நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பபடுகின்ற இலக்கிய வடிவமாகத் திகழ்கின்றது. இன்றைய சமுதாயச் சூழல் தோற்றுவிக்க கூடிய தனிமனித முரண்பாடுகளும் நெரிசல்களும் சிறுகதைக்கான நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்று, சிறுகதைக்கான உள்ளடக்கம், உருவம் சமகால வாழ்க்கைப் போராட்டத்தில் அதன் இடம் என்பன குறித்து விமர்சகர்கள் எவ்வளவுதான் அரிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கூறினாலும் அதன் இறுதி வெற்றி என்பது பொதுமக்கள் விரும்பும் நிலையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதுவும் தரமான சிறுகதைகளுக்கு புறத் தூண்டுதல் அவசியமில்லையென்றே தோன்றுகின்றது. சிறுகதை சமூகவுறவுகளில் வெளிப்படும் மனித நிலைகளை பின்புல உறைப்புடன் எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய உலகில் சிறுகதைப் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் பல புதிய பரிமாணங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் சிறுகதை வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தில் ஆரம்பித்து நமது யுகத்து ஆற்றல் மிக்க சிறுகதையாசிரியரான ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் வரை பலரும் பலவகைகளில் சோதனைகள் செய்து பார்த்து தான் இந்த புதிய திசை வழியை கண்டடைந்துள்ளனர்.
புதி திசை வழி என்பதன் அர்த்தம் மக்களால் மக்களுக்கான இலக்கியம் என்ற அம்சத்தை சுட்டி நிற்கின்றது. பல ஆண்டுகளாக வளர்ந்த இயக்கம், போராட்டம் செயல் என்பனவற்றின் ஊடாக வளர்ந்து வந்ததொரு இக்கிய செல்நெறியாகும். இந்த பின்னணியில் சிறுகதை பற்றி நோக்ககின்ற போது அது வாழ்க்கையின் அவலங்களை துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றது. தனி மனித வாழ்வில் ஏற்படும் அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழித்து விடவும் முடியாது. எனவே சிறுகதை மக்களின் வாழ்க்கை அவலங்களை துன்பங்களை மட்டும் சித்திரிப்பதாக அன்று அதனை தீர்ப்பதற்காக உந்துதலையும் வழங்குகின்றது என்பதை சிறுகதை வரலாற்றினை ஊன்றிக் கவணிப்பவர்களால் உணர முடியும்.
தம்பு சிவா அவ்வப்போது எழுதிய சிறந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. அக்கதைகளை அவ்வப்போது சஞ்சிகைகளிலும் பத்திரிக்கைகளிலும் வாசிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருப்பினும், அவை கால அடைவில் தொகுக்கப்பட்டு வெளிவருகின்ற போதே ஆசிரியரது மன வளர்ச்சியையும் கலை முதிர்ச்சியையும் அறிய முடிகின்றது. அவ்வாசிப்புத் தரும் உந்துதல் தவிர்க்க முடியாத வகையில் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் சிறுகதைகளின் சாதனைகள் யாவை? அதன் போக்குகள் எந்தெந்த வகையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது? போன்ற விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் பின்னணியில் தம்பு சிவா தமது கதைகளில் சமூகம் சார்ந்த- ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக் கூறுகளை எவ்வாறு கையாண்டுள்ளார்? அவரது புரிந்துக் கொள்ளலின் அடிப்படை யாது? போன்ற விடயங்கள் பற்றி நோக்குவோம்.
