'அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது....அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். 'நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.
முதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.
கென்ய எழுத்தாளரான 'கூகி வா தியாங்கோ' எழுதிய 'தேயும் ஒளி', 'இருள் நீடிக்கிறது' ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட 'தேம்பி அழாதே பாப்பா' (Weep not child) மேற்கூறிய வலிகளைச் சொல்கிறது. தமது மண்ணில் நிம்மதியாக வாழும் கறுப்பு மனிதரிடையே வேற்று மனிதர்கள் நுழைவதால் ஏற்படும் மாற்றங்களை நிலம், கல்வி, காலநிலை, தொழில், யுத்தம், அடக்குமுறை, அநீதி, தோல்வி எனப் பல விடயங்களைத் தொட்டு எழுதப்பட்டிருக்கும் இந் நாவலானது கருப்பொருளில் நைஜீரிய எழுத்தாளரான 'சினுவா ஆச்சிபி'யின் சிதைவுகள் (Things fall apart) நாவலை ஒத்திருக்கிறது. இரண்டுக்குமான ஒரே கருப்பொருள் பூர்வீக நிலச் சொந்தக்காரர்களிடையேயான அந்நியர்களின் ஆக்கிரமிப்பும், அது ஏற்படுத்தும் சமூகச் சிதைவுகளும், வன்முறைகளும், சீரழிவுகளுமாகும்.
'சுதந்திரம்?' என்று அவனுடைய சகா கேட்டான்.
'அது ஒரு மாயை. உனக்கும் எனக்கும் என்ன சுதந்திரம் இருக்கின்றது?'
'நாம் எதற்காகப் போராடுகிறோம்?'
'கொல்லுவதற்கு. நீ கொல்லாவிட்டால், நீ கொல்லப்பட்டு விடுவாய். எனவே, நாங்கள் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கவேண்டும். எனவே, நாங்கள் தொடர்ந்து கொன்று கொண்டே இருக்கவேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. குண்டுகள், நச்சுப்புகை, இன்னும் பல ஆயுதங்களைப் பயன்படுத்தி வெள்ளைக்காரனும் கொல்லுவதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றான்.'
' ஒரு மகத்தான நியாயத்திற்கல்லாமல், போராடுவதுவும் கொலைகள் செய்வதும் தவறானது என்று நீ நினைக்கவில்லையா?'
'எங்களுடைய மகத்தான நியாயம் என்ன?'
'ஏன்? சுதந்திரமும் நமது இழந்து போன பாரம்பரியத்திற்கு மீளுவதும் தான்!'
'நீ சொல்வதில் நியாயம் இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டிலே நான் இழந்துவிட்ட என் சகோதரன் மீளாத வரையிலும், சுதந்திரம் எனக்கு அர்த்தமற்றதாகவே இருக்கும். அது நிகழக்கூடிய காரியம் அல்ல. எனவே, போராடுவதும், என் வாளுக்கிரையாகி மடிபவனைக் கண்டு ஆனந்திப்பதையும் தவிர எனக்கு வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. ஆனாலும், போதும். சீஃப் யாகோபு செத்துத்தான் ஆக வேண்டும்.'
சுதந்திரம் பற்றிய இந்தக் கருத்தாடல், யுத்த களங்களிலுள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும் குரல்தான். யுத்தம், அதன் தேவை, இரத்தம், பலி, ஆட்களைக் கொன்றொழிக்கும் வாழ்க்கை அனைத்துக்குமான மூல காரணம் பயம்தான். தனது உடைமை தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஒருவன் ஆயுதமேந்தினால், எதிரி தான் கைப்பற்றி வைத்திருப்பதை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவனுக்கெதிராக ஆயுதமேந்துகிறான். இதுவே வழிவழியாகத் தொடர்கிறது.
இந் நாவலின் ஒரு பகுதியில் கறுப்பினச் சிறுவனான நியோரோகே, தனது தந்தை வேலை பார்க்கும் வெள்ளையினத்தவர் வீட்டுச் சிறுவன் ஒருவனைச் சந்திக்க நேர்கிறது. அது பற்றி நியோரோகே சொல்கிறான்.
