ஓவியம் - AI
மார்கழி தன் சோகத்தை அடிச்சு ஊத்தி மழையாய்ப்பெய்துவிட்டுப்போனது. வளவைப் பார்த்தால் சோகம், வானத்தைப்பார்த்தால் சோகம், அயலைப்பார்த்தால், பட்டியில் நின்ற பசுவைப்பார்த்தால், ஆசையாய் வளர்த்த நாய்கூட சோம்பிச்சோம்பி படுத்தபடி. முற்றத்தில் பூக்கள் காற்றாலும்,மழையாலும் பூத்தது பாதி பூக்காதது பாதியாய் பரவிக்கிடக்குது. வானொலியிலும் சொல்லிவைத்தாற்போல விடிஞ்சாப்பொழுதுபட்டா ஒரே சோகப்பாட்டுத்தான்.
தெருவெல்லாம் ஒரே சேறும்,சகதியுமாய் கால்வைக்கவேமுடியாது.கூடியவரைக்கும் வீட்டைவிட்டு வெளியே இறங்குவதேயில்லை. மார்கழி பிறந்தால் எனக்குப்பிடிக்காது. மழை என் காதலிதான். ஆனால்,மார்கழி என் எதிரி. ஆவணி அப்படியல்ல.சலசலவென மரங்களின் சந்தங்களும்,சில்லென வீசும் தென்றலும், துள்ளித் துள்ளிப் பாயும் ஆட்டுக்குட்டியும், ஓடிப்பிடிச்சு விளையாடும் நம்ம வீட்டு நாயும் நல்லூர்த் திருவிழாவும், பாவாடைதாவணிகளும்,எப்போவரும் எங்கள் மாலைப்பொழுதென எதிர்பார்த்துக்காத்திருக்கும் என் இனிய நண்பர்களும், எங்கள் கூத்துக்களும்,கும்மாளங்களும். ஆவணியென்றால் அளவற்ற மகிழ்ச்சி.
அதுவும் ஒரு மார்கழி.பொழுது சாயுது. மழையோ விட்டபாடில்லை. தெருவெல்லாம் வெள்ளம்.இதைவிட குளிரும், சரியான பசியும்! அம்மாவின் சேலையைப்போர்த்திக்கொண்டு, பச்சைமிளகாய் உள்ளி மிளகென சுள்ளென உறைக்கும் மரவள்ளிக் கிழங்குத் துவையலையும் உறைக்க உறைக்க சாப்பிட்டோம். சுடச்சுட தேத்தணியையும் ஆவி பறக்க ஊதிஊதிகுடித்தோம்.
அம்மாவின் கைகளோ கொடுத்தபடி. அப்பா ,தம்பி அடுத்தது நானென எங்களின் கைகளோ பசிதீர ஓயாமல் வாங்கியபடி.வாழ்வை ரசித்தோம். அன்பைச்சுமந்தபடி அப்பா சொன்னார், "இனியென்ன தைபிறந்தால் பொங்கல்".
ஓடினோம் ஆனந்தம்பொங்கிட மழையில் நனைந்தபடி வீட்டைச்சுற்றி ஓடினோம்.நாயும் நம்மோடு கட்டிப்புரண்டது.பசுவும் 'ம்மா'என்றது.
வானத்தைப் பார்த்தேன்; பொங்கல் வாழ்த்துச் சொன்னது. அன்றிலிருந்து மார்கழியும் மழையும் பொங்கிவழியும் பொங்கலும் ஒவ்வொரு கதைசொல்லும். காத்திருங்கள்..ஈரநினைவுகளோடு கைகோர்த்து மழையில் மீண்டும் நனைய..