இக்கதையாசிரியர் ஆரம்கால முதலாகவே தெழிற்சங்க ஈடுபாடு கொண்டவராக, சமூக செயற்பாட்டாளராக இணைத்துக் கொண்டு தன்போன்ற சக மனிதனின் வாழ்வுக்காக வீயூகம் அமைக்க முற்பட்டவர், தான் சந்திக்க நேர்ந்த அவலங்களைக் கருப்பொருளாகக் கொண்டே கதைகளை ஆக்கியிருக்கின்றார். அதனால்தான் இத்தொகுப்பில் அடங்கியுள்ள பெரும்பாலான கதைகள் அவரது சுய அனுபவங்களாகவே அமைந்திருக்கின்றன. ‘உறவு’, ‘சதுரங்கம்’, பிரளயம்’, ‘மனிதம் மரணிக்கின்றது’, தீயாய் கனன்ற வாழ்வு’, மனமே வாழ்க்கை,’பயணம்’, சொந்தங்கள்’ முதலிய கதைகள் இதற்குத் தக்க எடுத்துக் காட்டுகளாகும். இக்கதைகளை வாசித்த போது ஓர் உண்மை தெரிகின்றது. தம்பு சிவா அவர்கள் வரட்டு தத்துவாதியாகவோ அல்லது முன்பின் நவீனர்களாகவோ இருந்துக் கொண்டு படைப்புகளில் ஆய்வு ஆழத்தையோ நுண்மான் நுழைப்புலத்தையோ தேடுபவர் அல்லர். மாறாக இதயமுள்ள சாதாரண மனிதன் என்ற நிலையில் நின்று கொண்டுதான் பார்க்கின்றார். அத்தகைய சாதாரண மனிதனாக நின்று பார்த்து, மனித அவலத்தை சமத்துவமின்மையை: இனமுரண்பாடுகளை அதன் வர்க்க நலனை தமது கதைகள் மூலமாக வாசகனிடத்தில் பதிய வைக்கின்றார். எடுத்துக் காட்டாக ‘மனிதம் மரணிக்கின்றது’ என்ற கதை கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமானதோர் இன வண்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்ற போது அது தோற்றுவிக்க கூடிய கொலைவெறி, மனித அவலங்களை சித்திரிக்கின்றது. ஓர் இளம் பெண் உடம்பு முழுவதும் இரத்தகாயங்கள் பட்ட தன் தாயாரை சுமந்து வருகின்ற காட்சி, கூடவே அவ் வைத்தியசாலையில் மனிதநேயத்துடன் கடமையாற்றும் டாக்டர், அவர் அவ்விளம் பெண் புதிதாக வைத்தியரானவர் என்பதை தெரிந்துக் கொண்டதும் அவர்களிடையே இடம் பெறும் உரையாடல்கள் யாவும் மனதை உருத்தி கண்ணீரை வரவழைக்கின்றது.
அவ்வாறே இத்தொகுப்பில் அடங்கியுள்ள ‘தீயாயட கனன்ற வாழ்வு’, ‘விடியுமா?’ ஆகிய கதைகள் வேலைத் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் துன்பம் தோய்ந்த வாழ்க்கையை காட்சியாக பதிய வைக்கின்றது. ‘பயணத்தின் ஆரம்பம்’ என்ற திக்குவலை கமாலின் சிறுகதையும் இதனை அழகுற சித்திரிக்கின்றது. இக் கதைகளில் பணக்கார வர்க்கத்தின் மனோபாவம், செயல் பெண் மீதான ஆண்களின் ரொமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கம், அவற்றின் மூலம் எழும் வர்க்க முரண்பாடுகளும் கருத்தோட்டங்களும் நுண்ணயத்துடன் தீட்டப்பட்டுள்ளன.
இனமுரண்பாடும் யுத்தமும் மேலோங்கிய சூழலில் அவை தோற்றுவிக்கக் கூடிய அகதிவாழ்க்கையயின்- புலம்பெயர்வு வாழ்க்கையின் கோரங்கள், தவிப்புகள், துன்பங்களை சிறப்பாகச் சித்தரிப்பவையாக ‘சதுரங்கம்’. செந்தங்கள் ஆகிய கதைகள் அமைந்துள்ளன. சுனாமி ஆழிப் பேரலையினால் இழந்து போன சொந்தங்கள்- உறவுகள் பற்றிய் பரிதவிப்புகளை ‘பிரளயம்’, ‘பயணம்’ ‘சொந்தங்கள’ முதலிய கதைகளில் காணலாம்.
சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் சிங்கள பேரினவாதம் என்பது புதிய வடிவில் தன்னை வடிவமைத்துக் கொண்டது. மறுபுறத்தில் தமிழ் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு காட்டிக் கொடுக்கும் குணாதிசியத்துடனேயே எழுச்சிக் கொள்ளத் தொடங்கியிருந்தது. தமிழ் இடதுசாரி சக்திகள் தமிழர் பண்பாட்டில் புரையோடிப் போயிருந்த சாதித் தகர்ப்பு போராட்டத்தை தன்னகத்தே எடுத்த போது இனவொடுக்கு முறைக்கு எதிரான பேராட்டத்தில் போதியளவு கவனமெடுக்கவில்லை என்பது உண்மை. இந்த சூழலில் தமிழ் தேசிய போராட்டமானது பிழையானதோர் அரசியலின் பின்னணியில் மோசமானதோர் நிலையை எட்டியதை வரலாறு எண்பித்திருக்கின்றது.
