* ஓவியம் AI
ஆழ்மனசின் சூட்டில் கூடிவாழும் கருகிய மனசுக்கு தாகம் எடுத்தது.. தீராத்தாகம் அது. எப்போதுமே தீராதது. முன்னைய காலங்களில் யாழ்ப்பாணத்துக் கல்யாணங்கள் எப்படி நடந்தன என்பதை எழுதவேண்டுமென நீண்டநாள் தாகம்தான் அது. அக்காலத்தைத் தாலாட்டி என் மண்ணோடு தவழ்ந்தும், புரண்டும் ஓர் உலாப்போகின்றேன்..
கல்யாணம். "ஆயிரம் காலத்துப்பயிர்" என ஒருவாக்கு. அதன் அர்த்தமே.. கணவன் - மனைவி இருவரும் அடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆசீர்வதித்த பழங்கால மக்கள் இயற்கையுடன் ஒப்பிட்டுப்போற்றிய வாசகம் இது.
அக்கல்யாணத்தில் ஒன்று என் ஆச்சி வீட்டிலும் நடந்த அக்காட்சி என் உயிருக்குள் முடங்கிக்கிடக்கு. உறங்கவிடாது தட்டி எழுப்பி அத்தகைய தவத்தையும் இயன்றவரை பேச்சுவழக்கின் மொழி கலந்து எழுத முனைகின்றேன்.
ஆச்சியின்ர ஆகக்கடைசிக்கு முதற்பிள்ளை "தேவி" அவள்.தேவிக்குத்தான் கல்யாணம். எனக்குச்சின்னம்மா. தளபாடங்களின் ஆரவாரம் தடல்புடலா ஊரைக்கூட்டுது. உறவென்ற ஊற்றுவழியின் சங்கமத்தில் வீடும், முற்றமும் நிரம்பி வழியுது. வீட்டு வாசலில் காக்கும் கடவுளாய் திருநீற்றுக்குடுவை மனங்கமழும் வாசத்துடன் தொங்குது.கால்கழுவி, நெற்றியில் திருநீறிட்டு வரும் சொந்தங்களைக்கொஞ்சி அரவணைத்த கண்களின் கலகலப்பையும், பரவசத்தையும் கண்டுகொண்டே சூரியன் மெல்ல மறைகின்றான்.
பொன்னுருக்கன்று கன்னிக்காலாய் நட்ட முள்முருக்கமரத்தின்ர இலை வாடி, கிலுகிலுவென்று புதுக் குருத்துவிட்டுத்தளைச்சு குசினிக்கு முன்னுக்கு செளிப்பா நிற்குது.கீழ சின்னதா, வடிவா பாத்திகட்டிப்போட்ட நவதானியங்களும் பச்சையா எட்டிப்பார்க்கீனம்.
வீட்டின் நாற்பக்கமும் சேதிசொல்ல மணல், கிடுகு, காட்டுத்தடி, கிடாரம், விறகு எனக்குவிஞ்சு கிடக்குது. பெரிசுகளும் பந்தல்கட்டத்திசை குறிக்கினம். "வீட்டு வாசலுக்கு வடிவா வரவேற்க இரண்டு வாழைமரம், வாழைக்குலையோட இரவு ரியூப்லைட் வெளிச்சத்திலதான் கட்டுவம்" என்று மாமா சொன்னார். அதுக்குள்ள ஒழுங்கை முடக்குமட்டும் வெள்ளை ரிசூப்பேப்பரை வெட்டி, இளக்கயிறில ஒட்டி, கட்டி இளசுகள் சோடிக்கினம்.காத்தில அது சரசரவென்பதும் மனசுக்கு இதமாத்தான் இருந்தது. லவுட் ஸ்பீக்கர்காரரும், ஜெனரேற்றர்காரரும் கொஞ்ச நேரத்தில வந்துவிடுவீனம். வந்தால் ஒரு ஸ்பீக்கர் வடக்கால, மற்றது கிழக்காலகட்டவேணும் என்று பெரியப்பா சொல்லிப்போட்டார். அவரின்ர பேச்சுக்கு மறுபேச்சுக்கிடையாது. தம்பையா மாமா சொன்னால் மட்டும் கேட்பார்.அதோட மாமாவும் சிரிச்சாப்போதும் எல்லாரும் மயங்கிடுவீனம்.. அவ்வளவு பாசம் மாமாவில.என்னைக்கண்ட சந்தோஷத்தில மாமா கட்டிப்பிடிச்சுக்கொஞ்சினார். எனக்கும் ஆசைதான். ஆனால் அவரில சாராயம் மணக்கும். அதோட வாய்நிறைய வெத்தில வேற. என்றாலும் எனக்கும் அவரில சரியான பிரியம். அம்மாக்கு அண்ணன் அல்லவா?
