உலகை அசைத்துப் பார்க்கிற படைப்புக்கள் நமக்கு அவசியம் தேவையாக இருக்கின்றது. மறுக்க முடியாத படி தொடர்ச்சியான அவலங்களை காலம் நமக்கு தந்து கொண்டிருகின்றது. முடிவில்லாத சோகத்திலும் ஓரளவேனும் ஒத்தடம் கொடுப்பது போல ஈழத்து படைப்புக்கள் அமைந்துவிடுகின்றன. மஹாகவி போன்றோரால் தொடக்கி வைக்கப்பட்ட மண்,மக்கள் சார்ந்து சிந்திக்க வைக்கிற கவிதைகளை வாசிக்க வைத்திருபதற்காக காலத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இடப்பெயர்ச்சி, யுத்த அவலம்,இனசம்ஹாரங்கள் என தொடர்கின்ற நமது ரண களப் பயணத்தில் திருக்குமாரன் வரை தம் படைப்புக்களூடே மறைக்கப்பட்ட, மறைக்கப்படமுடியாத தடங்களை சொல்லிவைக்கிறார்கள். புதுவையின் உச்சஸ்தாயிலமைந்த கவிதையிலிருந்து மாறுபட்டதாக கருணாகரன், சித்தாந்தன், துவாரகன், தீபச்செல்வன், அமரதாஸ், முல்லைக்கோணேஸ், ஆதிலட்சுமி, கப்டன். வானதி, மேஜர்.பாரதி, நிலாந்தன், போஸ், அகிலன், யோ.கர்ணன் எனப் பலர் போர் அவலங்களை சொல்லி வந்திருக்கிறார்கள். வித்தியாசமான வடிவமைப்பில் ஆழமாக மனதில் படியும் வண்ணம் எழுதுபவர்கள் வரிசையில் திருக்குமாரனும் இடம்பெறுகிறார்.
2004இல் தனது முதலாவது 'திருக்குமரன் கவிதைகள்' நூலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட திருக்குமரன் தற்போது ‘விழுங்கப்பட்ட விதைகள்’ எனும் கவிதை நூலைத் தந்துள்ளார். கவிதை மீதான அவரது பார்வை, பயிற்சி கவிதைகளில் தெரிகிறது. சொல்ல வந்ததை சொல்லி வைத்து விடுகின்ற ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது. நிறைய வாசித்திருக்கின்றார் அல்லது நிறைய துன்பங்களை அனுபவித்திருக்கிறார் என்றே உணர முடிகின்றது. ஊடகவியலாளராகத் தொடரும் அவரது பணியும் சிரமங்களைத் தருகின்ற துறைதான்.
நாளைய வாழ்வுக்கான உத்தரவாதம் யாராலும் தரப்படவில்லை. உத்தரவாதம் தருபவர்களை நம்ப மறுக்கிறது. ஒரு நூற்றாண்டு வலி நமது. பொம்பரின், ஏவுகணைகளின், பொஸ்பரஸ் குண்டுகளின், தலையாட்டிகளின் தலையசைவின், தப்பி வாழ்தல் என்பதே கொடுமையானதுதான். வாழ்தலுக்கான போராட்டம் தொடர்கிறது.
திருக்குமாரனின் கவிதைகளில் மக்களின் வழக்குச் சொற்கள் அனாயாசமாக வந்து விழுந்திருக்கின்றன. 'பிரட்டிக்குழைத்து' 'முரட்டான் யானை' 'மங்கலாய்' 'பறை' 'ஈனஸ்வரம்' 'உடல் பிரட்டும்' 'மதாளித்து' 'முட்டுப்பட்ட’ ‘வடிவாய்' 'இறுதிச் சேடமாய்’ 'மணற்கும்பி' 'உங்காலும் அங்காலும்’ 'குந்தி விட' 'புழுகத்தில்' 'கண்ணயர்ந்து’ 'அசராமல்’ 'புரை ஏறி' 'செப்படி வித்தை' 'சந்து பொந்து' 'அயர்ந்து' 'நார்நாராய் 'வெறுங்கை' 'இடறுப்பட்டு 'டைனமோ 'ஓமோம்' 'கல்லெறி தொலைவில்' 'ஓர்மக்காற்று' 'போக்கறுந்த' 'பாறி' 'முனகல்' 'சுளையாக' 'ஏட்டில் சுரக்காய்’ 'தூவான' 'தெம்பு' ‘கொம்புக்கு மண்ணெடுக்கும்' -எனப் பல சொற்கள் புதுவையின் கவி வரிகளை ஞாபகம் ஊட்டுகின்றன.
