*ஓவியம் - AI
நிலாவெளியின் கடற்கரைமணல்கள் அலைகள் தழுவிய ஈரங்களை உறிஞ்சி,எவர் பாதங்களும் படாமல் சிவந்துபோயுள்ளன. "அவற்றின் அழகு குலையாமல் அப்படியே இருக்கட்டும்" என்றபடி அந்த நீருக்கும், மண்ணுக்குமான அந்தக்காதல் ஸ்பரிசங்களைக்குழப்பாமல் எம் விழிகளை அந்தப்பரந்த வெளிக்குள் பறக்கவிட்டு அந்த உலகை, அந்த வாழ்வை, அந்த உயிர்மூச்சுக்களின் அடிநாதங்களை முகர்ந்தபடி நாமும் அந்த மணல்களின் மடிக்குள் கட்டுண்டு புரண்டு, மறுபடி உயிர்த்து அந்தக்கடலைக்கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் அவரது மாடுகளை மேய்த்துக்கொண்டு இந்தக்கடற்கரை வழியாக பட்டி திரும்புகின்றார். சிவந்திருந்த ஈரமண்ணில் மாடுகளின் கால்கள் பதிகின்றன. சோடிகட்டி வருகின்ற அந்தப்பாதங்கள் தொட்ட அடையாளங்களும், அந்திவந்து விழுந்த அந்தக்காட்சியும், "இன்னும் இந்த மணலிலேயே இருந்துவிடு" என்றது.
அப்போது இன்னொருவர் தனது தொழிலை முடித்து, நன்றாகக்களைத்து மெல்லமெல்ல நடந்தபடி வீடு திரும்புகின்றார். பெட்டி பெட்டியாய் பெரிய வெள்ளை நிற அகலக்கோடுகள் போட்ட, நீல நிறம் கலந்த சாரமும்,அரைக்கை நைலோன் சேர்ட்டும், தேய்ந்த பாட்டா செருப்புமாக அண்ணளவான உயரமுள்ளவர் அவர். கைகளில் நிறைய சிப்பி,சோகிகள் நிறைந்த மாலைகள். அதைவிட ஒரு பை.அதற்குள்ளும் இன்னும் நாம் காணமுடியாத பொருட்கள். தூரத்திலிருந்து வரும்போதே அவரது கண்கள் எம்மீது தெறிப்பது தெரிகின்றது. கிட்ட நெருங்க,நெருங்க மெலிந்த உடலுக்குள் சிறுத்த முகம் இன்னும் சருகாகி அவரது புன்னகை மட்டுமே அந்த வறுமைக்கு எதிர்மாறாய் நம்பிக்கையுடன் பிரகாசித்தது.
நாமும் தூவினோம். எங்கள் சிரிப்பை.சிரிப்புத்தானே அன்பின் முதல் விதை!
"ஹலோ" என்றார்.
நாம் "வணக்கம்" சொன்னோம்.
" நீங்கள் தமிழா?", என்னைப்பார்த்தபடி, "உங்களைப்பார்த்தா ஓரளவுக்கு உடனே பிடிச்சிடலாம். ஆனால், மற்றவங்களை? மட்டுக்கட்டவே முடியாது.
ம்..இவங்க?"
"அவங்க பிள்ளைங்க, இவங்கதான் வைவ்."
"ஆ.. அப்படியா.சந்தோஷம். மற்றவங்க..?"
"இவங்க எங்கட சொந்தங்கள்".
"எங்க இருந்து வாறீங்க?"
"ஜேர்மனி ".
"இங்கதான் முதல்ல இருந்தீங்களா?"
"இல்லை. சொந்த இடம் யாழ்ப்பாணம்.
"ஆ.. அப்படியா"என்று மெல்ல தள்ளாடியது அவரது வார்த்தை.காயப்பட்ட வாழ்க்கையின் வலிதனை இந்த உள்ளமும் வெளிப்படுத்த முனைகின்றதா?
