வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம்சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான். ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறுவேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றிபெற்றுவிடுகின்றன. முருகபூபதின் பறவைகள் நாவல், நம்காலச்சூழலின் ஒரு பகுதியைப்பதிவுசெய்துள்ள முறையில் நம்மைப்பாதிக்கிறது. பல எழுத்தாளர்களின் கதைகளைப்படித்த பின் அவர்களது புத்திசாலித்தனமும், கதையை சொல்லியவிதமுமே மனதில் மீந்திருக்கும். கதை முடிந்தபிறகு, அதை எழுதியவரைப்பற்றி நினைக்காமல் எழுத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையைப்பற்றி மனிதர்களைப்பற்றிக் கொஞ்சநேரமேனும் ஆழ்ந்து யோசிக்கவைக்கும் சக்தி மிகச்சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. அதில் முருகபூபதியையும் ஒருவராய்க்குறித்துக்கொள்ள முடிகிறது.
இலக்கியப்படைப்புகள் அனைத்துக்குமே, அவை வாசகன் அல்லது வாசகிக்கான இடைவெளியை எங்கெங்கு விட்டுவைத்திருக்கின்றன என்பதைப்பொறுத்தே அதன் தன்மையும் பெறுமானமும் தெரியவருகிறது. கவிதை அதன் சொற்களுக்கு இடையே இருக்கும் மௌனத்தின் மூலம் வாசகன் - வாசகி தன் அனுபவத்தை நிரப்பிக்கொள்ள இடம்தருகிறது. சிறுகதையின் மௌனம் அதன் முடிவிற்குப்பிறகு இருக்கிறது. அங்கிருந்து வாசக மனத்தின் பயணம் மீண்டும் சிறுகதைக்குள் நடக்கிறது. நாவலோ, சித்திரிப்புகளின் உட்குறிப்புகள் ஒன்றையொன்று நிரப்பிக்கொள்வதினூடாகத் தன் கவித்துவத்தை அடைகிறது. அனுபவங்களைத் தொகுப்பதன் மூலம் உருவாகிறது நாவல். இந்தத்தொகுப்பின்போது விடப்படும் இடைவெளிகள் அல்லது உருவாகும் மௌனம் நாவலுக்கு மிக முக்கியமானவை. இந்த மௌன இடைவெளிகளை வாசகன், வாசகி தம்முடைய கற்பனையில் நிரப்பும்போதுதான் நாவலின் பிரமாண்டத்தன்மை கிடைக்கிறது. சகல திசைகளிலும் கூடுமானவரை வாசல்களைத்திறந்துவிடுகிறது நாவல். கவனமுடன் எழுதப்பட்ட நாவல் ஒன்றை வாசிக்கும்போது நமக்குள் உறைந்திருக்கும் மானுட சிந்தனையின் ஒரு துளி விரிவடைந்து பல கேள்விகளாகக் கிளைக்கிறது. நாவலின் இடைவெளிகளுக்குள் புகுந்து நம் அனுபவங்களையும் நிரப்பி ஒரு வாழ்க்கைப்பார்வையை எதிர்கொள்கிறோம். பறவைகள் நாவலின் வாழ்க்கைப்பார்வை, அதன் தலைப்பிலிருந்தும் ஓரளவு தெளிவாகிறது.
‘ஆகாயமெங்கும் அலைந்து திரிந்தாலும் கூடுகட்டிக்குஞ்சு பொரிக்க, மரக்கொப்பு வேண்டாமோ? உணவுக்கும் ஊட்டத்துக்கும் பறவைகள் தரைக்குத்தானே வருகின்றன.’
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நீர்கொழும்புக்கு வந்துவிட்ட தேவகியும் சிற்றம்பலத்தாரும் மீண்டும் அரியாலைக்குப்போய்விடுவதையே விரும்புகின்றனர். ஒருவகையில் சிற்றம்பலத்தாரின் மரணம், அவர் வேரூன்றிச் சத்துறிஞ்சி வளர்ந்த மண்ணிலிருந்து வேறொரு இடத்தில் பிடுங்கி நடப்பட்டதாலேயே நேர்கிறது.
“ விஸா கிடைக்குமாக இருந்தால் இந்த நாட்டிலுள்ள சிங்களவர், தமிழர் எல்லோருமே வெளிநாடுகளுக்கு வந்துவிடுவார்கள் போலிருக்கு.” என்று நாடு திரும்பிய தன் நாலைந்து நாள் அனுபவத்தில் கூறுகிறாள் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுமதி. அவளும் இங்கேயுள்ள உக்கிரம் தாங்காமல் வெளியே பறந்தவள்தான். ஆனால், அவளுக்கும் தன் சொந்த நாட்டுக்கு வந்தபிறகே தன்னை, மானுடத்தன்மை மிக்கவளாகவும் உறவுகளில் நெகிழ்பவளாகவும் உணரமுடிகிறது.
