறித்துப்புவதற்கே பயன்படுத்துவது அதன் உண்மையான நோக்கத்தைக் கெடுப்பதற்காக என்றே கருதுகின்றேன். நீங்கள் ஒருவரைப்பற்றி முகநூலில் காறித்துப்பும்போது அதை சம்பந்தப்பட்டவர் மட்டும் பார்க்கவில்லை. அவரது குடும்பத்தவர், குழந்தைகள் உட்படப் பலர் பார்க்கலாம். அவரது நண்பர்கள் பார்க்கலாம்., அவரது ஆசிரியர்கள் பார்க்கலாம். இப்படிப்பலர் பார்க்கலாம். இதையும் முகநூலில் காறித்துப்புகையில் கவனிப்பது முக்கியம் என்பதென் கருத்து.
Navaratnam Giritharan
Katsura Bourassa // புனைவுத்தளத்தில் கூட எழுத்தை அடையாளம் காட்டுவதை விடவும் எழுத்தாளர்களின் விம்பங்களைக் காவுவதில் நாம் கரைந்து போகிறோம். //
இது தவிர்க்க முடியாதது. நீங்கள் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளுமைகளைப் பற்றிக் குறிப்பிடும்போதும் அதையேதான் செய்கின்றீர்கள். அது அவ்வெழுத்தாளர்களின் எழுத்துகள் உங்களைப் பாதித்ததன் விளைவு. வாசகர்கள் எல்லோரும் கற்சுறா போலிருக்க முடியாது. வாசகர்கள் பலவிதம். அவரவர் தம்மைப் பாதித்த எழுத்தாளர்களைப்பற்றி பல்வகைகளில் நினைவில் வைப்பார்கள். அது அவரவர் உரிமை. எல்லோரும் இலக்கியம் பற்றி, அரசியல் பற்றி நீங்கள் தொடரும் சிந்தனைகள்படித் தொடர வேண்டுமென்று நினைப்பதன் விளைவுதான் உங்கள் ஆத்திரத்துக்குக் காரணம். அவ்விதமான ஆவேசத்துக்குப் பதில் நீங்கள் உங்கள் கருத்தை எடுத்துக்கூறி, ஏன் அவ்வாசகர்களின் கருத்துகளுடன் உடன்படவில்லை என்பதை வெளிப்படுத்துவது என்னைப்பொறுத்த வரையில் ஆரோக்கியமானது. நீங்கள் யாரையும் உங்கள் கருத்தை ஏற்க வேண்டுமென்று வற்புறுத்த முடியாது. ஆனால் உங்கள் கருத்தைத் தர்க்கபூர்வமாக எடுத்துரைக்கலாம்.
Katsura Bourassa
நான் எங்கே எனது கருத்தை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.? எழுந்தமானமாகக் கருத்துச் சொல்லவிளையும் போது இடை மறித்துச் சொல்ல வேண்டும். அவ்வளவுதான் நான் ஒருவருடைய எழுத்தை கரிசனைக்குட்படுத்தும் பொழுது அஏன் என்பதனையும் அடையாளம் காட்டுகிறேன். அவ்வாறு காட்டாத இடம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.
Navaratnam Giritharan
.'எதை வேண்டுமானாலும் ரொரண்டோவில் புத்தகவெளியீடு என்ற பெயரில் சொல்லிக் கொழுத்திவிட்டுப் போகலாம் என்பதற்கு இவர்கள் சாட்சி. இங்கே ஒன்று செல்வம் அருளானந்தம். மற்றது க.நவம். இவர்களுக்கு இலக்கியம் பற்றியும் அறிவில்லை. அதன் கருத்தியல் பற்றியும் அறிவில்லை.'