அன்பைத்தேடும் உள்ளமா,அன்றி ,"இவர்களிடம் என் வியாபாரம் செல்லுமோ"என்று அல்லாடுகிற மனசா? இவர் முதலாவது என்பதற்கு அவரது செயல்பாடு உணர்த்தியது. அதுவே என்னையும் கவர்ந்தது. எப்படியென்றால்.. வந்ததிலிருந்து மூசி, மூசிக்கதைத்த அந்தக்களைப்பிலும்கூட"எனக்குக்கஷ்டம்,
ஏதாவது வாங்குங்கள்" என ஒரு வார்த்தைகூட அவர் சொன்னதில்லை. நாங்கள்தான்; இது என்ன விலை, அது என்ன விலையெனக் கேட்டுக்கேட்டு, அவர் வைத்திருந்த அந்தக்கைவேலைப்பாடுகளில் மயங்கிப்போனோம்.கடல்காற்றும் இதமாக வீசிக்கொண்டேயிருந்தது.
"எல்லார்க்கும் சொல்ர விலைதான் உங்களுக்கும். எனக்கும் குடும்பம் பிள்ளை, குட்டீங்க இருக்கிறாங்க, அதனால இந்தக்கடல்தான் எங்களுக்கு எல்லாமே.
இந்தக்கர்த்தர் சாட்சியா பொய்சொல்லிச்சம்பாதிக்கமாட்டம். அதனால நீங்க விரும்பிறத குடுங்க" என்றார். நாள் முழுக்க ஒரு கரையில் தொடங்கி, மறுகரை வரை இந்தச்சுட்டெரிக்கும் சூரியனில் வெந்து, பாதங்கள் பொக்களிக்க,கால்கள்நோக நடந்து,புளுங்கிச்சுமக்கும் அந்த வலியை, மீண்டும் சென்றதூரத்திலிருந்து வீடு வரை இந்தக்கால்கள்படும் பாட்டை எல்லோரும் அநுபவித்தால் இப்படிப் பேரம்பேச வருமா? ஒன்றுமே யோசிக்கவில்லை.இந்தக்கடல் இப்போது எமக்கும் கர்த்தராகவே தெரிகின்றது.அள்ளிக்கொடுத்தோம். "இல்லை, இல்லை. இதுபோதும் ஐயா" என்றவர், தன்னை மறந்து தன் கதை சொல்ல ஆரம்பித்தார்..
" எப்படி இருந்தோம். அப்படி எங்கட பிள்ளைகள்.. இந்தக்கடலையும், எங்களையும் அந்தமாதிரி வைச்சிருந்தாங்க. நானும் கடற்தொழில் செய்து என்ர பெண்சாதி,3 பிள்ளைகள். அதுகளோட சந்தோசமா வாழ்ந்தம். இப்படியே காலத்த ஓட்டிடுவம், நமக்கும் ஒரு விடிவு கிடைக்காமலா போயிடும் என்றிருந்தம். ஆனா, இப்படி வந்து முடிஞ்சுபோய்ச்சு. இப்ப பாருங்க இப்படி சாமத்தில எழும்பி, இதுகளச்சேகரிச்சு, கடலுக்குப்போறவங்கிட்ட கெஞ்சி,மண்டாடி வாங்கி, அதற்குப்பிறகு இப்படிக்கோர்த்துக்கட்டி, அந்தக்கரையிலயிருந்து, அடுத்ததொங்கல் மட்டும் காவவேணும்.."
இழந்த இந்த முகத்தின் சாட்சியாய் கண்களிலிருந்து பொலபொலவென்று உகுத்தகண்ணீர் எம்மையும் கலங்கவைத்தது.
"அழாதீர்கள். உங்களுடைய நம்பிக்கை வீண்போகாது. எல்லாம் நல்லபடி நடக்கும்" என்றார் என் மனைவி.
" ஓம் ஓம் அம்மா. எனக்கும் 3பிள்ளைகள். இரண்டைக்கரை சேர்த்திட்டன். இன்னும் ஒன்று. அவளையும் நான் சாகிறதுக்குள்ள.. எப்படியாவது என்றபடி அந்தக்கடலைப்பார்த்து அந்தக்கைகளை விரித்தபடி..கர்த்தரே" என்றார்.
சற்று நேரம் அவரது மூச்சு நின்றதுபோல் ஒரு பிரமை. அடுத்தகணம் நீண்ட பெருமூச்சுடன் மெல்லிய அவரது சிரிப்பு அந்தியுடன் கலந்தது..