அதேசமயம் சிங்கள இடதுசாரி சக்திகள் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ih கொண்டிருந்த அதே சமயம் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான விழிப்புக் கொண்டிராமை துரதிஸ்டவசமான தொன்றே. அதே சமயம் சிலர் சிங்கள இனவாத்திற்குள்ளும் முடங்கிப் போனமை இன்னொரு துரதிஸ்டமானதொரு நிகழ்வாகும். இந்தச் சுழலில் தமிழ் இடது சாரிகள் தமிழ் இனவாத்திற்கு எதிராக போhரடிய போது சிங்கள இடதுசாரிகள் தமிழ் தேசியத்தின் ஏகாதிபத்திய சார்பை எதிர்த்துடன் தம் பணிகனை சுருக்கிக் கொண்டனரேயன்றி வளர்ந்து வந்த பேரிவாதத்துக்கு எதிரான உருப்படியான திட்டங்கள் எதனையும் அவர்கள் முன் வைக்கவில்லை. இந்த தவறு கண்டுக் கொள்ளப்படாதவரையில் எமது நோக்குகள் செயற்பாடுகள் திசையற்றதாகவே இருக்கும்.
யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இஞைர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கதைகளை எழுதியவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்தாளர்களின் மௌனத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. இன்று இந்த மௌனம் கலையப்பட்டுள்ளது என்பதற்கு யோ. கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன.
இன்று இனவாதம், இன முரண்பாடு என்பன பல நிலைகளில் குமிழிட்டு மேற்கிளம்பியுள்ளது. மறுபுறத்தில் தமிழர் சமூகவமைப்பில் புரையோடியிருக்கின்ற சாதிய கருத்தியல் இன்று புதிய வடிவில் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி வருகின்றது.இவ்விரு முரண்பாடுகளையும் தம்பு சிவா தமது சிறுகதைகளில் ஆங்காங்கே காட்டத்தவறவில்லை. இந்தச் சூழலில் இவ்விரு முரண்பாடுகளையும் கவனத்திலெடுத்து சமூகமாற்ற செயற்பாடு;களை முன்னெடுக்கின்ற போது ‘இரட்டைத் தேசியம’; பற்றிய தேடல் அவசியமானதாகின்றது. இன்று இலங்கை இந்திய சூழல்களில் சமூகமாற்றத்தில்; இரட்டைத்தேசியம் வகிக்கும் பங்கு குறித்து விரிவான ஆய்வுகளை ந. இரவீந்திரன் செய்து வருகின்றார். எமது சூழலில் இன, சாதிய கருத்தியல் ஒடுக்குமுறையின் வடிவங்களாக உள்ளமையால் ஐரோப்பிய சமூகம் போல்லல்லாமல் அரசியல் புரட்சிக்கு முன்னதாக பண்பாட்டுப் புரட்சியே இன்றைய சூழலின் யதார்த்தமாகியுள்ளது.
இத்தொகுப்பில் அடங்டகியுள்ள ‘உறவு’ என்ற கதை யதார்த்த சிதைவுக் கொண்டதாக காணப்படுகின்றது. ஆசிரியர் ஒருவர் மீது அன்பும் மரியாதையும் கொண்ட மாணவரொருவர் தான் வைத்தியரான போதும் எவ்வித சீதனமும் வாங்காமல் தமது பெற்றோரின் சம்மதத்துடன் ஆசிரியரின் மகளை திருமணம் செய்கின்றார். இவரது இக்கதையில் மாத்திரமன்று பெரும்பாலான கதைகளில் சீதனம் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கின்றார். சில மனிதாபிமானிகளின் மூலமாக சீதனத்ததை நிராகரிக்கின்றார். இன்றைய யாழ்பாண சூழலில் சீதனம் என்பது எந்தளவு பலம் பொருந்திய விஷ மரமாக வளர்ந்துள்ளதென்பதை நாம் அறிவோம். அத்தகைய பலம் பொருந்திய மரத்தை பலம் கொண்ட கோடாரியால் பிளக்க வேண்டுமே தவிர சில மனிதாபிமான செயற்பாடுகளால் அதனை அழித்து விடலாம் என நினைப்பது பொருத்தமற்றதாகவே படுகின்றது. சுமூகத்தில் ஆங்காங்கே அவரது கதையில் வருவது போன்ற விதிவிலக்கான மனிதாபிமானவர்கள் காணப்பட்ட போதினும் அவர்கள் வகை மாதிரியான பாத்திரப்படைப்பாக ஆக்கக் கூடியவர்கள் அல்லர். வகைமாதிரியான பாத்திரப்படைப்பு யார்த்தவாதத்தின் உயிராகும். அவ்வாறே அவரது ‘சொந்தங்கள்’ என்ற சிறுகதையும் சிறுக்கதைக்கான கலைத்துவத்தை இழந்து பிரச்சார வாடை மேலோங்கியதாக காணப்படுகின்றது.