படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது.
கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார்.
1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா, உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர்.
1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய வட்டாரத்தில் எனக்கு அறிமுகமானவர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், பிரமுகர்கள் பலருடனும் தொடர்பிலிருந்தவர்.
நான் இவரை சந்தித்த காலப்பகுதியில் ( 1970 களில் ) லங்கா சமசமாஜக்கட்சியின் பணிமனையிலும் இயங்கிக்கொண்டிருந்தார். இடது சாரித் தோழர்களுடனும், முற்போக்கு கலை, இலக்கியவாதிகளுடனும் அவருக்கு நெருக்கமான தோழமை இருந்தது.
சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், கலை, இலக்கிய தொழிற்சங்க ஆளுமைகள் பற்றிய பதிவுகள் முதலானவற்றை எழுதியவாறு நாடகங்களும் எழுதி தயாரித்து இயக்கி மேடையேற்றியவர்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையக மூத்த எழுத்தாளர்கள், என். எஸ். எம். இராமையா, இர. சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டிருந்த காலப்பகுதியில். அந்தனிஜீவா , மலையக கலை, இலக்கிய பேரவை என்ற அமைப்பினையும் ஆரம்பித்து, மாநாடுகளையும் இலக்கிய விழாக்களையும் நடத்திக்கொண்டிருந்தவர்.
கொழுந்து எனும் கலை, இலக்கிய காலாண்டு இதழையும் நீண்டகாலம் வெளியிட்டார். இவ்வதழின் ஊடாக சில இலக்கியப்போட்டிகளையும் நடத்தினார்.
1987 தொடக்கத்தில் நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர், 1986 ஆம் ஆண்டு நவம்பரில், அந்தனிஜீவா, கண்டியில் நடத்திய அவரது மலையக கலை, இலக்கிய பேரவையின் மாநாட்டுக்கு நண்பர் ராஜஶ்ரீகாந்தன் மற்றும் இ. மு. எ. சங்கச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் ஆகியோருடன் சென்றிருந்தேன். இம்மாநாட்டில் மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.
2002 ஆம் ஆண்டு நான் இலங்கை வந்திருந்தவேளையில், “ஞானம்” தி. ஞானசேகரனும் கண்டி இலக்கியவாதி இராமனும் இணைந்து நடத்திய வரவேற்புக்கூட்டத்திலும் அந்தனிஜீவா கலந்துகொண்டார். அன்று அந்த நிகழ்ச்சி முடிந்ததும், நாம் இருவரும் ஒன்றாகவே கொழும்புக்கு பயணமானோம். அன்றைய தினம் மாலையில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் நடந்த எழுத்தாளர் சோமகாந்தனின் நூல்களின் வெளியீட்டு அரங்கிலும் இருவரும் கலந்துகொண்டோம்.
எங்கள் நீர்கொழும்பூரில் நாம் நடத்திய இலக்கிய கூட்டங்களுக்கும் அந்தனிஜீவா வருகை தந்திருப்பவர். அத்துடன் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல பிரதேசங்களில் நடந்த கலை, இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றிருப்பவர்.
அவரது அக்கினிப்பூக்கள் நாடகம் 1977 களில் பொரளையில் மேடையேற்றப்பட்டபோது, அக்காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம், பிரதம விருந்தினராக வருகை தந்து உரையாற்றிச் சிறப்பித்தார். அவருடன், அவரது செயலாளர் பேரின்பநாயகமும் வருகை தந்திருந்தார்.
தான் எழுதிய நாடகங்களை மட்டுமன்றி, மற்றவர்கள் எழுதிய நாடகங்களையும் அந்தனிஜீவா இயக்கியிருக்கிறார். அதில் குறிப்பிடத்தகுந்த நாடகம். மூத்த எழுத்தாளர் சுபைர் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி நாடகம். இந்நாடகம் 1982 – 1983 பாரதி நூற்றாண்டு காலப்பகுதியில் மருதானை டவர் மண்டபத்திலும், பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் மேடையேற்றப்பட்டது.
பம்பலப்பிட்டியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவில் இந்நாடகம் மேடையேற்றப்பட்ட வேளையில், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பாரதி இயல் ஆய்வாளரும், இலக்கிய விமர்சகருமான தொ. மு. சி. ரகுநாதன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
1980 களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்காக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் ஜனசக்தி ஆசிரியருமான தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்களின் அறிமுகம், அந்தனிஜீவாவுக்கு கிடைத்தது.
அதனால், அவரின் அழைப்பின்பேரில், தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றத்தின் மாநாட்டில் இலங்கைப்பிரதிநிதியாக அந்தனி ஜீவா கலந்துகொண்டார். அந்தப்பயணத்தின்போது எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்தித்துவிட்டு வந்து தினகரன் வார மஞ்சரியில் தொடர் கட்டுரை எழுதியிருக்கும் அந்தனிஜீவா, பின்னாட்களில் தமது ஐரோப்பிய பயணங்கள் குறித்தும் எழுதியவர்.
ஈழத்து இலக்கிய பரப்பிலும், நாடக உலகிலும் இயங்கிய மூத்த தலைமுறையினருக்கும் இளம் தலைமுறையினருக்கும் மத்தியில் அந்தனி ஜீவா, நெருக்கமான உறவைப்பேணியிருக்கும் அதே சமயம், வாதப்பிரதிவாதங்களிலும் ஈடுபட்டவர்.
இவரது கலகக்குரல் கலை, இலக்கிய முகாம்களில் பிரசித்தம்.
2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் அந்தனிஜீவாவின் பங்களிப்பு முக்கியமானது. அம்மாநாட்டுக்கு எதிராக எதிர்வினைகள் எழுந்தபோது, இலங்கை, தமிழக மற்றும் தமிழர் புகலிட தேசங்களில் தமிழ் ஊடகங்களின் ஊடாக அந்தனிஜீவா மாநாட்டின் தேவையை வலியுறுத்தி குரல் எழுப்பினார்.
இடதுசாரி சிந்தனையுடன் இயங்கிவந்திருக்கும் அந்தனிஜீவா, பின்னாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின் தமிழ் ஏடான செஞ்சக்தியின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தவர். அதனால், இன்றைய ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்காவின் அபிமானத்தையும் பெற்றிருந்தார்.
தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி இயங்கியிருக்கும் அந்தனிஜீவா, தற்போது தனது மறைவின் மூலம் நிரந்தர ஓய்வினைப்பெற்றுள்ளார்.
அவரது நூல்கள் மற்றும் அவர் வெளியிட்ட கொழுந்து காலாண்டு இதழ்களை வாசகர்கள், நூலகம் ஆவணகத்தில் படிக்கமுடியும். அதன் மூலம் அவரது ஆளுமைப்பண்புகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
அந்தனி ஜீவாவின் நூல்களை நூலகம் தளத்தில வாசிக்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.