மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் வடிவம் கவிதை ஆனாலும் அது தோன்றுகின்ற கால அரசியல் சூழ்நிலைகள் அதன் பாடு பொருளை தீர்மானிக்கிறது. பல செய்திகளை உணர்வு கொந்தளிப்புகளை மெளனமாகப் பேச வேண்டிய காலத்தில் எழுந்த கவிதைகள் இவை. எனவெ சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி விடாது சொல்ல முடிந்ததைக்கொண்டு நிறைய சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் துஸ்யந்தனுக்கு அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை காட்டுகிறது மொழிபெயர்கப்படாத மெளனனங்கள். கவிஞருடைய இளமைக்காலம் பெரும்பாலும் போர்ச்சூழலுக்குள் நகர்ந்திருக்கிறது இறப்பு பற்றிய அச்சமும் வாழ்வின் நிச்சயமின்மையும் எதிர்காலம் சிதைந்து போயுள்ளதென்ற விரக்தியும் .இவரையொத்த இளைஞர்களைப்போலவே இவருக்கும் உரியதாயிற்று .இதுவே இவரது கவிதைகளைப் பிரசவித்தன. தமிழ் சமுகத்தின் மீது திணிக்கப்பட்ட போர் அவலங்களும் பாதிப்புக்களும் இவரது கவிதைகளில் பதிவு செய்யபடுகின்றதென்றவகையில் இத்தொகுதி ஒரு வரலாறாகிறது. இத்தகைய பின் புலத்தில் இவரது கவிதைகள் அதனுடைய மொழி அரசியல் பற்றி கவிதைகள் ஊடாக நோக்குதல் பொருத்தமென நினைக்கிறேன்.
இப்படிஎம் கனவுகள்
குலைந்த மாயம் தான் என்னவோ
காலப்பெரு வெளியில்
நாம் சுமந்த
காட்டாற்று துயர அலைகளில்
ஓசைகள் இன்னும் எம் செவிகளில்
போராலும், திட்டமிட்ட கலாச்சார அழிப்பாலும் எம் சமுதாயம் சிதைந்து போனதென்கிற ஆதங்கம் 'கனவுகளை சுமந்தோம்' கவிதையில் வருகின்ற மேற்படி வரிகளால் சுட்டப்படுன்றது அதே கவிதை தொடர்ந்து இப்படிப் பேசுகிறது
துயரச் சிலுவைகளை சுமந்தோம்
இருப்பினும் நம்பிக்கைச் சுவர்கள
இன்னும் எம்முள் பலமாகவே ---
இதனாடாக வாழ்வில் இருக்கின்ற நம்பிக்கை எதிர்காலம் பற்றிய உறுதி வெளிப்படுத்தபடுகிறது. இதில் சாதாரணனைவிட கவிஞனுக்குள்ள கனவு புலப்படுத்தப்படுகிறது. நாட்டில் இத்தனை நடந்தபின்பும் ஏதும் செய்யமுடியாமல் இருக்கினற போலி அரசியலைச் சாடுகிறது
'நிஜங்களின் நிழலைத்தேடி'
எமது வாழ்வு நிலையின் மீது
நிஜங்கள் அறுபட்டு போலி சித்தாந்தங்கள்தான்
வேருன்றிப்போயின.
எனத் தொடரும் வரிகள் ஆழமாக நோக்கத்தக்கது. இதைவிட போரின் சூழலில் வாழ்வில் நிலைத்திருத்தல் பற்றி பேசும் கவிதைகளே தொகுதியில் அதிகம் எனலாம். 'தந்தி அறுக்கப்பட்ட வீணை' கவிதை இப்படி சொல்கிறது
வன்மங்கள் எங்கும்
நிலையாக சூழ்ந்திருக்கும்
இல் வாழ்வு
குறுகிய ஒரு வட்டத்தள் குறுகிக்கொள்கிறது
மனம் திறந்து
அழுது கொண்டிட கூட
கண்களிடம் அனுமதி கேட்க வேண்டிய
துர்பாக்கிய சாலிகளாகிப் போனோம்
எனதொடர்கிறது கவிதையெங்கும் துயரமும் தொடர்கிறது .
