ஆய்வுச் சுருக்கம்
நோய் – மருந்து. மருந்து - நோய் என்ற இந்த இரண்டும் மனித வாழ்வில் நீங்காத இடத்தை பிடிக்க கூடியதாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. நோய் நீங்குவதற்கு மருந்து உண்பதும் உண்ட மருந்தினால் உண்டாகக்கூடிய பக்க விளைவு குறித்தும் இன்று நாம் அதிகம் கவனம் செலுத்துகிற ஒரு சூழலை பார்க்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் தமிழ் மருத்துவம் குறிப்பாக, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இருந்த மருத்துவத்தின் செயல்பாடு அச்செயல்பாடு இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த வகையில் பொருத்தம் உடையதாக இருக்கிறது? என்பது குறித்த செய்தியை நாம் திருக்குறளின் பின்புலத்தில் பார்க்கிறோம். அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்த கட்டுரை முன்வைக்கிறது.
குறிச்சொல் – நோய், மருந்து, இயற்கை உணவு, செயற்கை உணவு, மனிதனுடைய பண்பாட்டு செயல்பாடுகள், நாகரீக வாழ்வியல் முறை.
முன்னுரை
இனம், மதம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து மனித சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் நூலாக விளங்கக்கூடியது திருக்குறள். ‘பல்கால் பழகினும் தெரியா...’ உள்ள நூல்களுள் ஒன்று. தமிழ் மொழியில் ஆகச்சிறந்த நூல்களுள் ஒன்றான திருக்குறளில் ஏராளமான அறிவியல் சார் கருத்துக்கள் சிதறி கிடக்கின்றன. அவை மனித சமூகத்தின் எக்காலத்தவற்கும் உரிய பயனைத் தரக்கூடியவையாக விளங்குவன. அவற்றில் நோய் - நோய்க்கான காரணி - அந்நோய்க்கான தீர்வு என்ற முறையில் சொல்லப்பட்டுள்ள மருத்துவச் சிந்தனைகள் குறித்து மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாகக் காணலாம்.
பிணி – நோய்
‘பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்தோ?(புறம். 175) என்ற ஒரு வினாவை நாம் சங்க கால புலவர் ஒருவர் (மன்னன் கிள்ளிவளவன்) பாடலில் பார்க்கிறோம். அப்பாட்டில் உள்ள பொருள்படு பிணி என்பது பசியைக் குறிப்பதாக உள்ளது. அந்தப் பிணிக்கு மருந்து உணவு. உண்ண உணவு கிடைத்துவிட்டால் அப்பிணி நீங்கிவிடும். இது சங்க கால நிலை. ஆனால் இன்று ‘உணவே மருந்து. மருந்தே உணவு’ என்பதாக இரு முரண்பட்ட இரு போக்கினை நாம் பார்க்க முடிகின்றது. அதாவது, மனிதன் நோயற்ற வாழ்க்கையை வாழ ‘இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட நல்ல உணவே போதுமானது’ என்று ஒருபுறம் இயற்கை நோக்கி மனிதர்கள் செல்ல வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. மறுபுறம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக உருவான புதிய கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு ஏற்படும் நோய் குறித்து நுட்பமாக அறிவதுடன் அதை முற்றிலுமாக நீக்கவும் முயன்று கொண்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளை மனிதன் தினந்தினம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் அவனது முயற்சிக்கும் கண்டுபிடிப்பிற்கும் சவால்விடும் வண்ணம் புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டுள்ளன. இது இருக்க, நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளால் பக்கவிளைவுகள் (வேறு புதிய நோய்) உண்டாவதும் நிகழ்கின்றன. சுருக்கமாகச் சொல்வதானால் மனிதனுக்கு நன்மை அளிக்கக் கூடியவை மனிதனுக்கு மனிதனுடைய எதிர்கால சந்ததியினருக்குத் தீங்கை விளைவிக்க கூடியவை என்று இரண்டு கூறுகளாக இன்றைய அறிவியல் சார் மருத்துவத்தை (மருத்துவ கழிவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் கணக்கில் கொள்ள) நாம் அடையாளம் காண்கிறோம். இத்துடன், இன்றைய உணவு சார்ந்த உற்பத்திகளைக் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இன்றைய பொருள்தேடும் வணிகமயமான வாழ்க்கைச் சூழலில் உணவு சார்ந்த உற்பத்தி வருமானம் தரும் பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. நாக்கிற்குச் சுவை அளிக்கக்கூடிய உணவை உண்பது உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவை உண்பது என்று இன்று உணவை உண்ணுகிற முறையை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்கவேண்டி உள்ளது.
அதாவது, உணவே மருந்து என்று இயற்கையை இயற்கையோடு வாழ்ந்த வாழ்வியலை மனிதனுடைய அனுபவ அறிவின் மூலம் கண்டடைந்த உண்மைகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கச் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிறமூட்டிகள், கவர்ச்சிகரமான வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களின் கலவையால் உருவாக்கப்பட்ட உணவை நாவின் சுவைக்காக உண்பது என்பதாக இந்த உணவு கலாச்சாரத்தை இன்று நாம் பார்க்கிறோம். இந்தப் பின்னணியில்தான் நாம் வள்ளுவரிடம் வரவேண்டி உள்ளது.