இயந்திரகதியான நாடொன்றில் கணவனைப்பிரிந்து வீம்புடன் வாழ்வது உறுத்தாத சுமதிக்கு, ஊருக்கு வந்து அந்தக்காலச்செருக்குகள் எல்லாம் தளர்ந்து முதுமையில் இயலாமையுடனும் பரிவுடனும் பேசும் தந்தையையும், “ நீ…காதலித்துப்பார்த்திருக்கிறாயா…? காதலித்திருந்தால்…இப்படி யாரையும் காயப்படுத்தத் தேன்றாது” என்று சொல்லும் ஊர்விட்டு ஊர் வந்து அந்நிய மனிதர்களையும் தன் சொந்தமாய்க்கண்டு வாழும் தேவகியையும் பார்க்கும்போது, அவளுடைய வீம்புகள் கரைந்து இளகி, அன்பின் ஏக்கம் ஆட்கொள்கிறது. இயந்திரத்தனமாகிவிட்ட தன் மனித உணர்வுகளை மீட்டுக்கொள்ள தேவகியின் அருகிலேயே இருக்கவேண்டுமென்று சுமதிக்குத்தோன்றிவிடுகிறது.
அதுபோல, குமாருக்கும் நாட்டுக்கு வந்தபிறகே, தேவகியைத் தான் எமாற்றியதும் உறவையும் மனிதத்தன்மையையும் அலட்சியம் செய்து வாழ்ந்துவிட்டதும் குற்ற உணர்வாக உறுத்துகிறது. ஆனால், சுவிட்சர்லாந்திலிருந்து பேசும் பாலன், இந்த நெகிழ்த்தன்மைகளை காட்டுவதில்லை. தேவகியை சுவிஸில் வாழும் உரிமை கிடைத்த ஒருத்தருக்கு இரண்டாம்தாரமாகக்கொடுத்துவிடலாமா என்றும், தந்தையின் மரணத்தையறிந்து பேசும்போது, டீழனலயை எப்போது எடுக்கப்போறியல்? என்றும் வாரஇதழில் மரணஅறிவித்தலை Phழவழ வுடன் பெரிசாகப்போடு என்றும் மரணச்சடங்கை வீடியோ எடுத்து மறக்காமல் கொண்டுவா என்றும் இயந்திரத்தனமாக சொல்ல முடிகிறது. சகஜீவன்களிடம் கொள்ளும் அன்பு, உண்மையில் இதுதான் சகல விஷயங்களுக்கும் ஊற்றுக்கண் என்பதை இந்த நாவலின் நாயகி உணர்த்துகிறாள். இதையும் இந்த நாவலின் பார்வையாகக்கொள்ளலாம்.
தன்னைக்காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு கல்யாணம் செய்துகொண்ட சொந்த மச்சான் குமார் மீதும், அவனது குழந்தை மீதும் அவளை ஏமாற்றிய மாமன் சிற்றம்பலத்தின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மட்டுமல்லாமல் சகல மனித ஜீவன்களிடத்திலும் அபரிமிதமான பாசமும் பரிவும் கொண்டவள் தேவகி. நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டபோதும் அவளால் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த முடிகிறது. தன்னை அனாதை என்றோ, தான் பிறருக்கும் பாரம் என்றோகூட தேவகி நினைப்பதில்லை. பிறருக்குத்தருவதற்கு தன்னிடம் வற்றாத அன்பிருக்கிறது என்ற தெம்பில் அவள் பலம்பெறுகிறாள்.
இருக்கிற வாழ்வை ஏற்றுக்கொள்வது அவள் பார்வை. அன்பின் மூலம் தனக்கு வாய்த்த வாழ்வை உயிர்ப்பித்துக்கொள்ளும் பார்வை இது. இருக்கிற வாழ்வை, அதன் சுருக்கங்களோடும் ஏற்றுக்கொள்வது. சிலசமயம் வெளியேறவும் நேரலாம். அப்பொழுதும் யாரையும் துன்புறுத்தாமல் வெளியேறவேண்டும் என்கிற வாழ்க்கைப்பார்வை தேவகியுடையது.
மனிதரிடம் குற்றம் கண்டுபிடிப்பதோ, அதில் அவர்களை அழுத்தி தற்திருப்திகொள்வதோ அவள் பார்வையில் இல்லை. எல்லாமே வாழ்வின் இயல்புகள். காற்று மாதிரி, நீர் மாதிரி அன்பாய் இயங்குகிறாள் அவள். அன்பில் கரைகிறாள். அன்புமயமாக இருக்கிறாள். தேவகி மிகச்சாதாரணமான பெண். மிகச்சாதாரணமானவர்களுக்குள் மிக எளிமையாகவும் இயல்பாகவும் பீறிட்டுப்பொங்கும் இந்த அன்புதான் உலக இயக்கத்தின் அழகுக்குக்காரணம் என்று தோன்றுகிறது. ஆழத்தோண்டினால் அனைவருக்குள்ளும் அன்பின் நீரூற்று வெடித்துக்கிளம்பலாம். ஒருவகையில் நாவல் இதைத்தான் சொல்கிறது என்றும் கொள்ளமுடியும். பறவைகளின் இதயம் நம் எல்லோருக்கும் விருப்பக்குறியீடாவது போல்.