வாழ்வின் இருத்தல் பற்றிய நிச்சயமின்மையும் நம்பிக்கையின்மையும் வெளிப்படுத்தும் வரிகள் அவை .கவிஞன் வாழ்வியல் சம்பவங்களினால் அதிகம் பாதிக்கபடுபவன். அநீதி கண்டு பொங்குதல் கவிஞனுக்கு இயல்பாயுள்ள குணம் . ஆனால் எல்லா சுதந்திரமும் மறுக்கப்பட்ட சூழலில் தன்னுள்ளே வெந்து புழுங்குவதை தவிர கவிஞனால் வேறென்ன செய்யமுடியும். இத்தகைய ஆற்றாமை 'கருக்கள் கலைகின்ற காலம்' கவிதையில் வெளிப்படுத்தப்படுகிறது.
பேனா முனை வெள்ளைத்தாளில்
மெல்லப் பதிகிற கணங்களில்
புதிதாய் முளை விடும் உருப்பெறாத
அச்சங்கள் குழப்பி செல்கின்றன.
இதே கருத்தை 'மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்' இப்படி சொல்கிறது
ஏதோ ஒரு உருப்பெறாத அச்சம்
பின் தொடர்கிறது
யதார்தம் உரைக்கப்பட
மொழிகள் திராணியற்று
தொண்டைக்குள்ளே சிக்கி கொள்கிறது .
இவ்வாறு வாழ்வியல் அச்சமும் சொல்ல முடியாத தவிப்பும் இவரது கவிதைகளை நிறைக்கிறது. இந்த இடத்தில் துஸ்ஜயந்தனுடய கவிதைகளில் காணப்படும் தனித்துவமொன்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் வெற்று கோசங்கள் அலங்கார வார்தைகள் இன்றி வாழ்வை இயல்பாக சொல்கின்ற திறன் இவருக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வு துயர் குறித்த கவிதைளுடே வாழ்வின் அழகிய தருணங்ளை சொல்கின்ற கவிதையும் துஸயந்தனுடய தொகுதியில் உண்டு காதல் மென்னுணர்வ சொல்கின்ற கவிதையில் அதறகேற்ற மொழி கைவந்திருக்கிறது கவிதை நூலை விட்டு வெளியே வந்து மனதொடு பேசுகிறது.
உன்னை அறியாமலே என்னை நோக்க்கிற உன்விழிகளை
நீ சிறைபடுத்தி கொள்கிறாய்
என்னுணர்வுகளை புரிந்தம் புரியாதவளாய் பாசாங்கு செய்கிறாய்..
ஒவ்வொரு விடியல்களும்
உன் பெச்சொலிகளுக்கான எதிர்பார்ப்புடன் விடிந்து விடுகிறத.
என தொடரும் வரிகள் கவஞரின் கவித்தவத்தை எமக்கு சொல்கிறது அன்பு நெஞசின் காதலை காதலிக்கு சொல்கிறது.. இறுதியாக 'மீளும் நினைவுகள்' ஒரு நீண்ட கவிதை வாழ்வியல் யதார்த்தம் நெருக்கடி மிகுந்ததாக இருப்பினும் பழைய நினைவுகளில் திளைத்தல் வாழும் மனமொன்றினால் தவிர்க்க முடியாது இக்கவிதை கவிஞரின் இளமைக்கால அழியாநினைவுகளை அசைபோடுகிறது .ஆலடியில் ஆலம் பழம் பொறுக்கல், கிட்டியடித்தல், போளை (Marble) உருட்டல், கள்ள இளனி குடித்தல், தாத்தாவின் சைக்கிள் ஊர்வலம் என தனது இளமை வாழ்கைக்காலத்திற்கு எம்மை அழைக்கும் கவிதை இது. காலத்தின் பதிவாகி கிராம வாழ்கைக்கூறுகளை காட்டுகிற ஆவணமாக பயன் பட இடமுண்டு இறுதியாகத் தான் வாந்த சூழல் யதார்த்தம் சொல்லும் கவிதைகள் தமிழரின் நெருக்கடி மிகுந்த காலப்பகுதி வாழ்வை மொளனமாக பேசிச்செல்கிறது. காலம் ஓர் இளம் கஙிஞனை கண்டுபிடித்திருக்கிறது வாழ்க இவரது கவிதைப்பணி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.