நண்பனைப் போல, சக பயணியைப் போல இவரின் கவிதைகள் தமிழன் தடங்களை, போராளி, போராட்டம், தமிழரின் அவலம் பற்றியெல்லாம் தன் அனுபவ வெளிப்பாடாய் சொல்கிறார். மெதுவாக வந்து உள்ளுக்குள் ஏதோ ஒரு வலியை நமக்கும் தந்துவிடுகின்றது.
அடுத்த கணமேனும் ஏதும் நிகழலாம் என்கிற தவிப்பும், மன உழைச்சலும் படைப்பாளிகளுக்கு நிறையவே இருப்பது அவர்களின் கவிதைகள் மூலம் புலப்படுகின்றது எனலாம்.தன் கதையும் நாளைய வரலாறாகலாம். புதுவையின் கவிதைகள் நம்மை சிலிர்க்க வைக்கும். இங்கு திருக்குமரனின் கவிதைகள் தனக்குள் புதைந்து கிடப்பவற்றை முன்னாலுள்ள வரையும் சுரண்டி காதோடு இது என் கதை- உன் கதை சேர்ந்து சொல்லு இது எங்கள் கதை என்று...வரலாற்றுத் தேவையும் கூட... கோழைகளாய் ஓடி வந்த நமக்கும் ஏதோ ஒரு வகையில் உறைக்கவும் செய்கிறது.
'விதைசெய்தல் விதைக்குள்ளே
வேண்டியதைப் பூட்டி வத்து
பொதி செய்தல் என்பதெல்லாமதன் வேலை
விதை வீழ
அதற்குள்ளே அழகாக ஆழச்செதுக்கியுள்ள
அவ்வவ் விதைகளது ஆற்றல்களுக்கேற்றபடி
அவற்றை வழி நடத்திச்செல்வதுதான் என் வேலை
இவற்றை விட ஒன்றும் நானறியேன்
இன்னொன்று'
பலவற்றை ஒன்றுக்குள்ளேயே மடக்கி சொல்லுதலில் வெற்றி பெறுகின்றார். கவிதையின் வெற்றியும் தோல்வியும் கவிஞனின் மொழி ஆழுமையின் நீட்சியிலேயே தங்கியுள்ளது.அடர்த்தியான வார்த்தை செறிவான சிந்தனை கைகூடுமானால் கவிஞனின் பாய்ச்சல் அதிகமாகவே இருக்கும். 2004இற்கும் 2012 இற்கும் இடையில் அவர் எடுத்துக்கொண்ட காலம் அதிகம் தான்.ஆனாலும் அவரின் அலைச்சல்,ஓட்டம் என்பவற்றிற்கு அப்பாலும் அவரின் கவிதையின் மீதான ஆர்வம் அவரை கவிஞனாக அடையாளங் காட்டி இருக்கிறது.
'...நாம் வாங்குகின்ற
உள் மூச்சும்,வெளி மூச்சும்
லயப்பிடிப்பொன்றில்
விடுதலைக்கான ராகமொன்றை
தயார் செய்கின்றன..'
உண்மையான வார்த்தைகள்.