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது முக்கியமானதொரு விடயம் பற்றிய கவனம் செலுத்துதல் அவசியமானதாகும். அதாவது நமது சிறுகதை எழுத்தாளர்கள் படைப்பாளிகள் திரும்பத் திரும்பத் ஒன்றையே கூறுவதற்கான காரணம் அவர்களது சமூக தரிசனம் பற்றிய தெளிவின்மையாகும். நமது சிறுகதைப் படைப்பாளர்கள் சிலர் தத்துவார்த்த தெளிவு அல்லது அறிவுப் பெற்றிருப்பினும் அவர் அதனை கதை நிகழ் சூழலுக்கேற்ப தமிழ் மரபிற்கேற்ப பொருத்தி பார்ப்பதில் இடருகின்றனர். இந்த சமூக அனுபவம் விஸ்தரிக்கப்படாமையால் கலைப்படைப்புகளில் காலத்திற்கேற்ற உள்ளடக்கத்தினை அதன் வடிவம் சிதையாதவகையில் வெளிக் கொணரத் தவறிவிட்டனர். இவ்வகையில் தம்பு சிவா வடிவப் பரிசோதனையில் அதிகம் அக்கறை காட்டுபவரல்ல. பாரம்பரியமான சிறுகதை வடிவத்தைக் கையாண்டு தன் கண் எதிரே உறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் குரூரங்களையும் அவலங்களையும் மனசை பிழியும் துன்பக் காட்சிகளையும் படைப்பாக்கியிருக்கின்றார்.
வெற்று அலங்கார வார்த்தை ஜாலங்களை வைத்துச் செல்லரித்துப் போன தத்துவங்களுக்கும் போலி தனமான கோட்பாடுகளுக்கும் வண்ணம் பூசிப் பொது மக்களையும் வாசகனையும் ஏமாற்ற முற்படாமை இக்கதையாசிரியரின் நுண்ணுணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
அதேசமயம், இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அதாவது இலக்கியத்தில் உள்ளடக்கம் எவ்வாறு கால, தேச வர்த்தமாணங்களுக்குக் கட்டுப்பட்டும் அதனை மீறியும் இயங்குகின்றதோ அவ்வாறே அதன் வடிவமும் அத்தகைய தாக்கங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றது என்பதை இலக்கிய வரலாறு எண்பித்திருக்கின்றது. உள்ளடக்க ரீதியாக மட்டுமன்று வாசிக்கின்ற முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. முற்போக்கு இலக்கியத்திற்கும் அழகியல் பிரச்சனைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ற வடிவத்தை மக்களின் நலனிலிருந்து அந்நியமுறால் படைப்பாக்கித் தர வேண்டியது முற்போக்கு- மார்க்சியப் படைப்பாளியின் கடமையாகும். இன்றைய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய கணிப்பைப் பெற்றுள்ள ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் இந்த சீரிய பணியினை செய்திருக்கின்றது. இதற்கு ‘கதையின் தலைப்பு கடைசியாக இருக்கக் கூடும்’ என்ற கதை தக்க எடுத்துக்காட்டாகும். இந்திய அரசியல் பின்புலத்தில் நின்றுக் கொண்டு மெஜிக்கல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட கதையாகும். இந்திய சமூகத்தில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இக்கதை அமைந்துள்ளது. இக்கதை சொல்லும் பாணியில் பவனி வருகின்ற பாத்திரங்கள் யாவும் இன்றைய விடுதலையை நாடும் அதே நிலைக்குரிய பாத்திரங்களை மறுவாசிப்புச் செய்ய ஏதுவாக உள்ள புனைக்கதை ஏற்பும் சமூகமாற்றத்திற்கான உந்தலும் முற்போக்கு இலக்கியத்திற்கு மாத்திரமன்று முழுத் தமிழ் இலக்கியத்திற்கும் வழங்கிய மகத்தான பங்களிப்பாக அமைந்துள்ளது. தம்பு சிவாவின் சிறுகதைகளை வாசிக்கின்ற போது அவர் வடிவ அமைப்பில்- கதை சொல்லுகின்ற முறையில் இத்தகைய உத்திகளை கையாண்டிருக்கலாமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எனினும் அவ்வகையான புதிய திசை வழியை கைக்கொள்ளாது பராம்பரிய முறையில் தமது கதைகளைப் படைத்திருப்பது அவரது கதை சொல்லும் பாணியின் ஓர் அம்சம் என்று நாம் அமைதி காணலாம்.
தமது சிறுகதைகளின் மூலமாக தம்பு சிவா ஈழத்து சிறுகதை இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.