'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'

'அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது....அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். 'நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.
முதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.

வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம்சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான். ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறுவேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றிபெற்றுவிடுகின்றன. முருகபூபதின் பறவைகள் நாவல், நம்காலச்சூழலின் ஒரு பகுதியைப்பதிவுசெய்துள்ள முறையில் நம்மைப்பாதிக்கிறது. பல எழுத்தாளர்களின் கதைகளைப்படித்த பின் அவர்களது புத்திசாலித்தனமும், கதையை சொல்லியவிதமுமே மனதில் மீந்திருக்கும். கதை முடிந்தபிறகு, அதை எழுதியவரைப்பற்றி நினைக்காமல் எழுத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையைப்பற்றி மனிதர்களைப்பற்றிக் கொஞ்சநேரமேனும் ஆழ்ந்து யோசிக்கவைக்கும் சக்தி மிகச்சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. அதில் முருகபூபதியையும் ஒருவராய்க்குறித்துக்கொள்ள முடிகிறது.
கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம். உசனார் தொரை என்பவரிடம் வேலை செய்யும் ரகீம், தனது மகன் தஸ்லீமின் உயர்கல்விக்காக பணவுதவி கேட்கின்றார். தன்னிடம் தொழில்பார்க்கும் ஒருவனின் மகன், பட்டணத்தில் போய் உயர்படிப்பு படிப்பதா என்ற இளக்காரம் உசனார் தொரைக்கு. எனவே தஸ்லீமையும் வயலில் வேலைக்கமர்த்திக் கொண்டால் நல்லது என மனிதாபிமானம் கொஞ்சமுமின்றி ரகீமிடம் கூறுகின்றார். ரகீமுக்கு அவமானம் ஒரு புறம். ஆற்றாமை மறுபுறம். எனவே பேசாமல் வந்துவிடுகிறார்கள். அதையறிந்த தஸ்லீமின் தாய், தான் இத்தனைக்காலம் சேமித்து வந்த கொஞ்சப் பணத்தைக் கொடுத்தும், இடியப்பம் விற்றும் மகனை பட்டணம் அனுப்புகின்றனர். அங்கு சென்ற தஸ்லீமுக்கு நல்லதொரு நண்பன் கிடைக்கின்றான். நண்பனின் தந்தையின் உதவியுடன்; படித்து தஸ்லீம் வக்கீல் ஆகின்றான்.
சதாசிவம் மதன் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு மீன்பாடும் தேனாட்டில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான கவிஞன் என்ற சிற்றிதழின் 21 ஆவது இதழ் கிடைக்கப் பெற்Nறுன். முழுக்க முழுக்க கவிதைகளையே உள்ளடக்கி வரும் இவ்விதழ், சகல கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு கவிதை எழுதத் துடிக்கும் புதுக் கவிஞர்களுக்கும் சிறந்ததொரு ஊடகமாகவும் அமைந்துள்ளது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும் அழகாக காட்சி தரும் இவ்விதழ் இந்தியச் சிற்றிதழ்களுக்கு ஈடாக காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது...' என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்' இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.
இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலக்கிய–அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதில் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், பக்தி இலக்கியக் கட்டுரைகள், சிவநெறிச் சிந்தனைக் கட்டுரைகள், விலங்கியற் கட்டுரைகள், தாவரவியற் கட்டுரைகள், பவுதிகவியற் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள் என்று பலதிறப்பட்ட விடயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.