"சரீங்க. நான் போய்ற்று வரவா, எப்ப பயணம்?"
"இன்னும் 3 நாளில"
"அப்படியா.அதுக்குள்ள கட்டாயம் சந்திப்பம்..உங்க பிள்ளைகளும் வடிவாத்தமிழ் கதைக்கிறாங்க. நல்லா வளர்த்திருக்கிறீங்க. சந்தோஷம். நல்லாயிருங்க" என்று அவர் சொல்ல, அந்தச்சோர்வடைந்த கால்கள் அவரைப்பத்திரமாய்த்தொடர்ந்து சுமக்கின்றன..
எம் இனத்தின் ஒரு உறவு அந்த அரைமணி ப்பொழுதில் கொட்டிச்சென்ற அந்த வலியைத்தாங்கமுடியாமல் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களுடன் அந்த இரவில் நானும் பேசிக்கொண்டிருந்தேன்.
அடுத்து வந்த நாட்களில் அவரும் போகும்போதும், வரும்போதும் எம்மோடு இன்னும் நெருக்கமாகி நீண்டகதைகள் சொன்னார். அப்போதும்கூட "எங்கட பிள்ளைகள், எங்களக்காத்தவங்கள்" என்று அவரது அந்த நம்பிக்கையின் உரிமைக்குரல் அப்போதும்கூட நின்றுவிடவில்லை.
நாமும் இந்தக்கடலையும், அந்த உறவையும் பிரியும் நாளும் வந்தது. பிரிவதற்கு முதல்நாள் வெயில்தாழும் பொழுதது. எங்களின் மனசுகளின் சோகங்களுக்கேற்றாற்போல அந்தக்கடலும் அமைதியாய்த்தன் அலையை எம் கால்களுடன் தழுவிக்கொஞ்சியது..இரைச்சலையே மொழியாக்கி, உணர்வாக்கி "போய்வா" என்றது.
அந்தக்கடலின் மணலையும் கொஞ்சம் அள்ளி எங்கள் மகள் ஒரு சிறிய போத்தலுக்குள் போட்டாள். "எங்கட மண் இது. இதுதான் எங்கட அடையாளம் " என்றாள்.உருகிப்போனோம். அப்பொழுது மெளனித்துப்போன வாழ்வோடு போராடும் அன்பான அந்தக் கடற்தொழில் உறவும் எம்மைத்தேடி வந்தார். வந்ததும், தனது பைக்குள் இருந்து ஒரு சங்கை எடுத்தார், எடுத்து என்னிடம் தந்தார். "இந்தாங்க இதை வைச்சிருங்க ". என்றார்.
"அட கடவுளே.உங்களைக் காண நாங்கள் அடிக்கடி இங்க வருவம். உங்கட அன்பு ஒன்றே போதும்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர், "அடுத்தமுறை நீங்க வரும்போது நாம உயிரோட இருக்கின்றமோ, இல்லையோ, இதை என்ர ஞாபகார்த்தமா வைச்சிருங்க" என்று சொன்னபடி என் கைகளைப்பற்றினார். அழுதார். இறுக்கிக் கட்டியணைத்து அந்தச்சங்கை வாங்கினேன். ஒரு சதம் கூட அவர் வாங்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் இந்தச்சங்குக்குள் அவரது மூச்சும், காற்றும், ஏன் அவரது அன்பும், புன்னகையும், வாழ்வோம் என்ற வைராக்கியமும்கூட என்னைப்பார்த்தபடி, எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும்.
அலைமோதுவதுபோல எண்ணக்கிடக்கைக்குள் அவரைப்பற்றிய தேடலும் அடிக்கடி உலாவரும். " உழைப்புக்களே வறண்டுபோன கால மிது. அவர் என்ன பாடுபடுகின்றாரோ! அவரது குடும்பம்? இல்லை. கண்டபடி நாம் யோசிக்கவேண்டியதில்லை .அந்தக்கடலும், நட்சத்திரங்களும், அவரது நம்பிக்கையும் எல்லாம் சேர்ந்து அவர்களை நிச்சயம் வாழவைக்கும்.. இழந்த முகங்களின் சாட்சிகளாய் அங்கே இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள்.. ?
[தொடர்ந்தும் நனவிடை தோய்வோம்]