இவ்விதம் சாடுவது தனிப்பட்ட தாக்குதல். இதற்குப் பதிலாக அவர்கள் குறிப்பிட்ட விடயங்களை அல்லது அவர்களது ஏனைய படைப்புகளை மேற்கோள்களாக வைத்து ஏன் தான் அவர்களுக்கு இலக்கியம் பற்றி அறிவில்லை, அதன் கருத்தியல் பற்றியும் அறிவில்லை என்று ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருந்தால் அது ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு வழி வகுத்திருக்கும். என்கிறீர்கள். "சேரன் இன்றி நவீன தமிழ்க் கவிதை இல்லை என்றதொரு காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமைதரும் விடயமாகும்." இந்த ஒரு கூற்று எதைச் சொல்ல வருகிறது.? இதனை நான் மேற்கோள் காட்டித்தான் கேட்டிருக்கிறேன். கவிதை பற்றிய உரையாடலுக்குள் இந்த வரி எதனை முன்மொழிகிறது? செழியனும் கருணாவும் சேரன் போன் பண்ணினாலே இருக்கும் இடத்திலிருந்து எழுந்து நின்றுதான் பேசுவார்கள் என்று செல்வம் அண்ணன் சொன்னதும் அந்தக் காஞ்சி நூல் வௌயீட்டில்தான். எங்களோடு இருந்து மறைந்து போன செழியன் பற்றியும் கருணா பற்றியும் அவர்களது மரணம் பற்றிய அஞ்சலிக்குறிப்பிற்கு அப்பால் ஒரு உரையாடல் நடக்கவேயில்லை என்று அபத்தம் இதழில் நான் எழுதயிருந்ததும் இதற்காகத்தான். இறந்து போனவர்கள் பற்றிய ஒரு பல்வேறு பட்ட உரையாடல்கள் நடைபெறாது விட்டால் செல்வம் அண்ணன் போன்றவர்கள் தங்களது எண்ணப்படி அவர்களது அடையாளத்தை மாற்றி அமைத்துவிடுவார்கள். செழியனது இறுதிக்காலங்கள் கூட அவ்வாறுதான் இருந்தன. எனக்கு மிக அதிகமான கதைகள் தெரியும்.
நவரத்தினம் கிரிதரன்
Katsura Bourassa // "சேரன் இன்றி நவீன தமிழ்க் கவிதை இல்லை என்றதொரு காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமைதரும் விடயமாகும்." இந்த ஒரு கூற்று எதைச் சொல்ல வருகிறது//
இது அவரது கருத்து. ஒருவருக்குத் தன் கருத்தைக் கூறும் உரிமை உண்டல்லவா? அதை எல்லாரும் ஏற்க வேண்டுமென்பதில்லையே. //செல்வம் அண்ணன் போன்றவர்கள் தங்களது எண்ணப்படி அவர்களது அடையாளத்தை மாற்றி அமைத்துவிடுவார்கள். // நீங்கள் செல்வம் திட்டமிட்டுப் பொய் கூறுகின்றீர்கள் என்று கூற வருகின்றீர்கள் என்று கருதுகின்றேன். அது பொய் என்பதற்கு ஆதாரங்கள் உண்டா? அதுதான் குறிப்பிட்டேன் கருணா, செழியன் இருவரும் இல்லாவிட்டாலும், அவர்களுடன் நெருங்கிப்பழகிய 'தாய்வீடு' ஜெயகுமார், தேடகம் குழுவினர் எனப் பலர் இருக்கின்றனர். அவர்கள் இவ்விடயத்தில் முன் வந்து , அவர்களுக்கு இது பற்றித் தெரியும் பட்சத்தில் சரியான தகவலைத்தெரிவித்தால் தவிர , உண்மை எது என்பது தெரியப்போவதில்லை. மேலும் 'இவர்களுக்கு இலக்கியம் பற்றியும் அறிவில்லை. அதன் கருத்தியல் பற்றியும் அறிவில்லை.' என்று கூறும்போது நீங்கள் இவ்விடயத்தைப் பொதுமைப்படுத்துகின்றீர்கள். அதனால் அதைத் தனிப்பட்ட தாக்குதலாகவே காண்கின்றேன்.
Katsura Bourassa
கருணா பற்றிய செழியன் பற்றிய இந்தக் கூற்றுக் குறித்து நீங்கள் குறிப்பிட்டவர்களை வெளிப்படையாகப் பொது வௌியில் பேசச் சொல்லுங்கள். நான் நானறிந்த கருணாவும் செழியன் குறித்தும் அதன் பின் வெளிப்படையாகப் பேச வருகிறேன். அது பேசப்படும் வரை இந்த உரையாடலை இத்தோடு விடுவோம். கருணா பற்றியும் செழியன் பற்றியும் அஞ்சலிக்குறிப்பின் அப்பால் நாம் உரையாட வேண்டும் ரொரண்டோ தமிழ்ச்சூழல் அதற்குத் தயார் இல்லை.