இரத்தத்தில் துவட்டிய அடையாளங்களுடன் அநாதரவாக அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் எச்சம்.மெழுகின் ஒளியில் மின்னி மறையும் சுவடுபோல் ஒரு இனம் வாழ்ந்து அழிந்த தீவு வெறிச்சோடிய வரண்ட பாலையாய் திரைமறைவில். எதுவும் நிகழாததுபோல் எந்த சலனமுமற்று வேடிக்கை பார்த்தபடியிருக்கும் ஒரு சோக சூரியன் என நம் கண்முன்னே நடந்த பேரவலத்தை தொக்கி நிற்கிறது "யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்"பன்னாட்டு படைப்பாளிகளின் படைப்பு நூல் அட்டை. தி.அமிர்தகணேசன் என்ற அகன் அவர்களின் ஆழுமையை பறைசாற்றியபடி விரிகிறது நூலின் பக்கங்கள். எசேக்கியல் காளியப்பன் அவர்களின் அருமையான வாழ்த்துடன் ஆரம்பித்தாலும் அனைவரையும் அழைத்து செல்கிற பக்கம் அணிந்துரை. திறனாய்வின் தேர்ந்த புலமையை மிக எளிமையாகவும், அழகாகவும் 'பரவசப்படுத்தும் யாரையும்'எனும் மகுடத்தில் மதிப்பிற்குரிய க.பஞ்சாங்கம் ஐயா கூறியிருக்கும் கருத்துக்கள் வாசிப்பவர்களை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கின்றன." வாசகர் நோக்கில் அனுபவம்... என்று மு. ராமச்சந்திரன் தமிழ் மொழியைத்தாண்டி சமூகப் பொறுப்புள்ள வலுவான வரிகள் தன்னை வெகுவாய் பாதித்ததாக கூறியிருப்பது படைப்பாளிகளுக்கும், தொகுப்பாளிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நோக்கவுரை எனும் மகுடத்தில் பொள்ளாச்சி அபி வாழ்க்கையின் ஒரு பகுதி காதலென்பது பொய்,காதல் மட்டுமே வாழ்க்கையெனக்கருதும் சிலருக்கு சாட்டையை வீசியிருப்பது அடித்தளும்பாய் தெரிகிறது.இன்றைய நிலையின் தேவையுணர்ந்து எழுதும் சிலரை சுட்டுவித்து அடையாள படுத்தியிருப்பது ம், இன்னும் எழுத புதிதாக தளத்திற்குள் தம்மை இணைக்கும் கவிதா நெஞ்சங்களை நோக்குணர்ந்து ஆக்குவோம் இலக்கியம் என்ற தொனியில் நல்ல கருத்துக்கள் பகிர்ந்திருப்பது ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்போல்.
சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். மல்லிகை, ஞானம் போன்ற முன்னணி சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் குடை நடை கடை, மண்புழு மாமா வேலை செய்கிறார், அழகிய ஆட்டம், பச்சை உலகம் என நான்கு சிறுவர் கதை நூல்களையும், காலமாம் வனம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். குடை நடை கடை என்ற சிறுவர் இலக்கிய நூல் தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்குத் திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களைச் சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரிய பீடங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலைஞர். எழுத்தாளர்கள் தாம் ஏன் எழுதுகிறோம்? எதனை எழுதுகிறோம்? எவ்வாறு எழுதுகிறோம்? என்றெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பிற்காலத்தில் தனது இலக்கியப் பங்களிப்புக்களை ஆய்வு செய்யப் போகும் ஆய்வாளர்களுக்கு அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தனது கட்டுரைகளைப் பரிசீலிக்க உதவும்பொருட்டு இந்நூலை வெளியிட்டிருக்கும் திரு. சிவகுமாரன் அவர்கள் தான் எழுதுவதற்கான காரணத்தைக் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.
இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தோழர் பொன்னையன் தமிழ்தேசிய இனத்தின் போராளி என்று வை. கோ அவர்களைக் குறிப்பிட்டார். நான் அரசியல்வாதிகள் மத்தியில் இலக்கிய இதயம் கொண்டவர் என்கிறேன். எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களையும், புரட்சிகர நடவடிக்கைகளிலும் முன்னின்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். அரசியல்வாதிகள் எழுத்தாளர்களின் நண்பர்களாக, வாசகர்களாக இருப்பது பலம் தருகிறது. லத்தின் அமெரிக்காவின் நோபல்பரிசு பெற்ற காப்ரியல் மார்க்கூஸ் அவர்களின் படைப்புகளின் வாசகன் பிடரல் காஸ்ரோ. தமிழகத்தில் பொதுவுடமை வாதிகளில் ஜீவா, பாலதண்டாயுதம் முதல் கொண்டு நல்லகண்ணு, சி.மகேந்திரன் வரை நல்ல இணக்கமானவர்களாக எழுத்தாளர்களுடன் இருக்கிறார்கள். வை.கோ. இலக்கிய இதயம் கொண்டவராக ஆறுதல் தருகிறார்.அவர் இயக்கம் சார்ந்த அருணகிரி, செந்திலதிபன், உடுமலை ரவி முதற்கொண்டு பொன்னியின் செல்வன் முதல் புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், தோப்பில் மீரான் உட்பட பல படைப்பாளிகள் பற்றி மணிக்கணக்கில் பேசும் இயல்புடையவர். அவர் தனக்குப் பிடித்த பல நூல்களைப் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.
