யூ.எல். ஆதம்பாவா எழுதிய குருதி தோய்ந்த காலம் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் மெற்றோ பொலிற்றன் கல்லூரியினால் வெளியிடப்பட்டது. இது இவரது ஐந்தாவது நூல் வெளியீடாகும். 1999 இல் கலாபூஷணம் விருது பெற்றுள்ள இவர் ஏற்கனவே நாங்கள் மனித இனம் (1991 உருவகக் கதைத் தொகுதி), காணிக்கை (1997 சிறுகதைத் தொகுதி), சாணையோடு வந்தது (2007 சிறுகதைத் தொகுதி), பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் (2003 மர்கூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றிய இரங்கற் கவிதைத் தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். 63 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 35 கவிதைகள் இடம்பெற்று இருக்கின்றன. மெற்றோ பொலிற்றன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் தனது வெளியீட்டுரையில் படைப்பிலக்கியத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற மூத்த எழுத்தாளர் யூ.எல். ஆதம்பாவாவை கௌரவிக்கும் வகையிலே அவரின் இந்நூலை வெளிக்கொணர்கிறேன். இது இக்கல்லூரியின் தலைவர் என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியையும் மனநிறைவையும் தருகிறது. கலைத் துறையின் மேம்பாட்டிற்கு இவர் ஆற்றிய சேவைக்காக தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் கௌரவிப்புக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார் என்று குறிப்பிடுகிறார்.
யூ.எல். ஆதம்பாவா அவர்கள் வர்ணம் பூசாத வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் 1961 இல் நான் கவிதை எழுதுவதன் மூலம் படைப்பிலக்கியத் துறையில் பிரவேசித்தேன். என்றாலும் உருவகக் கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை என்று இலக்கியத்தின் பல துறைகளிலும் நிறையவே எழுதியுள்ளேன். 1961 முதல் இன்றுவரை என்னால் படைக்கப்பட்ட கவிதைகளிலே பொறுக்கி எடுக்கப்பட்ட 35 கவிதைகளைக் கொண்டது இக் குருதி தோய்ந்த காலம் கவிதைத் தொகுதி என்கிறார்.
இயற்கையின் கொடைகளான தென்றல், தேன், நிலவு, முகில் போன்ற அம்சங்களை உள்ளடக்கி எழுதப்பட்ட முதற்கவிதையே மனதை சிலிர்க்கச் செய்துவிடுகின்றது. கவிஞர்கள் என்றாலே இயற்கையின் தூதுவர்களன்றே? அந்த வகையில் எழுதப்பட்ட உணர்வின் ஊற்று என்ற கவிதையின் (பக்கம் 11) சில வரிகளிதோ..
தென்றல் வந்து மலர் மருவி
தேனைச் சுவைத்து முத்தமிடும்
மன்றல் இனிய காட்சியிலே
மகிழ்ந்தே கவிதை யாக்கிடுவேன்
காயும் நிலவில் குளிரேற்றிக்
களி கொண்டாடும் முகிற் கூட்டம்
ஆயும் முத்தக் கனிச் சாற்றில்
ஆயிரம் கவிதை ஆக்கிடுவேன்...
குருதி தோய்ந்த காலம் என்ற கவிதை இலங்கையின் போர்க்காலத்தை ஞாபகமூட்டுகின்றது. மக்கள் அவதிப்பட்டும், அல்லல்பட்டும் கிடந்த துயரச்சுமைகள் எமது மண்ணில் நிகழ்நதமை சாபக்கேடான விடயம். அத்தகையதொரு காலம் இனி வரவே கூடாது. (பக்கம் 14) சமாதானம் தொலைந்து போய் அதற்காக ஏங்கித் தவித்த அந்தக் காலங்களை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறார் கவிஞர் பின்வருமாறு.
உயிரைக் கைக்குள் பொத்திக் கொண்டே
கோழிக் குஞ்சாய் ஓடி ஒழிந்தது போதும்! போதும்!
எங்கே அந்தச் சமாதானம்?
அது இமயத்திலிருந்தாலும் எடுத்து வருவோம்!
குருதி தோய்ந்த அந்தக் காலம்
நம் கனவிலும் இனி வரவே வேண்டாம்!
புரிந்துணர்வும் மனதாபிமானமும் பூண்டு
பூரண சமாதான பூமியைக் காண்போம்!
