சேவல்கூவி எம்சயனம் கலைந்தவேளை அதிகாலை 4 மணியிருக்கும்.அரசமர இலைகள் பழுத்து மஞ்சளாய் காற்றில் அவை பறந்து மண்ணைத்தழுவிய வேளையது. நேற்றைய இரவில், தென்றல் சுகமாக எம்மைவருடிய பொழுதில், கொட்டிய மழையில்,குளித்த மல்லிகை பூத்து பரவசப்படுத்திக்கொண்டிருக்க நானும், நண்பர்களும் இந்த விடியலில் ஏ.எஸ்.கே (கனகரட்ணம்) மாஸ்ரரிடம் ஆங்கில பயிற்சி வகுப்புக்காகச் செல்கின்றோம்.மணி இப்போது 4.30தாண்டியிருக்கும். வேய்ந்த வீட்டின் தாழ்வாரத்து ஓலைகளிலிருந்து சொட்டிய மழைநீரின் சத்தத்தைத்தவிர ஊர்சனம் இன்னும் உறக்கத்தில் நிசப்தம். மார்கழியின் விசுவாசமா இது?
ஊரும்,ஊரின் அழகும்,பூக்களின் வாசங்களும், நண்பர்களின் அந்த நேரத்து சிலேடைச் சொற்களும் மனசை உசுப்பிவிட விடிந்தும் விடியா வெளிச்சமில்லாத்தெருக்களுக்குள் சேர்ந்தே ஊடுருவிய சைக்கிள்கள் பிரதான வீதி தாண்டி மெதுவாக இப்போ மாஸ்ரரின் வீட்டடி வந்து சேர்கின்றன.அங்கே சில இளஞ்சிட்டுக்கள் தமக்குள் முணுமுணுத்தபடி சைக்கிள்களை ஓரங்கட்டிவிட்டு மண்ணைப்பார்த்தபடி, எம்மைப்பார்த்தும் பார்க்காதவர்கள்போல வகுப்புக்குள் நுழைய,ஒன்றாய் வந்த எங்கள் கூட்டத்தின் சில கண்களும் கனவுகளில் மிதந்தபடி! மனசுக்கு விடை தெரியா சிறகடித்துப்பறந்த வயதது.இரண்டு பல்ப் மட்டுமே வெளிச்சம்தர வெள்ளை பெனியனும், வேட்டியுமாக மெல்லிய புன்னகை பூத்தபடி உள்ளே வருகின்றார் ஏ.எஸ்.கே.
"குட் மோர்னிங்" என்ற அவரது சொற்பதம் எம்மை ஆசீர்வதிக்க அவர் வீட்டுக்கடிகாரம் 'டொங் டொங்'கென 5 தடவை ஒலித்து ஓய்கிறது.இன்றுதான் கிரமர்கிளாஸ் ஆரம்பம் என்பதால் வகுப்பு நிரம்பி வழியுது. 'இளசுகளா,சிட்டுக்குருவிகளா ஒருகை பார்க்கலாம்' என கேள்விகளுக்கு இரு தரப்புக்களிலுமிருந்து கைகள் உயர்கின்றன. ஒன்றேகால் மணித்தியாலம் எப்படிப்பறந்ததோ தெரியவில்லை. "இன்றைக்கு இதுபோதும்"என மாஸ்ரர் கூற "ஐயா ஆள விடு" என ஓர்குரல் எழ வகுப்பறை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
சிட்டுக்குருவிகளும் பறந்தன.நிலம் வெளிக்க குருவிகள் பறந்த நேரம் 6.20 ஐத்தாண்டுகின்றது.நேரத்தை மனக்கணிப்பில் கூட்டிக்கழித்த காலமது.கூடிவந்த கூட்டம் ஒவ்வொன்றாகப்பிரிந்து "கொளிஜ்ஜில 8 மணிக்கு சந்திப்பம்" எனப்பிரிகின்றோம். வரும் வழியில் தெருக்களின் கம்பங்களில் எரிந்துகொண்டிருந்த லைற்றுக்களை மாநகரசபை ஊழியர் சைக்கிளை மிதித்தபடியே கொக்கச்சத்தகம்போன்ற கொளுக்கிபூட்டிய நீண்ட தடிகொண்டு அணைக்கும் தந்திரத்தை வேடிக்கை பார்த்தபடி எனது சைக்கிளும் வீட்டை நோக்கிச்சென்றது.வரும் வழியில் பால்காரர்களின் "பால்" என்ற கத்தலும்,பெல் சத்தங்களும் இன்னும் சில வீடுகளின் புதுமுகங்களை அறிமுகப்படுத்தின.பெய்த மழைநீர் மண்தவழ விடியற்பொழுது இன்னும் பொலிவாக உடுத்தி வலம் வருகின்றது.விழிகள் புரண்டோடி ரசிக்க நேரமில்லாது நானும் பறக்கின்றேன்.