எழுத்தாளர்களும் ரசிகர்களுமாகிய இலக்கியவாதிகளிடையே நன்கு பரிச்சயமானவர் வசந்தி. இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி காண முடியும். தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக ஓடித்திரிவார், அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கொண்ட அத்தகைய எழுத்தாளாரது நூல் இது. அத்துடன் அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. வசந்தி பற்றிய எனது முதல் மனப்பதிவு இவர் ஒரு நுண்மையான ரசனையுணர்வு கொண்டவர் என்பதாகவே இருந்தது. அடிக்கடி சந்திக்கும் ஒருவரல்ல என்ற போதும், நேரடி உரையடல்களின் போதும், நூல் வெளியீட்டு விழாக்களின் கருத்துரைகளின் போதும் அவர் சிந்தும் கருத்துக்கள் எம்மை வியக்க வைக்கும். அவை அவரது பரந்த வாசிப்பையும், ஆழமான ரசனை உணர்வையும் புலப்படுத்தவனவாக இருக்கும். பிறகு அவரது சிறுகதைகளை வாசிக்க முடிந்தது. என்ன எழுதுகிறார் என வேலோடு வாசித்தோம்;. நானும் மல்லிகை வாசகனாதலால் பெரும்பாலும் மல்லிகையில் அவரது சிறுகதைகளை வாசிக்க முடிந்தது. இப்பொழுது அவற்றின் உச்சமாக அவரது படைப்புகளை நூலாக இங்கு காண்கிறோம். சிறுவர் இலக்கியத்திலும் இவரது பங்களிப்பு இருக்கிறது. இது பற்றி பின்னர் பார்க்கலாம்.
நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார் பாடல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலானது 52 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்த கவிஞர் கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள எஸ்.ஏ. முத்தாலிப் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இதுவரை காலமும் கிண்ணியாவின் இலக்கியப் பயணத்தில் பவனி வராதிருந்த ஒரு கலை வடிவம் கிண்ணியாவின் நாட்டார் கிராமிய பாடல்களாகும். அந்த இடைவெளியை பி.ரி. அஸீஸ் அவர்கள் நிரப்பியிருக்கின்றார். நாட்டார் பாடல்கள் என்றாலே கிராமிய மண் வாசைன கலந்த நடையிலே உணர்வுகள் வெளிப்படுவதாகும். பி.ரி. அஸீஸ் அவர்களின் நாட்டார் பாடல்களில் கிராமிய சொல் வழக்கு அங்காங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது என்கிறார்.
திருப்பூர் என்றதும் என் நினைவிற்கு முதலில் வருவது சுப்ரபாரதிமணியன். திருப்பூர் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரையும் அங்கிருக்கும் படைப்பாளிகளாலேயே நினைவு கூர்கிறேன். இரண்டாவது அவருடைய விரிவான படைப்புலகம். பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழுநாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், நாடகம், பயண அனுபவம், திரைப்படக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என முப்பது நூல்கள்.. பரந்து விரிந்திருக்கிறது அவருடைய படைப்புலகம். மூன்றாவது, படைப்பாளி 'தூய இலக்கியவாதி'யாக அரசியல் சார்பு, வேறு துறை ஈடுபாடு, களப்பணி போன்றவைகள் மீதான ஒவ்வாமை இல்லாமல் சுற்றுப்புறச்சூழல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, தாய்வழிக்கல்வி போன்ற களப்பணி செயல்பாடுகள். நான்காவது அவருடைய சகாக்களான பலர் ஓய்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து இயங்காது ஐந்தாவது.. மூத்த எழுத்தாளர் ஒருவர்.. சிறந்த படைப்பாளியும் கூட அவருடைய நேர்காணல் ஒன்றில், இன்றைக்கு வரும் எழுத்துக்களை நான் படிப்பதேயில்லை. ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை" படிக்காமலேயே அபிப்ராயம் உதிர்க்கையில் சுப்ரபாரதிமணியன் இளைய படைப்பாளிகளின் எழுத்துக்களில் காட்டும் கவனம், அக்கறை.