திறமையுள்ளவனுக்கு களம் கிடைப்பது திண்ணம். அதற்கு பாடுபட வேண்டியதில்லை. என்றாலும் கூட இன்றைய காலம் பல அலுவல்களும் பரிந்துரையின் பெயராலேயே நிச்சயிக்கப்படுகின்றன. அத்தகைய கருத்தை முன்னிருத்தி கவிஞர் சவர்க்காரக் குமிழி என்ற கவிதையை யாத்திருக்கிறாரா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. (பக்கம் 17) இல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
'நான் பாட மன்னர் அரங்கு தேவையில்லை. பொதுஜன அரங்கே போதுமானது. மன்னர் அரங்கில் இசைப்பதற்கு சிலர் ஆலாய்ப் பறக்கிறார்கள். அரிய பிரயத்தனமும் செய்கிறார்கள். மன்னர் அரங்கால் வருகின்ற பெருமை பப்பாசிக் குழலில் ஊதிவிடும் சவர்க்காரக் குமிழி போன்றதே. எனது பாடல்களால் பேசப்படுவதையே நான் விரும்புகின்றேன். நான் பாட மன்னர் அரங்கு தேவையில்லை.'
முயற்சி என்பது மனிதனின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் சாதனம். அந்த முயற்சி இல்லை என்றால் அன்றாட கருமங்களிலிருந்து எதிர்கால இலட்சியங்கள் கூட கருகிப் போய்விடும். கடமையை சரியாக செய்தாலேயன்றி உரிமையைத் தட்டிக்கேட்டக எவராலும் இயலாதல்லவா? தைரியத்தை ஏற்படுத்தி துணிச்சல் கொள்ளக்கூடிய வரிகள் எழுக என்ற கவிதையில் (பக்கம் 21) பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
'தூங்கிக் கிடக்காதே தோழா! இன்றே துள்ளியெழுந்திடுவாயே! ஓங்கிக் கிடக்குதே கடமை. இன்னும் உறங்கிக் கிடப்பதோ மடமை. முன்னோரின் பெருமையில் மூழ்கி இருளில் முடங்கிக் கிடப்பது முறையோ? முன்னேற்ற ஒளியெங்கும் பரவ இன்றே முயன்று உழைத்திட எழுக.'
ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் தமக்கிடயில் பேதமை பட்டுத்திரிவதில்லை. ஆறரிவு கொண்ட மனிதன்தான் பகுத்துப் பார்த்து சண்டை போடுகிறான். குண்டு வைத்தும், சுட்டுச் செத்தும் அழிந்து போனோர் பற்றி உலக வரலாறுகளில் பலரைச் சொல்லலாம், அனைவரும் அன்புடனும், அனுசரணையுடனும் நடந்து கொண்டால் பூமிப் பந்து எத்தனை மகிழ்ச்சியாக சுத்தும்? வேதங்கள் கூட சகோதரத்துவத்தை, ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன. அவற்றை வைத்து எழுதப்பட்டதுதான் பேதங்கள் மறப்போம் என்ற கவிதை (பக்கம் 49)
குண்டு வைத்தும் சுட்டும் நம்மையே கொன்று அழிக்கின்றோம். விலங்குகளுக்குள்ளும் இப்படி விரோதங்களில்லையே. வேதங்கள் யாவும் ஒன்றாய் வாழவே ஓதுகின்றன. பேதங்கள் மறப்போம். ஒரு தாயின் பிள்ளைகளாய் நடப்போம்.
காதல், சமாதானம், அன்னையின் பெருமை, கருணை நபி (ஸல்) அவர்களின் பெருமை, ஆசான், தமிழ் மீது கொண்ட பற்று, உழைப்பு, இன ஒற்றுமை, தந்தையின் பெருமை, சுனாமி, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு கருப் பொருட்களும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பவள விழாக் கண்ட எழுத்தாளர் தெளிவத்தை, கொத்தன் எனும் பேராறு, மாமனிதர் அஷ்ரப் மறைந்தார், டாக்டர் எம். முருகேசப்பிள்ளை போன்ற தனிமனிதர்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காத்திரமான பல படைப்புக்களைத் தந்த நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர்; - குருதி தோய்ந்த காலம்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - யூ.எல். ஆதம்பாவா
வெளியீடு - மெற்றோ பொலிற்றன் கல்லூரி
விலை – 200 ரூபாய்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
www.rimzapoems.blogspot.com
www.rimzapublication.blogspot.com
www.rimzavimarsanam.blogspot.com
www.bestqueen12.blogspot.com