வாழ்வற்கான அர்த்தம் அதிகம். வாழ்ந்து மடிவதல்ல... ஈழத்து மனிதத்திற்கு சற்று அதிகம். விடுதலை மீதான நேசம் அதிகம் மிக்கவர். அதை விட போராளிகள் மீதான அன்பும், பற்றும் ஈழ விடுதலை பற்றிய சிந்தனையுடன் இனப்படுகொலைகளின் உச்ச எல்லைகளை தன் கவி மூலம் கொஞ்சமாக வேனும் சொல்லி வைத்து சென்று விடத் துடிக்கின்ற அவரிடம் நமக்கான நெருக்கம் இன்னும் அதிகமாகவே ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.
'இது உலகெங்கனும்
உரத்துப் பாடப்படும் நாட்களில்
ஒருவேளை
இசைதந்த அனைவருமே இல்லாதிருக்கலாம்.
ஆனால் இதுதான்
உலகின் விடுதலைக்கான பாடல்
உணர்வின் உன்னதத்துக்கான பாடல்..'
ஒவ்வொரு போராளியின் தியாக வேள்வி பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கும் போதெல்லாம்
வலி ஏற்படுகிறது.
எப்படி பாரதியாரின் கவிதைகள் நமக்கு ஊட்டச் சக்தியாகியதோ, எப்படி புதுவையின் கவிதைகள் விடுதலையின் மீதான ஆர்வத்தை அதிகரித்ததுவோ திருக்குமரனின் கவிதைகள் ஒரு யுகத்தின் களப் பதிவுகளை சொல்லிக்கொண்டிருக்கும். தீபச்செல்வனும் திருக்குமரனும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள் என்று கருத இடமுண்டு.
'எம்முடைய பறப்பின் கதை என்பது
சத்தியத்தின் கதை அல்லது
திரும்பலுக்கான சத்தியம்
எமக்கெதிரே மோசமான
பருவங்கள் உருவாகின்றபோது
சுதந்திரமாய் வாழ்தல் என்ற
ஒற்றைக் காரணத்துக்கான
பல்லாயிரக் கணக்கான மைல்களையும்
பல லெட்சம் இடர்களையும்
ஊடறுத்துப் பறக்கிறோம்..
புறப்படுவது என்று முடிவாகிவிட்ட பிறகு
இறுதியாக ஒருமுறை நாம் வாழ்ந்த இடங்களை
கண்ணில் பதித்தபடி பறக்கத் தொடங்குவோம்
இலக்கை அடையும்வரை...'
எமது பயணமும் அவ்வாறே.இலக்கு நோக்கிய பயணம் தான்.
ஒவ்வொரு இடப்பெயர்வின் கொடூரங்கள்...சோகங்கள்...தொடர்கதைதான். உலகயுத்தத்தின் போது பர்மியத் தமிழர்கள் துயர்சுமைகளுடன் தாயகம் நோக்கிப் புறப்ப்ட்டதாக நூல்களில் படித்திருக்கிறோம்.அதைவிட இராணுவ கொடுமைகளுக்கு முகம் கொடுத்த படி நகர்கின்ற கொடுமை முள்ளிவாய்க்கலுக்கப்பலும் தொடர்கின்றன. காட்டிக் கொடுக்கப்படலாம் அல்லது ஏதாவது ஒரு சந்தில், ஏதோ ஒரு பயணத்தின் போது கைது செய்யப்படலாம். எல்லாமும் முடிந்தாயிற்று என்ற கையறு நிலையில் சரணடைகின்ற போது கூட சிதிலப்படும் அபாயம் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனது கனவும் நிஜமும் அனுபவித்தே வந்திருக்கிற திருக்குமரனின் வரிகள் காலத்தின் சாட்சிகள். குருதி தோய்ந்த வாழ்வுக்குள் சிக்கி வாழ்வா சாவா என்கிற ஓடுதலில் மூடிய விழிகள் திறக்கையில் யாரோ அவர்களால் காப்பாற்றப்பட்டு புலனறியா/உணர்வறியா தேசத்தில் கொஞ்சமாவது வாழ முடிகின்ற நிலையில் அவனது நாட்குறிப்பு எமக்கு கவிதையாக வாசிக்க கிடைக்கிறது. ஏதாவது ஒரு தேசம் வந்து காப்பாற்றும் என்கிற நம்பிக்கையும் போய் அவரவர் ஆதிகார, பிராந்திய சுவாசத்திற்கென விரிக்கப்பட்ட வலைகளில் நாமும் அகப்பட்ட தமிழ்ப்புழுக்கள் நாங்களாகிய கதை வலி நிறைந்தது! எனினும் வலிமையும் நிறைந்தது !மக்கள்,மண்,மானுடம் பற்றியே சுழன்று வருகிற கவிதைகள் அநேகம். தமிழகக் கவிஞர்களைவிட நம்மவர்கள் பாக்கியசாலிகள். அவலத்துகுள்ளே வாழ்ந்தவரகள்.வாழ்பவர்கள்.