வாழ்வின் எதார்த்தத்தில் அன்பின் பங்கு குறைந்துவருகிற சூழலில், மிகச்சாதாரண மனிதர்களிடம் இன்றும் மிஞ்சியிருக்கும் அன்பைப்பற்றி அக்கறையோடு சொல்லவேண்டியிருக்கிறது கலைஞனுக்கு. இந்த அன்பின் நிறைவு இயற்கையையும் உயிர்களையும் அழகுபடுத்துகிறது. மனிதர்களிடம் சேர்ந்திருக்கும் கொஞ்ச கொஞ்ச அன்பையும் வாழ்வின் குரூரம் சிதைத்துவிடும் என்ற பதற்றமும் நமக்குள் உருவாகிறது. உலக அளவில் வெள்ளம் எனப்பெருகிவரும் அவலம் இவர்களை அடித்துச்சென்றுவிடுமோ என்று ஏக்கமுண்டாகிறது. பிரச்சினைகளை தீர்க்க இயலாத அளவு சிக்கலாகிவிட்ட தற்காலச்சூழலில், குறைந்த அளவுக்கேனும் மனிதர்கள் அன்பாக இருப்பதன் மூலம்தான் வாழ்வை நிறைத்தக்கொள்ளமுடியும் அல்லது சகித்துக்கொள்ள முடியும். இந்த அர்த்தத்தில்தான் இன்றைய படைப்புகளுக்குள் கேட்கின்ற அன்பின் குரலை நாம் கொண்டாடவேண்டியிருக்கிறது. நம்காலத்துச் சமூகம் சிக்கலாகியிருப்பது மட்டுமல்ல, பெருமளவுக்குச் சீர்குலைந்து நன்மை. தீமை என்ற வரையறைகள் அழிந்து, மனித மதிப்புகளுக்கு அறவே மரியாதையற்றுப்போன நிலையும் தோன்றியிருக்கிறது.
“வளர்ந்துவிட்டால் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டேதான் இருக்கவேண்டுமா? பரவசத்திலேயே காலத்தை கடத்திவிட முடியாதா?” என்று சுமதியினுடைய குழந்தைகளின் விளையாட்டையும் பரவசத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும்போது விசாரப்படுகின்ற தேவகியின் உள்ளம் நமக்கு நெருக்கமாக இருக்கிறது.
அன்புக்குரியவள், குடும்பத்தை நேசிப்பவள், அதற்கு வெளியேயும் நேசத்தை விரிப்பவள், பாசத்துக்காக ஏங்குபவள். குடும்பமும் உறவுகளுமே உலகம் என்று நினைப்பவள். அதிலேயே புதைந்து அழிந்துபோவது ஆனந்தம் என்று எண்ணுபவள் தேவகி. அவளுக்கு திருமணமும் குடும்ப வாழ்வும் வஞ்சிக்கப்பட்டுவிடுகிறது.
திருமணம் என்பது ஒரு சிறைச்சாலை. அங்கு ஆண்டான் - அடிமை உணர்வுதான் நீடிக்கிறது. குடும்பம் என்ற நிறுவனம் சுதந்திரத்தைப்பறித்துக்கொள்கிறது… என்று நினைப்பவள் சுமதி. அவளுக்குத் திருமணபந்தம் நேர்கிறது. சரி பிழை எதுவாக இருந்தாலும் அவரவர் நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்றவிதத்தில் வாழ்வு அமையவேண்டாமோ? ஏன் எப்போதும் எதிர்பார்ப்புகளுக்கு எதிராகவே ஒவ்வொருவருக்கும் நடக்கவேண்டும்? இந்த வாழ்வின் விசித்திரங்கள் புரிந்துகொள்ளும்படியாகவா இருக்கிறது? சாவின் தலைவாசலில் உள்செல்லக்கால்வைத்து நின்றவாறு, அதுவரை வாழ்ந்த உலகைத்திரும்பிப்பார்க்கும்பொழுது மனிதன் காணும் உண்மைகள், வாழ்ந்த நாட்களில் அவன் கண்ட உண்மைகளுக்குப் புறம்பானவை. நாவலில் சிற்றம்பலத்தார் இதை உணர்கிறார். எவ்வளவு அற்பமான விஷயங்களுக்காக காலத்தையும் வாழ்வையும் வீணடித்து, காயப்பட்டும் காயப்படுத்தியும் கவலைகளில் அல்லாடியிருக்கிறோம்.
‘காதலித்த அனுபவம் உள்ளவர்களுக்கு பிறரைக் காயப்படுத்தும் குணம் இருக்காது’ என்று தேவகி சொல்கிறாள். இதை கலீல் ஜிப்ரான் சொன்னார் என்று நினைக்கிறேன். அவரேதான் காதல் ஓர் அழகிய பறவை. சிறைப்பிடிக்கும்படி கெஞ்சும். காயப்படுத்த மறுக்கும். இந்தவகையிலும் பறவைகள் என்ற நாவலின் தலைப்பு பொருள்கொள்கிறது.