கருணாவைக் கூட விடுங்கள். செழியன் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஒரு மிகப் பெரிய சாட்சி. அடையாளம். அவர் குறித்துக் கூட எதுவும் வெளிய்படையானதாக இங்கே உரையாடப்படவில்லை. அது செய்யப்படும் போது நீண்ட உரையாடல் நடைபெறச் சாத்தியம் உள்ளது. ஆனால் அதனை யாரும் நடத்த முன்வரமாட்டார்கள்.
"சேரன் இன்றி நவீன தமிழ்க் கவிதை இல்லை என்றதொரு காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமைதரும் விடயமாகும்." இந்தக் கூற்றின் பின்னால், முதலில் தெரியப்பட வேண்டியது எது நவீனம்? தமிழ்க் கவிதையின் நவீனம் எது? ஈழத்தமிழ்க் கவிதையில் நவீனம் என்பது எங்கேயிருந்து தொடங்குவது? ஒரு இடம் கிடைத்தால் குண்டலினி எழுப்புதல் செய்துவிட்டு போய்விட முடியுமா? க. நவம் அவர்கள் சேரனுக்கு குண்டலினி எழுப்புதல் செய்தார் என்பதனை விட வேறு எவ்வாறு அழைப்பது?
Navaratnam Giritharan
Katsura Bourassa //இந்தக் கூற்றின் பின்னால், முதலில் தெரியப்பட வேண்டியது எது நவீனம்? தமிழ்க் கவிதையின் நவீனம் எது? ஈழத்தமிழ்க் கவிதையில் நவீனம் என்பது எங்கேயிருந்து தொடங்குவது?//
இது பற்றி நீங்கள் விரிவாக எழுதலாம். அதுவே ஆரோக்கியமானதும் தர்க்கத்தைச் சரியான திசையில் கொண்டு செல்வதற்கும் உதவும்.
//நீங்கள் குறிப்பிட்டவர்களை வெளிப்படையாகப் பொது வௌியில் பேசச் சொல்லுங்கள். //
நீங்கள் செல்வம் கூறியது பொய் என்ற கருத்துப்படக் கூறியதால் அவ்விதம் கூறினேன். உண்மையில் அது பொய் என்றால் அவர்கள் உண்மையைக் கூற வேண்டும். நான் என் கருத்தைக் கூறினேன். யாருக்கும் கட்டளையிட முடியாது.
//கருணா பற்றியும் செழியன் பற்றியும் அஞ்சலிக்குறிப்பின் அப்பால் நாம் உரையாட வேண்டும் //
அதை நீங்கள் தொடங்குங்கள். தர்க்கம் ஆரோக்கியமான பாதையில் தொடரும்.
Katsura Bourassa
கருணா குறித்தும் செழியன் குறித்தும் நான் அதிகம் எழுத வேண்டும். நான் குறிப்பிட்ட காலம் பழகியிருந்தாலும் அது நீண்ட அனுபவம். ஆனால் ரொரண்டோச் சூழல் அதிகம் பொய்மையானது. அது உண்மை முகத்தை மறைத்து .இன்னொன்றைச் சொல்லவே எப்போதும் முன் நிற்கும் அது எனக்குப் பழக்கமில்லாதது. இருவர் குறித்தும் நான் விரைவில் எழுதுவேன். எனக்கு முன்னர் மற்றயவர்கள் - அதாவது முன்னையவர்கள் எழுத வேண்டும்.அவர்கள் எழுத மாட்டார்கள். அவர்கள் எழுதுவதாயின் இக்காலத்தில் எழுதியிருக்க வேண்டும். அவரது கல்லறையில் நின்று படம் போடுவதல்ல வாழ்வு.