இன்னும் ஒன்றரை மணித்தியாலத்தில் கல்லூரியில் நிற்கவேண்டும்.சரியாக 8 மணிக்கு செக்கன்ட்மெல் அடித்துவிடும். இதற்குள் முதலில் வீடுபோய்ச்சேரவேண்டும். குளிக்கவேண்டும். சாமி கும்பிடவேண்டும். சாப்பிடவேணும். நீலமும்,வெள்ளையுமாக காற்சட்டை, சேட் போட்டு நீற்றாகவும், ஸ்மாட்டாகவும் வெளிக்கிடவேண்டும். அதை விட சொக்ஸ், சப்பாத்துப்போடவேண்டும். அது பெரிய வேலை. அதுவும் சப்பாத்து பளிச்சென்று தெரிகிறமாதிரி பொலிஸ் பண்ணியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் கிளாஸ் மாஸ்ரரான மிஸ்டர் சுந்தரதாஸிடம் அடி வாங்குவம். அப்பா பொலிஸ் பண்ணி வைப்பார். அது தெரியும். வீட்டில் நின்றால் லேசும் கோர்த்து வடிவாக இறுக்கிக்கட்டியும் விடுவார் .அவரின் அன்பு சப்பாத்திற்குள் ஒளிந்து இருக்கும். இல்லையேல் அவரின் பார்வையில் பாசம் புலரும்.வெளிக்காட்டமாட்டார்.
"அப்படித்தான்டாப்பா அப்பாக்கள்" என நண்பர்களிடம் பகிர்வோம்.அம்மா நல்லெண்ணெய் வைத்து தலைசீவி விடுவா.சினப்பேன்.அம்மா விடமாட்டா.இந்த நேரத்தில் ஊரின் ஆரவாரம் சைக்கிள்களின் பெல்சத்தங்களாக கிடிங்கிடிங்கென அடிக்க, அயலின் நாற்திசையிலுமிருந்தும் இடியப்பம், சொதி,குழல்பிட்டு, தோசை, இடிச்ச சம்பல், அப்பம் என பலகாரங்களின் வாசனை மூக்கைத் துளைக்க அம்மாவின் சமையல் மட்டும் தனிரகமாக நினைவில் நிற்கும்.
அம்மா.
அம்மா என்றால் அவள்தான் எனக்கு என்றும் அற்புதம். இதைவிட அழகாய் 'மொழியின் ஆழ்கடல் அன்னை' என்பேன். அவளுக்காகத்தான் மொழி இன்றும் முத்துக் குளித்துக்கொண்டேயிருக்கின்றது. தேடத்தேட தமிழின் உணர்வை அம்மாவில் காணலாம். பல்லாயிரம் சொற்களைப் பாசத்தால் பகிர்பவள் அம்மா ஒருத்திதான்.
ஒன்றை மட்டும் அப்பாவிடம் அன்பாய்க்கேட்டாள் - "எனக்கொரு றேடியோ வாங்கித்தாறீங்களே?"
எதையும் ஆசைப்பட்டு வாங்கித்தாருங்கள் என்று கேட்காதவள் கேட்டது அப்பாவிற்கு வியப்பு!மட்டுமல்ல,அவரது பார்வையிலும்,புன்னகையிலும் ஆனந்தம் பிரகாசித்தது.பிலிப்ஸ் 'றான்சிஸ்ரர்'றேடியா வாங்கி வந்து கொடுத்தார் அப்பா.அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார்,எப்படி வாங்கினார்,அவரது உழைப்பின் ஊதியத்தில் எப்படி மிச்சம்பிடித்தார்? என எமக்குத்தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளக் காலம் சென்றது.அதுவும் அரிசல் புரிசலாக அம்மா சொன்னது. மெய்தான். அப்பாக்கள் சுமக்கும் வலிகள் ஒருபோதும் பிள்ளைகளுக்குத்தெரிவதில்லை!
ஒரு காட்சி.என் மனசை விட்டகலா. அந்தக் காட்சியின் கதாபாத்திரங்கள்.அந்தக்காலம். அந்த வெயில்.அந்த மழை.அந்தத்தூவானம். அந்த மேளம், அந்த நாதஸ்வர ஓசையென மனசும்,விழியும் இன்னும் துடித்துக்கொண்டே தானிருக்கின்றது. அதற்கும் அப்பால் ஓர் இசை. அந்த இசையின் பிரமாண்டம். இவை யாவும் என் கூட்டை விட்டுப் பிரியாது.