செல்வமும் அழகும் உயர்ந்த அந்தஸ்தும் விரும்பியமாதிரி திருமண வாழ்க்கையும் - அதற்குத்தகுதியுள்ளவர்களாய்த் தங்களை வைத்துக்கொண்டிருப்போருக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. தகுதியில்லாதவர்களுக்கு எல்லாம் கிடைத்துவிடுகிறது. யோசித்துப்பார்த்தால் பெரும்பாலும் வாழ்வில் எங்கோ ஒரு நியாயக்கோளாறு இருப்பது தெரியவரும். இந்த நியாயக்கோளாறைப் பல்வேறு சாத்தியங்களில் வைத்து அலசுவது நாவல்களுக்கு பொருளாய் அமைகின்றன. பறவைகளும் இதனை எடுத்துக்கொண்டிருக்கிறது. மனித உறவுகளில் உருவாகும் முரண்கள், மனிதர்களின் நம்பிக்கைகள், கனவுகள், அழிவுகள், துக்கங்கள்…என மனிதவாழ்க்கையின் சாராம்சத்தை உணர்த்துகிற முயற்சிதான் இந்த நாவலும். ஓவ்வொரு துயரமும் வாழ்க்கையை நேசிக்கும் விதத்தையே ஒருவருக்குக் கற்றுத்தர முடியுமா? தேவகி அப்படித்தான் வார்க்கப்பட்டிருக்கிறாள்.
“ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் நடந்துவரக்கேட்டுக்கொண்டால் அவனோடு இரண்டு மைல்கள் நடந்துசெல்” – என்று யேசுநாதர் தனது மலைப்பிரசங்கத்தில் சொல்கிறார். இந்த நாவலின் நாயகி தன் உறவினர்களுக்காகவும் உறவே அற்றவர்களுக்காகவும் கணக்கில்லாத மைல்கள் நடந்துசெல்ல தயாராயிருக்கிறாள்.
மிகப்புனிதமான உறவுகள் என்று காலம் காலமாக எண்ணப்பட்டவைகூட மிக அற்பமான தற்காலிக சௌகரியத்துக்காக புறக்கணிக்கப்பட்டுவிடுவதை இன்றைய வாழ்வின் யதார்த்தமாக நாம் கண்டுவிடுகிறோம். மிகுந்த படிப்போ, கெட்டித்தனங்களோ, சாதுரியங்களோ அற்ற ஒரு பெண்ணிடமிருந்து வாழ்வுக்குத்தேவையான ஓர் அரிய குணம் விரிந்து பரவுவதை நாவல் நமக்குக்காட்டுகிறது.
மற்ற இதயங்களை நேசித்து, பிரதிபலனை எதிர்பாராது நேசித்து, ஏமாற்றப்பட்டபோதும் நேசித்து – அந்த நேசத்தினால் அந்த இதயங்களை ஈர்த்து நெருங்கவைத்துவிடுகிற ஆழமான அற்புதமான ஒரு பெண்ணின் இதயத்தை ஆசிரியர் படைத்துக்காட்டுகிறார். அந்த இதயத்தின் நிழலில் வந்து ஒதுங்க வாய்ப்புக்கிடைத்தவர்கள் எல்லாம் பாக்கியசாலிகளாக மாறுகிறார்கள்.
சாதி குறைந்தவனுடன் ஓடிப்போனாள் என்பதற்காக தமையன் சிற்றம்பலத்தாரால் ஒதுக்கிவிடப்பட்ட புவனேஸ்வரியின் மகள் தேவகி. ‘கொதிவாத்தி’ எனப்பெயரெடுத்த சிற்றம்பலம் வாத்தியாரின் கடைசி மகன் குமாரும் தேவகியும் காதலிக்கிறார்கள். இந்தக்காதலை அறிந்ததும் தந்திரமாக மகனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைத்து அங்கேயே வேறொரு பெண்ணை அவன் மணமுடிக்கும்படியான நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திவிடுகிறார் சிற்றம்பலத்தார்.
சாதி குறைந்தவனைக் கல்யாணம் செய்துகொண்ட தங்கையின் மகள் தேவகி என்பதால், அவளைப்புறக்கணித்துப் பழிவாங்குகிறார். ஈற்றில் மனைவியையும் இழந்து, அவரது மூன்று பிள்ளைகளும் வெளிநாடுகளுக்குப் போய்விட்ட நிலையில், இவரும் அநாதையாக நிற்கும் தேவகியுமே ஆளுக்காள் துணையாக இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். பிள்ளைகளிடமிருந்து வரும் வெளிநாட்டுப்பணக்கடிதங்களையும் தொலைபேசியையும் நம்பிய வாழ்க்கை. சிற்றம்பலத்தாரின் இறுதிக்காலத்தில் அவருக்கு ஏற்படும் கழிவிரக்கமும் குற்றவுணர்வும் மனவருத்தமும் தேவகியின் நினைவுப்பாதையூடாக நமக்குத்தெரியவருகிறது. குடும்பம் சார்ந்த மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைச்சித்திரிப்பதுதான் இந்த நாவலும். நாவல் மாந்தர்கள் விஷேசமாக இருப்பதல்ல, சகஜமான மனிதர்களாக இருப்பதுதான் முக்கியம் என்பது நாவலாசிரியரின் அக்கறையாக இருக்கிறது. சகலவிதமான பேதங்களும் நொறுங்கிவிடும் காலத்தை நோக்கிதான் சமுதாயம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அறிந்தவர்தான் சிற்றம்பலத்தாரும். ஆனாலும் முறுக்கோடும், தங்கை மகளை நெருக்கத்தில் அறியாமலும் வீறாப்புடனிருந்த சமயத்தில் அவர் மிகுந்த சுயநலக்காரராக நடந்துகொள்கிறார்.