மாமாதான் பந்தல் எங்கே, எப்படிக்கட்டுவது என விளக்கம் கொடுக்க காட்டுத்தடிகளுடன் பலர் ஆயத்தம். புறம்பாத்தட்டி இறக்கி பலகாரம் சுடும் வாசம் மூக்கைத்துளைக்குது. இன்றிரவே சமையற்காரர் வந்து நாளைக்கு விடியிறதுக்கு முன்னம் மூன்று, நாலு மணிபோலவே சமைக்கத்தொடங்கிடுவீனம். அதுக்குள்ளதான் கிடாரம் வைச்சு பெரிய சமையல் சமைப் பீனம்.சோற்றையும் கிடாரத்தில அவிச்சு கிடாரத்தின்ர வளையக் கைபிடிக்குள்ளால உலக்கையைக் கொளுவி,இரண்டு பலமான ஆம்பிளைகளும் இரண்டு பக்கத்தால பிடிச்சு, தூக்கிக்கவிட்டுப்பாயில கொட்டுவீனம். ஆவி பறக்கும். சமைக்கிற மரக்கறிச் சாப்பாடுகளின்ர ருசி, அதுகளின்ர வாசத்தில வயித்தை ஒருக்கா விறாண்டித்தள்ளும்.பசி
தானாக்கிளம்பும்.
இதுவரைக்கும் சின்னம்மாவை ஒருக்காக்கண்டதுதான். பிறகு ஆச்சி அவாவைக்காட்டவேயில்ல. கேட்டால் "இனி அவாவை பந்தலிலதான் காட்டுவன்" எண்டா. எங்க ஒளிச்சாவோ தெரியேல்ல, என்னைப் பெத்த அம்மாவும் சொல்றாயில்ல. இரண்டு பேரிலயும் எனக்குச்சரியான கோபம். எனக்குத்தேவிச்சின்னம்மா என்றால் உயிர். அவாவும் அப்படித்தான். என்னுடைய தம்பியை அவாதான் கொஞ்சக்காலம் வளர்த்தவா. அவாவும் இனி எங்களோட இருக்கமாட்டா. அது சரியான கவலை.
"நாலு கூட்டம் மேளம் வருமாம் கல்யாணத்துக்கு" என்று பலகாரம் சுடும் பொம்பிளைகள் கதைத்தது எனக்கும் சாதுவாக்கேட்டிச்சு. அதில இன்னும் நான் உசாராகி.. கனவில மிதந்தன்..
விடிஞ்சாக்கல்யாணம்.
கிடுகில வேய்ந்த அழகான கல்யாணப்பந்தல். கிடுகு தெரியாமல் மறைச்சு வெள்ளைகட்டி, குறுக்கால வண்ணம், வண்ணமாக்குஞ்சம் கட்டித்தொங்கவிட்டு, மணல் பரப்பி,கம்பளம் விரித்து, மணவறையும் கட்டி முடித்து, பந்தலுக்கு முன்னால நிறைகுடம், குத்துவிளக்கும் வைச்சு, பந்தலுக்கு மேலே தென்னோலையால "நல்வரவு"ம் பின்னிக்கட்டி, ரியூப்லைட்டும் பூட்டி, பெற்றோல்மாக்சும் கொளுத்திவிட்டு.. லவுட் ஸ்பீக்கரில, நெஞ்சிருக்கும்வரை படத்தில, உள்ளத்தை உருக்கும் கண்ணதாசனின் வரிகளுக்கு, விஸ்வநாதனின் இசையில, ரி.எம்.செளந்தரராஜன் பாடிய "பூ முடிப்பாள் இந்தப்பூங்குழலி " பாட்டும் கேட்டால்.. உறவுகளே அதுவல்லவோ உயிர் நனைஞ்ச எங்கட உண்மையான கல்யாணம். கெட்டிமேளம் கொட்ட நாலு கூட்ட மேளமும், நாதஸ்வரங்களும் முழங்கும்போது, பக்பக்பக்கென்று அந்தப்பெட்டிக்கமராவின்ர வ்ளாஸ் மின்ன, மின்ன அந்தப்பூச்சொரியும் தருணம் இருக்கே.. அப்போது.. ஆச்சி அழுவா, அம்மா அழுவா.. மாமாவும் அழுவார், எல்லோர் கண்களும் அழும். ஏன் நானும்தான். ஆனால் சின்னம்மாவும் எங்களோட சேர்ந்து அழுவாவே.அவாவும் அழுதால்..?
" என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி" என்ற இந்த வரிகளை கண்ணதாசன் படத்திற்காக மட்டும் எழுதவில்லை. எமக்காகவும் சேர்த்துத்தான் எழுதிச் சென்றுவிட்டார்.
"இப்படி எல்லாமே ஒரு பக்குவமாய் நடந்திச்சு.வாழ்க்கையும் நல்ல பக்குவமாய்ப் போய்ச்சுது. உறவுகளும் பக்குவமா இருந்திச்சீனம்".
மாயமாய் உதிர்ந்த பொற்காலம்போல
வாழ்வதும், சாவதும் மாறிமாறி நடக்கும்.
காலச்சுவட்டின்
வாசம் மட்டும்
அன்றுபோல் இனி
எப்போதுமே வராது..