பாடகர் ஜெயச்சந்திரன் தனது எண்பதாவது வயதில் மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல். என்னைக் கவர்ந்த பாடகர்களில் இவரும் ஒருவர். இவரை நான் முதன் முதலாக அறிந்தது யாழ் ராஜா தியேட்டரில் பார்த்த ஶ்ரீதரின் அலைகள் மூலம்தான். அத்திரைப்படத்தின் மூலம்தான் முதன் முதலில் கன்னட நடிகரான விஸ்ணுவர்த்தனையும் அறிந்து கொண்டேன். அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பொன்னென்ன பூவென்ன' பாடலைக் கேட்டதுமே பிடித்துப்போனது.
இது தவிர கடலோரக் கவிதைகள் படத்தில் இடம் பெற்றுள்ள கொடியிலே மல்லியப்பூ , அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம், கிழக்கே போகும் ரயில் - மாஞ்சோலைக் கிளிதானோ மற்றும் வைதேகி காத்திருந்தாள் - காத்திருந்து காத்திருந்து இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஜெயச்சந்திரனின் பாடல்கள். பல தடவைகள் மீண்டும், மீண்டும் கேட்டு இரசித்த பாடல்கள் இவை.
தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் & ஹிந்தி எனப் பன்மொழிகளில் பாடிய இவரது பாடல்கள் கேட்பவர் உள்ளங்களைத் தொட்டு வருடிச் செல்பவை. இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் சிறந்த பாடகருக்கான விருதுகளைப் பெற்ற ஜெயச்சந்திரன் சிறுவயதிலேயே மிருதங்கக் கலைஞராகத் தன் வாழ்வை ஆரம்பித்தவர். இவர் ஒரு விலங்கியல் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரை நினைத்ததும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம் - தொலைக்காட்சி இசை நிகழ்வொன்றில் நடுவராக இருந்த இவர், பாட வந்த இளம் பாடகர் அநுருத்தின் 'கொலை வெறி' பாடலைப் பாடத்தொடங்கியதுமே தனது எதிர்ப்பைக் காட்ட மேடையை விட்டு இறங்கிப்போனார். எந்த நிகழ்வென்று சரியாக நினைவிலில்லை.
எனக்குப் பிடித்த ஜெயச்சந்திரனின் ஐந்து பாடல்கள்
அலைகள் - பொன்னென்ன பூவென்ன - https://www.youtube.com/watch?v=BrWI9TY_-dA
கடலோரக் கவிதைகள் - கொடியிலே மல்லியப்பூ https://www.youtube.com/watch?v=5YQeiNsDU9o
அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம் https://www.youtube.com/watch?v=OsyMpWlKwMA
கிழக்கே போகும் ரயில் - மாஞ்சோலைக் கிளிதானோ https://www.youtube.com/watch?v=aKB_mn-DkvU
வைதேகி காத்திருந்தாள் - காத்திருந்து காத்திருந்து https://www.youtube.com/watch?v=c5LDzY5JQxU