Katsura Bourassa
ரொரண்டோவில் நடைபெறும் புத்தக வெளியீடுகள் பற்றிய எனது மதிப்பீடுகள் பலமுறை சொல்லியதுதான். அங்கே பேசப்படும் விடயங்கள் குறித்து பலருக்கு அதிருப்தியிருந்தாலும் யாரும் தங்களது அடையாள இருப்புக் கருதி எந்த எதிர்வினைகளையும் வெளியிடுவதில்லை. எழுத்தில் முன்வைப்பதில்லை. கேட்டுவிட்டுச்சிரித்துவிட்டுச் செல்வார்கள் திரும்பவும் அதே போன்றதொரு கூட்டத்தில் வந்து குந்தியிருப்பார்கள். இந்தச் சொரணையற்ற கூட்டம் பற்றியும் நான் நன்கு அறிவேன். எனக்கு நன்றாகச் செல்வம் அண்ணையை விளங்கும். என்னைப்பற்றியும் அவருக்கு நன்றாக விளங்கும். செல்வம் அண்ணையின் காலம் சஞ்சிகையில் நான் எழுதுவது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். இப்பொழுது நான் அதில் எழுத வேண்டும் என்றாலும் எழுதுவதற்கு எனக்குச் சிக்கலில்லை. எனக்கு அவருடன் எந்தத் தனிப்பட்ட தகராறும் இல்லை. அவர் செய்யும் கேலிக் கூத்துக்கள் ஈழ இலக்கியத்தை அரியண்டத்திற்குள் தள்ளுபவை. அவரைப் பலர் தங்கள் இருப்பிற்கு முன்நிறுத்தி அவரை ஏளனப்படுத்துகிறார்கள் என்றும் எனக்கு ஒரு கருத்துண்டு. அந்த அவர்கள் என்பதற்குள் பலர் இருக்கிறார்கள். இது எல்லாம் நீண்டதொரு உரையாடலுக்குரியது. காலம் பத்திரிகையை விபரமாக ஆராய்ந்தால் அவைபற்றி நாம் பேசலாம். அது இன்னொரு சூழல்.
உண்மையில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கட்டுரைக்காக எப்போதோ நடைபெற்ற காஞ்சி புத்தக வெளியீட்டைப் பார்க்க வேண்டியிருந்தது. அதில் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்க எழுதிய கோபமே நான் எழுதியவை. நான் முகநூலில் எழுதும் குறுகிய கோபங்களை விடுங்கள். எனது கட்டுரைகளில் ஆதாரங்களுடன் வெளிப்படையாக எழுதியவை குறித்து யாரையாவது உரையாடலுக்கு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். அபத்தம் இதழில் பல எழுதியிருக்கிறேன் பலரது பெயரோடு அடையாளம் காட்டி எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றையெல்லாம் அவதூறு எனச் சொல்லிவிட்டு மவுனமாக இருக்கிறார்கள். அவர்கள் மவுனம் தங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபொழுதிலும் இல்லை. அப்படியொன்று நடப்பதேயில்லை. இந்த உரையாடலைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி கிரி. இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். நான் பட்டப்படிப்போ கல்விப் புலமைக்குள்ளாலோ எழுத்தை அணுகுபவனல்ல. எனக்குத் தெரிந்த மொழியிலேயே என்னால் பேசமுடியும். உங்களுக்குரிய மொழியில் பேச வேண்டும் என்றால் நீங்கள்தான் பேச வேண்டும்.
Navaratnam Giritharan
// எனக்குத் தெரிந்த மொழியிலேயே என்னால் பேசமுடியும். //
கற்சுறா, உங்கள் மொழியில் பேசும்போது சில சொற்களைத்தவிர்த்து விட்டால் உரையாடல் நல்லதொரு பாதையில் தொடரும் சாத்தியமுண்டு. அதை நீங்கள் பாவிக்கும் சில சொற்றொடர்கள் தவிர்த்து விடுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதே என் முகநூற் பதிவின் நோக்கம். அச்சொற்றொடர்களைத் தவிர்த்து விட்டால் , உங்கள் கருத்துகள் உங்களது பேச்சுச் சுதந்திரம் என்பதை உள்வாங்கிக்கொண்டு பலரும் மேலும் தர்க்கிப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகின்றது. அதுவே என் பதிவின் , எதிர்வினைகளின் முக்கிய நோக்கம்.