காலமாற்றத்தால் அந்த மருமகளின் பராமரிப்பிலேயே வாழநேரும் சந்தர்ப்பத்தில் மிகுந்த குற்றவுணர்ச்சியில் தடுமாறிக்குமைகிறார். அதன்பிறகு தன் மகள் சுமதியும் அதேமாதிரியான ஒரு வீம்பில் கணவனைப்பிரிந்து வாழ்கிறாள் என்பதை அறியும்போது அவர்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டுமென மிகுந்த மனநெருக்கடியும் கவலையும் அடைகிறார். ஆனாலும் அவர் தன் விருப்பத்தை யார்மீதும் திணிக்க விரும்பவில்லை. அவளே தன் குழந்தைகளுக்காக அந்த முடிவைத்தேர்ந்துகொள்ளவேண்டும் என எண்ணுகிறார். அதுபோலவே நாவலாசிரியரும் கருத்துக்களைத் திணித்து நாவலை கொச்சைப்படுத்திவிடாதிருக்கும் கவனத்தை காண்பிக்கிறார். இந்த சமூகத்திற்குச் சொல்லவென பல கருத்துக்கள் நாவலாசிரியரிடமும் உண்டு. ஆனால், அவற்றை அவர் உபதேசமாகவோ, நெருடலாகவோ வலிந்து திணிக்கவில்லை என்பது ஆசுவாசமாக இருக்கிறது. சுமதி, தன் தந்தையோடும் தேவகியோடும் வாக்குவாதப்படும் சந்தர்ப்பங்களிலும், அங்கு செயற்கையான கருத்துத் திணிப்புகள் உருவாகிவிடக்கூடிய இடங்களில் மிகக்கவனமாக வேண்டிய அளவு உரையாடலோடு கத்தரித்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறார். இருபக்க மன ஓட்டங்களிலும் உள்ள பல செய்திகளை நமக்குப்புரியவைத்துவிடுகிறார்.
முறை மச்சாள் தேவகியைக்காதலித்து ஏமாற்றிவிட்டு, அவுஸ்திரேலியா சென்று வேறொருத்தியை கட்டிக்கொண்டு திரும்பிவந்த குமார், தேவகியை தனியே சந்தித்து, “ என்னிடம் கோபமா…? என்னிடம் கோபமா…?” என்று அசட்டுத்தனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அதற்கு அவள், “எனக்கு எவரிடத்திலும் கோபம் இல்லை. இப்போது நீங்கள் ஒரு அழகான குழந்தைக்குத்தகப்பன். முடிந்தவரையில் நாம் பழையதையெல்லாம் மறக்கவேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது. மீண்டும் மீண்டும் என்னிடம் கோபமா…கோபமா…என்று கேட்டு எரிச்சல் மூட்டவேண்டாம் குமார்” என்று சொல்லிவிட்டு எழுந்து கடல் அலைகளை நோக்கிச்செல்கிறாள் தேவகி. கால்களை அலையில் நனைத்தாள். ‘யாவும் கழுவிப்போய்விடவேண்டும்’ என்று விரும்பினாள். என்று எழுதுகிறார் ஆசிரியர். நாவலில் வரும் அனைத்துப் பாத்திரங்களின் மனஓட்டங்களும் பேச்சுக்களும் இயக்கங்களும் வெகு நுட்பமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் அங்க லட்சணங்கள் எந்த ஓரிடத்திலும் வர்ணிக்கப்படவில்லை. பாத்திரங்களின் பேச்சுக்கள், மனவோட்டங்கள், செயல்கள், அவர்கள் அமர்ந்திருக்கும், நடக்கும், பேசும் தோறணைகள் மூலம் அவர்களைப்பற்றிய மனச்சித்திரங்களை வாசகர் மனதில் வெகு இயல்பாகப் பதியவைத்துவிடுகிறார். ஈழத்துத் தமிழ் நாவல்களைப்பொறுத்தவரையில், இயல்பான குணங்களை மிகைப்படுத்தாமல், வலிந்து புகுத்தாமல் இத்தகைய நுணுக்கமான பதிவு என்பது அபூர்வமான சாதனைதான்.
பாத்திர சிருஷ்டியில் ஆசிரியர் கொண்டுள்ள கவனத்தையும் குறிப்பிட்டுக்கூறவேண்டும். அந்தந்தப்பாத்திரங்கள், கடைசிவரைக்கும் அந்தந்தப்பாத்திரங்களுக்குரிய குறை நிறைகளோடும் குணங்களோடும்தான் இருந்துகொள்கிறார்கள். இன்றைய தமிழ்த்திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்த்துவருகின்ற நம் பிரக்ஞைச்சூழலில் இந்த இயல்பான யதார்த்தம் நம்மை ஆச்சரியமூட்டித் திணறடிக்கிறது.