இது தேவமுகுந்தன் அவர்களது சிறுகதைத் தொகுதி. இவர் சுமார் 20 வருடங்களாக சிறுகதைத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவராக இருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1992ல் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மரநாய்கள் என்பதே அந்தச் சிறுகதையாகும். அதன் பின்னர் நீண்ட அஞ்ஞாதவாசத்தின் பின்னர் 2008 முதல் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார். இத் தொகுப்பில் அவரது 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் முற்கூறிய மரநாய்கள் உடன் ஏனைய 9 சிறுகதைகள் அடங்குகின்றன. இவை 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை. அண்மைக் காலமாக கடந்த அதாவது 4 வருடங்களாகத் தீவிரமாக எழுதி வருகிறார். அத்தோடு பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தகவம் பரிசை இருமறை பெற்றிருக்கிறார். இருந்த போதும் பரவலான வாசகர்களைக் கொண்டவர் என்று சொல்ல முடியாது. காரணம் இவரது படைப்புகள் ஜனரஞ்கமான பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வருபவை அல்ல. குறிப்பிட்ட தரமான சில ஊடகங்களில் மட்டுமே வருபவை. எனவே காத்திமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் மேம்போக்கான கிளுகிப்பு வாசிப்பில் உள்ளவர்கள் இவரை அறிந்திருப்பது சாத்தியமில்லை.
சிறுகதை என்னும் அற்புத வடிவத்தை சுப்ரபாரதிமணியன் கையாளும் நோக்கம் 'ஓலைக்கீற்று' என்னும் இந்தத் தொகுதி மூலம் மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியனின் சிறுகதை உலகம் பெரும்பாலும் சிதைந்து வரும் மனித மனத்தையும் உடலையும் பற்றியதே. சிதைவுக்குக் காரணமாக அவர் என்றுமே தனிநபர்களைக் காரணமாய்க் காட்டியதில்லை. தவிர்க்க முடியா தொழில் வளர்ச்சி எவ்விதம் நகரங்களை விரிவு படுத்தி சுற்றுச் சுழலில் தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் உயர் தொழில் நுட்பங்கள் எவ்விதம் மனிதனின் மனஉடல் கூறுகளில் ஆதிக்கம் செலுத்தி மனித வளத்தை ஊனப்படுத்துகிறது என்பதையும் தீராத வேதனையோடு தொடர்ந்து தன் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்தத் தொகுப்பும் அவ்வித வேதனைகளை முன்வைக்கும் கதைகளின் கூட்டமே. இத்தொகுப்பின் சகல கதைகளும் வெவ்வேறு அனுபவங்களை நம்முள் நிகழ்த்தும் திறன் படைத்தவையெனினும் சிறந்த கதையாகத் தெரிவு செய்து கொண்டு நான் கொண்டாடுபவற்றைப் பற்றி இங்கு பகிர விருப்பமெனக்கு. அவ்வகையில் 'முன் பதிவு' என்றொரு கதையை எதிர்கால சமூக அமைப்பை முன்நுணர்ந்தறிவிக்கும் தீர்க்கம் கொண்டவை என்று கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் சேவை அமைப்புகள் வெகுவாக மனிதனின் அன்றாட நிகழ்வுகளில் தன் பரவலைத் துரிதப்படுத்தியுள்ளன. முன் காலங்களில் திருமணம் என்னும் நிகழ்வு உறவுகளின் ஒற்றுமையைப் பேணவும் உறவுகளுக்குள் இருக்கும் பேதங்களை களைவதற்குமான ஒரு வாய்ப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். திருமணம் என்பது ஒரு மிகப் பெரிய திட்டமிடலாக உறவுகளின் துணை கொண்டு நிகழ்த்தப்பட்ட காலம் மெல்ல அருகி, இன்று பத்திரிகை அச்சாக்கத்திலிருந்து முதலிரவுக்கான படுக்கை அறையைத் தயார் செய்வது வரை சேவை நிறுவனங்களையே நாம் சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. மேல்தட்டு மக்களிடம் ஆரம்பித்த