என் தந்தையைப் பார்ப்பதற்காக நான் அடிக்கடி வந்திருக்கிறேன். என் உயரமுள்ள ஒரு பையன் இங்கே இருக்கிறான். அவனுடைய தோல் மிகவும் வெள்ளை. அவன் திரு.ஹோலண்ஸின் மகனாக இருப்பானென்று நான் நினைக்கிறேன். தன் தாயின் பாவாடையிலே அவன் தொங்கிக் கொண்டு திரியும் விதத்தை நான் விரும்பவில்லை. அவன் பயந்த சுபாவம் உள்ளவன் போலும். இருப்பினும் அவனுடைய கண்கள் என்மீதே பதிந்திருந்தன். சற்று ஆச்சரிய உணர்ச்சியுடன் பார்த்தான். இரண்டாம் முறை அவன் தனியாக இருந்தான். என்னைக் கண்டதும், அவன் எழுந்து, என் திசையிலே நடந்து வந்தான். அவன் எதற்காக அப்படி வந்தான் என்பதை அறியாமல் நான் பயந்து போனேன். நான் ஓடினேன். அவன் அப்படியே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் திரும்பி நடந்தான். நான் அங்கு செல்லும் பொழுதெல்லாம் என் தந்தைக்குப் பக்கத்தில் நிற்பதை நான் உறுதி செய்து கொள்ளுவேன்.'
இதே ஸ்டீபன் எனும் வெள்ளையினச் சிறுவனை, இருவரும் வளர்ந்து வாலிபர்களாகி விட்ட பிறகு கல்லூரியில் எதேச்சையாகச் சந்திக்க நேர்கிறது நியோரோகேக்கு. அப்பொழுதில் அவர்களது சிறுபராயச் சந்திப்பு குறித்து இருவரும் நினைவுகூர்கிறார்கள்.
நியோரோகேயுடனோ, அல்லது வேறு யாராவது பிள்ளைகளுடனேயோ பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேலியோரமாகக் காத்திருந்த அநேக சந்தர்ப்பங்களைச் சுலபமாக ஸ்டீபனினால் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனால், அவர்கள் சமீபித்த பொழுதெல்லாம் அவன் பயந்தான்.
'நாங்கள் உன்னைப் பார்த்ததில்லை'
'நான் வீதியோரமாக ஒளிந்திருப்பேன். நான் உங்களிலே சிலருடன் பேச ஆசைப்பட்டேன்.' ஸ்டீபன் தன்னுடைய நாணத்தினை இழந்து கொண்டிருந்தான்.
'ஏன் நீ பேசவில்லை?'
'நான் பயந்தேன்.'
'பயமா?'
'ஆம். நீங்கள் என்னுடன் பேசமாட்டீர்களென்றும், என்னுடைய சகவாசத்தினை விரும்ப மாட்டீர்களென்றும் நான் பயந்தேன்.'
'நான் அன்று உன்னைப் பார்த்து ஓடியதை மன்னித்துக் கொள். நான் கூடப் பயந்துபோனேன்.'
'பயம்?' இப்பொழுது ஸ்டீபன் அதிசயப்படும் முறை வந்தது.
'நான் உன்னைக் கண்டு பயந்தேன்.'
'ஆனால், உனக்கு நான் ஒரு கெடுதலும் செய்யவில்லையே?'
'இருந்தாலும் பயமாக இருந்தது. உன்னுடைய நோக்கத்தை என்னாலே எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?'
'வேடிக்கை'
'ஆம். வேடிக்கைதான். ஏதாவது ஒன்றைக் கண்டு பயப்படும் விதத்திலே வளர்க்கப்பட்டதினாலோ, அல்லது மற்றவர்கள் பயப்படுகிறார்கள் என்பதினாலோ, உள்ளம் பயப்பட வேண்டும் என்கிற பக்குவத்தை அடைந்து, அதன் காரணமாக எதையாவது கண்டு பயப்படுவது வேடிக்கையானதுதான்...அதுதான் என் பயத்திற்குக் காரணம். என்னுடைய சகோதரர்கள் நைரோபிக்குச் சென்று வீதிகளிலே நடந்து, வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது, ஐரோப்பியர்கள் தங்களைப் பார்த்த விதத்தினைத் தாங்கள் விரும்பவில்லை என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.'
