* ஓவியம் AI
தமிழ் நாவல்கள்.தமிழ் நாவல்களின்மீது மட்டுமல்ல எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மீதான எனது விமர்சனத்தை இங்கே பொதுவில் வைக்கிறேன். எனக்குத் தெரிந்த,நான் படித்த இலக்கிய அறிவின் பிரகாரம் ஒரு சமூகத்தை அறிய நாம் கற்பனை அற்ற எழுத்துக்களை வாசிக்க வேண்டும். உதாரணமாக இலங்கைப் போரை அறியப் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ், இக்பால் அத்தாஸ் போன்றவர்களை வாசித்தோம்.அவர்கள் முடிந்தவரை உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள்.
யாழ்ப்பாணம் அல்லது இந்தியச் சாதி அமைப்பை அறிய நாம் பத்திரிகைகள் மற்றும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை அணுகுவோம் . ஆனால் கற்பனை எழுத்துகள் என்ற ஆயுதத்தால் தனிமனிதர்களின் மனங்குகைகளை நாம் ஊடுருவிப் பார்க்கமுடியும்.இதற்கு உதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்திலிருந்து உதாரணம் தருகிறேன்.
போர் முடிந்தபின் பாஞ்சாலி தலைவிரி கோலமாக உபபாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் எனத் தனது விருப்பத்துக்குரியஅருச்சுனனிடம் கூறிய போது, அருச்சுனன் கவலைப்படவில்லை ஆனால் சுபத்திரையின் மகன் அபிமன்யு போரில் இறந்தபோது அவனது சோகம், சபதம், பின் நடந்த போர் எல்லாம் நமக்குத் தெரியும் .இது ஆணின் மனதை அழகாகக்காட்டுகிறது – அபிமன்யு தனது மகன் என்பது நிச்சயம் ஆனால் உபபாண்டவர்கள்?
இந்த மனம் இன்றும் நம்மிடையே நிழலாகத் தொடர்கிறது. மகாபாரதம் எவ்வளவு அழகாக தனிமனித பண்புகளைப் பலஇடங்களில் எடுத்துக் காட்டுகிறது என என்னால் தொடர்ந்து சொல்ல முடியும். ஒரு எழுத்தாளனுக்கு மகாபாரதக் கதைகள் ஒரு அமுதசுரபி.
ஆனால் இங்குநான் சொல்ல வந்த விடயம் வேறு.
ஈழத்துப் போரை புரிந்துகொள்ள விமர்சகர்கள், முக்கியமாகத் தமிழ்நாட்டு விமர்சகர்கள் நமது போர் நாவல்கள் வாசிப்பதாக சொல்கிறார்கள்.
எனது கேள்வி : .உதாரணமாக இந்திய அமைதிப்படையின் நடத்தைகளை அறியத் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் படிப்பதா? அல்லது யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் எழுதிய "முறிந்த பனை" படிப்பது நல்லது என்ற கேள்வியை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.
நமது இலக்கிய உலகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.
பாத்திரங்களின் அக உணர்வு வழியாகக் கதை சொல்லும் நாவல்கள், காலம் கடந்து நிற்கும் ஆனால் சம்பவங்கள் தொகுப்பு அல்லது அனுபவங்களின் தொடராக எழுதப்படுபவை, நாங்கள் பாவிக்கும் தடுப்பூசி (வக்சீன்) போல் சில காலம் மட்டுமே தாக்குப்பிடிக்கும்.காலம் மாறும்போது வருங்கால சமூகத்திற்கு அவை முக்கியத்துவமற்று போய்விடும். இப்பொழுது யார் யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தின் விடயங்களைப் பேசுவார்கள்?
இதேபோலவே போர்க்காலஎழுத்துகள், போரையும் ராணுவ அட்டூழியங்களையும் பேசும்போது, அவைகள் தற்போது முக்கியமற்று போய்விட்டது. இது போர்நாவல்களுக்கு மட்டுமல்ல சாதி எதிர்ப்பு பற்றிய சோசலிச யதார்த்த கதைகளுக்கும் இதுவே நடந்தது .
இங்கே போர்க்கால நாவல்களில் தனிமனிதர்களைப் பாத்திரமாகக் கொண்டு எழுதிய நாவல்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். நான் படித்தவையில் ஷோபாசக்தியின் “இச்சா” நாவலில் வரும் பெண் பாத்திரம் தொடர்ந்து மனதில் நிலைக்கக்கூடியது.
எமக்குத் தெரியாத கடற்கரை வாழ் மக்களை அல்லது மலைவாழ் மக்களை வைத்து எழுதியதால் சிறந்த நாவல் எனச் சொல்வது கூடாது . அங்கு பாத்திரங்களில் உள்ளக் குமுறல், தாகங்கள், காதல், குரோதம் வாசகர்களுக்கு புரிய வேண்டும்.நாவல் எழுதும் போது போர், போராட்டம் என முக்கிய சம்பவங்கள் வருவது தவிர்க்க முடியாது ஆனால் பாத்திரங்கள் முக்கியத்துவம் பட்டு தனித்து நிற்க வேண்டும் .
அதே வேளையில் கற்பனையற்று உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எழுதியது வரலாற்று விடயமாக வருங்கால சந்ததியினருக்கு உண்மையாக வைக்கப்படவேண்டும் . சமீபத்தில் ஒரு நண்பர் வெளிநாட்டில் நடந்த விடயங்களை வைத்து எழுதிய நூலைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டபோது நான் சொன்னேன் ‘இவைகள் உண்மையானது. இதனது கன்னிமை, நீங்கள் நாவல் எனப்பதிப்பித்தால் போய்விடும்’ என்றபோது அவர் எனது தொலைப்பேசியைத் துண்டித்து விட்டார்.
நமது இதிகாசங்கள்,காப்பியங்களான சிலப்பதிகாரம் நிலைத்து நிற்கிறது காரணம் அங்கு பாத்திரங்கள் பாஞ்சாலி, மாதவி, கண்ணகியாக தோன்றி உயிர் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் நான் பாண்டிச்சேரி போனபோது காளிதாசன் பற்றிய கட்டுரை புத்தகத்தை வாங்கினேன்இன்னமும் சகுந்தலையின் பாத்திரம் என் இதயத்தில் நிழலாடுகிறது.
இது விமர்சனமாகவோ அல்லது ஆதங்கமாகவோ எடுத்துக்கொள்ளலாம்