'வாழ்வின் ஒவ்வொரு அடியையும்
தூக்கு வைக்க
எத்துணை விலை கொடுத்தோம் என்பது பற்றி
கொலை உணர்வை விரல்நுனியில்
வைத்திருக்கிற உமக்கு
எதுவுமே உறைத்துவிடப் போவதில்லைத்தான்.
ஆயினும்
நெஞ்சால் ஒன்றும்மைக் கேட்கிறேன்
வாழ்தலுக்கான எங்களின்
இத்துணை ஆசையிலும் மேலானதா
கொல்வதற்கான உங்களது தேவை?'
அவரது கேள்வி நியாயமானதே!
யாரிடம் கேட்கிறோம்.அயலானை நேசித்த புத்தனிடமா?மறுகன்னத்தையும் காட்டு என்ற கிறிஸ்துவிடமா?? அல்லது உலகின் மனுநீதி மன்றிடமா? சுற்றிலும் நீதி வழுவியவர்களே வலம் வருகையில்.. சின்னதாய்..ஒளிக்கீற்றாய் மனதுள் நம்பிக்கை இல்லாமலும் இல்லை.தற்கொடையாளர்களின் பூமி.நெம்புகோல் வெளிச்சம் நமது கையில் என்கிற சித்தாந்தமும் நமக்கு போதிக்கப்பட்டவை தான்.மனித மனம் ...
'நம்ப முடியாதவையாய்
எமைச் சுற்றி நின்ற எல்லாமே நம்பும்படியாய்
நம் முன்னே வீழ்ந்துடையும்..
அவலக் குரல்களாய்
அலைந்தெங்கும் திரிகின்ற
அத்தனை தியாகக் குரல்களுமே சாந்தியுற்று
ஆசிர்வதிக்கின்ற அசரீரி
எம் கண்ணில் ஆனன்தக் கண்ணீராய் ஒழுகி
நிலம் நனைக்க
இனிப்பான மண்ணுண்ணும்
எறும்பெல்லாம்
..கருக்கல் பொழுதொன்றில்
வானம் எம் வசமாகும்..
துயர் நிறைந்த வாழ்வுக்குள்ளும் எவ்வளவு நம்பிக்கையாய் அந் நிலத்து மக்களும்...
நாம் தான் யாரி கட்டி நிற்கிறோம். எல்லாம் சாமி தரிசனம் காட்டும் மட்டும் தானே?
வடத்தை
இழுத்துத்தான் தேர் அசைவதில்லை
பிடிக்கவே அசையும்.
இது
சேர்ந்திழுத்தலின் சிறப்பு மட்டுமல்ல
ஆரென்றே தெரியாமல் இழுத்துவிடுகின்ற
அற்புதவரமும் கூட..!