'எல்லா இடங்களிலும் இதே கதைதான். ஆப்பிரிக்கர்கள் தங்களைப் பார்க்கும் விதத்தினை தாங்கள் விரும்பவில்லை என்று அநேக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்..........'
என உரையாடல் தொடர்கிறது. இங்கு நியோரோகே கறுப்பின இளைஞன். ஸ்டீபன் வெள்ளையின இளைஞன். நிலத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் எதிரிகளான இரு இனத்துப் பெரியவர்களினதும் புதல்வர்கள். இருவருக்கும் சிறு வயது தொட்டே எதிர் இனத்தவர்கள் மீதான அச்சம். அதனையே இந்த உரையாடல் தெளிவுபடுத்துகிறது. காலங்காலமான அடக்குமுறை விதைத்த அச்சமும், அடக்கியாளும் வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சமும் அச் சமூகத்தினைப் பாழ்படுத்தியிருக்கிறது. சிறு மனங்களில் விதைக்கப்பட்ட அச்சத்தின் விதை வளர்ந்து மிக மோசமான எதிர்வினைகளைத் தூவுவதை கதை விரிவாக அலசியிருக்கிறது. கறுப்பினத்தவர்களை, வெள்ளையின இராணுவத்துக்குக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தைச் செய்பவரான, நியோரோகேயின் அன்புக்குரியவளான மிவிஹாகியின் தந்தை யாகோபு கொல்லப்பட்டு விடுகிறார். அவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நியோரோகேயின் தந்தை நிகோதோ வெள்ளையின வன்முறைக்குப் பலியாகி விடுகிறார். அதனால் ஸ்டீபனின் தந்தை ஹோலண்ஸ், நியோரோகேயின் சகோதரனால் கொலை செய்யப்பட்டு விடுகிறார். இப்படியான பழிக்குப் பழிகள் வரலாறாகியிருக்கின்றது.
பூர்வீக நிலத்தில் நிம்மதியாகவும், தமது வாழ்வியக்கங்களோடு அமைதியாகவும் வாழ்ந்துவருபவர்களிடையே விஷக் கிருமிகள் போல வேற்று மனிதர்கள் நுழைந்து அதன் அமைதி கெடுவதென்பது கென்ய, ஆப்பிரிக்க மக்களோடு மட்டும் நின்றுவிட்ட ஒன்றல்ல. நமது தேசங்களிலும் இதைத்தான் அனுபவித்திருக்கிறோம். அனுபவிக்கிறோம். வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன இந் நாவல்கள்.
'சினுவா ஆச்சுபி'யின் சிதைவுகள் நாவலில், கொட்டப்பட்ட நீர், பளிங்குச் சீமெந்துத் தரையில் வழுக்கி நகர்வதைப் போல வெள்ளையினத்தவர்கள், அக் கறுப்பினத்தவர்கள் மத்தியில் ஊடுருவியதைச் சொல்கிறது. பூர்வீக மக்கள் தங்கள் நிலத்தில் பெரிதும் மதித்து நடந்த கலாச்சார அடையாளங்கள், சம்பிரதாயங்கள் அனைத்திலும் பெரிதும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது இந்த ஊடுருவல். 'ஒக்கொங்வோ' எனும் மனிதனையும், அவனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றம் அனைத்தையும் கொண்டு ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்களது வாழ்வை கொடிய இருள் சூழ்ந்ததை மிகவும் ஆழமாகவும், வாசகர்களும் உணரும் வலியோடும் தந்திருக்கிறார் சினுவா ஆச்சுபி.