றேடியோ வாங்கின நாளிலிருந்து நாம் வீட்டிலில்லாதபோது அம்மாவிற்கு அதுதான் துணை. அதற்குக்காரணம் அக்காலத்தில் கடிகாரம் என்பது ஒன்றேயொன்று ஹாலில் சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும், இல்லையேல் நாம் பார்க்கக்கூடியதாக மேசையில் ஒன்று. அதுவும் அதனை முறுக்கிவிட வேண்டும். மறந்து போனால் அதுக்கும் காய்ச்சலோ, சளியோ பிடித்துவிடும்.அப்படித்தான் அப்பாவின் கவனம் அதன்மேல் இருந்தது.சில ஊர்களில் அதுவும் கிடையாது.முற்றத்தின் முன்னால் வெயில் விழுந்தால்,மத்தியில் வெயில் எறித்தால்,தென்னங்கன்றில் நிழல் பட்டால் என ஊகித்து வேலை பார்ப்பது என சொந்தங்களின் அன்றாட வாழ்விருந்தது. காலம் மெல்லக்கனிய வானொலியின் வருகை.அலைவரிசையில் ஆரம்பித்த நாகரிகத்தின் முதல் அத்தியாயம் அதுவே!
கதை சொல்ல வெளிக்கிட்டால் எங்கே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் விலகிவிடும்.அதனால் பழையபடி விட்ட இடத்துக்கே வருகின்றேன்.
ரியூசன் முடிந்து வீட்டிற்கு வந்து துலாவில் அள்ளி எடுத்து உடம்பில் ஊற்றிய முதல் வாளித்தண்ணீர் இருக்கிறதே! அதுவும் மார்கழி மாசத்து மழைத் தண்ணீர்.கூதல் விறைச்சுக் குளிரில நடுங்குவம் நல்லாய் 3 நாளாய் தொடர்ந்து பெய்த மழைக்கு கிணறு நிரம்பி வழிந்தது. அதிகம் ஆழமா போகாமல் கையால் அள்ளிக் குளிக்கலாம். அதுவும் ஒரு சந்தோஷம். நேரத்தையும் மிச்சம் பிடிக்கலாம். 4 வாளி அள்ளி ஊத்தி 'உஸ்உஸ்உஸ்' என ஓடிவந்து உடம்பைத் துடைத்துக்கொண்டே றேடியோவையும் கேட்டுக் கேட்டு உடுப்பு மாற்ற வேண்டும். இப்ப நேரம் 7 மணியாக ஒலிக்கும். செய்திச் சுருக்கம் தொடங்கிவிடும். அம்மாவும் நேரத்தைக் கேட்டுக்கேட்டு அவதிப்பட்டுப்பட்டுக்கொண்டு,நாங்களும் அவதிப்பட்டு ஒடிக்கொண்டு இருப்பதைக்கண்டு ஒன்றுமே சாப்பிடாமல் வெறுவயிற்றுடன் சென்றுவிடுவோம் என்று பெத்தமனசு துடிக்கும்.ஆதலால் "பெரிசா வளந்தும் இப்பவும்..." என புறு புறுத்துக்கொண்டே எனக்கும்,தம்பிக்கும் மாறிமாறி இடியப்பம் தீத்திக்கொண்டு இருக்கும் வேளையில் வானொலியின் சத்தத்தையும் கூட்டி விடுவா.சத்தமும்கூட எங்கள் எல்லோரினதும் மனங்களும் பூரிப்படையும்.
அந்த விடியலில் மூழ்கிட,எம்மை மகிழ்விக்க, எம்மைக்கட்டிப்போட்டபடி ஓர் இசை உள்ளே நுழையும். நுழையும் அந்த நேரத்தை 7 மணி 2 நிமிடமென அந்த இனிய குரல் எம்மைச் சூழ்ந்து உள்ளத்தை உற்சாகப்படுத்தி வழியனுப்பும்.
இசைக்கு ஜீவன்கள் அனைத்தும் அடிமையா?
ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இசை ஒலிக்க நாம் வளர்த்த நாய் , ஆடு, ஆட்டுக்குட்டிகள் பக்கத்து வீட்டு மாடு, கன்றுக்குட்டியென அனைத்துமே அமைதியாகிவிடும்.
என் இனிய மழைக்காலமே..
வாழ்வின் வசந்தமே
மார்கழியை அழகாய்
மெய்சிலிர்க்கவைத்த
என் மண்ணே..
இப்போதும் இந்த இசைகேட்டால் எங்கிருந்தாலும் அந்தக்கல்லூரி நாட்களும், அவர்களென என் வாழ்வின் நட்சத்திரங்களும் என்றும் மார்கழியாய் மல்லிகைபோல் மனசுக்குள் பூத்துக்கொட்டி நினைவுகள் யாவும் நாதஸ்வரங்களும், தவில்களுமாக! இலங்கை வானொலியின் 'பொங்கும் பூம்புனலாக' என்னை என் ஊருக்கே கூட்டிச்செல்லும். இந்த விடியலை வருடிய தாலாட்டு உறவே உனக்கும் கேட்கின்றதா?