இந்தக் கலாச்சாரம் மெல்ல அனைத்து நிலைகளிலும் பரவிக் கொண்டு வருகிறது. இது திருமணம் என்ற நிலையிலிருந்து விரிந்து இன்று வீடு மாற்றுவது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அலுவலகப் பார்ட்டிகள், வியாபாரச் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் இன்னொரு படியான மரணத்தின் இறுதிச் சடங்குகளையும் சேவை நிறுவனத்தின் துணையுடனேயே செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய உறவுமுறைச் சிக்கல்கள் நமக்கு விதிக்கக்கூடும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை 'முன்பதிவு' கதை நம் புத்தியில் ஏற்றுகிறது.
குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் 'கன்னிக் கவிதை' என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் புரியும் போது உலா, பயணம் ஆகிய நூல்களை வெளியீடு செய்துள்ளார். குருத்துமணல் பரப்புகளால் நிரம்பி வழியும் என் முற்றம் என்ற தலைப்பிட்டு இப்றாஹீம் எம். றபீக் அவர்கள் தனதுரையில் 'அன்றைய காலப் பகுதியில் மரபுக் கவிதை என்றால் தேனைத் தொட்டு நாக்கில் வைத்தாற் போல் சுவையாக இருந்தது. அப்போது புதுக் கவிதையில் எனக்கு நாட்டம் குறைவாக இருந்தது. அது மாறி, இன்றைய நிலையில் பல கோணங்களிலும் புதுக் கவிதைகள் ஆலம் விருட்சம் போல் வளர்ந்து வருகின்றன. அவற்றுக்கு ஏற்ப என்னையும், எனது நடைமுறையையும் மாற்றிக் கொண்டேன். எனக்கு தெரிந்த வகையில் இதில் புதுக் கவிதைகளை எழுதியுள்ளேன். இதிலுள்ள அநேகமான கவிதைகள் இலங்கை வானொலியான பிறை எப்.எம். இல் ஒலிபரப்பாகியவை' என்கிறார்.
மூத்த பெண் எழுத்தாளர்களில் முகப்புப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறையும் வழமை போல் தனது பத்தாவது இதழில் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி ஸகியா சித்தீக் பரீத் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னர் வெளியிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் பூங்காவனப் புகைப்படங்களை உள் அட்டையில் பதித்து இருக்கிறது. இது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமானபடியால் புகுமுக மாணவர்களுக்கு அறிவுரையாகப் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர். பகிடிவதை என்றும், ஸ்ட்ரைக் என்றும் வீணான வெறும் காரியங்களில் ஈடுபட்டு தமது கல்விக் காலத்தை வீணே கழிக்கும் மாணவர்களுக்கு அவர்களது அறிவுரைகள் மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. மூன்று சிறுகதைகளையும், ஒன்பது அருமையான கவிதைகளையும், இரண்டு கட்டுரைகளையும், நேர்காணல், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற சகல அம்சங்களையும் 10 ஆவது இதழ் தந்திருக்கிறது. இதில் முகப்புப்பட நாயகி திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இதழாசிரியர்கள் நேர்கண்டிருக்கிறார்கள். பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஓர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். கொழும்பு ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள், விடியலின் விழுதுகள், இதயத்தின் ஓசைகள், முதுசம் என்ற தலைப்புக்களில் 04 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூல் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஓர் ஆவண நூலாகவும் விளங்குகிறது.