'தங்கள் கோயிலைக் கட்ட ஒரு நிலம் கேட்கிறார்கள்.' உசென்டு தங்களுக்குள் ஆலோசனை செய்தபோது தன் சக பெருங்குடி மக்களுக்குச் சொன்னான். ' நாங்கள் ஒரு துண்டு காணி கொடுப்போம்' என்று சொல்லிவிட்டு நிறுத்தினான். அவர்களிடையே ஆச்சரியத்தையும் இணக்கமின்மையையும் வெளிக்காட்டும் முணுமுணுப்பு தோன்றியது. ' தீய காட்டின் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுப்போம். சாவை வென்றவர்கள் என்று பெருமை பேசுகிறார்கள். யுத்த பூமி ஒன்றைக் கொடுப்போம். அங்கே தங்கள் வெற்றியைக் காட்டட்டும்.' எல்லோரும் சிரித்துக்கொண்டு அதற்குச் சம்மதித்தார்கள்.
'தீய காடு' என்பது அப் பூர்விக மக்களின் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த ஒரு ஒதுக்கப்பட்ட நிலப் பகுதி. அம்மை, குஷ்டம் போன்ற தீராக் கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைப் புதைக்கும் பூமி. வெள்ளையர்கள் வந்து அவர்களுக்கென்றொரு இடம் கேட்ட பொழுது 'வெகு விரைவில் இறந்துவிடுவார்கள்' என்ற அதீத நம்பிக்கையோடு கறுப்பினத்தவர்களால் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய இடம். பின்னாட்களில் கறுப்பினத்தவர்களுக்குச் சொந்தமான எல்லா இடங்களையும் வெள்ளையர்கள் கைப்பற்றிக்கொள்வதற்கு திட்டம் வகுத்துக் கொள்ளப்போவது தெரியாமல் கொடுத்த முதல் இடம்.
இப்படியாக, இந்த இரண்டு நாவல்களுமே கறுப்பினத்தவர்களின் பூர்வீக வாழ்க்கை முறைகளை, கலாச்சார நடைமுறைகளை, சில மூட நம்பிக்கைகளை, இன்னும் வலிகளை, பின்னாட்களில் எதிர்கொள்ள நேர்ந்த அடக்குமுறை, அநீதி, வன்முறைகளைச் சொல்வதில் வெற்றியடைந்திருக்கின்றன. பொதுவாகவே கறுப்பினத்தவர்கள் காட்டுமிராண்டிகளென்று வெள்ளையர்கள் பரப்பிய கருத்தினைப் பொய்யாக்கி, தன் பங்கு நேர்மையினை எடுத்தியம்புகின்றன இரண்டு கதைகளும், அதன் மாந்தரும். சினுவா ஆச்சுபியின் நாவலில் வாசிக்கக் கிடைக்கும் சுவாரஸ்யமான, பூர்வீக கறுப்பின மக்களின் வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், திருமண, திருவிழா, போட்டி, பந்தய நிகழ்வுகள், வன்மங்கள் போன்றன குறித்த பரந்த விளக்கம் கூகி வா தியாங்கோவின் நாவலில் அவ்வளவாக இல்லையெனினும் இரண்டுமே ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருக்கின்றன. அதே போல, இரண்டு நாவல்களிலுமே பலதார மணம், கதை சொல்லும், கேட்கும் வழக்கம் என்பன போன்ற பல விடயங்கள் பொதுவானதாக இருக்கின்றன. அத்தோடு, இரண்டு நாவல்களினதும் பிரதான கதாபாத்திரம் இறுதிவரை பல வன்முறைகளை, காயங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையை நோக்கித்தான் நகர்கிறது.
ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு இந் நாவல்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்த எழுத்துக்களை, அவை சொல்லவரும் அதே உணர்வுகளோடு புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் 'சினுவா ஆச்சுபி'யின் 'சிதைவுகளை' தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் என்.கே. மகாலிங்கம், 'கூகி வா தியாங்கோ'வின் 'தேம்பி அழாதே பாப்பா'வை தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஆகியோரை நன்றியோடு நினைவு கூரவேண்டும்.
யுத்தம், புலம்பெயர நேரும் கொடுமை, அது தரும் பேரிழப்புகள், சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் வலி அனைத்தும் இக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்குப் போலவே எல்லா மக்களுக்கும் பொதுவானது. அதன் குரல், மரண ஓலத்தை ஒத்தது. வெளிப்படையாக எழுதப்பட்ட நாவல்கள் இவை. எழுதப்படாதவை இன்னும் எத்தனையோ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.