சோதனைகளால் நிறைந்தவையே நமது வாழ்க்கை..புலம் பெயர்ந்திருந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான். நமக்கான நிலம், நமக்கான கோவில், நமக்கான தெரு, நமக்கான அந்த மரங்கள், நமக்கான பாடசாலைகள்.. நமக்கான அந்த மனிதர்கள்... அவைகள் நமக்கு வேண்டும்.. அதற்காகத்தானே அவர்களும் புறப்பட்டார்கள். கவிதைகள் கற்றுக் கொள்ளவும் வைக்கின்றன. நேரிய கொள்கையுடனும் வீரத்துடனும் புறப்பட்ட நமது தோழர்களின் கனவு பற்றியும் நமது கடமை பற்றியும் கவிஞர் சொல்லுகிறார்.
வசிக்கின்ற காலம்
வீட்டினும் அதிகம் என்பதால்
எப்போதுமே அணையாது ஒளிர்கிறது
பதுங்குகுளிக்குள் ஒற்றை விளக்கு..
அற்புதமான வரிகள்.
வேறு தெரிவுகளை மானுடம் சிந்திக்க காலம் விடுவதில்லை. காலம் அவர்களின் கைளில் சிக்கி நிற்கிறது. தோற்றுப்போய் நிற்பதை சொல்ல மனமும் வரவில்லை. வென்று வருவோம் என்கிற கிழக்கின் ஒளியின் தெறிப்பும் புலப்படவில்லையே. மானுடம் தோற்ற மண்ணின் அகதி பேசுகிறான். சிறுகச் சிறுகச் தான் சேகரித்தவற்றையெல்லாம் கவிதைகளாக நம்முன் கொட்டுகையில் நீயும் என்னைப்போல் அழுதுதான் பாரேன் என்கிறது கவிதைகள்.. மொழிநடையில் எழுதியிருக்கலாம். ஆனாலும் நமக்குள் கனக்கின்ற ஏதோ மாயத்தை எங்கு கற்றார்.மண் தின்ற பூமிக்குச் சொந்தக்காரார்.
எமக்கான பருவம் என்று
ஒரு நாள் வரும்!
அன்று
கூட்டம் கூட்டமாய் நாங்கள்
கூடு திரும்புவோம்
எங்கள் மண்ணும் காற்றும்
வயல் வெளிகளும் மரங்களும்
எங்களுக்காகத்தான்
காத்திருக்கின்றன..
நம்பிக்கைகளே வீரியம் தருகின்றன. விழி பிதுங்கி சாவடைந்த சனங்களுடன், வீரச்சாவடைந்த மனித தெய்வங்களின் கனவுகள் நிஜமாகும் என்கிற நம்பிக்கையே சாஸ்வதமானது. யாரும் தடுத்து விடமுடியாதபடி உலகக் கதவினைத் தட்டியுள்ள எம்மீதான வன்முறைகளின் வடுக்கள், உரத்த குரல்கள், போர்க்குற்ற ஆதார சாட்சிகள் உலகக்கண்களை திறந்து கொண்டிருக்கிறன. உயிர் தரித்து இருத்தலுக்கான இவரின் போராட்டம் தனிமனித வீழ்ச்சியல்ல. இவரின் மீள் எழுகை இனத்தின் எழுகையாகவும் இருக்கலாம். ஒன்று பட்டதான எழுகையுடன் நாம் ஒரு மையப்புள்ளியில் சந்திக்கும் போது நமக்கான விடியலின் வெளிச்சம் தெரியும். ஆதலினால் குரல் கொடுப்போம். ஆயிரமாயிரம் திருக்குமரன்களின் கவிதைகளும் விதைகளாகட்டும்.
'சொல்லுள்ள போதே வாழ்வின் சூட்சுமத்தை வாயிற்
பல்லுள்ள போதே பறை'...
உயிரெழுத்து பதிப்பகம் வழங்கியுள்ள 176 பக்கங்களில் அழகிய வடிவமைப்புக் கொண்ட நூலை தந்து ஈழத் தமிழரின் குரலை இனங் காட்டியுள்ளார்கள். அவர்களுக்கும் நமது வாழ்த்துக்களை சொல்லித்தானாக வேண்டும் விழுங்கப்பட்ட விதைகளுக்கான எமது வாழ்த்துக்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
21/06/2012