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள்.948)
அதாவது, நோய் ஏன் உண்டாகிறது? அந்த நோய்க்கான மூலகாரணிகள் என்னென்ன? அந்த நோயை உருவாக்கக் கூடிய வாய்ப்புகளைத் தரக்கூடிய அந்தக் காரணிகளைத் தவிர்ப்பது எவ்வாறு? என்பதைப் பற்றி ஆராய்ந்து அதற்கான சரியான மருந்தினை அளிக்க அந்நோய் குணமடையும் என்கிறது திருக்குறள். உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் பொழுது இன்றைய ஆங்கில மருத்துவமும் அதையேதான் பின்பற்றுகிறது. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அந்த நோய் என்ன? அந்த நோய் எதனால் உருவானது? அந்த நோயை தீர்ப்பதற்கான மாற்று மருந்து என்ன? என்பது போன்ற படிப்படியான செயல்பாடுகளைத்தான் முன்வைக்கின்றன. இன்றைய நவீன அறிவியல் கட்டமைக்கின்ற இந்த மருத்துவ முறையானது திருக்குறளில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது. என்பது ஆச்சரியமான ஓர் உண்மை. அதாவது, நோயைத் தீர்ப்பதற்கான மருந்து என்பதை விட அந்த நோய் உருவாவதற்கான காரணியை நீக்குவது அதாவது நோயை முற்றிலுமாக உருவாகாமல் தடுப்பது என்பதாக மருத்துவம் அமைய வேண்டும் என்பதுதான் திருக்குறளில் சொல்லப்படும் கருத்து. ‘வருமுன் காப்போம்’ என்ற இன்றைய சிந்தனையின் தோற்றம் திருக்குறளில் இருந்து ஆரம்பிப்பதை நாம் பார்க்க முடிகிறது.
நோய் மூன்று
மனிதர்களுக்கு உண்டாகும் நோய் மூன்று வகைப்படும். அவை,
தொற்று நோய், 2. மன நோய், 3. உணவால் உண்டாகும் நோய் என்பனவாகும்.
ஒரு நாடு சிறந்த நாடாக விளங்கவேண்டுமானால் அந்நாட்டில் மூன்று விசயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் திருக்குறள் அதில் ஒன்று தொற்று நோய் என்கிறது.
நீடித்த உணவு பஞ்சம், தொற்று நோய், படை எடுப்பு என்ற இந்த மூன்றும் வராதபடி காப்பதே நல்ல நாடு. (734). அதாவது, நோய் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. இன்றும் உலக சுகாதார அமைப்புகள் நோயை அப்படிப்பட்ட காரணியாகத்தான் கருதுகின்றன. நோயை நீக்க நாடுகள் வேற்றுமைகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
அடுத்ததாக, பிணிக்கு மருந்து பிற ஆனால் அழகான அணிகலன்களை அணிந்துள்ள பெண்ணால் வரும் நோய்க்கு அவளே மருந்து (738) என்று மன நோய் பற்றிக் கூறுகிறது. மேலும், அம்மன நோய்க்குக் காரணியானதே அம்மன நோய்க்கான மருந்து என்கிறது. அதாவது, உடலில் உண்டாகும் பிற நோய்களுக்கெல்லாம் வேறுவேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மன நோய்க்கு நோய் உருவாகக் காரணமாக இருந்த காரணிதான் அந்நோய் நீங்குவதற்கான மருந்தும் ஆகும்.
பேராசை (விடாப்பிடியான விருப்பம்), கோபம், அறியாமை, ஆகிய இந்த மூன்றும் நோய் உருவாவதற்கான அடிப்படை காரணிகளாக விளங்குகின்றன (360). இம்மூன்றின் காரணமாக ஒரு மனிதனுக்கு அவப்பெயர் உண்டாகின்றது. அத்துடன் அவனது உடல் நலத்திற்கும் தீங்கும் உண்டாகின்றது.
சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தன் கை பிழையாதற்று (குறள் 307)
மற்றும்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னைத்தான் கொள்ளும் சினம் (குறள் 306)
நற்பெயருக்கு ஏற்படும் தீங்கானது அவனது மனதைப் பாதிக்கின்றது. அதன் பின்னர் அதன் காரணமாக உடலுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அதாவது, மனநலம் உடல்நலத்தைப் பாதிக்கின்றது. இத்தகைய பாதிப்புகள் பற்றிய நவீன அறிவியல் உளவியல் சார்ந்து பல்வேறு செயல்பாடுகளை முன்வைக்கின்றன. இதன் முன்னோடியாகத் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இருக்கின்றன.
அடுத்தாக, நோய் உணவால் உண்டாகிறது என்றும் கூறுகிறது.