கதைசொல்பவரின் வெளிப்படையான கோபமும் குறுக்கீடும் விளக்கவுரைகளும் அனுபவத்தை ஆழமற்றதாக்கிவிடும். விவாதம் மூலம் எதையும் மூளையில் திணிக்காமல், அனுபவ வாழ்வை உணரும்படி செய்தல், வாசகன் ஈர்ப்புக்கொள்ளும் நல்ல எழுத்தாகிறது. மனிதர்கள் மீது அவர்களுக்கு அந்நியமான வாழ்வினை சுமத்தாமல், அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் படைப்புலகிற்குள் வரவிடுவதன் மூலம் அந்தப்படைப்பு சிறப்படைகிறது.
சுமதி நாவலின் பிரதான பாத்திரம் அல்ல. ஆனால், பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இந்தச்சமூகம் வைத்திருக்கிறது என்ற விமர்சனக்குரல் அவளிடமிருந்தே வருகிறது. அதுவும் பிரசாரமாகவோ, ஆவேச விவாதமாகவோ துருத்தி நிற்கவில்லை. ஓரிடத்தில் - “ அந்த ஆளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப்போட நான் தேவை. ஆனால்.. என்னுடைய விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள், அவருக்கு முக்கியமல்லை…” என்று சொல்லி நிறுத்திக்கொள்கிறாள்.
“ பெண்கள் பயபக்தியுடன் வாழவேண்டும். அப்போதுதான் குடும்பம் ஒழுங்காக இயங்கும்.” என்கிறான் சுமதியின் கணவன். அவளுக்கு, அரியாலையில் அப்பனிடம் பயபக்தியுடன் வாழ்ந்து அடிஉதைபெற்று அற்பாயுளில் மறைந்த அம்மா நினைவுக்கு வருகிறாள். கணவனின் வக்கிரமான சரசமாடல்களின் போதெல்லாம், அரியாலையில் யாரையாவது காதலிச்சுத் தொலைச்சிருக்கலாம் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றுகிறது. பெண்பிள்ளைகள் கெட்டுப்போய்விடும் என்று வீட்டில் கதைப்புத்தகங்கள் கூட படிக்கக்கூடாது என்று சர்வாதிகாரியாக நடந்துகொண்ட அப்பாவின் மீது கோபம் வருகிறது.
கதையின் நாயகியை நமது அனுதாபத்திற்குரியவளாக வடித்துவிடும் ஆசிரியர், அவள் காதலனை கல்யாணம் முடித்த புனிதாவை வில்லியாகக்காட்டவில்லை. அவளை கெட்டவளாய்க்காட்டுவதன் மூலம் தேவகி பாத்திரத்தின் மதிப்பை உயர்த்தும் செயற்கையான அவசியங்கள் ஆசிரியருக்கு ஏற்படவில்லை. சிற்றம்பலத்தார் கூட, “யாரும் யாரையும் திருப்திப்படுத்த முடியாத கொடுமைக்குள் அனைவரும் சிக்குண்டிருப்பதாகவே” உணர்கிறார். எல்லோரையும் சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருக்கிறது. பின்னிக்கொண்டே அனைவருமே அதனுள் சிக்குண்டுவிட்டனர். மீள வழி தெரியாத தவிப்பில், ஆற்றாமையில் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பு…ஏமாற்றம்…
“வெட்கக்கேடு…நான் தமிழ் தமிழ் என்று முழங்கின தமிழ்வாத்தி. ஆனால் என்ர பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாதாம்…” என்று வேதனைப்பட்டுக்கொள்கிறார் சிற்றம்பலம் வாத்தியார்.
“ சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப்போராட்டம் நடத்தி, தமிழ்…தமிழ்… என்று முழங்கி சத்தியாக்கிரகம் எல்லாம் செய்தம். ஆனால்… எங்கட அடுத்த சந்ததிக்கு தமிழே தெரியாமல் வளர்த்திருக்கிறம். சிங்களம் படிக்கேளாது என்று போராட்டம் நடத்தினோம். ஆனால், இப்ப எங்கட சனம் ஆங்கிலம் மட்டுமில்லாமல் டொச், பிரெஞ்ச், சுவீடிஷ், நோர்வேஜியன் என்று எல்லா மொழிகளும் படிக்குது. எங்கட பல பிள்ளைகளுக்கு அந்த வெளிநாட்டு மொழிகளில் ஒன்றோ ரெண்டோ மட்டுமே தெரிந்ததாக இருக்கிறது. அதையே பெருமையாகவும் நினைத்துக்கொள்கிறவிதமாகக் காலம் மாறியிருக்கு…” என்று அவர் யோசிக்கிறார்.
தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டிருந்த வேளை அது. சத்தியாக்கிரகத்திற்குத் தந்தையும் தளபதியும் தலைமை தாங்கினார்கள். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் போராட்டம். அவசரகாலச்சட்டத்தினாலும் ஊரடங்கு உத்தரவாலும் முறியடிக்கப்பட்டு, தலைவர்கள் கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள். ‘இரும்பு மனிதர்’ என்ற பெயரை இப்போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டவரும் வேறுபலரும் காயமடைந்தனர். சிற்றம்பலத்தாரும் ஒட்டகப்புலம் சென்று கட்டுப்போட்டுக்கொள்கிறார்.
