- 'வைகறை' ரவி ( ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை) -
வைகறை பத்திரிகையை வெளியிட்டு வந்தவர் ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை. வைகறைக் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பத்திரிகைகளிலொன்று. அதன் ஆசிரியர்களில் ஒருவராகவுமிருந்தார்.அதன் காரணமாகவே ரவி பொன்னுத்துரை என்றறியப்பட்டவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நண்பர் ஐங்கரநேரன் பொன்னுத்துரையின் சகோதரர் என்பதைப் பின்னரே அறிந்தேன். அவரது மறைவுச் செய்தியினை முகநூல் கிரி செல்வரத்தினம் அறியத்தந்தார். இரமணியும் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எதிர்பாராத இழப்புகளில் ஒன்று ரவி பொன்னுத்துரையின் இழப்பு. அவரது இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் , நண்பர்கள் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.
ரவி பொன்னுத்துரை சிறந்த புகைப்படக் கலைஞர். அவரது முகநூற் பதிவுகளில் அவர் பகிர்ந்துகொள்ளும் இயற்கையின் வனப்பை வெளிப்பை, உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களே அதற்குச் சான்று. கனடாவில் 'நடு' இதழின் ஐம்பதாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு நடந்தபோது, நிகழ்வுக் காட்சிகளைப் புகைப்படங்களாக்கிப் பகிர்ந்திருந்தார். எனக்கும் அனுப்பியிருந்தார். சூழலியாளர். சமூகப் பிரக்ஞை மிக்கவர்.
இத்தருணத்தில் வைகறையில் எனது படைப்புகள் வெளியிட்டதையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.மீண்டும் என் ஆழ்ந்த இரங்கல்.
என்னைக் கவர்ந்த அவரது முகநூற் பதிவொன்று..
அண்மையில் நான் இரண்டு வாரங்கள் Costa Rica பூர்விக குடிகளுடன் தங்கி வேலை செய்யவேண்டிய ஒரு தேவை இருந்தது. அங்கு மூத்த தலைவர் ஒருவருடன் பேசும் பொழுது அவர் கூறினார்:
"நீண்ட காலனித்துவ வரலாறு எங்கள் சமூகத்தின் ஒழுக்கம், அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை நொருக்கி இருந்தது. எம் சமூகத்தின் பெருமைகளை (sense of community pride) நீர்மூலம் செய்து இருந்தது. அடுத்த அடுத்த தலைமுறைகள் சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழந்தார்கள். தனது பெருமையை இழந்த சமூகம், ஒரு சமூகமாக திரள்வது சாத்தியம் இல்லாத விடயம். இழந்த பெருமையை எப்படி உருவாக்குவது என்பது பற்றி நாம் சிந்தித்தோம். அந்த பெருமையை மீட்டு எடுத்தோம். அது எமது சமூகத்துக்குள் செய்யவேண்டிய முக்கிய விடயமாக இருந்தது. அது இலகுவாக இருக்கவில்லை. நாம் பிரிந்து இருந்தோம். பிரிக்கபட்டு இருந்தோம்.
உதாரணமாக எமது பிரதேசத்தில் ஒரு வைத்தியசாலையை நீண்ட போராட்டங்களின் மூலம் Costa Rica அரசு, மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் உருவாக்கி இருந்தோம். ஆனால் எங்கள் சமூகத்தில் இருந்து ஒரு நோயாளிகளும் வரவில்லை. அதை காரணம் காட்டி Costa Rica அரசும் தொடச்சியான வளங்களை, வசதிகளை செய்து தர மறுத்தது. நாங்கள் எங்கள் சமூகத்தில் இருந்து சில இளையவர்களை கியூபா அரசின் உதவியில் மருத்துவம் கற்பதற்காக அனுப்பினோம். அவர்களுக்கு சில நிபந்தனைகள் வைத்தோம். படித்து முடிந்தவுடன் எமது வைத்திய சாலையில் குறைந்தது 5 வருடம் வேலை செய்யவேண்டும் என்று. அதில் சிலர் எங்கள் நிபந்தனைகளின்படி மருத்துவ கல்வியை முடித்துவிட்டு எங்கள் பிரதேச வைத்தியசாலைக்கேய் வந்தார்கள். சிலர் இங்கு வரவில்லை. வந்தவர்களால் எமது மக்கள் மெது மெதுவாக எமது பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலையை நோக்கி வர தொடங்கினார்கள்.
இன்று இந்த வைத்தியசாலை மேற்கு - பாரம்பரிய வைத்திய முறைகளை உள் அடக்கிய தரமான வைத்தியசாலையாக - எமது மக்கள் நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு அணுக கூடிய வைத்திய சாலையாக வளர்த்துள்ளது. இப்படி தான் மெது மெதுவாக நாங்கள், எங்கள் பிரதேசத்தை கணிசமான அளவு முன்னகர்த்தி உள்ளோம். பொருளாதார வளங்களை எங்கள் பிரதேசங்களில் உருவாக்கி இருக்கிறோம். இது இன்னும் முழுமையானது இல்லை. ஆனால், மூத்தவர்களாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - எங்கள் அடுத்த தலைமுறைகள் பெருமையுடன் மேலும் முன்னேறும் என்று. எம் சமூகத்தின் பெருமையை நாம் மீட்டு எடுத்து இருக்கிறோம். எமது சமூக அரசியல் விடுதலைக்கு எம் சமூகத்தின் பெருமையை மீட்டு எடுப்பது முன் நிபந்தனையாக இருந்தது".