மருந்துஎன வேண்டாவாம் யாக்கை அருந்தியது
அற்றது போற்றி உணின் (குறள். 942)
மற்றும்
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள், 941)
அதாவது, உணவே மருந்து என்கிறது. உணவால் நோய் எவ்வாறு உருவாகிறது என்பதையும் அதற்கான தீர்வுகாணும் வழிமுறைகளையும் பற்றி சற்று விரிவாகவே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. அது உணவே மருந்து மருந்தே உணவு என்பது இன்றைய இயற்கை இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நோயற்ற வாழ்க்கைக்கான தீர்வு என்று மக்களால் இன்றும் பின்பற்றி வரக்கூடிய ஒன்றாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உடல் வளர்ச்சிக்காக அறுசுவைகளும் நிறைந்த உணவாக இருந்தாலும் அவ்வணவு முறையான அளவில் உண்ணவேண்டும். ஒருமுறை உண்டது முற்றிலும் சீரணமாகி விட்டது என்பதைக் கவனித்து அடுத்த முறை உண்டால் நோய் உண்டாகாது. ஆகவே, மருந்தே வேண்டியிருக்காது.
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு. (குறள். 943)
அத்துடன், ஒரு முறை உண்டதற்கும், மறுமுறை உண்பதற்கும் இடையில் இருக்க வேண்டிய) கால அகைய அறிந்து கொண்டு உண்ண வேண்டும். மேலும், உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை நீக்கிவிட்டு ஒத்துக்கொள்ளக் கூடியவற்றையே நாம் உண்ண வேண்டும். அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (குறள்.945)
அளவுக்குத் தக்கடி உண்ணாமல் மிதமிஞ்சி உண்டால் அளவில்லாத நோய்கள் உண்டாகும்.
அளவன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய்அளவு இன்றிப் படும். (குறள். 947)
இன்று உணவுச் செறிமாணக்கோளாறு பற்றி அதிகம் பேசப்படுகின்றன. அதாவது, பசி என்பது ஒருபுறம் உணவால் (உண்ணக் கிடைத்தால்) தீர்க்கக் கூடிய நோயாக இருக்கிறதென்றால் மறுபுறம் அதே உணவால் (உணவுக் கட்டுப்பாடு) உண்டாகக் கூடிய ஒன்றாக உள்ளது. ஒருபுறம் மிதமிஞ்சிய உணவும் மறுபுறம் பட்டினியுமான இந்த உணவு சமநிலையற்ற போக்கை இன்று பார்க்க முடிகின்றது. இதைச் சமநிலைப் படுத்தினால் நோயற்ற வாழ்க்கையுடன் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.
இப்படி நோய்க்கும் உணவிற்குமான உறவு மற்றும் நோய் வருவதைத் தடுப்பதில் உண்ணும் உணவிற்கு உள்ள தொடர்பு குறித்து விரிவாகக் கூறியுள்ளார். இன்றைய உணவு பின்புலத்தில் உண்டாகும் நோய் மற்றும் அதற்கான தீர்வில் இன்றைய நவீன மருத்துவமும் இதையேதான் முன்வைக்கின்றது.
நோய் – நோயாளி – மருத்துவன் உறவு
அதற்கு அடுத்ததாக இந்த நோய் நோயாளி மருத்துவன் நோய் நீங்கக் கூடிய வழிமுறைகள் என்று பல்வேறு விஷயங்களை பேசும் திருக்குறளில் இன்றைய அறிவியல் மருத்துவமனைகள் முன்னெடுக்கக்கூடிய செயல்பாடுகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன.
நோயை இன்னதெனக் கண்டறிந்து, நோய் வந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வினை காண வேண்டும் என்று கூறுகிறது.
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (குறள். 949)
நோயாளியின் வயது, அவனது உடல் வலிமை நோயின் வலிமையையும் அப்போதுள்ள நிலைமையையும் தீர எண்ணிப் பார்த்துத் தக்கது செய்ய வண்டியது தொழில் கற்ற வைத்தியனுடைய வேலை.
உற்றவன் தீர்ப்பான மருந்து உழைச்செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து (குறள்.950)
அதாவது, நோயாளியை வைத்தியனிடம் ஒப்படைத்த பின்னர் வைத்தியன் மருந்து, நோயாளியின் அருகிலிருக்க வேண்டிய துணை என்ற நான்கைத் தவிர மற்றவர்களின் தலையீடு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் சரியான மருத்துவம் பார்க்க முடியாது என்பது திருக்குறள் முன்வைக்கும் கருத்து. இன்றைய நிவீன மருத்துவமும் இதைத்தான் வலியுறுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பயன்பட்ட நூல்கள்
திருக்குறள், மணக்குடவர் உரை, 1955 (முதற்பதிப்பு), மலர் நிலையம், சென்னை - 600 001.
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், 1976, மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை.
பதினண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும் (முதல் தொகுதி), 2022 (மூன்றாம் பதிப்பு), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 600 017.
புறநானூறு (தொகுதி -1, 2), பாலசுப்பிரமணியன், முனைவர் கு.வெ., (உ.ஆ.கு), 2004 (மூன்றாம் அச்சு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.