களம் பல கண்ட போராட்டம், தனித்தமிழ் ஈழமே தீர்வு என்ற முடிவுக்கு வந்து – தலைவர்களும் மடிந்து, போராளிகளும் தியாகிகளாகி, மாவீரர்களாகி, மக்கள் அகதிகளாகி, இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து, வட்டமேசை, சதுர மேசை என்று பேச்சுவார்த்தைகள் தொடர்கதையாகி – அந்நியநாடுகள் தலையிட்டும் ஒரு பயனும் இல்லாமல், முழுநாடுமே பதட்டத்தில் வாழத்தொடங்கியுள்ள காலத்தில் பேரப்பிள்ளைகள் தமிழ் பேசமுடியாதவர்களாக வந்திறங்கியிருக்கிறார்கள்.
யாருக்காக எங்கள் தலைவர்கள் போராடி மடிந்தார்கள்? யாருக்காக இளம்குருத்துக்கள் மாவீரர்களாயினர்? யாருக்காக மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்? யாருக்காக ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்? என்று உள்மனயாத்திரையில் இறங்குகிறார் சிற்றம்பலத்தார்.
“ மம்மி…ஏன் இங்கே யுத்தம் நடக்கிறது?” என்று சோதனைச்சாவடிகளில் நின்று நின்று பயணம்செய்ய நேரும் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகள் தாயிடம் கேட்கின்றனர்.
“ தமிழர்களுக்கு தனிநாடுவேண்டுமாம்…சிங்களவர்களுக்கு அது விருப்பம் இல்லையாம்.” என்று சுருக்கமாகச்சொல்கிறாள் தாய். மீண்டும் பிள்ளைகளின் கேள்வி. “ நாங்கள் யார்?” இந்த அடையாளக்குழப்பத்துடன் சிற்றம்பலத்தாரின் யாருக்காக? என்று தொடரும் கேள்விகளும், எங்கள் சூழலின் அபத்தத்தை விரக்தி தோன்றும்வண்ணம் உணரவைக்கிறது.
போர் இரு படைகளுக்கிடையேதான். ஆனால் அதன் பாதிப்புகளை அனுபவிக்கும் பெரும்பாலானோர் அப்பாவிமக்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த மக்களின் காதல் கதையாக இருந்தாலும்சரி, காசு தேட திரைகடலோடிய கதையாக இருந்தாலும்சரி, அதற்குள் போரின் குரூர முகம் தெரிந்துவிடுகிறது. இந்த நாவலிலும் போரைப்பற்றியோ, அதைப்புரிகிறவர்கள் பற்றியோ நேரடியான எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், போரைவிட்டு விலகி ஓட முற்படும் இந்த மனிதர்களின் கதை போரின் கதையுமாகத்தான் இருக்கிறது. ஆசிரியரின் நெருடல் இல்லாத எழுத்து நடைபற்றியும் குறிப்பிடவேண்டும். யாழ்ப்பாணத்தவர், நீர்கொழும்பார், மலையகத்தவர், முஸ்லிம்கள், வெளிநாட்டுத்தமிழர் எல்லோரும் அவரவர் அடையாள மொழிநடையில் பிசிறின்றிப்பேசுகிறார்கள். சின்னச்சின்ன அடையாளங்களையும் நுட்பமாக பதிவுசெய்கிறார். கொழும்புக்கும் ஏயார்போட்டுக்கும் வேன் ஓடும் முஸம்மில் கையில் தினகரன் பேப்பரோடு வருகிறான்.
“ நீங்க…வீரகேசரி, தினக்குரல் வாங்குவதில்லையா?” என்று தேவகி கேட்கிறாள்.
“ முன்பு வாப்பா யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது வாங்கிப்படிக்கும் பேப்பர். அதுவே பழக்கமாகிப்பெயித்து. உங்களுக்கு விருப்பம் எண்டா செல்லுங்க… மற்றப்பேப்பர்கள் வாங்கிட்டு வாரன்” என்கிறான் முஸம்மில்.
தேவையான இடங்களில் தேவார, திருப்புகழைப் புகுத்தியிருக்கும் விதத்திலும் வெற்றிகாண்கிறார் முருகபூபதி. உதாரணமாக, சாதித்திமிரினால் தகப்பன் தேவகிக்கு வஞ்சம் இழைத்ததை சுமதி சுட்டிக்காட்டிப்பேசுகிறாள். தன் சகோதரி சாதி குறைந்தவனைத் திருமணம் செய்துகொண்டு போனதால்தான், அவள் மகள் தேவகியை தன்னால் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதென்று உணர்கிறார் சிற்றம்பலத்தார்.