ஆழ வேரூன்றி, அகலக் கிளைகள் பரப்பி, வானோக்கி உயர்ந்து, விரிந்து விருட்சமாகி, விழுதுகள் பல இறக்கி, எங்குமாய் வியாபித்து நின்று நிழல் கொடுக்கும் இந்த ஆலமரத்தின் அடி முடி தேடுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. சிற்றெறும்பாகிய நான் என் சிறு கைகளால் முழம் போடுகின்றேன். குருவி தலையில் பனங்காய் சுமக்க முயல்வதைப் போன்றது எனது முயற்சி. சொல்லோடு பொருளெடுத்து, சுவையோடு தமிழ் எடுத்து, நில்லாது ஓடுகின்ற நினைவுகளை நெஞ்சேற்றி, நற்சுவையும் நற்பொருளும் நயமோடு எடுத்துரைக்கும் நல்ல பல கவிதைகளை நாம் காணமுடிகிறது! இந்த விருட்சத்தை நாம் வியந்து நோக்குமுன்னர்.. இதன் ரிஷி மூலத்தை நாம் கண்டறியவேண்டும்! தமிழும், சைவமும், சமூக சேவையும் நிறைந்தது இவரது குடும்பம். இவரின் தந்தையார் திரு.முருகேசு சுவாமிநாதன் அவர்கள் மலேசியாவிலும் இலங்கையிலும் பல கல்லூரிகளை நிறுவியும், கடமையாற்றியும் வந்துள்ளார். இவை எல்லாம் இன்று பிரசித்தி பெற்ற கல்லூரிகளாக யாழில் திகழ்கின்றன. இத்தகைய பின்னணிகளோடு களத்தில் நிற்கும் வேதா இலங்காதிலகம் அவர்கள் அரிய பல படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றார் என்பதில் வியப்பேதுமில்லை! 
மிகவும் மகிழ்ச்சியான தருணம். நலவியல்துறை அதிலும் மனநலம் பற்றிய நூல் பற்றி குறிப்பு எழுதுவது. அதுவும் கடமையுணர்வும், நற்பண்புகளும், சமூக அக்கறையும் கொண்ட மருத்துவரான டொக்டர்.எஸ்.சிவதாஸ் அவர்களது நூல். நான்கு பதிப்புகள் கண்டு 5000 பிரதிகளுக்கு மேல் இந்த நூல் விற்பனையாகியிருப்பது மிகவும் பெருமைப்படக் கூடிய விடயமாகும். 500 பிரதிகள் அடித்தும் விற்க முடியாமல் பலரது நூல்கள் வீட்டு அலுமாரிகளை நிரப்பி கரையான அரித்து அழிந்து கொண்டிருக்கும் சூழலில் இது பெரிய சாதனை எனலாம். இந்த மனநல நூலுக்கான தேவை எவ்வளவு அவசியமாக எமது சமூகச் சூழலில் இருக்கிறது என்பதையும் நாம் உணர முடிகிறது. நானும் ஒரு மருத்துவராக இருப்பதுடன், நலவியல் எழுத்துத்துறையில் கடந்த 3 தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த நூலின் வரவு எனது மகிழ்ச்சியை பன்மடங்காக அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் இங்கு நலவியல் துறையில் எழுதுபவர்கள் குறைவு. அதுவும் அதற்கான தகுதி கொண்ட மருத்துவர்கள் எழுதுவது குறைவு. மருத்துவத்துடன் தொடர்பேயற்ற யார்யாரோ மருத்துவக் கட்டுரைகளை எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பத்திரிகை ஆசிரியர்களை குறை கூறமுடியாது. மருத்துவர்கள் எழுதவதற்கு முன்வருவதில்லை. வேலைப்பளு என்பார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும். இத்தொகுதியை வெளியிட்ட பதிப்பகத்தார் ஷஇனிய ராகம், சுவை நயம் மற்றும் கருத்தாழமிக்க இவை தாயன்பில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தும். பிஞ்சு மனங்களில் பூரிப்பையும் கொண்டு வரும்| என்கின்றனர். கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்கள் குழந்தைகளை ஆசிர்வதிப்பதாகவும், நற்செயல்களை விதைக்க கற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன.
இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கை எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நூல் ஒன்றுவெளிவந்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளும் புறமும்’ என்னும் இந்த நூலுக்குச் சூட்டப்பெற்றுள்ள பெயர் ஒருபுனைகதைப் படைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. அதேசமயம் அவ்வாறிருக்க இயலாதென மறுகணம்நினைத்துக் கொண்டேன். கனடாவில் வதியும் க.நவம் அவர்களின் ‘உள்ளும் புறமும்’ சிறுகதைத் தொகுதியொன்றுமுன்னர் வெளிவந்திருப்பதனை நன்றாக அறிந்தவர் முருகபூபதி. எனவே தமது புனைகதைப்படைப்பொன்றுக்கு இந்தப் பெயரைச் சூட்டி இருக்கமாட்டார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம்,கட்டுரை, நேர்காணல் எனத் தமது ஆளுமையின் வெளிப்பாடாகப் பலதுறை சார்ந்த நூல்களைப்பூபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த நூல் வித்தியாசமான ஒரு நூலாக இருக்க வேண்டுமென எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். நூலைத்திறந்து உள்ளே நோக்குகையில் நூலின் பெயருக்குக் கீழே ஒரு கோடிட்டு, இந்தக்கோட்டுக்குக் கீழ், “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான பதிவுகள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டபின்னர் குழப்பமில்லாத ஒரு தெளிவு உண்டானது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான உள்ளும் புறமுமான விபரங்கள் அடங்கிய பதிவு இந்த நூல் என்பதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. வ.ஐ.ச. ஜெயபாலனின் சிறப்பானதொரு முன்னுரையையும், ஆசிரியர் எம்.எஸ்.ஏ. ரஹீம், முன்னால் அதிபர் எம்.எம். அப்துல் குத்தூஸ் ஆகியோர்; ஆசியுரைகளையும், ஊடகவியலாளர் ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் அவர்கள் அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்திருக்கிறார்கள்.
ஈரலிப்பைச் சுமந்தபடி வானலையும் மென்முகில்கள் கறுத்தொடுங்கித் தூறலாகிப் பின் சாரலாகிப் பூமி குளிர்த்துமோர் மழைப் பொழுது. சில்லிடும் அம்மழைப் பொழுதினை இளஞ் சூட்டுக் குருதி வெப்பநிலையும் போர்வையாய் மெல்லியமயிர் பூத்த தோலுந் தாங்கிய ஓர் மனிதஉயிரி எங்கனம் எதிர்கொள்ளும்? தன்னுடலுக்கும் புறச்சுழலுக்கும் இடையேயான வெப்பச் சீராக்கத்திற்காய் உரோமங்களை நிமிர்த்தியபடி நடுநடுங்கிக் கொள்ளும். இதுதானே காலங்காலமாய் நாம் உணரும் உயிரியல் யதார்த்தம். ஆனாலும் இங்கே எதிர்மறையாய் ஒரு மழைப் பொழுது. அதில் சுற்றுச்சுழலை விடவும் அதிகரிக்கும் உடல்வெப்பநிலை குருதிக் கலங்களையெல்லாம் விரிவடையச் செய்தபடியும் வியர்வைச்சுரப்பிகளைத் தூண்டிவிட்ட படியுமாய் வியர்த்தொழுகுகிறது. இது சாத்தியமா? சிறுபான்மை மீதான நியாயப்படுத்த முடியாத வன்முறைகளும் வெறிகொண்ட பேரினவாதம் வளர்த்துவிட்ட போர்க்காலம் இழைத்துச் சென்ற துரோகங்களின் தீராக் காயங்களுமே மழைப் பொழுதிலுங்;கூடக் கவிஞரின் உணர்வுகளைக் கொதிநிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன போலும். வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற சகோதரர் சபருள்ளாவின் முரண்சுவையோடு கூடிய இத்தலைப்பே இத்தொகுதி மீதான ஈர்ப்பினை அதிகப்படுத்தியது எனலாம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