மனம் நொந்தவராக படுக்கைக்குப்போகிறார். அப்போது அவர் பாடுவது:
“ இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனெ சற்குமரேசா
கறையானைக்கிளையோனே கதிர்காமப்பெருமாளே”
சாதிக்கலப்பை விரும்பாத அவருக்கு குறமாதை மணம் செய்துகொண்ட முருகன்தான் விருப்பத்துக்குரிய கடவுள்.
சராசரி வாழ்க்கையின் நுட்பங்களை வெளிப்படுத்துவதன் மூலம், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்தல் எப்போதும் நல்ல எழுத்தின் அடையாளமாக இருக்கிறது. வாழவேண்டும் என்ற உந்துதல் முடிவற்றது. அதை அழகாக்கிக்கொள்ளவும் அர்;த்தமாக்கிக்கொள்ளவும் உதவுவதே கலை, இலக்கியங்கள் எல்லாம்.
உண்மையில் இலக்கியம் என்பது மனிதன் தன்னோடும் பிறரோடும் தரையோடும் காற்றோடும் கலந்து கரைந்து இருப்பதைக் காண்பிக்கிறது. உணரவைக்கிறது. மனிதனை ஈரப்படுத்துகிறது. இலக்கிய வாசிப்பில் மனிதன் தன்னைக்கரைத்துக்கொள்கிறான். தன் சூழலை, சூழலின் வண்ணங்களையும் வடிவங்களையும் தன் மனம்தோய இலக்கியத்தின் வழியே பார்க்கிறான். நமக்குள் மீண்டும் நம் குழந்தைப்பருவம் சிலிர்த்துக்கொள்கிறது. வாழ்ந்த கிராமம், அதன் நூற்றுக்கணக்கான மனிதர்களோடும், பயிர்களோடும், அவற்றோடு உறவுகொண்டதை, அந்த உறவில் நாம் வளர்ந்ததை, நமக்குச்சொல்கிறது. இன்னும் நாவலின் உள்ளே எட்டிப்பார்க்கிறபோது நாம் நடந்த வரலாற்றின் பல திசைகள் தட்டுப்படுகிறது. பயணத்தின் வழியில், எப்படி ஒரு வெட்டவெளியில் வறண்ட வானத்தின் கீழ் வந்து நிற்கும்படியாகியிருக்கிறது என்ற யோசனைக்குள் விழவைக்கிறது.
பனிமூட்டங்களில் ஒளிக்கீற்றுக்களைத்தேடி, மனித வாழ்க்கை குறித்துப்பல கோணங்களில் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி, மனிதனின் அவலங்களை, சிதைவுகளை, பொய்மைகளை, துன்பங்களை,… எப்போதேனும் அவனுள் சுடர்விடும் மேன்மைகளை, நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வாழ்க்கையின் சாராம்சத்தைக் கண்டடைய முயல்கின்றன இலக்கியங்கள்.
வாழ்க்கையின் துக்கங்களும், குரோதங்களும், ஏமாற்றுக்களும், வஞ்சனைகளும், சொல்லப்பட்டிருக்கின்றன என்றாலும், இவ்வளவு இறுக்கங்களின் மத்தியில் - நிராசைச்சோர்வுகளின் மத்தியிலும் இவ்வுலகமும் இந்த வாழ்க்கையும் இனிது என்று மென்மையாகவும் உறுதியாகவும் கூறுவது இந்த நாவல்.
அன்பு செலுத்துவதில், அன்பாக இயங்குவதில் உள்ள அழகை வெளிப்படுத்தி, அந்த அன்பின் நிழலில் தங்கி இளைப்பாறக்கிடைக்கும் கொடுப்பினையில் ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.
நத்தைக்கும் சுமப்பதற்கு அதன் முதுகில் ஒரு கூண்டு வைத்துப்படைக்கப்பட்டிருப்துபோல், மனிதர்களுக்கும் அநேக துயரங்கள், ஏமாற்றங்கள், வஞ்சனைகள்…இவையனைத்துடனும் வாழ்க்கையில் நம்பிக்கையும் தெளிவும்கொள்ளக்காரணங்களைத்தருகிறது.
நமது பிரச்சினை – நல்ல படைப்புகள் கவனிக்கப்படாமல்போவதும் மோசமான படைப்புகள் கொண்டாடப்படுவதும்தான் என்று சொல்வார்கள். முருகபூபதியின் நாவலான பறவைகள் கவனிக்கப்படாமல் போய்விடக்கூடாது என்று கவலைப்படத்தகுதியான படைப்பு.
பிற்குறிப்பு:
2002 ஆம் ஆண்டு இலங்கையில் தேசிய சாகித்தியவிருதுபெற்ற முருகபூபதியின் பறவைகள் நாவலின் அறிமுக அரங்கு 09-03-2003 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. இந்நிகழ்வில் படைப்பாளியும் ஊடகவியலாளருமான சிதம்பரப்பிள்ளை சிவக்குமாரினால் சமர்ப்பிக்கப்பட்ட நாவல் நயப்புரை. தமிழ்நாடு தஞ்சை பல்கலைக்கழக மாணவி செல்வி நர்கிஸ் என்பவர் தனது ஆ.Phடை பட்டத்திற்காக பறவைகள் நாவலை ஆய்வுக்குட்படுத்தினார்.
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.